மருத்துவக் கல்லூரியில் கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு உதவுங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

வேண்டுகோள்


அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!

சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பைத் தொடங்கிய கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன், என் பதிவு பிரமிக்க வைக்கும் கௌசல்யா வாயிலாக நான் வெளியிட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பண உதவி செய்தனர். கிட்டத்தட்ட 30000-க்கும் மேலாக பணம் திரட்ட முடிந்தது.

என் பதிவு :

“சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த, கௌசல்யா என்ற மாணவியைப் பற்றிய செய்தியை பலரும் படித்திருக்கலாம். இவ்விளம்பெண்ணின் சிறந்த கல்வியார்வமும், அயரா உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும், தன்னடக்கமும், யாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். கௌசல்யா, சிறுவயதிலேயே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, அந்தியூர் கிராமத்தில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வரும், அவரது தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டவர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சமாளித்து, போராடி, ‘மருத்துராக வேண்டும்’ என்ற ஒரே குறிக்கோளோடு படித்தவர் !

கௌசல்யா, அந்தியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறையே 475/500 மற்றும் 1149/1200 என்று மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் ! கௌசல்யா, இயற்பியலில் 199 மதிப்பெண்களும், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்களும், பொது நிழைவுத்தேர்வில் 98.33 மதிப்பெண்களும் பெற்றார் என்ற தகவல், கேட்பவரை வியப்பின் உச்சத்துக்கு இட்டுச் செல்லும் !!!

இவருக்கு, பெருமை வாய்ந்த, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், ‘இளமையில் வறுமை’ எனும் கொடுநோய் பெரும் தடைக்கல்லாக குறுக்கிட்டது. தனது அயரா உழைப்பு தந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய தொகை வேண்டி (ஏன், அந்தியூரிலிருந்து சென்னை செல்ல இரயில் கட்டணம் கூட கையில் இல்லாத நிலைமையில்!) பல இடங்களில் பணவுதவு கேட்டு அலைய வேண்டிய அவலநிலை இம்மாணவிக்கு ஏற்பட்டது பெரிய கொடுமை தான் !!!

கௌசல்யாவின் நல்ல நேரம், அந்தியூருக்கு வருகை தந்திருந்த மாநில மனித உரிமைக் கழக உறுப்பினர் திரு.சம்மந்தம் வாயிலாக, இம்மாணவியின் பரிதாப நிலைமை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. நமது முதலமைச்சர் கௌசல்யாவை அழைத்து, கல்லூரிக்கான முதலாண்டு கட்டணத்திற்கும், புத்தகங்கள் வாங்கவும் பணவுதவி செய்தார். அதைத் தொடர்ந்து, மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன் வந்தனர்.

கௌசல்யா, ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து, தனது குறிக்கோளின் முதல் இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டர் !!! கௌசல்யாவின் முகத்தில் இப்போது தான் புன்னகையை பார்க்க முடிகிறது !!! இதே போல். பல கௌசல்யாக்களுக்கு, அவர்கள் தொலைத்த புன்னகையை மீட்டுத் தர வேண்டிய கடமை, நம் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது !!! ”

கௌசல்யாவை சந்தித்துப் பேசுவதற்கும், அவருக்காக திரட்டிய தொகையை அவரிடம் வழங்குவதற்கும், கௌசல்யாவைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்டிருந்த டெக்கான் குரோனிகளின் செய்தி சேகரிப்புத் துறையின் தலைவர் திரு.பகவன் சிங் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பு பற்றிய என் பதிவு இது: ‘சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்’.

அப்பதிவிலேயே, கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருடைய கல்விக்கு, நம்மால் இயன்ற உதவியை செய்வது குறித்து கோடிட்டு இருந்தேன். அதனால், நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, மீண்டும் ஓர் உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு தொடந்து வழங்கலாம் என்ற எண்ணத்துடன், பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கல்விக்கான “பொது உதவி” நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம்.

முதலில் கௌசல்யாவிடம், அவரது முதல் வருட மருத்துவப் படிப்பு குறித்தும், உடனடியாக சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் பேச இருக்கிறேன். கணிசமான ஒரு தொகை திரண்டவுடன், பகவன் சிங் அவர்கள் மூலம் கௌசல்யாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, உதவிக் தொகையை (அவருக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம், பணம் தந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருந்த அருமை நண்பன் ‘ரஜினி’ ராம்கிக்கும், திரு.டோண்டு ராகவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!

உதவிய நண்பர்கள் விவரம்:
‘கடலோடி’ பரணீ, ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ(US), முகமூடி, துளசி, சொ.சங்கரபாண்டி, திருமலை, சலாவுதின் பஷீர், ‘டோண்டு’ ராகவன், குழலி, ஈஸ்வர பிரசாத், மோகன் அண்ணாமலை, ‘ரஜினி’ ராம்கி, ‘அரட்டை அரங்கம்’ வீ.எம் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அன்பர்.

அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

balaji_ammu@yahoo.com
ramki@rajinifans.com
balaji.ammu@gmail.com
rajni_ramki@yahoo.com

என்றென்றும்
அன்புடன்,
பாலா

Series Navigation