மீன்கூடைக் காரிகைகளும் பூக்கடைக்காரன் குடிசையும்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

ம.ந.ராமசாமி



காலையில் எழுந்ததும் கையில் பல் விளக்கும் பிரஷ்ஷ¤ம் அதன்மீது சிவப்புநிற பேஸ்ட்டுமாக, சோமசுந்தரம் தன் தினக்குறிப்பைப் புரட்டினார். ‘விஜயா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸில் கான்டீன் விவகாரம்’ என்று அன்றைய தேதியில் குறிப்பிடப் பட்டிருந்தது. குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு சோமசுந்தரம் பல்விளக்கக் குழாயடிக்குச் சென்றார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் கான்டீன் விவகாரம் குறித்து மனம் அசைபோடத் தொடங்கியது.

நகரின் நட்டநடுப் பகுதியில் ஒரு குறுகலான சாலையில் அத் தொழிற்சங்க அலுவலகம் இருக்கிறது. கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் சில்லரைக் கடைகள். மாடியில் தொழிற்சங்க அலுவலகம். சோமசுந்தரத்தின் வாசஸ்தலம் அலுவலகம்தான். அவருக்கு வீடு இருக்கிறது. மனைவியும் மகனும் உண்டு. இருந்தாலும் தேவையின் காரணமாக தொழிற்சங்க அலுவலகத்தையே இருப்பிடமாக்கிக் கொண்டிருக்கிறார். மனைவி பள்ளி ஆசிரியை. மதிய நேர உணவை மனைவி அநேக நாட்களில் காரியரில் கொண்டுவந்து தந்துவிட்டு, பள்ளிக்குச் செல்வாள். சிலசமயம் கட்சி ஊழியர் எவராவது அல்லது தொழிலாளிகளில் மிகத் தெரிந்தவர் சாப்பாட்டை எடுத்து வருவது உண்டு. இன்றைய மதிய உணவு விஜயா இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் கான்டீனில் என்பதாகத் திட்டம்.

பழையதான நவாப் காலத்துக் கட்டடம் அது. கனத்த களிமண் பூச்சு சுவர்கள். வெளேர் என்று சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தாலும் சுவர்களில் திட்டு திட்டாக ஆங்காங்கே களிமண் சமீபத்தில் பெயர்ந்து, செங்கல்கள் தெரிகின்றன. வடக்குப் பக்கத்துச் சுவரில் ஆளுயர லெனின் படம் தொங்குகிறது. அருகில் மாத காலண்டர். புதியதான எலெக்ட்ரானிக் சுவர்க் கடிகாரம் ஒன்றும் நிலைக்கு மேலாக மாட்டப் பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற அபிமானி ஊழியர் ஒருவர் கொடையளித்தது. ஓர் ஓரமாகப் பழைய மேஜை, அருகே இரண்டு இரும்பு நாற்காலிகள். மேஜைமீது பழைய பத்திரிகைகள் கிடக்கின்றன. கூடத்தை ஒட்டி கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு அறைகள். அறைகள் இரண்டும் ஒரே மாதிரியாகக் குப்பைகளும் காகிதங்களும் பழைய பத்திரிகை அடுக்கும் லேபர் டைஜ\ட் கட்சிப் பிரசுரங்களுமாக இருக்கின்றன. சோமசுந்தரம் தன் பெட்டி, பாய், தலையணை, போர்வை ஆகியவற்றைக் கிழக்குப் பக்கத்து அறையில் ஒரு மர பெஞ்ச்மீது வைத்திருக்கிறார்.

அவர் பல் விளக்கி வரவும், மேஜைமேல் கண்ணாடிக் குவளையில் தேநீர் காத்திருந்தது. ஆவி பறக்கும் தேநீர். மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வரும் போதே, கையில் காலைப் பத்திரிகையுடன் மாடிப்படிகளில் ஏறி வந்தார். நின்றபடி பத்திரிகை பார்த்து, தேநீர்க் குவளையைக் கையில் எடுத்துக் கொண்டார்.

வயது நாற்பத்தாறு ஆகிறது. கட்டுமஸ்தான உடல்வாகு இருந்தாலும், தொப்பை போட்டிருக்கிறது. கட்டிய லுங்கி நழுவிவிடுமோ என்று பார்ப்பவர் அச்சப்படும் அளவுக்கு இறுக்கிக் கட்டியிருக்கிறார். ஆள்காட்டி விரல் சுற்றளவுக்கு இருள் குகையான தொப்புள். முதலாளிக்குத்தான் தொந்தியும் தொப்பையும் இருக்கும் என்ற நம்பிக்கை தொழிலாளர்களிடமும், கட்சி உறுப்பினர்களிடமும் விதைக்கப் பட்டிருந்தாலும், இந்தத் தொழிற்சங்கத் தலைவருக்கு இப்படி ஒரு தொப்பை எதானல் வாய்த்தது, என்று அவர்களில் ஒருசிலராவது எண்ணிப் பார்த்திருக்கக் கூடும்.

வஞ்சகம் இல்லாமல் உண்பவர் சோமசுந்தரம். ”வாங்க தோழரே! கிரீன்ஸ் ஹோட்டல்ல பிரியாணி சாப்பிட்டு வரலாம்” என்று தோழர்கள் அழைத்துச் சொன்றால், மற்றவர்கள் அரைபிளேட்டுடன் மனநிறைவு கொள்ளும்போது, இவருக்கு இரண்டு பிளேட் தேவைப்படும். அதிசயம் என்னவெனில் இவர் இதுவரை வயிற்றுக் கோளாறு எதாலும் அவதிப்பட்டவர் அல்லர். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் எதுவும் கிடையாது.

நகரில் உள்ள ஐந்து பெரிய தொழிற்சாலைகளின் சங்கங்களுக்கு அவர் தலைவர். தொழிற் சட்டங்கள் அனைத்தும் சமீபத்திய திருத்தங்களுடன் அவருக்கு அத்துப்படி. படிப்பு அவ்வளவாக இல்லாவிடினும், விவகார ஞானம், அனுபவம் நிறைய இருந்தன. கட்சித் தலைவர், காலம் சென்ற நம்பியார் வீட்டில் சிறுவயதில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்ததால் கிடைத்த பேறு அவை. சென்னை கட்சி அலுவலகத்தில் வளர்ந்த அதிகப் படிப்பில்லாத ஒருவர் பின்னாளில் பெரிய எழுத்தாளராகப் பரிணமித்தார் அல்லவா? அதுபோல, நம்பியார் வீட்டில் வளர்ந்த சோமசுந்தரம் இன்று பெரிய தொழிற்சங்கவாதியாகத் திகழ்கிறார்.

படிகள் ஏறி வந்தார் ஒரு தொழிலாளி. திரும்பிய தலைவர் கையில் வெறும் கண்ணாடிக் குவளையுடன் நின்றபடி பத்திரிகை படிப்பதை உணர்ந்ததும், குவளையை மேஜைமீது வைத்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

”என்ன?” வந்த தொழிலாளியைப் பார்த்துக் கேட்டார். தொழிலாளி சீருடை அணிந்து, பாதங்களில் கனமான ஷ¥க்கள் போட்டிருந்தார்.

”காஷ¤வல் லீவ் கேட்டேன். கொடுக்க மாட்டேன்னிட்டாங்க.”

”எங்க வேலை செய்யறீங்க?”

”ஷண்முகா டெக்ஸ்டைல்ஸிலே.”

”ஏன் லீவு கொடுக்க மாட்டேன்னிட்டாங்க?”

”வேலை இருக்குதாம். அதனாலே…”

”இப்படி எத்தனை தடவை லீவு தரமாட்டேன்னு சொல்லியிருக்காங்க?”

”இதுதான் முதல் தடவை.”

”அப்ப சரிதான். எதுக்காக லீவு கேட்டீங்க?”

”திருப்பதி போகணும்னிட்டு…”

”நெசம்மாவே திருப்பதி போக இருந்தீங்களா?”

”இல்ல.”

”தம்பி. அவங்க லீவு தரமாட்டேன்னு சொன்னது சரிதான். திருப்பதி போகணும்னா பயந்துகிட்டு லீவு குடுத்துருவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்க. மேலும், உரிமை இருக்குங்கறதுக்காக, விருப்பம்போல லீவு எடுத்துக்கிட முடியாது. நான் ஏதோ முதலாளி சார்பா பேசுற மாதிரி உங்களுக்குப் படும். ஆனா நியாயத்தைச் சொல்றேன். தொடர்ந்து ரெண்டு தடவை லீவு தரமாட்டேன்னு சொன்னாங்கன்னா எங்கிட்ட வந்து சொல்லுங்க, விசாரிக்கிறேன்.”

வந்த தொழிலாளி முகத்தைத் தொங்கப் போட்டபடி சென்றார்.

”நல்ல பிழைப்பு இது! காஷ¤வல் லீவு முதற்கொண்டு தொழிற்சங்கப் பிரச்னையா எடுத்துக்கிட்டு வராங்க. இப்படி ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட பிரச்னையையும் கவனிக்கிறதா இருந்தா, இந்த வேலையை விட்டுட்டு நான் ஓட வேண்டிதான்!” என்று தனக்குள் சோமசுந்தரம் சொல்லிக் கொண்டார்.

வேலை! தொழிற்சங்கத் தலைவர் பதவி ஒரு வேலையா? ஆமாம், வேலைதான். இல்லை, தொழில் என்று சொல்லலாமா? பணியா? எல்லாவற்றுக்கும் ஒரே அர்த்தம்தான். தலைவரின் பார்வை மீண்டும் பத்திரிகையில் பதிந்தது.

கீழே வீதியில் சந்தடி மிகுந்தது. லாரிகள், பஸ்கள், கார்கள் ஆகியவற்றின் ஹாரன் ஓசை வழக்கம்போல நகரத்தைப் போர்த்தியது. குழுக்கூட்டம், ரகசிய சந்திப்பு என்று அறைகளில் புகுந்து கதவுகளைச் சாத்திக் கொண்டாலும், இந்த ஓசை ஜன்னல் வழியாக அறையுள் புகுந்து வரும்.

பத்திரிகையைப் படித்து முடித்ததும் ஷேவ் செய்துகொள்ள முனைந்தார். ரஞ்சிதா ·பவுன்டரி சங்கத்தின் செயலாளர் தர்மராஜ் வந்தார். அவருடன் பேசியபடி ஷேவ் செய்து கொண்டிருந்தபோது, விஜயா இன்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் சங்கத்தின் உபதலைவர் ரங்கசாமி வந்தார்.

”தலைவரே, இன்னிக்கு நம்ம தொழிற்சாலைக்கு வரீங்களாமில்லே?” என்று கேட்டு உறுதி செய்துகொள்ள முயன்றார் அவர்.

”ஆமா, என்ன பிரச்னை அது? உங்க அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் சொன்னாரு. கான்டீன் சாப்பாடு தகராறு, சாப்பாடு நல்லால்லேன்னு தொழிலாளிங்க சொல்றாங்கன்னு சொன்னாரு.”

”சாப்பாடு சரி இல்லே தலைவரே, எப்போதும் போலத்தான் போடப்படுது. கான்டீன் கான்டிராக்டரும் நல்ல மனுசர். என்னவோ ருசி மாறித்தெரியுது. சாப்பிடற தொழிலாளிங்க எல்லாரும் ஒரே முகமாச் சொல்றாங்க. அதுனாலே, எங்கியோ தவறு இருக்கு. நல்ல அரிசி இல்லியோன்னு தோணுது.”

”வந்து பாக்கறேன்.”

மணி ஒன்பது அளவில் அவருடைய மனைவி ஒரு கையில் சாப்பாடு காரியருடனும், மறுகையில் மகனைப் பிடித்தும் வந்தாள். பள்ளி நேரம் மணி ஒன்பதரை.

”அடாடா சாப்பாடு கொண்டாந்திட்டியா?” சோமசுந்தரம் கேட்டார்.

”ஆமா, ஏன்?”

”இன்னிக்குத் தொழிற்சாலை கேன்டீன்ல சாப்பிடப் போறேன்.”

”உங்களுக்குப் பிடிக்குமேன்னு உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு கொண்டாந்திருக்கேன்.”

”வேணாம். எடுத்துக்கிட்டுப் போ.”

”எங்கிட்டு எடுத்துக்கிட்டுப் போறது. ஸ்கூலுக்கில்ல போறேன்.”

”அப்ப வெய்யி. டீக்கடைப் பையனைச் சாப்பிடச் சொல்றேன்.”

”உங்களுக்கில்ல மெனக்கிட்டு செஞ்சு கொண்டாந்திருக்கறேன்.”

”அதுக்காக இதையும் சாப்பிட்டுட்டு கான்டீன்லயும் தின்ன முடியுமா?”

”ஏன், கான்டீன்லே சாப்பிடாட்டாத்தான் என்ன?”

அவர் மனைவியை முறைத்துப் பார்த்தார். அவர் பணியில் தலையீடு இது. விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ”வேணாம்னா விடேன்.”

சற்று சினத்துடன் கேரியரைத் தரையில் ணங்கென்று வைத்துவிட்டு நடந்தாள்.

கீழே சென்று குளித்துவிட்டு வந்தார். தொழிற்சங்க அலுவலகத்துக்குப் பூட்டோ தாளோ கிடையாது. திருடிச் செல்ல எதும் இல்லை என்பதான சமதர்மக் கருத்து. தபால்காரர் வந்து வணக்கம் தெரிவித்துக் கடிதங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவற்றைப் பெற்று, மே¨4மீது வைத்தார். அறையுள் நுழைந்து மாற்றுடை அணிந்து, கண்ணாடிமுன் நின்று தலைவாரிக் கொண்டார். பின்தலையில் உள்ள முடி நரைக்கவில்லை யானாலும் செம்மை பூத்திருந்தது. எண்ணெய்க்கு ஏங்குவது தெரிந்தது.

மணி பனிரெண்டு அளவில் சங்கத்துக்கு எதிரே கார் வந்து நின்றது. அவர் கவனிக்கவில்லை. மும்முரமாகக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். கடிதங்கள் எழுதுவது சம்பந்தப்பட்ட செயலாளரின் பணி என்றாலும் அவசியமான கடிதங்களுக்கு அவரே பதில் எழுதிவிடுகிறார். அநேகமாக அக்கடிதங்கள் தீர்மானமான முடிவுகளைக் கொண்டிருக்காது. தாற்காலிக பதிலாக இருக்கும். சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களைக் கலந்து ஆலோசித்த பிறகே தீர்மானமான முடிவைக் கூறுவது என்ற, ஜனநாயகப் பண்பை சோமசுந்தரம் பேணிப் பாதுகாத்தார்.

டிரைவர் படியேறி அலுவலகத்துள் வந்தார். சீருடை அணிந்து சட்டையில் பாட்ஜ் அணிந்திருந்தார். ‘விஜயா இன்ஜினியரிங் லிமிடெட்’ என்பதாய் அறிவித்தது பாட்ஜ்.

”வணக்கம் ஐயா” என்றார் டிரைவர்.

”கணபதி அனப்பினாரா?” கணபதி அட்னிஸ்ட்ரேஷன் மேனேஜர். பொது நிர்வாக மேலாளர்.

”ஆமாங்க ஐயா!”

”இதோ ரெண்டு நிமிஷத்திலே புறப்பட்டிடலாம். நேராக ·பாக்டரிக்குத்தானே? வேற ஏதாச்சும் வேலை இருக்குதா?”

சாதாரணமாகத் தொழிற்சாலையில் இருந்து கார்கள் வெளியே செல்லும்போது, ஒருவரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட வேண்டியிருக்கும். ஒருவர் பொருட்கள் வாங்க இருக்கிறேன் என்று கடைவீதியில் இறங்கிக் கொள்வார். கார் திரும்பும்போது ஏதாவது ஒரு ஓட்டலுக்குச் சென்று முக்கியப் பிரமுகர் ஒருவரை ஏற்றிவர வேண்டியிருக்கும். ஒரு சமயம் சோமசுந்தரம் காரில் உட்கார்ந்திருந்தபோது கூட ஒருவரை அழைத்துவர, ஏதோ சாமான் வாங்க என்று நகர்வலம் வந்து தொழிற்சாலை திரும்பியது.

”இல்லிங்க. உங்களைக் கூட்டிவர மட்டும் அனுப்ச்சிருக்காங்க!”

இதைக் கேட்டதும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வி.ஐ.பி. – முக்கிய நபர், என அவரை விஜயா நிர்வாகம் கருதத் தொடங்கி யிருக்கிறது!

தொழிற்சாலை முதன்மை கேட் திறக்கப் பட்ட போது, காரில் அமர்ந்திருந்த அவரைக் கண்ட சீ·ப் செக்யூரிட்டி அதிகாரி கல்யூட் அடித்தார். கார் வந்து நிர்வாக அலுவலகத்தின் எதிரே நின்றதும், பொது நிர்வாக மேலாளர் கணபதி உள்ளிருந்து வந்து வரவேற்றார்.

”எப்பிடி இருக்கீங்க?” சோமசுந்தரம் அவரை விசாரித்தார்.

”இருக்கிறேன், வாங்க போகலாம்.” தன்னறைக்கு அவரை அழைத்துச்செல்ல முயன்றார் கணபதி.

”எப்ப லன்ச் நேரம்?”

”ஒரு மணிக்கு.”

அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி பனிரெண்டரை. ”அப்ப ஒண்ணு செய்யலாமே?”

”சொல்லுங்க.”

”·பாக்டரியைச் சுத்திப் பாத்திடலாம்.”

”சரி, போகலாம்.” கணபதி திரும்பினார்.

இருவரும் தொழிலகத்துள் நுழைந்தனர். நடுத்தரமான தொழிற்சாலை அது. அதாவது மிகப் பெரிய தொழிற்சாலையும் அல்ல, சிறிய தொழிற்கூடமும் அல்ல. யந்திரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. தங்கள் தலைவரைக் கண்ட தொழிலாளர்கள் முகம் மலர்ந்து வணக்கம் தெரிவித்தார்கள். சென்ற இரு ஆண்டுகளாக அவர்கள் பெறும் இருபது சதவீத போனஸ், மற்றும் பனிரெண்டு சதவீத கருணைத்தொகை தலைவர் வாங்கித் தந்தவை, என்பது அவர்களுடைய நம்பிக்கை. பெயர் சொல்லி இரண்டொரு தொழிலாளிகளின் நலத்தை அவர் விசாரித்தார்.

தொழிலாளிகள் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டபடி ”என்னயா கணபதி?” என்று ஆரம்பித்தார்.

”என்னங்க?”

”இந்த மிஷினுக்கு ஏன் பாதுகாப்பு அணைப்பு போடப் படல்லே?”

”அட, ஆமா.”

”நீங்க கவனிக்கல்லியா? தொழிற்சாலைப் பக்கமே வரது இல்லியா? அறையிலேயே உட்கார்ந்திருக்கக் கூடாது கணபதி.”

”இல்லே. இப்பிடி தினமும் ரெண்டு தடவை வரத்தான் செய்யிறேன். இந்த ஸே·ப்டி கார்டு எப்பிடி மாயமா மறைஞ்சுதுன்றதை நான் கவனிக்கலே.”

”உடனே போட ஏற்பாடு செய்யுங்க. தொழிலாளி யாராவது விபத்துக்கு ஆளானா, நீங்க ஜெயிலுக்குப் போக வேண்டி யிருக்கும். இப்ப சட்டத்தை ரொம்பக் கடுமையாக்கிட்டாங்க. தெரியுமில்லே?”

”தெரியும்” எனத் தலையாட்டினார் கணபதி. என் நேரம், என நினைத்துக் கொண்டார். அவர் எம்.ஏ., டி.எல்.எல். பட்டதாரி! அவர் பதவிக்கு அந்தத் தகுதி அவசியம்!

தொழிற்சாலையை அவர்கள் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, பகல்நேர உணவுக்கான மணி அடிக்கப் பட்டது.

”அப்ப கான்டீனுக்குப் போகலாமா?” கணபதி கேட்டார்.

நடந்தனர். கான்டீன் வாயில் முகப்பில் பசுமையான குரோட்டன்ஸ் செடிகள் வளர்க்கப் பட்டிருந்தன. ஓர் ஓரமாகச் சுவரில் பதித்த பத்து இருபது தண்ணீர்க் குழாய்கள். கைகளைக் கழுவிவிட்டு தொழிலாளிகள் மேஜைகளைப் பிடிக்க விரைந்தனர். சிலர் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்திருந்தனர். கான்டீன் சாப்பாடு ஏழரை ரூபாய்தான். அந்த விலை கொடுத்துக் கூட இந்த வசதியை அனுபவிக்க முடியாதவர்களா?… என நினைத்துக் கொண்டார் சோமசுந்தரம்… உணவுப் பழக்கத்தில் காரம் குறைப்பு என்றோ, நெய், எண்ணெய் வஸ்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றோ நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக அவர்கள் இருக்கலாம்…

அகலமான எவர்சில்வர் தட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் மேஜைகளின்முன் பெஞ்சுகளில் அமர்ந்தனர். பரபரவென்று கான்டீன் சிப்பந்திகள் பரிமாறத் தொடங்கினர். அளவுச் சாப்பாடு. அது போதும். கான்டீன் கமிட்டி கூட்டத்தில் நிர்ணயிக்கப் பட்டஅளவு அது. ஒரு தரம் அளவுச் சாப்பாடு கூடாது – தேவையான அளவு பரிமாறப் பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். அதனால் பரிமாறப் பட்ட சோறு கணிசமாக விரயமாயிற்று, என சுட்டிக் காட்டப் பட்டது. மீண்டும் அளவுச் சாப்பாடு அமுலுக்கு வந்தது.

பெரிய கூடம் அது. ஒரே நேரத்தில் முந்நு¡று பேர் உட்கார்ந்து சாப்பிட வசதி உண்டு. மேலே கல்நார்த் தகடுக் கூரைதான். கான்கிரீட் தளம் போடச் சொல்லி தொழிற்சங்கம் வற்புறுத்தி வருகிறது. கோடைகாலத்தில் வேனல் தாள முடியாது.

மானேஜரும், தலைவரும் ஒரு மேஜைமுன் உட்கார்ந்தார்கள். கான்டீன் கான்டிராக்டர் சாம்பசிவம் தானே மீண்டும் ஒருதடவை தட்டுகளைக் கழுவி அவர்கள் எதிரே வைத்தார்.

”தலைவரே, நீங்கதான் இந்த விவகாரத்தை சுமுகமாத் தீர்த்து வைக்கணும். இந்த இருபத்தியேழு வருஷ சமையல் சர்வீஸ்லே, என் சமையல் நன்னால்லேன்னு யாரும் சொன்னது கிடையாது. நீங்களே சாப்பிட்டுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ.”

ஒரு சிப்பந்தி கான்டிராக்டரின் நேரடி மேற்பார்வையில் பரிமாறினார். சோறு, கூட நெய்யும் பரிமாறப் பட்டது. மணத்தது நெய்.

”நெய்கூட போடறீங்களா என்ன?” சோமசுந்தரம் வியப்புடன் கேட்டார்.

”ஆமா. தொழிலாளிங்க கஷ்டப்பட்டு வேலை செய்யிறாங்க. அதுக்கு நல்லா சாப்பிட வேணாமா? தெம்பு வரட்டும்னு நானேதான் நெய் சேர்த்தேன். யாரும் கேட்டுச் செய்யல்ல. ‘நெய்யில்லா உண்டி பாழ்’னு ஒளவையார் சொல்லி இருக்கிறார். வெண்ணெய் தினப்படி வாங்கிக் காய்ச்சறேன்.”

சாம்பார் பரிமாறப் பட்டது. பொறியல். பொரித்த அப்பளம். ருசித்து உண்டார் தலைவர்.

”நல்லாத்தானே இருக்கு?” என்றார் கணபதி. சோமசுந்தரம் எதுவும் பேசவில்லை. உண்பதில் கவனமாக இருந்தார். ரசம் வந்தது. ”சாப்பிட்டுப் பாருங்கோ” என்று கூறி சாமிபசிவம் ஒரு தம்ளரில் தெளிந்த ரசத்தைக் கொண்டுவந்து வைத்தார்.

இதற்குள் உணவு கொண்டுவிட்டு எழுந்த தொழிலாளர்கள் கைகழுவச் சென்றனர். செல்லும்போது, தலைவர் சாப்பிடுவதைப் பார்த்தபடி நகர்ந்தனர். சாப்பாடு விவகாரம் இன்றோடு தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் எழுந்திருக்க வேண்டும்.

இரண்டு தயிர்க் கோப்பைகளை எதிரே வைத்தார் கான்டிராக்டர்.

”தயிர் தரீங்களா என்ன?” தலைவர் கணபதியைப் பார்த்துக் கேட்டார்.

”இல்ல. தயிர் ஒரு கப் ஒர்ரூவா. வேணுங்கறவங்க வாங்கிக்கலாம். நம்மை ஸ்பெஷலா சாம்பசிவம் கவனிக்கிறார்.”

”மோர், நீர்மோராக இருக்குமோ?”

”தலைவர் பார்க்கட்டுமே” என்று கூறிய சாம்பசிவம் அருகில் இருந்த எவர்சில்வர் பக்கெட்டில் இருந்து ஒரு தம்ளர் மோரை மொண்டு மேஜையில் எதிரே வைத்தார்.

”என்ன ஊறுகாய்?” ஊறுகாயைத் தொட்டு நாக்கில் ருசி பார்த்தபடி தலைவர் கேட்டார்.

”எலுமிச்சம்பழம்தான்” – சாம்பசிவம் சொன்னார்.

”பிழிந்து சாறை எடுத்துவிட்டுத் தானே தோலை ஊறுகாய் போடுவீங்க?”

”ராம ராம! என்ன அப்பிடிச் சொல்லிட்டேள்? சாறு பிழிஞ்சு நான் என்ன செய்யப் போறேன்? எலுமிச்சம்பழ ரசம் வைக்கிறது இல்லை. முழுப்பழத்தை நறுக்கித்தான் ஊறுகாய் போடறேன்.”

”ரொம்ப சந்தோஷம். எதுக்குச் சொன்னேன்னா, நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு ஓட்டல்லே, என்னிக்காவது எலுமிச்சம்பழ ரசம்னா, அன்னிக்கு எலுமிச்சை ஊறுகாயும் இருக்கும்! பாதிப் பழம் பிழிஞ்சு சாறு எடுத்திட்டு, பாதிப் பழம்தான் ஊறுசாயாப் போடுவாங்க!”

”நானும் கேழ்விப் பட்டிருக்கேன். நான் அப்டிச் செய்யிறது இல்லே. யாருக்காக நான் காசு சேர்க்கணும்? கம்பெனி முதலாளி உசந்த மனுஷர். மாசாமாசம் செலவுக் கணக்கையும் வரவையும் தரேன். அவராப் பார்த்து ‘சப்ஸிடி’ தரார். எனக்குக் காசு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே பொண்ணு. கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். உடம்புல திடன் இருக்கிற வரைக்கும் இந்த கேன்டீனை என்னால் நடத்த முடியும். அதனாலே, யாரையும் ஏமாத்தி நான் காசு பண்ணவேண்டிய அவசியம் இல்லே.”

சாப்பிட்டுவிட்டு கணபதியும் தலைவரும் எழுந்தனர். கைகழுவி, கைக்குட்டையில் துடைத்துக் கொண்டபோது கணபதி கேட்டார். ”பாக்கு போடுவீங்களா?”

”இல்ல வேணாம். பல்லில இடுக்கு விழுந்திடுச்சு. சிக்கிக்குது.”

தன் அறைக்கு அழைத்துச் சென்றார் கணபதி. உட்கார்ந்தனர். குளுமை செய்யப்பட்ட அறை. உடல் இதம் அனுபவித்தது.

”சொல்லுங்க மிஸ்டர் சோமசுந்தரம், சாப்பாட்டுல என்ன கோளாறு?”

அவர் கணபதியை நேருக்கு நேராக நோக்கினார். ”உம்.”

”உங்களுக்கே தெரியும். இந்தக் கம்பெனில கொடுக்கிற மாதிரி சம்பளம் இந்த ஊர்ல வேற எந்த இன்ஜினியரிங் கம்பெனியும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கறது இல்லே. போனசும் அதிகபட்சம் தர்ரோம். பல வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். டெர்ரிகாட் யூனி·பார்ம்தான் வேணும்னு கேட்டீங்க. தந்தோம்…”

”சும்மாவா கொடுத்தீங்க?”

”ஏன்?”

”போராட வேண்டி யிருந்திச்சு.”

கணபதி சிரித்தார். ”தொழிலாளிங்க வீடுகட்ட அட்வான்ஸ் கேட்டுக் கூட போராடினீங்க. கொடுத்தமா? கொடுக்க முடிஞ்சதைத்தான் கொடுத்தோம். கேட்டவுடனே கொடுத்திட்டா அப்பறம் எதுதான் கேட்கிறதுன்னு ஒரு வரம்பு இல்லாமப் போயிரும். நீங்க போராடுங்க, நாங்க தரோம்-ன்றது நியதியாப் போச்சு. சரி, அது இருக்கட்டும். இதைச் சொல்லுங்க. சாப்பிட்டுப் பார்த்தீங்களே? சாப்பாட்டுல என்ன குறை?”

”குறையா? சொல்றேன்.” தலைவர் ஜன்னல் கண்ணாடிக்கு வெளியே நோக்கினார். வயல்வெளி, தென்னை மரங்கள், நீல ஆகாயத்தில் நீந்தும் பெரியதொரு வெண்மேகம்.

கணபதி காத்திருந்தார்.

தலைவர் குரலைத் தாழ்த்திக் கொண்டார். கணபதியைப் பார்த்துக் கேட்டார். ”கான்டீன் காண்டிராக்டரை நெய்போட ஏன் அனுமதிச்சீங்க?”

”ஏன்?” சற்றே பதறிப்போன நிர்வாக மேலாளர் திகைப்புடன் வினவினார்.

”எந்தத் தொழிலாளி தன் வீட்டுலே நெய்போட்டுச் சாப்பிடறான்? அவங்களுக்குப் பழக்கம் இல்லாத நெய்யைச் சாப்பாட்டுல சேர்த்தா அது அவங்களுக்குப் பிடிக்கறது இல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை ஒண்ணு தெரியுமா?”

பிரமை பிடித்தாற்போல உட்கார்ந்திருந்தார் நிர்வாகி. ஒரு நல்லது செய்யப்போக, அதுவே விவகாரமாக அல்லவா மாறிவிட்டிருக்கிறது! தொழிலாளிகளுக்குக் கான்டீன் உணவு ருசிக்காது போனதற்குக் காரணம் நெய்தான் என்பது தனக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது என்று தன்னுள் கேட்டுக் கொண்டார்.

தலைவர் உற்சாகமாய்க் கதை சொல்லிச் செல்கிறார்.

”மீன்கூடைக் காரிகைகள், பூக்கடைக்காரன் குடிசை. ஒரு மழை இரவு. மீன்கூடைக் காரிகைகள் அந்தப் பூக்கடைக்காரன் குடிசையில் தங்கினார்கள். பூவாசம் தாங்கலே. முகத்துக்கு நேரா மீன்கூடையக் கவுத்திக்கிட்டுத் து¡ங்கினாளுங்க!”

—-

Series Navigation