மன்னி – மரம் – மது

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

கே. ஆர். மணி


“எதில் ஆல்கஹால் காமன் ப்ராபர்டீஸ் சொல்லு.. பாரதி ” மன்னி புத்தகமும், கேள்வியுமாய் நிமிர,
“அது..அது.. வெரி சிம்பிள்.. பர்ஸ்ட் வந்து.. ” நீண்ட நேரத் திணறல் தெளிவாய் சொன்னது பதில் தெரியாதென்று.
பதில் தெரியாதது முதற்குற்றம். தனக்கா?.. தெரியாதா? என்ற காம்பளக்ஷில் தெரிந்தது போல் நடித்தது மற்றொரு குற்றம்.
மன்னி திட்டுவாள் பயம், மாபெரும் குற்றம். கற்றலின் போதைய பயம் அனைத்தையும் அழிக்கும். மன்னி கோபமானாள்.

“ஏண்டா! நாயே ! எத்தன தடவ இன்ஆர்கானிக் படிச்ச.. ஒரு சாப்டரக்கூட ஒழுங்கா சொல்லத் தெரியலை.. என்னத்த படிச்சயோ.. ”
இலேசான அலுப்பும், கோபமும் கலந்த த்வனி பாரதிக்கு பயமாருந்தது.. மன்னிக்கு மூக்கு இலேசாய் வியர்த்தது.

“கமான்.. டெல்.. த.. எதில் ஆல்கஹால் ப்ராபட்டிஸ் ” கேள்வி எக்குத்தப்பாய் எகிறிவிழுந்தது.
“இட். இஸ்..” மீண்டும் திணறல் படலம்.
“பாரதி ..சனியனே.. இந்த இழவுல.. படிச்சேன்னா.. பப்ளிக் எப்படிர்றா.. எழுதுவே..? உனக்கு எவண்டா மெரிட்ல.. இன்ஜினியரிங் காலேஜ்ல
சீட் கொடுப்பான்.. நீ மார்க் குறைஞ்சு சவுண்டியாத்தாண்டா போப்போற.. ”
முற்றிய கோபம் வார்த்தையோடு சீவிய பென்சிலையும் சிதறடித்தது. கூரிய கார்பன் மூக்கில் பட்டு எரிந்தது. நெஞ்சு இலேசாய் வலித்தது.

‘மன்னி கொஞ்ச நாளாய் இப்படித்தானிருக்கா..அதிகமாய்.. கடுப்படுக்கிறா.. காத்தால மூஞ்சில வெந்நீர்.. கொட்டி எழுப்பி விடுறா..
இராத்திரியான பத்து, பத்தரை மணிக்குத்தான்.. தூங்க விடுறா.. அடிக்கடி டெஸ்ட்.. போன தடவை பார்மூலா தப்பா சொன்னதுக்காக
அறைஞ்ச அறையில கன்னப்பரு கிழிஞ்சு, இரத்தம் கொட்டித்து. பதறிப்போன அண்ணாவைக் கூட சும்மாயிருங்கன்னு. அதட்டிட்டா,
டிவி சினிமா பக்கம் போய் முழுசா பத்துமாசம் ஆயிருக்கும். கிச்சா, அசோக், அச்சு, மைக்கேல் இவளோடெல்லாம் இங்கிலிஸ் மூவிஸ்
பத்தி பேசமுடியறதில்லை. செம போர்.. டியூசன் மேட் ஜானுவும், நானும் ரொம்ப நாழி பேசிண்டிருப்போம். அவளை மன்னி ஏதோ
சொல்லிட்டா போல.. இப்ப அவ இங்க. வர்றதேயில்லை.. சை.. சனியன்.. ஏன். இது.. இப்படி.. பண்றது.. என்னோட எக்ஸ்முக்காக
வியாழக்கிழமை பூஜை, விரதம் பண்றாளாம்.. புல்ஷிட்.. இவ ஏன் எனக்கு கஸ்டப்படணும் ? ‘ மனம் கோர்வையாய், அழகாய் கோபப்பட்டது.
கோபப்பட்ட மனம் சோர்வடையும். பாரதி மனம் சோர்ந்தது. சோர்ந்த மனம் குழப்பமடையும். பாரதி குழம்பினான். குழம்பிய மனம்
ஆறுதல் தேடும். பாரதி கிளம்பினாள். மைக்கேல் இருப்பானா?..

“என்னடா.. மாம்சு, கப்பல் கவிந்த மாதிரி உக்காந்திருக்க.. என்ன மன்னி. திட்டிச்சாக்கும்.. ? உனக்கு வேற பொயப்பே கிடையதுடா..
திட்டுச்சு.. செவனில. அடிச்சிச்சு.. டேய்.. இதே. இழவாப் போச்சுடா..” அயர்ச்சியாய் சொன்னவன் அசோக்.

“பாரதி.. இங்க பாரு.. இந்த ரூமுக்கு வந்துட்டா. யூ ஷிட் பி ஹாப்பி.. ” உற்சாகமான குரலுக்கிரியவன் மைக்கேல். இது இவனது
தனியறை, பேசியபடியே மைக்கேல் பிரிட்ஜ் திறந்தான். அவன் கையில் ‘அது’ உள்ளே வெப்பமாய், வெளியே குளிர்பூச்சோடு, அன்னிய
நாட்டுக் கவரோடு..

” You are in paradise.. you are in para..” எலெக்ரானிக் சப்தமாய் மைக்கேல் சாக்சன் இரைந்தார். மைக்கேல் நான்கு கிளாசில்
பொன்னிற திரவம் வார்த்தான். ஊற்றும் போதைய நுரை தவிர்க்க, பாட்டிலை சாய்வாக்கி, திரவத்தை உள்பரப்பில் ஒடவிட்டான். நுரை
தவிர்த்த திரவம் மின்னியது.
“என்னடா.. பாரதிக்கும் சேர்த்து ஊத்துறா..” குரலில் சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாய் கேட்டவன் அசோக்.
“ஐயரு.. சாப்பிடக்கூடாதா.. ? அந்த காலத்தில.. இவங்க மூதாதையரெல்லாம்.. சோமபானம் சுராபானம் சாப்பாட்டானுங்க.. இவன் இதை
சாப்பிடப்போறான்.. ” ஹஜிம் குதர்க்கமாய், குத்தல் சிரிப்போடு..
“நோ..நோ.. எனக்கு.. இப்ப.. எதுக்கு.. ” மறுத்தலில் பலமில்லை. மன்னி திட்டியது, அடித்தது.. சோகம் கவ்விய மனது.

காற்று பலமாய் வீசியது. மரம் லேசாய், லேசாய்.. வேகமாய் அசைந்தது.. வேர் முதலில் பயந்தது. பின் பழக்கப்பட்டுக்கொண்டது.
பின்னர் வேரும் அசைந்தது. வேரும், மரமும் ஆட மண்ணும், மரமும் பிரிதலில் உறுதியானது.

“டேய்.! இவன் ஒரு ஒம்போதுடா.. அலிப்பய.. பொட்டை.. இவண்ட்ட போயி.. போ.. ராசா.. ! போய் படிடா.. கண்ணு.. மன்னி
திட்டப்போதுடா.. ” ஏற்ற இறக்கமான குரலில் கேலிவந்தது. ‘டெக்னிக்’ பலித்தது.
“சியர்ஸ். ” பாரதி கிளாசை உயர்த்தினான். நண்பர்கள் சிரிப்போடு சியர்ஸ் சொன்னார்கள்.
“Stone. is not fruit.. round stone is not a fruit ” எலெக்ட்ரானிக் சப்தமாய் பாடகன் இழைந்தான்.
திரவம் உணவுக்குழல் தொட்டது. குடிபோதை மெல்லிய சிலேட்டு படலம். சிறுமூளை சிதைந்து, கலங்கி முழிக்கும் உணர்வு. துக்கம்
குறைக்க குடிப்பவன் அடிமுட்டாள். அவன் நெய்யால் நெருப்பை அணைக்க முயல்கிறான்.
மைக்கேல் அந்த மூன்று ‘X’ குறியிட்ட கேசட்டை விசிஆரில் வாய்பிளந்து செருக, திரை நீலமானது. காமம் கொச்சைப்பட மனம்
கருமையாகிறது. பசுமரத்தாணி போல காமக்களம் நெஞ்சில் பதிந்து, ஹார்மோன்களின் பிரவாகம் ஆரம்பமானது. இரத்த மாரத்தான்
உடம்பை சூடாக்கியது. பாடகன் இசையாய் வழிந்தான்.

“You are going to slip. by my tunk.. you are going to slipp.. ”
பாரதி அவனுக்கு தெரியாமலேயே வழுக்கினான்.

இலேசான டெட்டால் வாடை, உயரமாய், வசதியாய் வெள்ளை வண்ண மெத்தை, மெதுவாய், கடமையாய் சுழலும் பேன். கணுக்கால்
தெரிய வெள்ளை உடை உடுத்திய தாதி. பாரதிக்கு ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பது புரிந்தது. தலையில் கட்டு, இலேசாய்
வலித்தது. அது தவிர, கண்ணில் இருளின் மெல்லிய ஊர்வலம். ‘கண்மூடி பழையதை நினைவு செல்லுக்கு இழுத்தான்.

“பாரதி, நீ, ஸ்ட்டியா இல்லடா.. நைட். இங்க தங்கிடு.. ” குழறலோடு கவலைப்பட்டான் ஹஜிம்.
“நோ.. நோ.. நான்.. ஸ்டடி.. ஐ.. ஆம்.. ஆல்ரைட்..” குடிகாரனுக்கே உரித்தானபொய்.
“ஐ வில் ட்ராப் ஹிம்.” சொன்னபடி செய்தான் மைக்கேல். கேட் திறந்து பாரதி உள்ளே வந்தான். தோட்டத்து பாத்ரூமில் தண்ணீர்
சிதறல் சத்தம். ‘யாரது. ? கேள்வியோடு நெருங்க, கதவில் தொங்கிய புடவை, ஜாக்கெட்- மன்னி எனச்சொன்னது. தூரமாயிருக்கும்
நாளில் மன்னி குளிப்பதற்கு இந்த பாத்ரூமை பயன்படுத்துவாள்.

விஸ்கி வயிற்றில் எரிந்தது. ஒடிய நீலத்திரை நெஞ்சில் புரண்டது. யோசிப்பு தொலைந்தது. சிதைந்த சிறுமூளை செய்வதறியாது.
ஒட்டிய காமம், உணர்வாய் ஓடி விளையாண்டது. காமம் மடல் சூடானது. வயிற்றின் கீழ் குறுகுறுப்பு பட்டாம்பூச்சியாய் பறந்தது.
உடம்பு முறுக்கியது. காமம் கண் மறைத்தது.

மரம் உயரே, உயரே விரைவாய் பறந்தது. மண்-மரம் மறந்தது. மரம் மண் துறந்தது. வேர் விழித்து பார்த்தது.

குளியலறை பின்புறமாய் மெல்ல நகர்ந்தான். அம்மி மீது ஏறினான். சன்னல் வழியே, விழி திறந்து பார்த்தான். விஸ்கி அடிவயிற்றில்
கொக்கரித்தது. முதுகு குறுகுறுக்க திரும்பிய மன்னை ஸ்பஸ்டமாய் அதிர்ந்தாள். இவனுள்ளும் அதிர்ச்சி அலை சட்டென பரவியது.
வேகமாய் கால் சறுக்கியது. உடம்பு நிலைகுலைய சரிந்தான். வழுக்கினான்.

“You are going to slip.. ”
நேர் குத்தாய் விழுந்தான். அம்மி நுனி தலையில் பட வலி சுண்டியிழுத்தது. “அம்மா ” அலறினான் பாரதி. மன்னி கட்டிய
பாவடையோடு, ஒடி வந்து தூக்கினாள்.

“தண்ணியடிச்சியா.. ? ” தலையில் கட்டோடும், வலியோடும் ரேழியில் படுத்திருந்த பாரதியிடம் மெல்லக் கேட்டது அண்ணா.
“இல்லை.. அது.. வந்து.. உங்களுக்கெப்படி.. ” திக்கல் உண்மை சொன்னது.
“டாக்டர்.. சொன்னார்.. ஏண்டா.. நம்பாத்துல யாருக்குமே அந்தப் பழக்கம் கிடையாதே.. உனக்கு எப்படிரா.. ”
குரலில் ஆதங்கமா? அதிர்ச்சியா ? இனம் காண இயலவில்லை.

வேர் விடுத்து பிறந்த மரம் பாதியில் நின்றது. பூமி இழுத்தது. மெல்ல நடந்து வந்து மன்னி தலைமாட்டில் உட்கார்ந்தாள். கை எடுத்து
பிணைந்து விரல் கோர்த்தபடி சொன்னாள்.
“படிக்காம முட்டாளாயிரு.. ஸ்வாமி கோயிலுக்கு போகாமயிரு… ஆனா இப்படி தண்ணி மட்டும் அடிக்காதேடா.. பாரதி.. ப்ளீஸ்.. ”
தெளிவாய், அமைதியாய் சொன்னபோது வெட்கி நிலம் வெறித்தான்.
“எந்த தப்பு செஞ்சாலும் பின்னால நாம தப்பு செஞ்சிட்டோம்னு வருந்துவோம்.. திருந்த ட்ரைபண்ணுவோம்.. பட்.. குடிகாரனுக்கு
அவன் என்ன செய்யறான்னு தெரியாதுடா.. பாரதி.. அவனை யாரும் ஸொஸைட்டில மதிக்கமாட்டா. உன்னை மதிக்கலைனா உனக்கு உன்மேலயிருக்க கான்பிடன்ஸ் போயிரும். தட்ஸ் ஆல்.. உன் லைப்பே போயிரும். ” நெஞ்சில் நறுக்கென குத்தி, புத்தியில் தைத்தது.
பாரதி நிலைகுலைந்தான்.

மண் மறந்து, பறந்த மரம் இலை உதிர்த்து மொட்டையாய் போனது. தனது திரிசங்கு நிலைகண்டு அதிர்ந்தது.

“செக்ஸ் இயல்பான ஒண்ணுதான்.. இட்ஸ் ஆபியஸ்.. விஸ்கி இல்லாத செக்ஸை நீ கண்ட்ரோல் பண்ணிருப்ப.. ஆனா.. இது.
விஸ்கி செக்ஸ்.. தட்ஸ்.. ஒய்.. ” அண்ணன் அர்த்த புஸ்டியாய் பாரதியை பார்க்க இடி மெல்ல இறங்கியது.
“தண்ணியடிச்சா.. உனக்கு அம்மா.. பொண்டாட்டி வித்தியாசம் தெரியாதுடா.. பொம்மனாட்டியா.. இன்னோத்தண்ட கூட்டிக்
கொடுப்ப.. தென்.. இந்த மன்னிகிட்டயே.. வருவ.. ” மெல்ல கேவினாள். கேவலோடு தலைகோதி முதுகு தடவினாள்.

பாரதி முழுதாய் உடைந்தான். மரம் கல்லடி தாங்கும். இது உளியடி. மரத்திற்கும் ஏகமாய் வலித்தது. மனம் ‘ஹோ’வென இரைந்தது.
“தாயே ! பால் கொடுக்காத என் தாய்முலை தாங்கியவளே ! உனக்குள்ளும் என்மீது அன்பா ! ” மனம் இலேசாய் கரைய, நெஞ்சு
இழுத்து, உடம்பு வெட்டி மயிர் ரோமம் சிலிர்த்து அழுகை வர யத்தனித்தது.

வாலறுந்த பல்லி துடித்தது. வாலும் துடித்தது. பல்லிக்கு வலித்தது. இது கத்தி மீது உட்கார்ந்த மாய ஈக்காய் ஒடியதால் வந்த வினை.
பசி மோகத்தில் கத்தி மீது வால்பட, வால் துண்டானது. வாலறுந்த பல்லி துடித்தது.

“பாரதி கல்யாணமாகி இத்தனை வருசமானப்புறமும்.. நானும் உன் மன்னியும் ஒரு குழந்தை கூட பெத்துக்கலையே. ஏன் தெரியுமா.. ?
அவட்ட கேளு.. நான் கேட்டதுக்கு என்ன தெரியுமா. சொன்னா.. நம்மோட முதற்குழந்தை நன்னா படிச்சு. செட்டிலானப்புறம்.
இன்னொரு குழந்தை பெத்துக்கிறேன்னா.. ” அண்ணா மெல்லியதாய் சொன்னான்.

‘அன்னையே ! நான் உனக்கு குழந்தையா ! அன்பே ! என் ப்ரிய ஸ்நேகமே ! உன் உடல் பார்க்க அலைந்த இந்த தெருநாயா.
உன் குழந்தை ? உனக்கு தான் என்மேல் எத்துணை அன்பு. ‘ பட்டென விழுந்த மரம் மெளனமாய் அழுது புலம்பிற்று. அண்ணா
தொடர்ந்தாள்.

“குடினாலதான் நம்ப ராசஸ் எல்லாரும் கெட்டான்னு ஹிஸ்டரி சொல்லி பயமுறுத்தமாட்டேன். குடிச்சா லிவர்.. வெந்துரும்.. கான்சர்
வரும்னு. சயின்ஸ் சொல்லி பயமுறுத்த போறதில்லை. இனிமே குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணுடான்னு.. கை நீட்டவும்
போறதில்லை.. பட் உனக்கு நீயே ஒரு பனிஸ்மெண்ட் குடுத்துக்கோ ? உனக்கு இன்ஜ்னியரிங் கிடைக்கிறவரைக்கும் என்கிட்டயோ
மன்னிகிட்டயோ பேசக்கூடாது.. யார்.. வேணுமின்னு நீயே செலக்ட் பண்ணிக்கோ.. ” அண்ணா மோட்டுவளை பார்த்தான்.

அரைநிமிடம் முழுதாய் மெளனம் நிலவியது. பாரதி தீர்மானமாய் முகவாய் நிமிர்த்தினான். கண் சுருக்கி அண்ணா பார்த்தான்.
“நோ.. ” மன்னி விறீட்டாள்.

“என்னங்க.. நீங்க பைத்தியமாதிரி பேசிட்டு. எக்சாமுக்கு கொஞ்ச நாள்தானிருக்கு..நான் நிறைய பாரதியோட இருக்கணும்..
..பாரதி.. பாரதி உன்னோட பேசாம என்னால இருக்க முடியாதுடா.. நோ.. ஐ.. காண்ட்.. ” பாரதியை மாரோடு அணைத்தாள்.
தலைசிலுப்பி, நெற்றிக்கட்டு முத்தமிட்டு அழுதாள்.

பெண் எதன்மீது உண்மையான அன்பை செலுத்துகிறாளோ அது உண்மையாகும். சுத்தமாகும். தெளிவாகும். உறுதியாகும். பாரதிக்கு
கரை உடைந்தது.

“மன்னி.. ” மடியில் விழுந்து, மார்மீது மோதி கதறி அழுதான். அறை மெளனமாய் அவனது அலறலை சாப்பிட்டது. அவன் அழுது
ஒய அரைமணி எடுத்துக்கொண்டாள். விழுந்த மரம் எரிகிறது. எரிந்த மரம் கரியாகும். வைரமாகும். ஜ்வலிக்கும். மிளிரும்.

“ஒ. கே. பெஸ்ட் ஆப் லக்.. ” அண்ணா நகன்றான்.
மன்னி கண்ணீர் துடைத்தபடி சொன்னாள்.
“பாரதி பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. காயத்ரீ பண்ணிட்டு படிக்க உக்காருடா..”
மேல்சட்டை உதறினான். பூணூல் தடவினான். நூல் இழுத்து முடிச்சு தேடினான். கிடைத்த முடிச்சை கட்டை விரலுக்கு அழுத்தி
கண் மூடினான். வாய் மெல்ல முனகியது.
“ஓம்பு : புவர்ஸீவக : தத்ஸவிதுர்வரேண்யம்.. ” [செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினால் எங்கள் அறிவினை தூண்டி நடத்துக]

கண் இருண்டது. மனது ஒளிர்ந்தது. காயத்ரி பிரசன்னமானாள். ‘அட இது என் மன்னி ‘ பாரதி கைகூப்பி, மனதில் தொழுதான்.
‘ஆதியும், அந்தமும் இல்லா அன்புச் சோதியே ! அன்னையே ! மன்னியே ! என் ஞானத்தந்தையே ! குருவே ! ‘ மனது உருக
வேண்டினான். காயத்ரி (மன்னி) நெருங்க நெற்றியில் தட்டினாள். போகவேண்டும் துரியம், துரியாதீதம்.. பொறி கலங்கியது. தீ பந்தமாய் நெற்றியில் சுருண்டது. உருண்டையாய் உருண்டது. பாரதி ஆனந்தமாய் கண்ணீர் விட்டான். மன்னி நெற்றி முத்தமிட்டாள்.

புத்தகம் பிரித்தான்.

மதுப்பழக்கம் ஒரு பாவச்செயல்.
மதுப்பழக்கம் ஒரு பெருங்குற்றம்.
மதுப்பழக்கம் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்.

[தினமலர். டி.வி.ஆர். முதற்பரிசுக்கதை – ’92 ]


mani@techopt.com

Series Navigation