முகம் கழுவாத அழகி

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

அ.முத்துலிங்கம்


பொலீசுடன் ஆன என்னுடைய பிரச்சினை ஒரு பனிக்காலத்தில் பொஸ்டன் நகரில் ‘பாதை இருபது’ என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலையில் காலை 11 மணிக்கு சம்பவித்தது. நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் என் எச்சரிக்கை உணர்வை தளர்த்தியிருந்த வேளை இது நடந்தது. என் வாழ்நாள் முழுக்க போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டே குறைந்தது பத்து வெவ்வேறு நாடுகளில் கார் ஓட்டியிருக்கிறேன். எந்த நேரத்திலும் விதிக்கப்பட்ட வேகத்தை மீறி ஓட்டியதில்லை. ஆனால் அன்று முட்டாள்தனத்தின் உச்சத்தை எப்படியும் தொட்டுவிடவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். நாலு வயது அப்ஸரா என்னைக் காணாவிட்டால் சத்தம் வராமல் கண்களில் நீரைக்கொட்டியபடி வழியை பார்த்திருப்பாளே என்ற தவிப்பு. சிலவேளை சிறிது வேகம் கூடியிருக்கலாம். இரையை குறிவைக்கும் விலங்குபோல திடீரென்று ரோட்டின் நடுவிலே தோன்றி கையைக் காட்டி காரை மறித்தான் பொலீஸ்காரன். கறுப்பு சீருடையில் ஆறடிக்கும் மேலாக, அகலமாக என்னிடம் நடந்து வந்து கார் ஓட்டும் உரிமத்தையும், மற்ற விபரங்களையும் கேட்டபோது எனக்கு என்ன என்ன மொழிகள் பேசத் தெரியும் என்பதே மறந்துவிட்டது. குளிருக்காக அணிந்திருந்த தடித்த மேலங்கிக்குள் என் உடல் தனியாக நடுங்கிக்கொண்டிருந்தது.
இதற்கெல்லாம் காரணம் என் மகள்தான். நான் மகளுடன் தங்கியிருந்த இரண்டு மாத காலமும் அப்ஸராவை பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தாள். எனக்கு கிலி பிடித்தது. நான் மறுத்தேன். போக்குவரத்து குறைவான சமயத்தில்கூட வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு போக அரைமணி நேரம் பிடிக்கும். போக்குவரத்து அதிகமானால் சொல்லவே தேவை இல்லை. பொஸ்டன் நகரத்து வீதிகளை நம்ப முடியாது. வளைந்து நெளிந்து மேடும் பள்ளமுமாக இருக்கும். திடீரென்று நெடுஞ்சாலை வரும், போகும். நெடுஞ்சாலை வரிக்காசு சரியாக வைத்திருக்க வேண்டும். பாதைகள் சுழன்று சுழன்று இடப் பக்கம், வலப்பக்கம் என்று பிரிந்துபோய் எனக்கு குழப்பம் உண்டாக்கும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன். ஆகவே தயங்கினேன்.
மகள் ஒரு காரியத்தை எடுத்தால் அதைச் சாதிக்காமல் நிறுத்துவதில்லை. பொஸ்டன் வரை படத்தை தூக்கி மேசை மேலே வைத்து தடிப்பாக எழுதும் ஒரு பேனாவினால் பாதையை கீறினாள். ‘பாருங்கள். இரண்டு இடது திருப்பம். மூன்று வலது திருப்பம். எளிமையானது. இதைப் புரிந்து கொள்வதற்கு rocket science தேவையில்லை’ என்றாள். அந்தக் கடமையில் முழு மனதுடன் ஈடுபட்டதுதான் என்னை பொலீஸ்வரை கொண்டுவந்து மாட்டி விட்டிருக்கிறது.
அப்ஸராவின் பள்ளிக்கூடம் மேட்டுப் பகுதியில் ஒரு சிற்றோடைக்கு பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. எங்கள் நாட்டில் அரிவரி என்று நாங்கள் அறியும் ஒரு வகுப்பில் அவள் படித்தாள். அவள் வகுப்பில் 18 பிள்ளைகள்; வகுப்புக்கு இரண்டு ஆசிரியைகள். பிள்ளைகளை எடுக்கப்போகும் பெற்றோர்கள் கார்களில் வரிசையாக நிற்பார்கள். சரியாக 12.30 மணிக்கு கதவுகள் திறக்கும். 18 பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வருவார்கள். காரில் இருப்பவர்கள் காரிலேயே இருக்கவேண்டும். ஆசிரியை ஒவ்வொரு பிள்ளையாக அழைத்து வருவார். அவரே கதவைத் திறந்து, அவரே பிள்ளையை ஆசனத்தில் ஏற்றி அமரவைத்து, அவரே இருக்கை வாரையும் கொழுவி விடுவார். ஒவ்வொரு காராக ஒழுங்குடன் 18 காரும் புறப்பட்டுப் போகும்.
முதலாம் நாள் எப்படியும் பிந்தக்கூடாது என்று எச்சரிக்கையாகப் புறப்பட்டு 12 மணிக்கே பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் கார் முதலாவது காராக நின்றது. சில நிமிடங்கள் கழித்து எனக்கு பின்னால் ஏழு பேர் இருக்கும் வசதி கொண்ட நீண்ட வாகனம் வந்து நின்றது. அதை ஓட்டி வந்தது ஒரு பெண். முப்பது முப்பத்திரண்டு வயதிருக்கலாம். அவள் காரிலே நாலு குழந்தை இருக்கைகள் இருந்தன. அதில் மூன்று குழந்தைகள் ஆசனப் பட்டையால் கட்டப்பட்டு இருந்தனர். அவள் என்னைப் பார்ப்பதும் கண்ணாடி வழியாக நான் அவளைப் பார்ப்பதுமாக சிறிது நேரம் கழிந்தது.
சற்று பொறுத்து இறங்கி வந்து என் கார் கதவை தட்டினாள். நான் கண்ணாடியை இறக்கினேன். விளம்பரங்களில் வருவதுபோன்ற அழகி அவள். ஆனால் ஒப்பனை செய்து பழக்கப்படாத, கழுவாத முகம் அது. தலை முடி கலைந்து கிடந்தது. ஆடை அழுக்காக இல்லாவிட்டாலும் மிகச் சாதாரணம். தன்னுடைய இயற்கை அழகை என்ன என்ன செய்தால் மறைக்கலாமோ அதை எல்லாம் செய்து மூட முயற்சித்தவள்போல தோற்றமளித்தாள்.
‘ஓர் உதவி செய்யமுடியுமா?’ என்றாள். நான் ‘நிச்சயமாக’ என்றேன்.
‘வழக்கமாக நான் பன்னிரெண்டு மணிக்கே வந்துவிடுவேன். காரை இந்த இடத்தில்தான் நிற்பாட்டுவேன். இது மரத்தின்கீழ் வசதியாக இருக்கிறது. நான் மூன்று மாதக் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். நீங்கள் கொஞ்சம் நகர்ந்தால் உதவியாயிருக்கும்.’
நான் சரியென்று காரை ஒரு வட்டம் அடித்து அவள் காருக்கு பின்னால் கொண்டுவந்து நிறுத்தினேன். அவள் முன்னகர்ந்து நிறுத்திவிட்டு குழந்தையை விடுவித்து பால் கொடுக்கத் தொடங்கினாள்.
அந்தச் சந்திப்புக்கு பிறகு நான் அவளுடைய இடத்தைப் பிடிப்பதில்லை. சில வேளைகளில் அவளுடைய இடத்தைப் பிடித்துவைத்து அவள் வந்ததும் விட்டுக் கொடுப்பேன். ஒரு புன்னகை, கையசைப்பு என்று எங்கள் விவகாரம் போய்க்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஒலிவியா. இரட்டைக் குழந்தைகள் உட்பட அவருக்கு நாலு பிள்ளைகள். அவளுடைய மூத்த மகளின் பெயர் அனா. அப்ஸராவும் அனாவும் ஒரே வகுப்பில் படித்தார்கள். அனா தன்னுடைய உற்ற சிநேகிதி என்று அப்ஸரா சொல்வாள்.
அந்தப் பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துப்போக வரும் தாய்மார்களில் ஒலிவியா வித்தியாசமானவளாக இருந்தாள். எல்லோருமே இளம் தாய்மார்தான். பளவென்று இருப்பார்கள். இரவு விருந்துக்கு புறப்பட்டதுபோல ஒப்பனையுடன் அலங்காரம் செய்திருப்பார்கள். உடைகள் ஆடம்பரமானவை என்பது பார்த்தவுடனேயே தெரியும். அவர்கள் வரும் வாகனங்களும் உயர்ந்த ரகமாகவே இருக்கும். இதற்கு விதி விலக்கு நான் ஒருத்தன் மட்டுமே. எனக்கு அடுத்தபடி வருவது ஒலிவியா. அவள் முடி கலைந்து இருக்கும். முகம் காலையிலோ மாலையிலோ அதற்கிடைப்பட்ட காலத்திலோ தண்ணீர் என்ற பொருளை காணாததாக இருக்கும். விற்பனைப் பெண், வரவேற்பறைப் பெண் அல்லது உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்போல கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்துவிடும் புன்னகையுடன் அவள் இருப்பாள்.
ஒருநாள் ஒலிவியா மறுபடியும் வந்து கார் கண்ணாடியை தட்டினாள். நான் என்னவென்றேன். அடுத்த நாள் அப்ஸராவை எடுக்க நான் வரும்போது அனாவையும் எடுத்து எங்கள் வீட்டுக்கு என்னால் கொண்டுபோக முடியுமா? அவள் மருத்துவரைச் சந்திக்கவேண்டும். மூன்று மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து அவள் அனாவை எடுத்துப்போவாள்.
நான் ‘நீங்கள் என்னுடைய மகளுடன் பேசினால் நல்லது’ என்றேன். அவள் நான் ஏற்கனவே பேசி விட்டேன். உங்களுக்கு ‘மென்சிவப்பு சீட்டு’ ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அப்ஸராவின் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளையை தவிர வேறொரு பிள்ளையை பள்ளியிலிருந்து அழைத்துப் போக முடியாது. மென்சிவப்பு பத்திரத்தில் அனுமதி வழங்கியிருந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம்.
நான் அடுத்த நாள் அப்ஸராவையும், அனாவையும் காரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்தேன். அது மெல்லிய பனித்தூறல் போட்ட ஒரு நாள். அனாவும் அப்ஸராவும் பின் சீட்டில் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். பொஸ்டன் நகரத்தில் எட்டு லட்சம் கார்கள் இருப்பதாக எங்கோ புள்ளிவிபரத்தில் படித்திருந்தேன். அன்று பார்த்து அத்தனை கார்களும் இருபதாவது நெடுஞ்சாலையில் நின்றன. அனாவும் அப்ஸராவும் ‘வீடு வந்துவிட்டதா? வீடு வந்துவிட்டதா?’ என்று கேட்டு உயிரை எடுத்தார்கள். கடைசியில் ஒருவாறாக வீடு வந்து சேர்ந்தபோது என் வாழ்வில் கிடைத்த அதிர்ச்சிகளில் ஒன்றாக அந்த நாள் எனக்கு அமையும் என்று நான் நினைக்கவில்லை.

சொன்ன நேரத்துக்கு ஒரு மணி நேரம் பிந்தியும் ஒலிவியாவைக் காணவில்லை. வீடு இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. என் மனைவி பிரளயம் போன்ற ஒன்று அங்கே உண்டாகும் என்று எதிர்பார்க்காததால் அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள். இருவருமே சாதுவான குழந்தைகள். ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது விளைவு மோசமாக இருந்தது. நான் வேதியியல் மாணவனாக இருந்தபோது தண்ணீர் போலத் தெரியும் இரண்டு திரவத்தைக் கலந்தபோது குபீரென்று ஊதா நிறமாக மாறியது ஞாபகத்துக்கு வந்தது. அப்ஸரா ஒரு விளையாட்டு சாமானைத் தூக்கினால் அது அனாவுக்கு வேண்டும்; அனா எடுத்தால் அந்த நிமிடமே அப்ஸராவுக்கும் அது தேவை. சிரிக்கும்போது இருவரும் குலுங்கி சிரித்தார்கள்; அழும்போது இருவரும் சேர்ந்து அழுதார்கள்.
ஒலிவியா அரக்கப் பரக்க ஓடிவந்தபோது அவளுடைய தலைமுடி துள்ளித்துள்ளி மேலெழும்பி விழுந்தது. கையிலே அவளுடைய குழந்தை, அவள் தொடைகளில் இரண்டுபக்கமும் ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள். ‘மம்மி, நான்தான் உன்னுடைய பூனைக்குட்டி’ என்று அனா அவரிடம் ஓடிப்போனாள். ஒலிவியா வந்ததும் வராததுமாக மன்னிப்புக் கேட்டார். பனி மூடியதால் பாதை மாறி சுற்றி அலைந்ததை விவரித்தார். குழந்தைக்கு பாலூட்டும் நேரம் தவறிவிட்டதால் அங்கேயே கொடுக்கலாமா என்று கேட்டார். நான் ‘தாராளமாக’ என்றேன். அவர் கண்ணிலே பட்ட முதல் நாற்காலியில் உட்கார்ந்து ஒரு மார்பை வெளியே எடுத்து பால் கொடுக்க ஆரம்பித்தார்.
இரண்டு குழந்தைகளை கண்காணிக்க முடியாமல் திணறிய நாங்கள் இப்போது நாலு குழந்தைகளை சமாளிக்கவேண்டி இருந்தது. அவர்கள் தொடங்கிய எந்த ஒரு விளையாட்டும் ஓட்டத்தில் ஆரம்பித்து ஓட்டத்தில் முடிந்தது. ஓடினால் நால்வருமே நாலு திசைகளில் ஓடினார்கள். அந்த ஓட்டத்தை அவர்கள் தாமாகவே நிற்பாட்டுவதில்லை. ஏதோ சுவரோ, நாற்காலியோ, சமையல் அடுப்போதான் குறுக்கிட்டு நிறுத்தவேண்டும்.
ஒலிவியா ஒரு மார்பு பாலைக் கொடுத்து முடிந்ததும் அதை உள்ளே விடாமல் மற்றதையும் வெளியே எடுத்து பாலைக் கொடுக்க ஆரம்பித்தபோது என்னிடம் திரும்பிப் போவதற்கு சுருக்கமான பாதை இருக்கிறதாவென்று விசாரித்தார். வரை படங்களில் எனக்கு பொதுவாகவே எரிச்சல் உண்டு ஆனால் அந்தப் பிராந்தியத்து படத்தை நான் மனனம் செய்து வைத்திருந்தேன். எனக்கு தெரிந்த பாதையை கூறியதும் அவர் அது எதிர் திசையில் போகிறது என்றார். நான் வரைபடம் கீறி விளக்கியும் அவருக்கு சம்மதமாகவில்லை. நான் இறுதியாக ‘நீங்கள் என்னை நம்பலாம். இரண்டு இடது திருப்பம், மூன்று வலது திருப்பம். நீங்கள் நெடுஞ்சாலைக்கு வந்துவிடுவீர்கள். இதைப் புரிய rocket science தேவை இல்லை’ என்றேன். அந்தப் பெண்ணின் முகம் ஒரு கணம் கறுத்து மறு கணம் சமநிலைக்கு வந்தது. மேய்ப்பவன் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பதுபோல குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு தன் நீண்ட வாகனத்துக்கு போனார். ஒவ்வொருவராக ஏற்றி அவர்களை இருக்கையில் வைத்து வாரினால் கட்டினார். கைக்குழந்தையை பின்பார்க்கும் ஆசனத்தில் இருத்தி பட்டையை இழுத்துப் பூட்டினார். ‘இரண்டு இடம், மூன்று வலம், சரிதானே’ என்று பலவீனமாகச் சிரித்தார். அவர் கன்னத்திலே விழுந்த பனித்துகள் ஒன்று அவர் உடம்புச் சூட்டில் உருகி வழிந்துகொண்டிருந்தது. ‘சிரமத்துக்கு நன்றி’ என்றுவிட்டு வாகனத்தை திருப்பி எடுத்துக்கொண்டு போனார். ஒரு ஜெட் விமானம் புறப்பட்டு போனதுபோல பெரும் அமைதி உண்டானது.
நான் அப்ஸராவின் கையை பிடித்தவாறு வீட்டின் உள்ளே நுழைந்தபோது வீடு நிறைய சாமான்கள் தாறுமாறாக எகிறிக் கிடந்தன. ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இரண்டு நாள் வேலையை அவர்கள் உண்டாக்கியிருந்தார்கள். கூடத்தின் நடுவில் என் மனைவி தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய சுவாசப்பை பெருஞ்சப்தத்துடன் வேலை செய்தது. இத்துடன் விவகாரம் முற்றுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால் கதை இன்னும் முடியவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து மகளிடம் ஒலிவியா ஒரு மணி நேரம் கழித்து வந்ததையும், வீடு பட்ட அலங்கோலத்தையும், நாங்கள் பட்ட பாட்டையும் விவரித்தேன். அதி வேகமாகக் கார் ஓட்டி எனக்கு அபராதம் கிடைத்ததையோ, அதை நான் ரகஸ்யமாகக் கட்டியதையோ சொல்லவில்லை. ‘எதற்காக லேட்டாக வந்தார்’ என்றாள் மகள் சாவதானமாக. நான் அவள் பாதை தவறியதையும், எங்களுக்குள் நடந்த சம்பாசணையையும் பற்றி விபரமாகக் கூறினேன். ஒரு இடம் வந்ததும் மகள் ‘என்ன, என்ன’ என்று கேட்டு இரண்டு கைகளாலும் வாயை பொத்தியபடி எழுந்து நின்றாள்.
‘அப்பா, என்ன சொன்னனீங்கள்?’ என்றாள். நான் திருப்பி சொன்னதும் கைகளை இடுப்பிலே வைத்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘மகளே, சிரித்துவிட்டு சொல் அல்லது சொல்லிவிட்டு சிரி’ என்றேன். அவள் சிரிப்பை அடக்க முடியாமல் அப்பா நீங்கள் It is not rocket science என்று சொன்னதை நினைத்து சிரித்தேன்.
‘ஏன்?’
‘அப்பா, ஒலிவியா நாசாவில் வேலைபார்க்கும் rocket scientist. இப்போது ஆறுமாதகால மகப்பேறு விடுப்பில் இருக்கிறார்’ என்றாள்.
அந்தப் பெண்ணின் முகம் ஒரு கணம் கறுத்ததை நினைத்துப் பார்த்தேன். இரண்டு கைகளாலும் வாயை பொத்த வேண்டியது இப்பொழுது என்னுடைய முறை.


amuttu@gmail.com

Series Navigation