மாத்தா-ஹரி – அத்தியாயம் 26

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வாடிக்கையாளர்களுக்கென்று கார் நிறுத்த ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள். உணவு விடுதிக்குள் நுழைந்த மறுகணம், கறுப்புக் கவுனும், இடுப்பில் வெள்ளை ஏப்ரனுமாக இருந்த பெண்பணியாள் எதிர்ப்பட்டாள். ‘போன் ழூர்’ என்றாள். இவர்கள் பதிலுக்கு வணக்கம் தெரிவித்ததும், “ரிசர்வ் செய்திருக்கிரீகளா?”, என கேட்டாள். இவர்கள் “இல்லை” என்றார்கள். அணிந்திருந்த கோடைகாலத்திற்கான ஜாக்கெட்டை, கழட்டட்டுமெனக் காத்திருந்து, வாங்கிச் சென்று பத்திரப்படுத்திவிட்டுத் திரும்பிவந்தாள். நீங்கள் இரண்டு பேர்தானா? இல்லை வேறு யாரேனும் வரவேண்டுமா?”, என்பது அவளுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. ” இல்லை நாங்கள் இரண்டு பேர்தான்”, என்றார்கள். “அப்படி யென்றால் பிரச்சினைஇல்லை, வாருங்கள்”, என்றாள். இருவரும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கிட்டத்தட்ட எல்லா மேசைகளும் நிறைந்திருந்தன. பீங்கான் தட்டுக்களில் முட்கரண்டிகளும் கத்திகளும் எழுப்புகின்ற சிணுங்கல்கள், பரிமாறுகிறவர்கள் உண்டுமுடித்த தட்டுகளையும், கோப்பைகளையும் எடுக்கிறபோது எழும் ஓசை, மெலிதான உரையாடல்கள், உரத்த சிரிப்பென ஒழுங்கின்றித் திரும்புகின்ற திசையெங்கும் கதம்பமாக ஒலிக்கிறது.

இவர்கள் நாற்காலியில் அமர்த்திவிட்டுச் சென்ற பெண்மணி, ஆளுக்கொரு மெனுவைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

– ஹரிணி இங்கே இதற்குமுன்பு வந்திருக்கிறாயா?

– வந்திருக்கேன்..

– அப்போ உனக்குப் பிடிச்சதை ஏற்பாடு செய். இல்லை இன்றைக்கு இங்கே கார்த் துய் ழூர்(Carte du jour – Menu) என்று இன்றைக்கு என்ன வச்சிருக்காங்க, அதை கொண்டுவரச் சொல்லு.

– ஓகே.. கார்த் துய் ழூர் வேண்டாம், உனக்குப் பிடிச்சது என்னன்னு சொல்லு, நான் எதையாவது கொண்டுவரச் சொல்லிட்டு அது உனக்கு சரிவரலை என்றால் நல்லா இருக்காது.

– பயப்படாதே, உனக்குப் பிடிச்சது எதுவென்றாலும் சொல்லு, கண்ணை மூடிக்கிட்டுச் சாப்பிடறேன், என்னுடைய சொந்தச் சமையலை தைரியமா சாப்பிடும்போது இதைச் சாப்பிடமாட்டேனா?

– அடடே அப்படியொரு திறமை உன்கிட்டே ஒளிஞ்சிருக்குதா? இந்திய சமையலா, பிரான்சுச் சமையலா, எதில் உங்கள் திறமையைக் காட்டுவீங்க?

– அது சாப்பிடறவங்களைப் பொறுத்தது. இந்திய உணவுவகைகளைப் பற்றிய ஞானம் உனக்கிருக்கா?

– இல்லை.

– அப்போ உனக்கு அது இந்தியச் சமையல். பிரெஞ்சு உணவுவகைகளைபற்றி ஒன்றும் தெரியாதவர்களுக்கு அது பிரெஞ்சு சமையல். என்ன ரெடியா, இன்றைக்கு மாலை முயற்சி பண்ணிப்பார்க்கலாமா?

– பார்த்தாப் போகுது. இப்ப என்ன கொண்டுவரச் சொல்ல.

– அதுதான் சொன்னேனே உனக்குப் பிடிச்சதைச் சொல்லு.

– ஓகே, மறுபடியும் சொல்லிட்டேன் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது!

– சொல்லலை. வேண்டுமானா சத்தியம் பண்ணட்டுமா?

– வேண்டாம் ழே தெ க்ருவா( je te crois- உன்னை நம்பறேன்).

பணிப்பெண் கர்னேவும் பென்சிலுமாக வந்தாள். என்ன முடிவு பண்ணியாச்சா?

– ம். Entree-(தொடக்கமாக)வா இரண்டு காளான் ஆம்லெத், உருளைக்கிழங்கும் கோழியும் இரண்டு, கடைசியில் டெஸ்ஸெர்ட்டுக்கு எனக்கு கபே, நீ என்ன எடுக்கிற? ஐஸ்கிரீம்?

– எனக்கு தார்த் – ஓ- போம்(Tarte au pomme) சொல்லு.

– அப்போ ஒயின் என்ன சொல்ல?

– பொர்தோ சின்ன புத்தெய் கொண்டு வரச் சொல்லு, கூடவே இரண்டு கரோலா ரூழ்.

– C’est bien..(நல்லது) – பணிப்பெண் புறப்பட்டுச் சென்றாள்.

– அரவிந்தன் இப்போசொல்லு, இணையதளத்துல மாத்தாஹரியைpபத்தி உனக்கு ஏதோ தகவல் கிடைச்சுதுண்ணு சொன்னாயே.

– மாத்தா ஹரிக்கு பாரீஸ¤ல என்ன நடந்ததுண்ணு முதலில் நீ சொல்லணும்.

– சொல்றேன் அதுக்கு முன்னலே நி தெரிந்து கொண்டதென்ன?

– இப்பவெல்லாம் இரண்டாவது வாழ்க்கைண்ணு ஒண்ணு இணைய தளங்களில் பிரசித்தமாகிக்கிட்டே வருதே அதைப் பற்றி ஏதாச்சும் உனக்குத் தெரியுமா?

– , அந்த உலகத்திலே என்ன புதுசா என்ன அதிசயம் நடக்குதுங்கிறதை தெரிஞ்சு வச்சிருக்கீங்க? அதென்ன இரண்டாவது வாழ்க்கைஎன்னமோ நாங்களெல்லாம் கணிப்பொறித் துறையிலே வேலை செய்யறோம்னுதான் பேரு. ஆனா எங்களைவிட உங்களைப் போல ஆட்களுக்குத்தான்.

– ஆங்கிலத்துல Second Lifeண்ணு சொல்றாங்க. அதுவொரு மாய உலகம்(Virtual World). எழுபதுகளிலிருந்த ஹிப்பிகள் உலகம் எப்படியோ, அப்படி ஆனா இது நடைமுறை வாழ்க்கையில் அலுத்துப்போன மனிதர்களுக்கான ஒரு கற்பனை உலகம், ஒருவன் அல்லது ஒருத்தி, அவன் அல்லது அவளுக்காக உருவாக்கும் உலகம். தான் வாழாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க அனுமதிக்கும் உலகம். ‘எண்ணம்போல வாழ்வு’ என்பதை எந்தப் பெருளில் சொல்லபட்டதோ தெரியாது. ஆனா இந்த மாய உலத்தை உண்டாக்கியவன் ‘எண்ணம்போல வாழு!’ என்கிறான். இங்கே ஒவ்வொருவரும் மயன் என்று சொல்லாம். தனக்கான உடை, தனக்கான உடல், தனக்கான துணை, தனக்கான வீடு என்று நிர்மாணித்துக்கொண்டு அல்லது சிருஷ்டித்துக்கொண்டு, வெளி உலத்திலிலிருந்து தப்பித்து, சமுதாய நிர்பத்தஙளைத் துறந்து மாய உலகத்தில் சஞ்சரிக்கலாம். நிஜவாழ்க்கையிலே சார்லஸா, பக்கிங்காம் அரண்மணையிலே வாழ முடியாத என்னோட ஏக்கத்தை என்னுடைய ‘இரண்டாவது மாய உலகத்தில் நான் நிறைவேற்றிக்கொள்ளமுடியும். விக்ரமாதித்தன் போல கூடுவிட்டு கூடுபாயலாம், அல்லது விக்ரமாதித்தனாகவே வாழ்ந்து பார்க்கலாம். ஹரிணிமேலே எனக்கு விருப்பமிண்ணா, வெளி உலகத்துக்கு நண்பனா இருந்துகொண்டே, மாய உலகத்துலே ஹரிணியோடு பாலுறவு வச்சிக்க முடியும், பிள்ளை பெத்துக்க முடியும், குடும்பம் நடந்த முடியும், விடிஞ்சு பதவிசா, அன்புள்ள தங்கைக்கு என ஆரம்பித்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். மாய உலகத்தில் இரண்டாவது வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கிற ஒவ்வொருவருக்கும் ‘அவதார்” என்று பெயர், நாம ‘பிறவி’ ண்ணு வச்சிக்கலாம். தேவர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமாகக் கூட அவதாரம் எடுக்கலாம். ‘Second Life’ ஐ உண்டாக்கினவன் பெயர் லிண்டென் லேப், ஓர் அமெரிக்கன். 2002ல உருவாக்கினான்.2005ல சக்கெண்ட் லை·ப் குடிமக்கள் 20000பேர் இருந்திருக்காங்க, 2006ல 280000பேர் இருந்ததாலச் சொல்றாங்க, 2007 வருட முடிவிலே ஒரு மில்லியனைத் தொடலாமென்று சொல்லப்படுகிறது. www..secondlife.com போய்ப்பாரு எனக்கு அதில் நிறைய விஷயங்கள் புரியலை.

காளான் ஆம்லெட்கள் வந்தன. கூடுதலாக இரண்டு பீங்கான் தட்டுகளையும் பெண் பணியாள் கொண்டுவந்திருந்தாள். அரிந்த ரொட்டிதுண்டுகள்கொண்ட சிறிய பிரம்புக் கூடையொன்றும் வந்தது. உள்ளே சென்றவள், சிவப்பு ஒயின் போத்தலுடன் திரும்பிவந்தாள். அவர்களிடத்திற்காட்டினாள். வருடம் ‘1995’ என்றிருந்தது. ஹரிணி ‘நல்லது’ என்றாள். பாட்டிலிலிருக்கும் தக்கையை, திருகுச் சாவியின் மூலம் திறந்து, நாசூக்காய் இரண்டு கோப்பைகளையும் ஓர் அளவோடு நிரப்பினாள். திறந்த பாட்டிலை, அவர்கள் தட்டுகளுக்கு இடையே வைத்துவிட்டு, செயற்கையாய் ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு, ‘போன் அப்பெத்தி'(Bon appetit – good appetite) என்று வாழ்த்தினாள்.புறப்பட்டுச் சென்றாள். மேசையிலிருந்து நான்காக மடித்துவைத்திருந்த சிறிய துவாலையை மடியில் விருத்திக்கொண்டார்கள். சிவப்பு ஒயின் கோப்பையைக் கையிலெடுத்து ‘a la tienne (a ta sante – உனது நலனுக்காக) என்றார்கள். ஆளுக்கொரு வாய் குடித்துவிட்டு, முட்கரண்டி கத்தி சகிதமாய் சாப்பிடத் தொடங்கினார்கள்.

– இதுலே மாத்தா ஹரிக்கென்ன சம்பந்தம்?

– மாத்தா ஹரிங்கிற பேருல இந்த ‘second Life’ல ஒரு மாய உலகமிருக்கு. ‘மாத்தா ஹரியோட விதியை மாற்றி எழுதுவோம்’ என்பது அவர்களுடையக் கொள்கை. அங்கிருக்கிற ‘அவதார்’களில் ‘அதாம்’, ‘கிரிட்ஸ்’ மாக் லியோட் என்கிற பேர்கள் இருக்கு, இன்னுங்கூட நிறைய ‘அவதார்’கள் அதாவது ‘பிறவி’கள் இருக்காங்க. அவங்க பேர்கலெல்லாம் ஞாபகத்திலில்லை.

– வேறு ஏதாச்சும் சுவாரசியமான தகவலுண்டா?

– “மாத்தா ஹரியோட எதிரிகளை நிர்மூலம் பண்ணணுமாம்”. அதுதான் அவங்க நோக்கம் என்கிறாங்க. முக்கியமாச் சொல்லவேண்டியது மாத்தாஹரியோட ‘மண்டையோடு’ பற்றிய தகவலுக்கு ஒரு மில்லியன் லிண்டர் டாலர்கள் பரிசுண்ணு போட்டிருக்கு.

– அதென்ன லிண்டன் டாலர்?

– லிண்டன் டாலர் என்பது ‘Second Life’ குடிமக்களோட நாணயம். எண்பது யூரோ சதத்திற்கு, முன்னூறு லிண்டன் டாலர்.

– அப்படியா? மாத்தா ஹரியோட மண்டையோட்டுல என்ன மர்மமிருக்கு. மாத்தாஹரியைச் சுட்டுக்கொன்ற பிறகு அந்த உடலை வாங்கறதுக்கு யாருமில்லையென்று பிரான்சு மருத்துவக் கழகம் எடுத்துக்கொண்டதாகவும், பாரீஸிலுள்ள ஒரு அருங்காட்சி அகத்தில் அவளது மண்டையோடு, எலும்புக்கூடெல்லாம் பத்திரமாக இருந்ததென்று கேள்விபட்டிருந்தேனே.

– ஹரிணி அங்கே பாரு. ஒரு தென் கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்தவனென்று நினைக்கிறேன்.. நம்மையேப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

ஹரிணி திரும்பினாள். தனி ஒரு ஆளாக, இருந்தான். அமைதியாக காப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தவன், இவர்களைப் பார்த்தபார்வையில் ஏதோ கோளாறு இருப்பதுபோல தோன்றியது.

– ஹரிணி நீ சாப்பிடு. அவனைப் பார்க்காதே. நாந்தான் தேவைஇல்லமால் எதையாவது கற்பனை செய்துகொண்டிருப்பேனென்று நினைக்கிறேன்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation