மாத்தா-ஹரி அத்தியாயம் -3

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– ஆமாம். உன்னுடைய அம்மாவுக்கும், மாத்தா-ஹரிண்ணு பெயர் உண்டு. மாத்தா ஹரியைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

– ஏதோ கொஞ்சம்

– என்ன கேள்விபட்டிருப்பாய்? எதுவும் நல்லதாக இருக்காது. நீ கேட்ட, படித்த அல்லது பார்த்த எல்லா கதைகளும் பொய். ஆண்கள் சொன்ன பொய், ஆண்கள் எழுதும் பொய். மானுடத்தின் பிரதிநிதியென்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ஆணாதிக்கத்தின் பிரச்சார உத்திகளில் இப்படியான கதைகள் நிறைய உண்டு. உலகமெங்கும் இதுதான் நிலைமை. இதற்கு ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா என்ற எல்லைகள் இல்லை. உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, நீயும் நானும் மக்கிய பிறகுங்கூட, நம்மிடம் முளைக்கும் காளான்களுக்கும், அவர்கள் பெய்விக்கும் மழையே காரணம் என்பார்கள். தந்திர சொற்களில் நியாயம் பேசுவார்கள், விலா எலும்புகள் தெரிய கர்ச்சிப்பார்கள். கர்ச்சிப்பதெல்லாம் சிங்கமல்ல. அப்படி நினைத்தே தவறான பிம்பங்களை மனதில் வாங்கிக்கொண்டோம். என்னிடத்தில் மாத்தா -ஹரி குறித்த இன்னொரு கதை இருக்கிறது அதை உனது அம்மாவிடத்திலும் சொல்லி இருக்கிறேன். இன்றைக்கு உனது முறை.

– ‘……..’

– அநீதியாகத் தண்டிக்கப்பட்டவள் அவள். புத்திசாலிப் பெண்மணி. உண்மையில் தைரியயசாலி. அவள் கூடாரத்தில் ஆண் சிங்கங்களும், ஆண்புலிகளும், ஆண் கழுதைகளும், ஆண்குரங்குகளும். வரிசையாக உட்கார்ந்தன. திடலில் சுற்றிவந்தன. கம்பி வளையத்திற்குள் புகுந்து வந்தன. வேண்டியபோது அவளை முதுகில் சுமந்தும், நடந்து காட்டின. அதனதன் தன்மைக்கு ஏற்ப வித்தைகள். சிங்கம் வாய் திறந்து அவள் தலையை வாங்கிக் கொண்டபோதும், கோரைப் பற்களின் கூர்முனைகள் அவள் கழுத்திலோ, கன்னங்களிலோ பதிந்திடாமற் பார்த்துக்கொண்டது. பசித்திருந்த புலிகள்கூட அவளது பார்வையின் கூர்மைக்கு அஞ்சி வரிசையில் நின்றன. குரங்கு தன் குறியில் கைவத்து முகர்ந்து பார்ப்பதைத் தள்ளிப்போட்டது. கழுதைகளூக்கு வேறுகவலைகள்… அவள் விருப்பத்தின்பேரில் கூண்டிற்குள் அடைந்து இருக்கவும், வெளியே வரவும் பழகி இருந்தன. அத்தனையும் ‘அழகு’ என்ற சவுக்கு நிறைவேற்றிய காரியம். அவளுக்கென்று ஒரு கூடாரம். அங்கே கால் நீட்டிச் சயனித்த கட்டிலருகே மதுவும், கனிவகைகளும் இருந்தன. கண்களின் இமைத்தலுக்கு ஏற்ப சாமரம் வீசவும்; முற்றிய பேரீச்சை பழங்களை வலதுகை விரல்கள் தொட்டு எடுக்கவும்; மது சுவைத்த ஈர உதடுகளை மெல்லிய துவாலை கொண்டு ஒற்றி எடுக்கவும்; இடுப்பு அவிழும் ஆடையை சரி செய்யவும்; ஆண் அடிமைகள் காத்திருந்தார்கள். அவளது உடல்வெளியில், காற்று அசையாமல் வீசியது. வெயில் குளிர்ந்தது. அலைகள் ஓய்ந்தன. ஒட்டகங்களில் சுமைகளை ஏற்றிவிட்டு ஆண்கள் இறங்கி நடந்தார்கள். நடக்கிறபோது மணற்புயலிடமிருந்து பாதுகாத்துகொள்ள முகத்தில் இட்டிருந்த துணிகளை ஊடுருவி படிந்த மணல், வெடித்திருந்த உதடுகளில் படிந்து ஊசிகளாய் குத்தின. யுகங்கள் தோறும் சேர்த்துக்கொண்ட மணல், குவியல் குவியலாக வளர்ந்திருக்க, சுலபத்தில் கடந்துவிடாத முடியாத பாலை. நடை தளர்ந்திருந்த பயணிகள், இறுதியில் பசுஞ்சோலையையும் கூடாரத்தையும் கானல் வரிகளாகக் கண்டார்கள்: குலைகுலையாகச் சிவந்தப் பழங்களைச் சுமந்தபடி அசைவின்றி அடுத்தடுத்து முன்னும் பின்னுமாக பேரீச்சை மரங்கள்; வெள்ளிக்காசுகளாக இறைந்து கிடக்கும் பொய்கை. விடிவு பிறந்ததென பேராசைகளோடு பார்த்தார்கள். கை தட்டினார்கள். ஆரவாரம் செய்தார்கள், வறண்ட நாக்கை மடித்து, அண்ணம் இடித்துக் குலவை எழுப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? எனது காதில் இன்றைக்கும் அவர்கள் எழுப்பும் குலவைச் சத்தம்.- (குலவை இட்டுக் காட்டினாள்). பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். எதிர்பார்ப்புகளோடு பயணித்தவர்கள் தொடர்ந்து நடந்தார்கள்.

‘…’

என்ன நடந்தது? கணத்தில் ஒட்டகங்கள் குதிரைகளாக மாறிப்போகின்றன. நடந்தவர்கள் குதிரைகளில் பாய்ச்சலிடுகிறார்கள், கூர் தீட்டப்பட்ட வாள்கள் கோடை வெப்பத்தில் சிவந்து அவர்கள் கைகளில் தீ நாக்குகளாய் உயருகின்றன. பகல் இரவாக மாறிப்போனது. அந்திவேளை அதிகாலையானது. சூரியனுக்கும் இதற்கு உடந்தைபோல பதுங்கிக்கொள்கிறான். தூந்திரப் பிரதேச காற்று, இவள் திசை அறிந்து வீசுகிறது. அவர்கள் வருகையை எதிர்பார்ததைப்போல கூடராம்

1917ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி அதிகாலை நேரம்….

கரிய இருளுக்குள் புதைந்து கிடக்கும் சிறை. சில்வண்டுகள், நட்சத்திரங்கள் இ¨றைத்த வானம், அதிகாலைப்பனி. மூன்றாவது முறையாக சேவலொன்று கொக்கரித்து அடங்கி இருந்தது. சிறைக் கம்பியினைப் பற்றிக்கொண்டு ஒட்டிக்கிடந்த பல்லியினுடைய உறைந்த பார்வையை சகித்தபடி தரையிற் கிடந்தாள். மீசை முளைத்த எலி ஒன்று நிலவு எப்படி தரையில் விழுந்ததென்று யோசித்தபடி அவள் முகத்தை நெருங்குகிறது. அதற்கு இடையூறாக மனிதர்கள் வருகை, தாமதமின்றி ஓடி ஒளிந்தது. ஆழ்ந்த உறக்கத்தினைத் தெரிவிப்பதுபோல உடல் மெல்ல உயர்வதும் தாழ்வதுமாக இருக்கிறது. என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு, அவளது உடல்வெளியில் வீசுகிறக் காற்றில் கல்லறைகளின் சுவாசம்.

உறக்கம் கலையாத அதிகாலையைத் தட்டி எழுப்புவதுபோல் சீரான காலடி ஓசைகள். அக்காலடிகள் சுமைகளை இறக்கியபடி முன்னேறுவதை கூர்ந்து கவனிப்பவர்கள் உணர முடியும். அடுத்தடுத்து மெல்லிய மனிதக்குரல்களும் பிற ஓசைகளுமான கலவை. தாழ்ப்பாள்கள் கிறீச்சிட்டு இரவை கிழிப்பதும், சத்தத்துடன் திறக்கப்படும் கதவுகளும் வழக்கமான அதிகாலை அல்ல என்பதைச் சொல்கின்றன. வந்தவர்கள் அவளை அடைத்து வைத்திருந்த சிறைக் கதவினைத் திறந்துகொண்டு, உள்ளே வந்தவர்கள் தயங்கி நின்றனர். தள்ளிய வேகத்தில் சிறைக்கம்பியில் ஒட்டியிருந்த பல்லி அவள் தலையில் விழுந்தது. வந்திருந்தவர்களுடைய மிடுக்கும், சாம்பல் வண்ண சீருடையும் அவர்கள் ராணுவத்தைத் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தன. சிலுவை அடையாளங்களுடன் கன்னியர்மடப் பெண்மணியொருத்தியும், மதகுருவுங் கூட அக்குழுவில் இருந்தனர். தெரிந்த முகமாக மற்றொருவன். அவர்களது உடைகளைப்போலவே முகங்களும் கறுத்திருந்தன. ஒருவன் மட்டும் கட்டிலை நெருங்கினான். வந்திருந்த மனிதர்களால் அவள் உறக்கம் கலையவில்லை. கடைசியாய் ஒருமுறை உறங்கிப் பார்த்திடவேண்டும் எனத் தீர்மானித்தவள்போல படுத்திருந்தாள். ஒருசில நொடிகள் அவள் அருகே நின்ற அதிகாரி, உடன் வந்தவர்களைத் திரும்பிப் பார்க்கிறான். அதிகாரத்தில் அவனுக்கும் பெரியவனாக இருக்கவேண்டும், ‘நடக்கட்டும்’ என்பதுபோல கண்சாடை செய்தான். ராணுவ அதிகாரி மெல்ல அவள் உடலைத் தொட்டு அசைத்தான். தாமதமின்றி எழுந்து உட்கார்ந்தாள்.

– மாத்தா-ஹரி.

அவள் தலையை உயர்த்த,¢ முணுமுணுத்த ராணுவ அதிகாரியைப் பார்க்கிறாள்.

– மாத்தா-ஹரி.. மன்னிக்கவேண்டும்! தண்டனையை நிறைவேண்டிய நேரம்.

அவள் பார்வையில் கலக்கம். பின்னர் அதை மறைக்க முயன்றவளாக, தனது இதழ்களை குறைத்துப் பிரித்து, புன்னகைக்க முயன்றவள், இயலாமல் நிறுத்திக்கொள்கிறாள். தயங்கிய அதிகாரி தான் சொல்லவந்த வாக்கியத்தை முடிக்க நினைத்தவன்போல,

– உனது கருணைமனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்திருக்கிறார், – ஒவ்வொரு சொல்லையும் நிதானமாகச் சொல்லி முடித்தான். எச்சில் கூட்டி விழுங்கினான். அவளை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

அவள் கண்கள் விரிந்தன. எது நடக்குமென்று எதிர்பார்த்திருந்தது, நடக்கிறது. விதி தனது கருமைநிறச் சிறகை விரித்து அலகு காட்டி, தூக்கிச்செல்ல ஏதுவாகக் கூர்மையான நகங்களுடனான கால்விரல்களை விரித்தபடி இறங்கியிருக்கிறது. அவள் வாய் தொடர்ந்து வார்த்தைகளின்றி காற்றில் அசைகிறது. அவள் சொல்வதைக் காதில் வாங்கத் தீர்மானித்தவன்போல அதிகாரி குனிந்து தலையை அவளிடத்திற் கொண்டுபோனான்.

– ஒரு உயிரை அதிகாலையில் வாங்க நினைக்கிற பிரெஞ்சுகாரர்களின் வக்கிரத்தை என்ன சொல்வது, -..தீக் கங்குகளாகச் சொற்கள் தெறிக்கின்றன..

இப்போது இன்னொருவன் அவளை நெருங்கித் தோளைத் தொ¡ட்டு முணுமுணுக்கிறான். தொட்டிருந்த கைகளும், சொற்களில் உணரப்படும் நெகிழ்வும் இவளுக்குப் புதிதல்ல. யார் அவன்?

அவளது வழக்கறிஞன், சினேகிதன் அவளது இறுதி அத்தியாயத்தில் இணைந்துகொண்ட காதலன்- க்ளுனே. அவளது கைகள் இரண்டையும் ஆறுதலாக வாங்கிக்கொண்டவன், அவளுக்குமட்டும் கேட்கும்படியாக மீண்டும்.:

– மார்கெரீத், நீ விரும்பினா தப்பிக்கலாம், ‘என் வயிற்றில் கரு இருக்கிறது’ என்று சொல் . தண்டனைத் தொகுப்புச் சட்டம் விதிஎண் 27… என்ன சொல்கிறதென்றால்…

மருத்துவர் ‘சொக்கே’ இப்போது அருகிலிருந்தார்.

– மார்கெரீத், உன்னைப் பரிசோதிப்பது அவசியம். தயவு செய்து ஒத்துழைப்புக்கொடு, – மீண்டும் வழக்கறிஞன் க்ளூனே. ‘ஒத்துழைப்புக் கொடு’, என்ற சொல்லை, அவன் அழுந்த உச்சரிப்பது எதற்காக என்பது மாத்தா-ஹரிக்கும் புரிந்தது மற்றவர்களுக்கும் புரிந்தது.

– எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் கருத்தரித்தவள் என்று உங்களிடத்தில் சொன்னேனா? அப்படியெல்லாம் பொய் சொல்லித் தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. மருத்துவ பரிசோதனைகள் அவசியமற்றவை. தயவு செய்து தள்ளி நில்லுங்கள். நான் கொஞ்சம் எழுந்து நிற்கவேண்டும்.

சொல்லி முடித்த வேகத்தில் எழுந்து நின்றாள். எழுந்த வேகத்தில், அணிந்திருந்த சட்டையின் மேற்பகுதி விரிசலிட்டதில், மார்பகம் வெளியில் தெரிந்தது. கன்னியர்மடத்தைச் சேர்ந்த மரி, நிற்பதை கவனித்தாள்.

– சகோதரி.மரி! அங்கிருக்கிற பலகைமீது நல்ல ஆடைகளைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொடுக்க முடியுமா?

மடத்துப்பெண்மணி, எடுத்துக்கொடுத்தாள். நிதானமாக அணிந்தாள். கூட்டத்தில் ஒருவராக இருந்த மதகுரு தபூ, மாத்தா-ஹரி அருகில் முழந்தாளிட்டு அமர்ந்தார். இவளும் வணங்கினாள். தகரக் குவளை ஒன்றில் நீர் கொண்டுவரச் செய்து, வணங்கிய மாத்தா-ஹரியில் தலையில் ஊற்றினார். அவள் எழுந்தாள். காலுறைகளையும், கையுறைகளையும் அணிந்துகொண்டாள். தொப்பியைத் தலையில் பொருத்த ஊசி ஒன்று கேட்டாள். ‘சட்டத்தில் அதற்கு அனுமதி இல்லை’, – என்றான் சிறை நிர்வாகி.

கேப்டன் திபோல் – நீதித்துறையின் ஊழியன், அவளை நெருங்கி எழுதுகோல் ஒன்றும் எழுதுவதற்கான தாள்களும் கொடுத்தான்.

– ஏதாவது உண்மைகளைச் சொல்லவேண்டுமா?

– நானா? என்ன சொல்ல. சொல்வதற்கு உண்மைகள் என்று ஏதும் இல்லை, ஆனால் சில தகவல்கள் இருக்கின்றன. அவற்றை உன்னிடத்திற் சொல்ல முடியாது.

மடத்துப் பெண்மணி விம்மினாள். மாத்தா-ஹரியின் கண்களிலும் நீர்எட்டிப்பார்த்தது.

– சகோதரி மரி உங்கள் மனது எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால் எனக்காக இந்த நேரத்தில் அழுவதென்பது கூடாது.,- என்றவள் தொடர்ந்து., நீண்ட பயணமென்றாலும், ஒருமுறையேனும் உங்களைச் சந்திக்கவென்று திரும்பவும் வருவேன். பிறகு இருவருமாக தொடர்ந்து பயணிக்கலாம். என்ன சரிதானா?- என்றாள்.

குற்றவியல் நீதிபதியிடம் கொடுப்பதற்கு என்று எழுதிவைத்திருந்த கடிதங்களைக் ஒப்படைத்தாள். கேப்டன் திபோல் கொடுத்திருந்த தாள்க¨ளைக்கொண்டு ஒன்றிரண்டு கடிதங்களைக் கூடுதலாக எழுதி உறையில் இட்டு அவனிடம் கொடுத்தாள்.

இவளை அழைத்துச் செல்ல வாகனமொன்று காத்திருந்தது. உள்ளே சென்று அமர்ந்தாள். அருகில் மதகுரு தபூ; எதிரே கன்னியர் மடத்தைச் சேர்ந்த சகோதரி மரி, வாகனத்தை ஓட்டிச் சென்றவன் பக்கத்தில் காவலன் ஒருவன், முன் எச்சரிக்கையாக. மாத்தா ஹரியின் வாகனத்திற்கு முன்னும் பின்னுமாக நான்கு வாகனங்கள், அவற்றில் குற்றவியல் நீதிபதிகளும், மருத்துவரும், அவளுடைய வழக்கறிஞரும் பின் தொடர்ந்தனர். வாகனங்கள், லா ப்ளாஸ் தெ லா நசியோன்(1) கடந்து அடர்த்தியாக இருந்த மரங்களுக்கிடையில் நிதானமாக ஊர்ந்தன. எங்கும் புலராத இரவு. எழுந்து செல்ல விருப்பமில்லாத இருள், முடிந்த இடத்திலெல்லாம் கால் நீட்டி நித்திரை கொண்டிருக்கிறது. மழைநீரில் நனைந்து ஊற்றெடுத்த சாலைகளில் பழுத்து உதிர்ந்த இலைகளின் நடைபாவாடை.. அவை வாகனங்களுடைய டயர்பற்களில் அகப்பட்டு நற நறவென நொறுங்கின. வேன்சான்(2) கோட்டைக்குள் நுழைந்ததும், பயணத்தினை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததைப்போல, முதல் வாகனம் நிறுத்தப்பட, அதற்கென காத்திருந்ததுபோல, ஒழுங்கின்றி, கிடைத்த இடத்தில் மற்றவைகளும் நின்றுகொண்டன. ஒரு சிறிய திறத்தவெளியில் மெல்லிய தூணொன்று நடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் சுடுவதற்குத் தயாராக அணிவகுத்து நிற்கிறார்கள்.

வாகனத்தில் இருந்து, முதலில் இறங்கிக்கொண்டவர் மதகுரு. அவர்முகம் கறுத்திருக்கிறது, தண்டனையை அவருக்கு நிறைவேற்ற இருப்பதைப்போல. அவர் ஒதுங்கி வழிவிட மாத்தா-ஹரி இறங்கிக் கொள்கிறாள். பின்னிக்கொள்ளாத கால்கள், நிமிர்ந்த தலை.

– சகோதரி மரி, எனது கையை கொஞ்சம் பிடித்துக்கொள்ள முடியுமா?

– துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் திசைக்காய் நடக்கிறாள். தூணையும் இவளையும் சில அடி நிலங்கள் பிரித்திருந்தன. கன்னியர்மடத் பெண்மணியிடமிருந்து கைகளை விடுவித்துக்கொள்கிறாள். வழக்கறிஞன் ஓடிவருகிறான். பதற்றத்துடன் முத்தமிடுகிறான். காவலர்கள் அவளைத் தூணருகே அழைத்துச் செல்கிறார்கள்.

மீண்டும் ஒருமுறை தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. இதுவரை அக் கும்பலிலிருந்து, இவள் கவனத்தை இதுவரை ஈர்த்திராதப் மற்றொருபெண் வருகிறாள். அவள் கைகளில், கறுப்புத் துணி. இவளுக்குப் புரிந்தது. கண்களை கட்டக் கூடாதென்பதுபோல தலையை ஆட்டுகிறாள். மதகுரு வேகமாய் நடந்துவந்தவர், அவளை ஆசீர்வதிக்கிறார்:

– “ஆண்டவனே! மாத்தா ஹரியின் ஆத்துமாவை ஏற்றுக்கொள்ளும்! நித்திய இளைப்பாற்றியை இவளுக்குக் கொடுத்தருளும் ஆமென்” –

மாத்தா -ஹரி உதடுகொள்ள புன்னகைக்கிக்கிறாள். இதழ் தொட்டு தனது முத்தங்களை காற்றுவெளியில் கலக்கிறாள்

– சுடுங்கள்!..(3)

சின்னதாய் ஒரு கிளிக்-கிளாக், தொடர்ந்து வெடிச் சத்தம், அவளைச் சுட்ட துப்பாக்கிக் குழலில் புகை கசிவது ஒரு சில நொடிகள் தொடர்ந்தன. மாத்தா-ஹரியின் உயிரற்ற உடல், நிலத்தில் மடிந்து விழுந்தது. உதைபட்ட கால்கள் கணத்தில் அடங்கிப்போயின. விழிகள் திறந்திருக்க, குண்டுபாய்ந்திருந்த இடத்திலிருந்து களக் களக்கென்று வெளிப்பட்ட இரத்தம் மண்ணிற் கலந்தது.

என்ன ஆச்சரியம்!.. தொப்புழ் கொடி அறுபடாமல், கைகால்கள் குவித்து, சிசுவொன்று, மூடிய விழிகளுடன், இரத்தத்தில் தோய்ந்து …அந்த முகம்… ஹரிணி! ஆமாம் அது நீயேதான்….

(தொடரும்)


1. Place de la Nation – பாரீஸ் நகரத்திலுள்ள வரலாற்றுப் புகழ்வாய்ந்த ஒரு திடல்.: http://fr.wikipedia.org/wiki/Image:FrancoiseDeGandi_-_Paris_-_Place_de_la_Nation.jpg

2. Vincennes -பாரீஸ் துணை நகரங்களில் ஒன்று, வரலாற்று புகழ் வாய்ந்தது. இங்குள்ள கோட்டை முக்கியமானது

3. 1. Dossier Secrets de l’ Histoire – Alain Decaux 2. Mata Hari ou la romance interrompue Par Francis Lacassin


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா