மின் ஆளுகை (E-Governance)

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


ஓர் அரசு செம்மையாக நடைபெறுகிறது என்பதற்கு என்ன அடையாளம் ? அவ்வரசுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பு எவ்வளவு விரைவாகவும், திறமையாகவும் நடை பெறுகிறது என்பதைப் பொறுத்தே இவ்வினாவிற்கான விடை அமையும். உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வதற்கு மிகச் சிறந்த சாதனமாக இன்று அமைந்திருப்பது இணையமே (Internet) எனில், அதில் மிகையேதுமில்லை. இணைய வசதிக்கு அடிப்படையாக அமைவது கணினியே. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பெற்றுத் தமக்குள்ளே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் நிலையில், அவை ஒரு வலையமைப்பாக (Network) அமைகின்றன. ஆனால் இணையமோ வலையமைப்புகளின் வலையமைப்பாகக் கருதப்படுவது (Network of the networks); அதாவது பல்வேறு நிறுவனங்களின் எண்ணிறந்த வலையமைப்புகள் பலவும் ஒன்றிணைக்கப் பெற்ற வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. இத்தகைய இணையம் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள், விரைந்தும், செலவு ஏதுமின்றியும், தமக்குள்ளே தரவுகளைப் (Data) பரிமாறிக் கொள்ளவும், தகவல்களைப் பெறவும் உதவுகிறது.

மேற்கூறிய இப்பயன்பாடுகளெல்லாம், மரபுவழிப்பட்ட அரசாட்சி முறைக்கு உறுதுணையாகச் செயல்பட்டு, சிறந்ததோர் ஆளுகையை உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும் வழங்கும், ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன எனலாம். ஆட்சிமுறையைச் செம்மைப்படுத்தும் மின் ஆளுகைக்குத் துணை நிற்பது தகவல் தொழில்நுட்பமே (Information Technology IT) ஆகும். மின் ஆளுகையின் காரணமாக, மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் நிலைமை மாறி, மக்களைத் தேடி அவர் தம் தேவைகளை நிறைவு செய்ய அரசு செல்லும் நிலைமை உருவாகியுள்ளதெனலாம். குடிமக்கள் – அரசாங்கம் இடையேயான தொடர்பு விரைந்தும் எளிமையாகவும் நடைபெற, அரசு சேவை பற்றிய தகவல்களை வலையமைப்புகள் வாயிலாகப் பெறுவதற்கான வசதி பொதுமக்களுக்குச் செய்து தரப்படுகிறது.

மின் ஆளுகை வெற்றியுடன் நடைபெற, கீழ்க்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

1. பெரும்பாலான மக்கள் கணினி அறிவு பெற்றவர்களாக மாற வேண்டும்; இதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. மக்களுக்கு செலவின்றி அல்லது குறைந்த செலவில் இணைய வசதி அளிக்கப்பட வேண்டும்; இதற்காக ஏராளமான இணைய மையங்களைத் துவக்க வேண்டும்.

3. எல்லாத் தகவல்களும் இலக்க முறை அமைப்பில் (digital format) இருக்கும் வண்ணம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததாக, அரசுச் செயல் முறைகள் அமைய வேண்டும்.

4. பயனாளர்களின் (end-user) வினாக்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் (feedback) அரசு உடனடியாக விடையளிக்கும் வகையில், எழுதுகோலும், காகிதங்களும் அற்றதாக மின் ஆளுகை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மக்களுக்குக் குறைந்த செலவில் நிறைந்த வசதிகளை அளிக்கும் வகையில் மின் ஆளுகை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் பார்த்தோம்; இதற்கு அரசின் ஒவ்வொரு துறையும், அமைச்சகமும் தனித்தனியே செயல் முறைகளை மேற்கொள்ளக்கூடாது; மாறாக அரசின் சேவைகள் அனைத்தும் ஒரே துறையின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும். இதனால் பயனர்கள் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் ஆகியவற்றிற்கான வலைத் தளங்களுக்காகத் (Web sites) தனித்தனி சீர் வள இடங்காட்டிகளைத் (Uniform Resource Locations – ULRs) தேடிச் செல்லும் இன்னல் தவிர்க்கப்படும்.

தகவல்களைப் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்தல் (Making Information Public)

முதலாவதாக அரசாங்க விதிகள், ஒழுங்கு முறைகள், அட்டவணைகள், மக்கள் அறிய வேண்டிய தகவல்கள் மற்றும் அரசாணைகள் ஆகியன மின் ஆளுகைக்கு உட்படும் பயனர் மற்றும் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இன்றியமையாததாகும். மின் ஆளுகைக்குத் தேவையான முக்கியத் தொழில்நுட்பக் கூறுகள் பின் வருவனவாகும்.

குரல் இடைமுகம் (Voice interface): பொது மக்களைச் சென்று சேர்வது அரசின் இலக்காக இருக்கும் நிலையில், அவர்களது கல்வியறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லாமை மிகுந்துள்ள நம் நாட்டைப் பொறுத்தவரை மின் ஆளுகைக்கு, பேச்சு/உரையாடல் வாயிலாக மக்களைத் தொடர்பு கொள்வது தவிர்க்க இயலாதது; மேலும் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதற்கில்லை; மாறாக மாநில மொழிகள் அல்லது மக்களின் மொழிகளே இதற்கு உகந்தவை. இதற்காகத் தற்போது கிடைக்கும் “எழுத்திலிருந்து பேச்சு” / ”பேச்சிலிருந்து எழுத்து” மென்பொருள்களை மாநில மொழிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

வலையில் எளிதாக வலம் வருதல் (Simple navigation): மின் ஆளுகைப் பயன்பாட்டுக்கும், சேவைக்கும் இடைமுகமாக (Interface) விளங்குவன வலையும் (Web), மின் அஞ்சலும் (E Mail) ஆகும். மின் ஆளுகைப் பயனர்களில் படித்தவர்களுக்குக்கூட வலையில் தகவல்களைப் பெறுவது என்பது எளிதாக அமைவதில்லை. எனவே தகவல்களை இயல்பாகப் பெறுவதற்கு உரையாடல் இடைமுகங்கள் (Conversational interfaces) தேவைப்படுகின்றன. அவ்வுரையாடல்களும் இயற்கை மொழியில், அதாவது மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய தாய் மொழியில் அமைதல் வேண்டும். யெனவே மின் ஆளுகைப் பயன்பாட்டில் அளிக்கப்படும் விடைகள் பயனர்களுக்கு இயற்கை மொழியில் அமைவது இன்றியமையாதது.

வாயில் தொழில்நுட்பம் (Portal technology): மின் ஆளுகைப் பயனர்களால் தேடப்படும் தகவல்கள் அரசின் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படுவனவாகும். எல்லாத் தகவல்களும் ஒருங்கிணைந்து பயனர்களை அடைய வேண்டும். வாயில் தொழில்நுட்பமானது பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்துப் பயனருக்குத் தர அடித்தளம் அமைத்துத் தருகிறது. பயனர் தமது கணினியில் நிறுவப்பட்டுள்ள வலை உலவி (Web browser) வழியே எல்லாத் தகவல்களையும் ஒருங்கிணைத்துப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது.

தனிப்பட்டோர் தகவல்களைப் பெறுதல் (Accessing Personalized Information) – மின் ஆளுகையின் இரண்டாம் கட்டமாக அமைவது, பயனர்கள் தமது தனிப்பட்ட / சொந்தத் தகவல்களை அறிவதாகும். எடுத்துக்காட்டாக தமது வீட்டுவரியைக் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக நிகழ்நிலையில் செலுத்துதல் (Online payment), தமது கடவு ஆவண (Passport) விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவை இத்தகவல்களுள் அடங்கும். இவ்விரண்டாம் கட்டத்திற்கான தொழில் நுட்பங்கள் பின்வறுமாறு:

உறுதிப்படுத்தும் தொழில் நுட்பங்கள் (Authentication techniques): தனிப்பட்ட தகவல்களை நாடும் அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் நிலையில், அவற்றிற்கு உரிய பயனர்களை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்வுறுதிப்பாட்டுக்கு அரசு, பயனர்களைச் சரிபார்ப்பது கட்டாயமாகும். இதற்காக சூட்டிகை அட்டைகள் (Smart cards) அல்லது இது போன்ற பொதுச் சரிபார்ப்பு அமைப்பு (Public Key Infrastructure) ஒன்றை அரசு அமைக்கவேண்டியுள்ளது. இவைபற்றிய விவரங்களைப் பயனர்களுக்கு அறிவித்து அவற்றை விழிப்போடு பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும், பாதுகாப்பாகவும் / இரகசியமாகவும் வைத்திருக்கும் முறைகளையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சமூகப்பாதுகாப்புக்கான சிறப்பு எண்களைக் (Unique Social Security Numbers) கொண்ட சூட்டிகை அட்டைகளை வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Provident Fund Organization) ஊழியர்களுக்கு வழங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

அலுவலகங்கள் மற்றும் வலைத்தளப் பதிவேடுகளுக்கு இடையேயான இசைவு (Synchronization between the office and web records): தரவுகளை உருவாக்குதல், தரவுத் தளங்களை (Data bases) உருவாக்குதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, வலையோடு உறவாடுதல் என்பது, சாதாரண அலுவலகங்களில் கையெழுத்துப் பதிவேடுகள் அல்லது கணினிப் பதிவேடுகளோடு தொடர்பு கொள்வதிலிருந்து வேறுபட்டதாகும். பயனாளரின் பதிவேடுகளை வலை அலுவலகத்தில் பதிவு செய்வதற்குத் தானியங்கிச் செயல்முறைகள் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் வலை அலுவலகத்திற்கும், சாதாரண அலுவலகத்திற்கும் இடையேயான சேவைகள்இ சைந்து செல்ல இயலும். இதனால் பதிவுகளில் முரண்பாடுகள் இல்லாமல் தரவுகள் ஒருங்கிணைப்பு நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டாகும்.

பணிநிகழ்வுச் செயல்பாடு (Workflow Execution): அரசு அலுவலர்களோடு மேற்கொள்ளும் செயல்பாடுகள், அவர்களிடமிருந்து பெறப்படும் அனுமதிகள் மற்றும் மின் ஆளுகைப் பயன்பாட்டில் மேற்கொள்ளப்படும் தானியங்கிச் செயல்பாடுகள் ஆகியவற்றிற்குப் பயனாளர்கள் வலைமூலம் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதால், பணிநிகழ்வுத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

விரைவு நடவடிக்கைகள் (Hastening Transactions): மின் ஆளுகையின் மூன்றாவது கட்டமாக விளங்குவது விரைவுத் தன்மை. மின் ஆளுகை வாயிலாகப் பயனர்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் இடையே, தொடர்பு மற்றும் நடவடிக்கைகளுக்கான செயல்முறைகள் விரைந்து நடைபெறுகின்றன. மின் ஆளுகைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள், அவர்களது தேவைக்கேற்ப, உரிய, வழக்கமான வடிவத்தில் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. மின் ஆளுகையின் பல்வேறு பயன்பாடுகளும், பல்வேறு அரசு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்பெற்று, ஒரே குறிப்பாகக் கிடைப்பதோடு, ஒரே நடவடிக்கையின் மூலமாகவும் கிடைக்கின்றன. இக்குறிப்பு ஆவணம் அரசுத் துறைகளாலும் பயன்படுத்தப் பெறலாம்.

மின் ஆளுகையை நடைமுறைப்படுத்தல் (Implementing e-Governance): மின் ஆளுகை செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட, கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் (layers) இணங்கிச் செயல்பட வேண்டும். அடித்தள அடுக்காக அமைவது மின் ஆளுகைக் கட்டமைப்பாகும். இதில் பயனர்கள் (clients), சேவையர்கள் (servers), மற்றும் தரவுகள் வலையமைப்பு (data network) ஆகியன அடங்கும். வலையமைப்புக்குத் தொலைபேசி, உரிய தரவு-வலையமைப்பு இணைப்பு முறை, கம்பியில்லாச் சேவை ஆகியன தேவை. மேல்தள அடுக்கில் மின் ஆளுகைத் தீர்வுகள், சேவையை அளிக்கும் பல்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பல்வகைப் பயன்பாட்டுச் சேவைகள் ஆகியன அடக்கம். இடையிலுள்ள அடுக்கு மேற்கூறிய இரண்டு அடுக்குகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமைவது. இது சிறந்த பயன்பாடுகளை உருவாக்கக்கூடிய மென்பொருட்களை (software) உள்ளடக்கியதாகும். மின் ஆளுகைக் கூறுகளை அணுகுதல், இரகசியப் பராமரிப்பு மற்றும் பதிவுகளைப் பராமரித்தல்/நீக்குதல் பற்றிய கொள்கைகள் இந்த அடுக்கில்தான் உறுதி செய்யப்படுகின்றன. தேவையான செயல்முறைகள், தீர்வுகள் ஆகிய வற்றைப் பல்வேறு பயன்பாட்டுச் செயல்முறைகள் வழியே பெற்று ஒருங்கிணைப்பதற்குத் தேவையான கருவிகளும், சேவைகளும் இங்கேதான் அளிக்கப்படுகின்றன.

மின் ஆளுகைத் துவக்க முயற்சிகள் (E-Governance Initiatives): மின் ஆளுகை முறையை நம் நாட்டில் ஊக்குவிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் எல்லா மட்டத்திலும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரைவுபடுத்த முதற்கட்டமாக மின் ஆளுகைப் பிரிவு (Electronic Governance Division) என்னும் புதியதொரு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதில் சென்றடைவதற்கான தகவல் தொழில்நுட்பப் பிரச்சினைகளில் இப்பிரிவு ஆர்வம் காட்டி வருகிறது. அரசின் சேவைகள் செம்மையாக நடைபெறவும், மக்களுக்கு அச்சேவைகள் எளிதில், விரைந்து சென்றடையவும், செலவைக் குறைக்கவும், நிர்வாகச் செயல்பாடுகளைச் சீரமைக்கவுமான வரைமுறைகளை உருவாக்கிப் புதியதோர் அரசு அமைவதைக் குறிக்கோளாகக் கொண்டு இப்பிரிவு செயலாற்றி வருகிறதெனலாம்.

மின் ஆளுகை முறையை ஊக்குவிக்கப் பல்வேறு மாநில அரசுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அவற்றுல் சிலவற்றை இங்கு காண்போம்:

ஃ உத்தராஞ்சல் மாநில அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உதவியுடன் முதலாவது தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை டேராடூன் நகரில் நிறுவியுள்ளது. இதன் செயல்பாடுகள் அனைத்தும் இந்தி மொழியில் அமைந்துள்ளன. மேலும் இவ்வாய்வுக்கூடம் இண்டெல், சிஸ்கோ, ஆப்டெக் போன்ற தகவல் நொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மலை வாழ் மக்களுக்கு அவர்கள் தாய்மொழியிலேயே தகவல் தொழில்நுட்ப அறிவை எவ்வித இலாப நோக்குமின்றி அளித்து வருகிறது.

ஃ ஆந்திர மாநிலத்தில், எல்லா மாவட்டத் தலை நகரங்களும், மாநிலத் தலைநகரான ஐதராபாதுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாநில முதல்வர் மாவட்ட அலுவலர்களோடு எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

ஃ கேரளாவில் அனைத்துச் சிற்றுர்களும் மாவட்டத் தலைநகர்களுடன் நிகழ்நிலைச் (online) செயல்பாட்டின் வழி இணைக்கப்பட்டு வருகின்றன.

ஃ தமிழ்நாட்டில் 3000 கிலோமீட்டர் நீளத்திற்கு இழை ஒளியியல் (fiber optical) கம்பியைப் புதைத்து ஒரு வலையமைப்பு உருவாக்கப்படுகிறது. இவ்வலையமைப்பின் மூலம் பொது மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பங்கீடு அட்டைகள், நிலப் பதிவேடுகள், ஓய்வூதியப் பதிவேடுகள், பிள்ளைகளுக்கான கல்விச் சேர்க்கைப் படிவங்கள் பற்றிய பல்வேறு செயற் பாடுகளையும் நிறைவேற்றிக் கொள்ள வழியேற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃ அண்மையில் கர்நாடக மாநிலத்தில் மின் ஆளுகை வழி குடிமக்கள் சேவை மையங்களைத் (Citizens ‘ Service Centres) துவக்கியுள்ளது. சொத்துவரி செலுத்துதல், வீட்டுவரி செலுத்தல், வீட்டு மனைப் பட்டா பெற விண்ணப்பித்தல், பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுதல், மக்கள் குறைகளைப் பதிவு செய்தல், வீடு கட்டுவதற்கான வரைபடத்தைச் சமர்ப்பித்து உரிமம் பெறுதல் போன்ற பல்வேறு மக்கள் தேவைகள் விரைந்து நடைபெற இம்மையங்கள் உதவுகின்றன

ஃ பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரிய அலுவலகங்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக சி-டாக் (C-DAC) நிறுவனம், ஊழியர் தகவல் மேலாண்மை அமைப்பு (Personnel Information Management system – PIMS) என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது. அலுவலர்கள் பற்றிய தகவல்கள், அவர்களைப் பணிக்கு அமர்த்தியது, அவர்களது பணி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய விவரம், விடுப்பு பற்றிய விவரம், பணியிடைப் பயிற்சி, பணி உயர்வுக்கான தேர்வில் பங்கேற்றது, பணி மீள்பார்வை, பணியிலிருந்து ஓய்வு பெற்றது, ஓய்வூதியப் பலன்கள் போன்ற பல விவரங்களும் இம்மென்பொருளில் அடங்கியுள்ளன. இம்மென்பொருள் மகாராத்திர மாநிலப் பொதுப்பணித் துறையிலும், பின்னர் கருவூலத் துறையிலும் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களிலும் இம்மென்பொருளை எளிதாகப் பயன்படுத்தி மிகுந்த பலனைப் பெறமுடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஃ சுங்கத்துறை மேலாண்மைக்கான மென்பொருள் ஒன்றும் சி-டாக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதனால் சுங்கத்துறை அலுவலகங்களில் பண வசூல் நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டன. சுங்கத்துறையின் பற்று வரவுகளில் கையாளப்படும் பெருந்தொகையான பணத்தை மேலாண்மை செய்யவும், வங்கிவரைவோலை வழி பணத்தை வசூலிக்கவும் இம்மென்பொருள் பேருதவி செய்கிறது. சுங்க அலுவலகங்கள், தலைமை அலுவலகங்களோடு தொடர்பு கொண்து பற்று வரவுக் கணக்குகளைப் பிழையின்றி நடத்தவும் உதவுகிறது. இச்செயல்முறை வழி தாமதங்கள் தவிர்க்கப்படுவதுடன், தவறுகளும் குறைக்கப்படுகின்றன. இத்தகையப் பல்வழிப் பயன்பாட்டினால், தவறிழைப்போர் யார் என்பதும் எளிதாக அறியப்படுகிறது. இச்சிரப்பு வாய்ந்த ஓர் அமைப்பு மகாராட்டிர மாநில நாசிக் நகராட்சி மன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அங்கிருந்த 17 சுங்க அலுவலங்கள் இணைக்கப் பெற்றன.

ஃ மேலும் மகாராட்டிர மாநிலச் சட்டப்பேரவை, சட்ட மேலவைச் செயல்பாடுகளை கணினிமயப் படுத்துவதற்கான ஒரு வழிமுறையும் உருவாக்கப்பட்டது. இதனால் சட்ட நிறைவேற்றம், வரவு-செலவுத் திட்ட ஒப்புகை, செலவினங்களுக்கான நிதியளிப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் மேற்பார்வை, கட்டுப்பாடுகள், நிர்வாகம், அரசுச் செயல் பாடுகள் பற்றிய திறனாய்வுகள் ஆகியன விரைந்து நடைபெற வழியேற்பட்டது. மேலும் கணினிமயமாக்கத்தால் சட்டமன்ற அறிக்கைகள், அவற்றின் திருத்தங்கள், சட்ட முன்வரைவுகள், தீர்மானங்கள், சட்டமன்றக் குழுக்கள், கணக்கு மற்றும் உறுப்பினர் ஊதியம், பொது நிர்வாகம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு பயன்பாடுகளுக்கான கட்டகங்களும் (modules) வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஃ பங்கு மாற்று வாணிகத்தில் சரியான முறையில் குழுமங்களின் (companies) தரவுகளை ஒப்பிட்டு, உரிய முறையில் பகுப்பாய்வு நடத்தி முதலீடு செய்வோரின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, பெரும் லாபத்தையும் ஈட்டித் தருகின்றது. பங்குகளின் இயக்கங்களை உரிய முறையில் பகுப்பாய்வு செய்யவும், பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்யவும், வணிக நிறுவனங்களின் பட்டியலை மேலாண்மை செய்யவும் தகுந்த மென்பொருளை சி-டாக் உருவாக்கியுள்ளது.

ஃ வேளாண்மை சார்ந்த இந்தியப் பொருளாதாரத்தில் உழவர்களுக்கான பயிர் விதைகளைச் சேகரித்து விநியோகம் செய்தல் இன்றையமையாத இடத்தை வகிக்கிறது. வேளாண் மக்களிடமிருந்து பயிர் விதைகளைப் பெறுதல், அவற்றைத் தரம் பிரித்தல், சோதித்தல், பக்குவப்படுத்தல், சான்றளித்தல், சிப்பமாகக் கட்டுதல், விலை நிர்ணயம் செய்தல், தேவையானோருக்கு அனுப்பி வைத்தல் ஆகியன இதில் அடங்கும். இவற்றையெல்லாம் மாநிலங்களிலுள்ள விதைக் கழகங்கள் (State seed corporations) மேற்கொள்ளுகின்றன. இதற்கென்று தகவல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனால் விரைந்த சேவை, செம்மையான நிர்வாகம், சீரான சோதனைகள், சேவைகள் சரியான நேரத்தில் உரியவர்களைச் சென்றடைதல் ஆகியன மேலாண்மைத் தகவல் அமைப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு வேளாண் மக்களின் மனம் நிறைவடையும் வாய்ப்பு உண்டாகிறது. இத்தகைய திட்டம் ஒன்று மகாராட்டிர மாநில விதைக் கழகத்தால் வெற்றியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பயன்பாட்டுக்கான உருவாக்கப்பட்ட மென்பொருள், பல்வேறு செயல்பாடுகளுக்கென 18 கட்டகங்களை உள்ளடக்கியதாகும்.

நடுவண் அரசின் முயற்சிகள்

மின் ஆளுகை முறையை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்திய அரசு, நடுவண் அரசின் அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் பின்பற்றுவதற்காக குறைந்த அளவு செயல்திட்டம் ஒன்றை வகுத்துத் தந்துள்ளது.

ஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் உட்பகுதி வலையமைப்பு (Local Area Network LAN) ஒன்றை நிறுவி, பிரிவு அலுவலர்கள் வரை எல்ல ஊழியர்களுக்கும், தேவையான மென்பொருள்கள் நிறுவப்பட்ட தனியாள் கணினி (Personal Computer PC) ஒன்றை வழங்குதல்

ஃ அலுவலகங்களில் கணினியைப் பயன்படுத்திப் பணியாற்ற வேண்டிய அனைவருக்கும் தேவையான கணினிப் பயிற்சி அளித்தல்

ஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் அலுவலகத் தன்னியக்கமாக்கல் மென்பொருளை (Office Automation software) பயன்படுத்துவதன் வாயிலாகக் கடிதப் போக்குவரத்து, கோப்புப் பரிமாற்றம் ஆகியவற்றைக் கணினிமயமாக்கல்

ஃ நாள்தோறும் நடைபெறும் அலுவலகச் செயற்பாடுகளுக்கும், கணக்குப் பதிவுகள், ஊதிய விவரங்கள் போன்றவற்றிற்கும் உரிய மென்பொருள்களைப் பயன்படுத்தல்

ஃ எல்லா அமைச்சகங்களிலும், அலுவலகங்களிலும், அலுவலகக் கூட்ட அரிக்கைகளை மின் அஞ்சல் வழி நிகழ்நிலை அறிவிப்பாக ஊழியர்களுக்குத் தெரிவித்தல்

ஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் தத்தமக்கு உரிய வலைத் தளங்களை உருவாக்கிக் கொள்ளுதல்

ஃ சட்டங்கள், விதிகள், சுற்றறிக்கைகள் ஆகிய அனைத்தையும் மின்னணு வடிவங்களாக மாற்றுதல்; இவையும், மக்களுக்கு ஆர்வமூட்டுகின்ற பிறவும் இணையத்தின் வழியே கிடைக்கும்படிச் செய்தல்

ஃ அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்கள் ஆகியன தமது வலைத்தளங்களில் குடிமக்கள் / பயனர்கள் பயன்படுத்துகின்ற வகையில் தேவையான படிவங்களை வெளியிடுதல். இந்தப் படிவங்கள் அச்சிடப்படுகின்ற வகையிலும், கணினியிலேயே நிரைவு செய்து நிகழ்நிலை முறையில் அனுப்பப்படுகின்ற வகையிலும் அமைந்திருத்தல்

ஃ வலைத்தளங்களின் உள்ளடக்கம் இயன்றவரையில் உடனுக்குடன் மக்கள் மொழியிலும் கிடைக்கின்ற வகையில் உருவாக்கப்படுதல்

ஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் தமது சேவைகள் மின்னணு வாயிலாக மக்களைச் சென்றடைவதற்கு வழிகாணுதல்

ஃ நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மின் ஆளுகை வழி, தகவல் தொடர்புகள் சிறப்பாக நடைபெற புது தில்லியுலுள்ள தேசிய தகவல் மையம் முக்கியப் பங்காற்றி வருகிறது. நடுவண் அரசின் மக்கள் குறை தீர்க்கும் அமைப்பு நிகழ்நிலையாக persmin.nic.in எனும் தளத்தில் இயங்குகிறது. இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் மின் அஞ்சல் வழியே இத்தளத்துடன் தொடர்பு கொண்டு தமது குறைகளைத் தெரிவிக்க இயலும். நீதித்துறை பற்றிய தகவல்களை caselists.nic.in என்னும் வலைதளம் சிரந்த முறையில் அளித்து வருகிறது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற அண்மைக்காலத் தீர்ப்புகள் அனைத்தையும் இவ்வலைத்தளம் வழங்குவதோடு, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய தகவல்களையும் அளிக்கிறது. மின் ஆளுகையின் விரைவான முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காணும்போது, இவ்வுலகம் முழுமையுமே வலையமைப்புகளாலும், வலைத்தளங்களாலும் ஆட்சி செய்யப்படும் நாள் தொலைவில் இல்லை என்பது தெளிவாகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193, 5ஆவது கிராஸ், கே பிளாக்

குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

ragha2193van@yahoo.com

Ph: / தொ. பேசி: 91-0821-2561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர