மாரியம்மன் கதை

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

பூரணி


தஞ்சி என்னும் எழுபது வயதுக் கிழவி 1930 வாக்கில் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். அவள் கொஞ்சகாலம் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ததாகச் சொல்லுவாள். “நான் எலங்கை போயிவந்த கொரங்காக்கும்” என்று பெருமை அடித்துக் கொள்வாள். தனது வேலைகள் முடிந்தாலும் சிறு பெண்களாகிய எங்களோடு அரட்டை அடிக்க விரும்புவாள். அவள் பல விஷயங்களை மிகவும் சுவாரஸ்யமாகத் சொல்லத் தெரிந்தவள்.

அவள் சொன்ன மாரியம்மன் கதை

கேரளத்தில் ஒரு ஊரில் ஒரு பறைக் குடும்பம் வசித்து வந்தது. தந்தை இறந்து விட்டதால் சிறுவன் தாயால் வளர்க்கப்பட்டான்.கொஞ்சம் நல்ல நிறமாக இருந்த அவன் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும்போதெல்லாம் தான் ஒரு பிராமணப் பையன்போல இருப்பதாக எண்ணி பெருமை கொள்வான். வீட்டின் வறுமை காரனமாக அவன் வீட்டைவிட்டு ஓடித் தமிழ் நாட்டை அடைந்தான். அங்கு பிச்சை எடுத்து உண்டு காலம் கழித்தான்.

ஒரு சமயம் ஒரு நதியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, நதியை ஒட்டிய கோயிலில் இருந்து மனிதர்கள் பேசும் ஒலியும், சிறுவர்கல் ஏதோ பாடம் சொல்லிக் கொள்வதுமான சத்தமும் கேட்டது. கோயிலின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருந்த வேத பாடசாலை அது. சிறுவன் தினமும் நதிக்கரைக்கு வந்து அந்தப் பேச்சை கேட்டு அதுபோல் தானும் பேசவும் பழகவும் கற்றுக் கொண்டான். இப்படி கொஞ்ச காலம் சென்றது. அவன் வேதம் முழுவதையும் கற்று கொண்டான். வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்ந்த அவன் தன்னை ஒரு பிராமணன் என்று சொல்லிக் கொண்டு பிச்சை எடுத்து அங்கு வாழத் தொடங்கினான்.

ஒரு நாள் பகல் நேரத்தில் வீட்டுத் திண்னையில் அமர்ந்திருந்த ஒரு அந்தணரை அணுகி தனது பசிபோக்க உணவு தரும்படி வேண்டினான். அவர் அவனுக்கு தன் மகளைக்கொண்டு உணவு பரிமாரச் சொல்லி அவன் உண்ணும் போது அவனுடன் பேசத் தொடங்கினார். அவன், தான் கேரள நாட்டைச் சேர்ந்த பிராமணப் பையன் என்றும், தந்தை இறந்து விட்டதால் தாயின் கஷ்டத்தைக் குறைக்க எண்ணி ஓடிவந்து விட்டதாகவும், நதிக்கரையில் இருந்தபடி அங்கு வேத பாடசாலையில் நடக்கும் பாடங்களையெல்லாம் கேட்டுக் கேட்டே கற்றுக் கொண்டதாகவும் ஆனால் எழுதப் படிக்கத் தெரியாதென்றும் தன்னைப் பற்றி சொன்னான்.

மனைவியை இழந்து தனது பனிரெண்டு வயதுப் பெண்ணை கஷ்டப் பட்டுக் காப்பாற்றிவரும் அந்த ஏழை பிராமணர் தனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டதாக எண்ணி, அந்தப் பையனை தன் வீட்டில் தங்க வைத்துக் கொண்டு அவனுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். தான் செல்லும் வைதீக காரியங்களுக்கு அவனையும் கூட்டிச் சென்றார். அவனை அத் தொழிலில் ஈடுபடுத்தி, தனது பெண்னையும் மணமுடித்துக் கொடுத்து தன் வீட்டோடு வைத்துக்கொண்டு விட்டார்.

தனது தாயார் என்றேனும் தன்னைத் தேடிக்கொண்டு வந்துவிடலாம் என்னும் அச்சத்தோடு அவன் ஊரிலிருந்து வரும் பாதையில் போய் நின்று கொள்வான். அவ்விதமே, ஒரு நாள் அவன் அம்மா அவனைத் தேடியபடி அங்கு வந்தே விட்டாள். அவளை ஊருக்கு ஒதுக்குப் புறமாகக் கூட்டிச் சென்று தனது அப்போதைய நிலையைச் சொல்லி, “உன்னை என் தாய் என்று அறிமுகப் படுத்துகிறேன். ஆனால் நீ பேசினால் உண்மை தெரிந்துவிடும். ஆகையால் உன்னை ஊமை என்று சொல்லுவேன். நீ ஊமை போல நடந்துகொள்ள வேண்டும்.” என்று சொல்லி அவளை தன் வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். அந்த அம்மாள் உடுத்தியிருந்த புடவைக் கட்டு கேரள முறை என்று அவன் சொன்னதை ஐயர் நம்பிவிட்டார். தமது பெண்னிடம் வந்த சம்பந்திக்கு விருந்து வைக்கவேண்டும். ஆகையால் வடை, பாயசம், போளி, எல்லாம் செய்யச் சொல்லி விட்டு வெளியே ஒரு காரியமாகச் சென்றார்.

பெண் கணவனையும் மாமியாரையும் கூடத்தில் அமர்த்தி உணவு பரிமாறலானாள். அவள் சமையல் அறையில் ஏதோ வேலையில் இருந்தபோது பையனின் அம்மா இரகசியமான குரலில், “என்னடா தம்பி இது எளங்கன்னு நாக்குபோல இருக்குதே? ஐயர் வீட்டில் மாமிசம் சமைப்பார்களா?” என்று போளியைக் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்துவிட்ட பெண் அந்தப் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டாள்.

எளங்கன்னு நாக்கா? பறையர்கள்தானே மாடு கன்னுகளை சாப்பிடுவார் கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஊமை என்றவள் பேசுகிறாள். இதில் ஏதோ சதி இருக்கிறது என்று புரிந்துகொண்டு பெரிதாகக் கூச்சல் போட்டபடி நடு அறையில் உக்கிரகமான தோற்றத்தோடு சென்று அமர்ந்துகொண்டு விட்டாள். அச்சமயம் அவள் தந்தை வீடு திரும்பி உள்ளே நுழைந்தார்.

திடீர் என்று தனது பெண்ணுக்கு என்ன நேர்ந்தது? ஏன் கூச்சல் போட்ட படி உணவு பரிமாறுவதை நிறுத்திவிட்டு இப்படி தலைவிரிகோலமாக உட்கார்ந் திருக்கிறாள் என்று யோசித்து, மாப்பிள்ளைக்கும் சம்பந்திக்கும் மிகுதி உணவை பரிமாறி, அவர்கள்சாப்பிட்ட பின் தன் மகளிடம் வந்து, “உனக்கு என்ன கோபம்? ஏன் வந்தவர்களை அவமதிக்கிறாய்?” என்று நயமாகவும் பயமாகவும் விசாரித்தார். மகள் தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, “உன் மாப் பிள்ளையை வீடு நிறையும்படி பொருள் கொண்டுவரச் சொல்.” என்றாள்.

உடனே அந்தப் பையன் தன்னிடமும் தனது அன்னையிடமும் இருந்த பணத்தைத் திரட்டி எடுத்துக் கொண்டு கடைவீதிக்குச் சென்றான். ராகி, சோளம், நெல் என்று தானியங்களை வாங்கிவந்து வீட்டில் கொட்டினான். அவளோ, “இதுவல்ல நான் கேட்டது” என்று கத்திக் கொண்டு அவற்றை வாரி இரைக் கலானாள். தந்தைக்கு அவளின் செயலிலிருந்து மனதில் ஏதோ பொரி தட்டிற்று. மௌனமாக ஒரு புறம் அமர்ந்து விட்டார்.

சலிப்படைந்த கணவன், “வேறு என்னதான் உனக்கு வேண்டும்?” என்று கேட்டான். அந்தப் பெண் மளமளவென்று சமையல் அறைக்குச் சென்று அடுப்பிலிருந்து தணலை ஒரு தாம்பாளத்தில் எடுத்துவந்து கணவன்முன் வைத்து, விசிரி அதை நன்கு எரியச்செய்து பின் நெருப்பை அவன் தலையில் கொட்டினாள். “மூடனே! ஜோதிதான் வீடு நிறைந்த பொருள். பொய்யனே உன்னால் எப்படி அதை அறியமுடியும்? பறைப்பையன் எங்களை ஏமாற்றி என்னை மணந்து கொண்டு விட்டாய்.” என்று சொல்லியவாறு தன்மீதும் நெருப்புவைத்துக் கொண்டு மாண்டுபோனாள்.

அவள்தான் மாரியம்மனாக ஆனாள்.

மாரியம்மன் திருவிழாவில் மூன்று கிளையோடு கூடிய கம்பத்தை ஆரம்ப நாளில் கோயிலின் முன் கொண்டுவந்து நடுவார்கள். அதுதான் மாரியம்மனின் கணவன் என்று அர்த்தம். விழா முடியும் மட்டும் மாரியம்மனுக்கு சுமங்கலிக் கோலம் செய்வார்கள். அக்கினிச் சட்டியை ஏந்தி வருபவர்கள் அதை அந்த முக்கிளைக் கம்பத்தில் வைப்பார்கள். அதன்பிறகு மாரியம்மனுக்கு வெள்ளைச் சேலையும் விபூதியும்தான்.

இப்படிச் சொல்லி முடித்த தஞ்சி, அந்தப் பெண் அள்ளி வீசிய ராகி, சோளம், நெல் முதலியவைதான் அம்மையாக மனிதர்கள் உடலில் தோன்று கின்றன என்று விளக்கினாள்.

புராணப்படி மாரியம்மன் கதை

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி. மிகவும் பதிவிரதையாக இருந்துவந்தாள். அவள் தினமும் நிதியில் குளிக்கச் செல்லும்போது குடம் எடுத்துச் செல்ல மாட்டாள். நீரில் குளித்து முடித்தபின் கணவனை தியானித்து நதி ஜலத்தைக் கையால் சுழற்றுவாள். அப்போது அச்சுழற்சி குடமாக மாறி விடும். அக்குடத்தில் நீர் முகர்ந்து வந்து கணவனுடைய பூஜைக்குக் கொடுப்பாள்.

ஒருநாள் அவ்விதம் குடம் செய்யும்போது ஜலத்தில் ஒரு நிழலைக் கண்டாள். அந்த நிழல் வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த கந்தர் வனுடையது. ரேணுகா தேவி, “இவ்வளவு எழிலுடைய ஆண்களும் கூட இருக்கிறார்களா?” என்று அவ்வுருவ நிழலைப்பார்த்து அதிசயித்தாள். இப்படி எண்ணியதன் பலனாக அவளது கற்புக்கு பங்கம் விளைந்தது. அவளுக்கு அன்று ஜலத்தில் குடம் செய்ய முடியவில்லை.

முனிவருக்கு நிகழ்ந்தது தெரிந்து மிகுந்த கோபமடைந்து, தனது மகன் பரசுராமனை கூப்பிட்டு தாயை காட்டுப் பிரதேசத்துக்குக் கூட்டிச் சென்று அவளது சிரசை துண்டித்துவிடும்படி ஆனையிட்டார். மகன், “ தந்தையே, உங்கள் ஆணைப்படி செய்கிறேன். ஆனால் நான் முடித்துவிட்டு வந்தவுடன் நான் கேட்கும் வரத்தை நீர் தட்டாமல் தரவேண்டும்” என்று நிபந்தனை சொன்னான். முனிவர் சம்மதிக்கவும், தாயின் தலையை வெட்டிவிட்டு வந்த அவன் தன் தந்தையிடம் தனது தாய் திரும்பவும் உயிருடன் திரும்பவேண்டும் என்று தன் வரக் கோரிக்கையை முன் வைத்தான். சிறிது நேரம் மௌனம் காத்த முனிவர், “ போ, உன் தாயின் தலையை மறுபடியும் கழுத்தில் பொருத்து. அவள் உயிர் பெற்று விடுவாள்” என்று சொன்னார்.

பரசுராமன் காடு சென்று மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தான். ஆனால் அவன் தனது பரபரப்பில் தாயின் தலையை வேரொரு தலையில்லாது கிடந்த உடலில் பொருத்தி விட்டான். அவ்வுடல் ஒரு பறையன் தன் மனைவிமீது சந்தேகம் கொண்டு தலையைக் வெட்டியெரிந்ததாக இருந்தது.

உடல் மாறி உயிர் பெற்ற ரேணுகாதேவி இதை பரசுராமனுக்கு விளக்கினாள். “ மகனே! விதியை மதியால் வெல்ல முடியாது. நான் இனி இவ்விதமே ஒரு தெய்வமாக உலகில் உலாவுவேன். இந்த உடலுக்குச் சொந்தமானவளும் ஒரு பதிவிரதைதான். மஹா உத்தமிதான். இனி நான் வீணாகப் பெண்ணை சந்தேகிக்கும் ஆண்களை வெறுத்து ஒதுக்குவேன். எனக்கு ஆண்வாடையே கூடாது. இதை நீ ஜனங்களிடம் சொல். இன்றிலிருந்து நான் ஒரு கிராம தேவதையாக உலவிவருவேன். மாந்தரின் உடலில் அம்மையாக விளையாடுவேன். செயற்கையாக உருவான நான் அவர்கள் படும் துன்பத்தை வேடிக்கை பார்ப்பேன். வாடை தாக்காமல் பாதுகாத்தால் சில நாட்களில் விலகி விடுவேன். வாடைகள், அதிலும் ஆண் பெண் கலவியின் பின் ஏற்படும் வாடையை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.”

இவ்விதம் மகனிடம் சொன்ன அவள் மறைந்து போனாள்.

——————————————————-

Series Navigation