மார்ட்டின் லூதர் கிங் பேச்சுகளிலிருந்து சில முத்துக்கள்

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue


கறுப்பர்களின் எதேச்சதிகாரம், வெள்ளையர்களின் எதேச்சாதிகாரம் போலவே தீமை நிறைந்தது.

***

கறுப்பர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவது என்பது, வெள்ளையரின் இனத்தை வெறுக்கச் சொல்லிக் கொடுப்பது அல்ல. வெள்ளை இனத்துடன் எமக்குச் சண்டை எதுவும் இல்லை. அடக்குமுறைக் கொள்கைகளும், அடக்குமுறையை நீட்டிக்க வெள்ளையரின் தலைவர்கள் கொண்டு வந்த ஒடுக்கு முறை சட்டமுமே நம் எதிரி.

****

என் அம்மா. ஒரு வெற்றிகரமான் பாதிரியாரின் மகள், எனவே அவர் சற்றே வசதியுடன் வாழ்ந்தவர். நல்ல பள்ளிக்கூடமும், கல்லூரியும் அவருக்கு வாய்த்தது. ஆனால் என் அப்பா, குத்தகை நிலத்தில் பாடு பட்டவர். பிரிவினையின் ஆழமான துயர்கள் அவருக்குத் தெரியும். மிருகத் தனமான அடக்கு முறைகளை நேருக்கு நேர் சந்தித்தவர்.

ஒரு நாள் அவருடன் நான் காரில் போய்க் கொண்டிருக்கும் போது நிறுத்தல் பலகையைத் தாண்டி தற்செயலாகக் கடந்து விட்டார். ஒரு போலிஸ் காரர்காரை நிறுத்திச் சொன்னார். ‘என்ன பயலே, நிறுத்து. உன் லைசென்ஸை எடு. ‘

என் அப்பாவிற்கு மிகுந்த கோபம். ‘ நான் ஒன்றும் பயல் இல்லை. இதோ இங்கே இருக்கிறானே (என்னைக் காட்டி) இவன் தான் பையன். நான் ஒரு வளர்ந்த மனிதன். அப்படி என்னை நீ அழைக்கும் வரையில் நான் நீ சொல்வதைக் கேட்க மாட்டேன் ‘ என்று சினத்துடன் கூறினார்.

போலிஸ்காரருக்கு அதிர்ச்சி. அபராதச் சீட்டை அவசர அவசரமாய் எழுதிக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.

இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளினால், பிரிவினைப் பாகுபாடு என்பது அறிவு பூர்வமானது அல்ல, ஒழுக்கம் சார்ந்து நியாயப் படுத்தக் கூடியதும் அல்ல என்பது என் மனதில் பதிந்தது.

****

மன்னிப்பதற்கான ஒரு தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் குணம் அற்றவன், அன்பு செலுத்தும் குணமும் அற்றவனே. நம்மிடையே மிக மோசமானவர்களிடமும் கூட ஒரு சில நல்ல குணங்கள் உண்டு. அதே போல் மிகச் சிறந்த மனிதர்களிடமும் குறைபாடு உண்டு. இதைப் புரிந்து கொண்டால் பகைவர்களயும் நேசிக்கும் பண்பு உருப் பெற்று விடும்.

****

கறுப்பும் வெள்ளையும் சேர்ந்ததே நம் கலாசார அடையாளம். நம் விதிவழிப் பாதைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையே. கறுப்பர்களின் சக்தி , அதிகாரப் பங்கீடு வெள்ளையர்களின் பாதையையும் குறுக்கே கடந்து தான் ஆக வேண்டும். பாதையின் ஒரு சந்தர்ப்பத்தில் இரு இனங்களும் இணைந்தே ஆக வேண்டும்.

****

வழிமுறைகளும், லட்சியங்களும் ஒன்றுடன் ஒன்று துண்டிக்கப் பட்ட நிலை இருக்கும் வரையில் அமைதி என்பது உலகில் இருக்க முடியாது. வழிமுறை என்பது லட்சியங்களின் வரைபடப் பாதை. இறுதி லட்சியத்தின் உருவாக்கமே வழி முறை. மோசமான வழிமுறைகளைக் கைக்கொண்டு உயர்ந்த லட்சியங்களை அடைய முடியாது. வழிமுறை தான் விதை. லட்சியமே மரம்.

****

உண்மையான அமைதி என்பது வெறும் சச்சரவில்லாத நிலை அல்ல. நீதி நிலை நாட்டப் படுவதே உண்மையான அமைதி.

****

இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் மிக முக்கியமான வெற்றி உள்முகமான ஒன்று. கறுப்பரின் மனத்தில் ஏற்பட்ட மாறுதலே மிகப் பெரிய வெற்றி. பெருமிதமும், சுய மரியாதையும் கொண்டு நாம் நிமிர்ந்து நின்றோம். நம் வளைந்த முதுகுகள் நேராயின. உன் முதுகு வளையா விடில் யாரும் உன்மேல் ஏறிச் சவாரி செய்ய முடியாது.

***

இன நீதியை அடைய வன்முறையைக் கைக்கொள்வது நடைமுறைக்கு ஒவ்வாதது. ஒழுக்கமற்றதும் கூட. அது ஏன் ஒழுக்கமற்றது என்றால், வன்முறையின் சுழல் படிக்கட்டு எல்லோரையும் கீழே தள்ளி விடும். கண்ணுக்குக் கண் என்று பழி வாங்கத் தொடங்கினால் உலக மே குருடாகிவிடும். வன்முறை ஏன் ஒழுக்கமற்றது என்றால், எதிரியை அவமானப் படுத்த அது முயல்கிறதே தவிர , எதிரியின் புரிந்து கொள்ளலை வளர்ப்பதில்லை. வன்முறை ஏன் ஒழுக்கமற்றது என்றால், அது அன்பினால் அல்ல, வெறுப்பினால் கட்டப் படுகிறது. அது சமூகத்தை அழித்து, சகோதரத்துவத்தை முறியடித்து விடுகிறது. சமூகத்தில் உரையாடல் நடப்பதற்குப் பதிலாக அது, ஒரே ஒருவரின் பேச்சாகி விடுகிறது.வன்முறையின் முடிவு அதனில் தோல்வியாகி முடிகிறது. போராட்டத்தில் பிழைத்திருப்பவர்களிடம் கசப்புணர்ச்சியும் , அடக்குமுறையாளர்களிடம் மிருக உணர்ச்சியும் தான் மிஞ்சுகிறது.

****

மனித குலம் முன்னேற்றப் பாதையில் போக வேண்டுமென்றால் காந்தியின் பாதையை விலக்க முடியாது. மனித குலம் அமைதியும், ஒற்றுமையும் கொண்டு வாழ்கிற தரிசனத்தை முன்னிறுத்தியே அவர் வாழ்க்கை , எண்ணம், செயல் இவற்றையெல்லாம் அமைத்துக் கொண்டார்.

****

Series Navigation

செய்தி

செய்தி