மோனாலிஸாவின் புன்னகையில் என்னதான் இருக்கிறது ? நீங்கள்தான்!

This entry is part [part not set] of 7 in the series 20001126_Issue

சாந்த்ரா ப்ளேக்ஸ்லீ


சுமார் 500 வருடங்களாக லியோனர்டோ டாவின்ஸி வரைந்த மோனாலிஸாவை மக்கள் புதிராக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அவள் புன்னகைக்கிறாள். சிறிது நேரத்தில் அந்த புன்னகை கரைந்துபோய்விடுகிறது.

சில நிமிஷங்களில் அந்தப் புன்னகை மீண்டும் வருகிறது. பிறகு மீண்டும் மறைகிறது.

இந்த பெருமாட்டியின் முகத்தில் என்னதான் இருக்கிறது ? எப்படி இந்த மகா ஓவியக்கலைஞன் மர்மமான உணர்வை இந்த முகத்தில் கொண்டுவந்தான் ? ஏன் மற்ற ஓவியர்களால் இந்த மாதிரி ஓவியம் வரைய முடியவில்லை ?

இத்தாலியர்கள் மோனாலிஸாவின் புன்னகைக்கு ஒரு வார்த்தை வைத்திருக்கிறார்கள். sfumato இதற்கு அர்த்தம் ‘கலங்கலான ‘ அல்லது ‘குழப்பமான ‘ அல்லது ‘கற்பனைக்கு மட்டும் எட்டும் ‘ என்பதானது.

இப்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நரம்பு மற்றும் மூளை அறிவியலில் வேலை செய்யும் டாக்டர் மார்கரெட் லிவிங்ஸ்டன் இதற்கு குழப்பமின்றி கலங்கலின்றி ஒரு விளக்கம் தருகிறார். மோனாலிஸாவின் புன்னகை வருவது போலவும் போவது போலவும் நமக்குத் தோன்றுவதன் காரணம், நமது மூளையும் நமது கண், காட்சி அமைப்பும் வேலை செய்யும் விதத்தால் என்று சொல்கிறார்.

டாக்டர் லிவிங்ஸ்டன் கண்வேலை செய்யும் முறையை நன்றாக் தெரிந்தவர். கண்ணும், மூளையும் எவ்வாறு பலவேறு ஒளியில் பல்வேறு ஒளி விகிதத்தில் வேலை செய்கிறது என்பதில் அதிக ஆர்வமுள்ளவர். ஓவியங்களையும் மூளையையும் பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக இவர் இருந்தபோது இவரின் நண்பர் ஓவியக்கலை வரலாற்றை நன்றாகப் படிக்கச் சொன்னார்.

‘E. H. Gombich எழுதிய The Story of Art புத்தகத்தை நான் வாங்கிப் படித்தேன். அதில் அவர் மோனாலிஸா ஓவியத்தைப் பற்றி ‘இந்த ஓவியத்தை நூறு தடவை பார்த்திருப்பீர்கள். ஆனால் பாருங்கள். வெறுமே பாருங்கள் ‘ என்று சொல்கிறார். எனவே இதை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன் ‘ அப்போது லிவிங்ஸ்டன் அதில் பளிச்சென்று இருந்து மறையும் குணத்தை கண்டார். ‘பின்னர் நான் வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதுதான் அதை உணர்ந்தேன் ‘ என்றார். ‘என் கண்கள் எதை பார்த்துக் கொண்டிருந்தன என்பதை வைத்துத் தான் மோனாலிஸா சிரித்துக் கொண்டிருந்தாளா இல்லையா என்பது என்பதைக் கண்டுபிடித்தேன் ‘ ஆகவே அறிவியற்பூர்வமான விளக்கம் உடனே தெரிந்தது.

மனித கண்ணுக்கு உலகத்தைப் பார்க்க இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று மத்திய பகுதி. இது fovea என்று வழங்கப்படுகிறது. இதில் வர்ணங்களும், நுணுக்கமான எழுத்துக்களும், நுணுக்கமான விஷயங்களும் கண்டுகொள்ளப்படுகின்றன. இரண்டாவது சுற்றுப்புற பகுதி. இது மத்திய foveaவைச் சுற்றி இருக்கும் பகுதி. இதில் கறுப்பு வெள்ளையையும், நிழல்களையும், பொருள்களின் நகர்வையும் மனிதர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

மனிதர்கள் ஒரு முகத்தைப் பார்க்கும்போது அவர்கள் அந்த முகத்தின் கண்களையே வெகுநேரம் பார்க்கிறார்கள். எனவே ஒருவரின் மையப்பார்வை மோனாலிஸாவின் கண்ணில் இருக்கும்போது அவரது தெளிவற்ற பார்வை அவலது வாயில் இருக்கிறது. ஆனால் சுற்றுப்புற பகுதிக்கு நுணுக்கமான விஷயங்களில் ஆர்வமில்லாததால், அது மோனாலிஸாவின் கன்ன எலும்புகளில் உள்ள நிழலைப்பார்க்கிறது. இந்த நிழல்கள் புன்னகையின் தோற்றத்தைத் தருகின்றன.

ஆனால் பார்ப்பவரின் கண்கள் உண்மையிலேயே மோனாலிஸாவின் வாய்க்குச் செல்லும்போது அவரது மத்தியப் பார்வை நிழல்களைப் பார்ப்பதில்லை. ‘அவளது வாயைப்பார்த்து அவளது புன்னகையை நீங்கள் நிச்சயம் பிடிக்கமுடியாது ‘ என்று டாக்டர் லிவிங்ஸ்டன் சொல்கிறார்.

பார்வையாளர்கள் கண்களை அந்த முகத்தின் மீது ஓட்டும்போது பளிச்சென்று நின்று மறையும் அவளது புன்னகை தோன்றி மறைகிறது.

நடிகை ஜீனா டேவிஸ் முகத்தை பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவள் எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் அவள் புன்னகைத்துக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் அவளது கன்ன எலும்புகள் பிரதானமானவை.

‘மோனாலிஸாவின் மர்மத்தை எடுத்துவிடுவது என் நோக்கமல்ல ‘ என்றும் சொல்கிறார் டாக்டர் லிவிங்ஸ்டன்.

‘லியோனர்டோ டாவின்ஸி ஒரு ஜீனியஸ். இவர் நிஜ வாழ்க்கையில் இருக்கும், ஆனால் யாரும் சட்டென்று கண்டுபிடித்துவிடாத ஒரு விஷயத்தை எடுத்து காண்பித்திருக்கிறார். இதைப் புரிந்து கொள்ள நமக்கு 500 வருடங்கள் ஆகியிருக்கின்றன ‘

இந்த விளைவை ஏன் மற்ற ஓவியர்கள் காப்பியடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறார் இவர்.

டுப்ளிகேட் மோனாலிஸா செய்யவேண்டுமென்றால், வாயை பார்க்காமல் அந்த வாயை வரையவேண்டும். இது எப்படிச் செய்யமுடியும் என்பது இன்னும் ஒரு மர்மம்தான்.

Series Navigation

சாந்த்ரா ப்ளேக்ஸ்லீ

சாந்த்ரா ப்ளேக்ஸ்லீ