மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்


சாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் து¡க்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு வயசில் ஆரம்பித்த பழக்கம் இது. இப்போது பழக்கத்துக்கே ரெண்டு வயது ஆகிப்போயிற்று. அவன் கற்பனை வறண்டுபோய், புதுசாய் எதும் கதைசொன்னால் பழைய கதை ஒண்ணை உல்ட்டா பண்ணித்தான் இப்போது சொல்கிறான். ரோஜர் என்று பெயர் ஆரம்பிக்கிற சின்ன மிருகம். ரோஜர் மீன், ரோஜர் அணில் அல்லது ரோஜர் குரங்கு… எதோ ஒண்ணு. அதுக்கு ஒரு கஷ்டம் வரும். அதைத் தீர்த்து வைக்க புத்திசாலி கிழட்டு ஆந்தை ஒண்ணு. ஆந்தை மந்திரவாதியிடம் ரோஜரை அனுப்பி வைக்கும். அவர் என்னமாச்சும் மந்திரம் போட்டு அதன்மூலம் ரோஜரின் சங்கடத்தைப் போக்கினார். அது மாத்திரமில்லை, அதனிடத்தில் இருக்கிற காசை விட அதிகமான கூலி கேட்டார். அந்தப் பணம் எங்கே எப்படி அதற்குக் கிடைக்கும், அதையும் சொல்லித் தந்தார். ரோஜர் இதர விலங்குகளோடு ஆட்டம் போட்டுவிட்டு, பாஸ்டனில் இருந்து அப்பா வரும் ரயிலின் விசிலுக்கு அம்மாகூட வீட்டில் இருந்தது. அவர்களுடைய ராத்திரிச் சாப்பாட்டை விவரிப்பதுடன் முடியும் கதை… இந்தப் பாணி கதைகள் குறிப்பாக சனிக்கிழமைகளில் இப்பவெல்லாம் எடுபடுவதில்லை. மதியம் ஜோ து¡ங்கினாளில்லை. அவ து¡ங்க மாட்டான்னு தெரிஞ்ச பின்னால் கதை சொல்லவே அவனுக்கு ஆயாசமாகி விட்டது.

ஜோ வளர்ந்து விட்டாள். உடம்பு சுகமில்லாமல் அவள் மதியங்களில் படுத்துக் கொள்ளும் கட்டிலில் காலை மடக்கிக் கிட்டாலும் பாதி இடத்தை அடைத்துக் கொள்கிறாள்… ஜோ படுத்துக் கொண்டாள். தலையணை உள்ளமுங்கியிருந்தது. நிழலும் சூர்ய வெளிச்சப் பளபளப்புமான குண்டு முகம். எந்த அற்புதத்தையும் நம்புகிற மாதிரியான அப்ராணி முகம் அல்ல அது. கதை கேட்டமா து¡ங்கினமான்னு அவள் அடங்குவாள்ன்றதே சந்தேகந்தான். அவளுடைய தம்பி பாபி – ரெண்டு வயசு – வாய்ல பாட்டில்… எப்பவோ து¡ங்கியாச்சு. ஜாக் கேட்டான் – ”இன்னிக்கு எதைப் பத்திக் கதை சொல்லலாம்?…”

”ரோஜர் … …” ஜோ கண்மூடி புன்னகைத்தபடி யோசனை செய்தாள். திறந்தாள் கண்ணை – அம்மாவின் நீலக் கண்கள்! – ”ரோஜர் ஸ்கங்க்” என்றாள் தீர்மானமாக.

அவள்போய் பள்ளிக்கூடத்தில் இந்த ஸ்கங்க் பத்திச் சொல்லலாம்1 – புது மிருகம். ”ம்” என்று அவன் ஆரம்பித்தான். ”ரொம்ப நாளைக்கு முன்னால, ஒரு அடர்ந்த காட்டுல, சின்ன மிருகம் ஒண்ணு… பேரு ரோஜர் ஸ்கங்க், இருந்திச்சு… நாத்தமா நாறிச்சு அந்த மிருகம்!”

”ம்” என்றாள் ஜோ.

”அதுங்கூட எந்த மிருகமும் விளையாட வராதளவுக்கு அது நாத்தமா நாறிச்சு…” சமர்த்தாய் அப்பாவைப் பார்த்தாள். கதை இப்பிடி எடுக்கும்னு அவள் எதிர்பார்த்தாளில்லை. ”ரோஜர் ஸ்கங்க் எங்க போனாலும்…” அவன் உற்சாகமாய்த் தொடர்ந்தான். தனது சிறுவயதுப் பாடுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டான். ”அது கிட்டத்ல வந்தாலே மத்த மிருகங்கல்லாம் வன்ட்டாண்டா நாத்தம் பிடிச்ச ஸ்கங்க்னு கூவிட்டே ஓடிரும். தனியே ஸ்கங்க் அப்பிடியே நிக்கும். அதுங் கண்ணுலேர்ந்து ரெண்டு சொட் – கண்ணீர், அப்டியே க்கீ… ழ… இறங்கி வரும்.” குழந்தையின் மூக்கு வழியாக கண்ணீர் இறங்கும் பாவனையில் கோடு இழுத்துக் கொண்டே வந்தான். ஐயோ வாய்ல போயிருமோ, குழந்தை கீழுதட்டைக் கோணிக் கொண்டது.

”அது போயி ஆந்தையைப் பார்க்குமாப்பா?” கரகரத்திருந்தது குரல்.

மெத்தையில் குழந்தையருகே அவன். போர்வைக்குள் அவள் அசைவில் கால் உள்ளே விறைத்து இறுகியது. நிஜம்போலவே, அவளுக்கு ஆர்வம் கிளர்த்துகிற விதமாகவே கதை சொல்லிக் கொண்டிருக்கிறதாக அவனில் திருப்தி. கதை சொல்ல அவசரப் பட அவன் விரும்பவில்லை – ஆனால் கீழே நாற்காலி இழுபடும் சத்தம். கிளாரா கூடத்தில் மர சாமானுக்கெல்லாம் பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறாள். அவன் போய் உதவி செய்ய வேண்டியிருந்தது.

”ரோஜர் ஸ்கங்க் ரொம்ப வருத்தமா நடந்து போச்சு. பெர்ரிய ஒரு மரம். அதுக்கடியில வந்து சேர்ந்தது. அந்த மரத்தோட உச்சாணிக் கொம்பு. அங்கதான்… பெரிய, புத்திசாலியான, வயசாளி ஆந்தை!”

”ம்”

”ஆந்தை மாமா, ஆந்தைமாமா-ன்னுது ஸ்கங்க். எல்லா மிருகமும் என்னைக் கண்டாலே எட்டிப் போயிருது – ஆமாமா, என்றது ஆந்தை. ஆனாலும் நீ ரொம்பத்தான் நார்றே! – நான் என்ன பண்ணணும்னு கேக்கறச்சயே ஓன்னு அழுதிட்டது ரோஜர் ஸ்கங்க்.”

”மந்திரவாதி! மந்திரவாதி!” என்று ஜோ கத்தினாள். படுக்கையில் நெட்டுக்குத்தாய் உட்கார்ந்து விட்டாள். படுக்கையில் கிடந்த சின்ன தங்கவண்ணப் புத்தகம் ஒன்று நழுவிக் கீழே விழுந்தது.

”பாருடி, கதை சொல்றது நான். அப்பா உனக்குக் கதை சொல்லணுமா வேணாமா?”

”இல்லப்பா – நீ சொல்லு.”

”அப்பன்னா படு. கண்ணை மூடு!”

அவள் அப்பிடியே தலையணையில் மல்லாக்கக் கவிழ்ந்தாள். ”-ம்”

”ஆந்தை யோசிச்சி யோசிச்சிப் பார்த்தது… அப்றமா, மந்திரவாதியைப் போய்ப் பாரேன்னுது…”

”அப்பா?”

”ம்”

”மந்திரம் கிந்திரம்லாம் நிஜமாப்பா?” இந்த ஒரு மாதமாய் இப்படியெல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தாள். சிலந்தி மூட்டைப்பூச்சி சாப்பிடும், என்று அவன் சொன்னால், திரும்பி அம்மாவிடம் ”அப்டியாம்மா?” என்று கேட்டாள். கடவுள் வானத்தில் இருக்கிறார், நம்மைச் சுற்றியுள்ள எல்லாத்திலும் அவர் இருக்கிறார், என்று கிளாரா சொன்னால், அப்பா பக்கமாய்த் திரும்பினாள். நம்பியும் நம்பாமலும், ”நிஜந்தானாப்பா?” என்கிறாள்.

”கதையில் அதெல்லாம் நிஜம்!” சட்டென்று ஜாக் சொன்னான். திடுதிப்னு அவள் கேள்வி போட்டதில் சொல்லிட்டிருந்த கதை மறந்திருந்தது. ”ஆந்தை சொல்லிச்சு – அடர்த்தியான காட்டுக்குள்ளாற, ஆப்பிள்த் தோப்பு வழியா, தாண்டி சதுப்பு நிலம், அது வழியா சின்ன நதி… அதுந் தாண்டிப் போனா, மந்திரவாதியோட வீடு-ன்னுது ஆந்தை. அதே மாதிரிப் போச்சு ரோஜர். அதோடா – து¡ரத்தில் வெள்ளையா ஒரு வீடு! ரோஜர் அங்க போயிக் கதவைப் படபடன்னு தட்டிச்சு!” – படுக்கையருகே ஜன்னலைத் தட்டி சப்தம் எழுப்பினான். டக் டக். போர்வைக்குள் அந்தப் பெரிய தேகம், குழந்தைத்தனமான பரபரப்புடன் இறுகியது. ”உள்ளேர்ந்து வந்தாரு, குள்ளமா, ஒரு வயசான தாத்தா. நரைச்ச நீ…ளத் தாடி. கூர்மையான நீலத் தொப்பி. யார்ரு… என்…னது… என்னா வோ…ணும் உனக்கு. இன்…னா நாத்…தம்டா இது…” எப்பவுமே மந்திரவாதி மாதிரி அவன் ரசித்துப் பேசுவான். முகம் அஷ்டகோணல். உருளும் கண்கள். குரல்க் கரகரப்பு. கிழவனாட்டம் பேசுவதே தனக்குப் பொருந்துகிறது, என நினைத்துக் கொண்டான்.

”ஆமா தாத்தா. நான் ரொம்ப நார்றேன்… எனக்கே தெரியுது-ன்னுது ரோஜர் ஸ்கங்க். எல்லாக் குட்டீஸ¤ம் என்னைக் கண்டாலே ஓட்டமெடுக்குது. அந்த ஆந்தை மாமா, அதுதான் நீங்க நினைச்சா எதும் உதவி செய்வீங்கன்னு சொல்லி யனுப்பிச்சு.”

”ஹோ ஹோ அப்-பிடியா… இர்..ருக்…கும். இர்ருக்கும். உள்…ள வா நீயி… ரொம்பக் கிட்டத்ல வரப்டாது!… உள்ள எல்லா மேஜிக் சாமானும் குவியலா குப்பையாப் போட்டு வெச்சிருந்தாரு தாத்தா. அவருக்கு வீட்டுவேலை செய்ய, வேலைக்காரி யாருங் கிடையாது…”

”ஏம்ப்பா?”

”ஏன்னா அவரு மந்திரவாதியாச்சே. அதோட வயசாளி!”

”வயசாளின்னா… அவரு செத்துருவாராப்பா?”

”ம்ஹ¤ம். மந்திரவாதிங்கல்லா சாக மாட்டாங்கடி. சரியா, அவரு அங்க சுத்திச் சுத்தித் தேடினாரு. ஒரு பழைய கம்பு. அது ஒரு மந்திரக் கோல்! அதை எடுத்துக்கிட்டு, இந்தா ரோஜர் ஸ்கங்க், உன்னை என்ன வாசனையா மாத்தலாம்?-னு கேட்டாரு. ரோஜர் ஸ்கங்க் யோசிச்சி யோசிச்சிப் பாத்தது. ரோஜா வாசனை!- அப்டின்னுது.”

”நல்லாருக்கும்ப்பா!”

தாத்தாவின் பாவனை. சகிக்கவொண்ணாத மந்திரவாதியின் மூப்பான குரல்.

”ஜீ… பூம்… பா!
ரோஜர் ஸ்கங்க்! ரோஜர் ஸ்கங்க்!
பார் இப்ப –
கண்ணை மூடு சொல்றேன்!
ஜிகிரி ஜிகிரி ஜக்கா…
ரோஜாப்பூ கூஜாப்பூ
உடனே வா உடம்புல!
பயப்படாதே…
ஹா ஹ¥ ஹ்ரூம்!”

அவன் நிறுத்தினான். ஜோவின் மூச்சில் ஒரு லயிப்பு வந்திருந்தது. புருவம் நெறிபட்டது. கீழுதடு சாய்த்து ஒரு முறுவல். எங்காவது வெளியே கூட்டிப் போகிற சந்தர்ப்பங்களில் அவன் பெண்டாட்டி கொண்டாடும் சந்தோஷ முறுவல் அப்படியே குழந்தையிடம் இருந்தது. கிசுகிசுப்பாய் மெ ல் ல ச் சொன்னான் – ”அப்ப… திடீர்னு… மந்திரவாதி வீடு பூராவும்… ரோஜா வாசனை! ஆகாகா, ரோஜா – அப்டின்னு அந்த ரோஜர் மீன் கத்திச்சு!… மந்திரவாதி அதுங்கிட்ட, (கரகரப்பான குரலில்) ஏழு ரூவ்வா குடு-ன்னாரு.”

”அப்பா?”

”என்ன?”

”’ரோஜர் ஸ்கங்க்-ப்பா. நீ ரோஜர் மீன்-னியே!”

”ஆமாமா, ஸ்கங்க்த்தான்.”

”நீ மீன்னுட்டே – அசடுப்பா நீ!”

”ஹாமாமா, உங்க அப்பன் ஒரு அசட்டுக் குப்பன். எங்க விட்டேன்?… ம், உனக்கு துட்டுன்னா என்ன தெரியும்லியா?”

”ஓ. நீ சொல்லிர்க்கியே.”

”ரைட். ரோஜர் ஸ்கங்க் சொல்லிச்சு. என்ட்ட ஏழு ரூவ்வா இல்லியே? நாலுதானே இருக்குன்னுது. சொல்லும்போதே ஓன்னு அழ ஆரம்பிச்சது…” ஜோ தானும் அழுகிறாப்போல வைத்துக் கொண்டாள். என்றாலும் இப்போது முன்னத்தனைக்கு இப்போது ஈடுபாடு அவளிடம் இல்லை. அவனுக்கு ஏமாற்றம். கீழே சாமான்கள் மேலும் கீழுமாய் இழுபட்ட வண்ணமிருந்தன. கனமான சாமான்களை அவள் நகர்த்தக் கூடாதே… ஆறு மாத கர்ப்பிணி. மூணாம் குழந்தை.

”உடனே தாத்தா சொன்னாரு – சரி, பரவால்ல. நேர்ரா இந்த சந்தோட முக்கு வரை போ. மர்மக் கிணத்தை மூணே மூணு சுத்து. உள்ள எட்டிப் பாரு – மூணு ரூவ்வா கிடைக்கும், சீக்கிரம்னாரு. உடனே ரோஜர் ஸ்கங்க் தெரு முக்கு வரை ஓடி, மர்மக் கிணத்தை மூணு சுத்து சுத்தி வந்து பார்த்தா… கிணத்துல இருந்தது மூணு ரூவ்வா! அதை எடுத்திட்டு தாத்தா கிட்ட குடு குடுன்னு ஓடிப்போயிக் குடுத்தது. பெறகு காட்டுக்குள்ளாற ஒரே ஓட்டம்! இப்ப என்னடான்னா, எல்ல்-ல்லா மிருகமும் இதுங்கிட்ட ஓடி வருது. நம்மாள்தான் இப்ப வாசனையோ வாசனையா ஆயிட்டுதே!… இப்ப எல்லாமா பாண்டி – செதுக்கு முத்து – கிட்டிப்புல் – தாயக்கட்டம் – கள்ளன் போலிஸ் – விளையாடினாங்க…”

”கள்ளன் போலிசாப்பா?”

”ஆமாண்டி. அது ஒரு விளையாட்டு. ஒரே வேடிக்கை. சிரிப்பு. அவங்க மத்தியானம் பூரா கொட்டமடிச்சாங்க. இருட்ட ஆரம்பிச்சதும்… அவங்கவங்க அவங்கவங்க வீட்டுக்கு, அம்மாட்ட ஒடிட்டாங்க.”

ஜோ சொடக்கு முறித்தாள். ஜன்னலுக்கு அப்பால் மாலையின் சாய்வெயில், நிழல்கள் நீண்டு கிளம்பி விட்டிருந்தன. கதை முடிஞ்சிட்டதாய் அவள் நினைத்தாள் – பொம்மனாட்டிகள் தாங்களே முடிவுகள் எடுப்பது அவனுக்குப் பிடிக்காது. அவர்கள் அவனை முகம்பார்த்து தலையாட்ட வேண்டும், என அவன் விரும்புகிறவன்.

”ஜோ – கவனிக்கிறியா?”

”ம்”

”ஏன்னா, இப்ப ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்! ரோஜர் ஸ்கங்கோட அம்மா ரோஜர் ஸ்கங்க்கிட்ட, என்ன கண்றாவி நாத்தம்டா இது-ன்னுது!”

”அ…ப்பா?”

”உடனே ரோஜர் ஸ்கங்க் சொல்லிச்சு – என்னோடதும்மா. ஹி ஹி நாந்தான் ரோஜாப்பூவாட்டமா மணக்கிறேன் இப்ப… அம்மா அதுக்கு, யாருடா உன்னை இப்பிடி மாத்தித் தொலைஞ்சதுன்னு கேட்டாள். – மந்திரவாதிம்மா! – ஓகோ. டேய் நான் சொல்றதக் கேளு. நீ இப்பவே என்கூட வரே. அந்த படவா மந்திரவாதிட்ட நாம இப்ப போறோம்.”

எழுந்து உட்கார்ந்தாள் ஜோ. போர்வையிலிருந்து வெளியே வந்திருந்தன கைகள். நடுங்கின லேசாய். ”அம்மா, வேணாம்மா, அப்பறம் எந்தக் குட்டியும் என்னோட விளையாட வராதுன்னு அம்மாட்ட அது சொல்லித்தாப்பா?”

”அப்டியே வெச்சிக்கலாம்” என்றான் அவன். ”ஆனா அதுக்கு அம்மா சொல்லிச்சு – அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லே. எல்லா ஸ்கங்க் குட்டிங்க மாதிரிதான் நீயும் இருந்தே. அதுனால, நாம இப்பவே மந்திரவாதிகிட்ட போணும்… அம்மா கைல குடை ஒண்ணை எடுத்துக் கிட்டது. குட்டியையும் கூட்டிட்டுப் போயி… மந்திரவாதி மண்டைல… குடையால… ஒரு போடு!”

”இல்லப்பா இல்லப்பா” – ஜோ அவன் வாயைப் பொத்த வந்தாள். யதார்த்தம் சார்ந்த பேச்சு அவளுக்கு ருசிப்படவில்லை. அதற்குள்ளே அவளில் இன்னொரு யோசனை. ”அப்பறம், அந்த மந்திரவாதி அம்மா மண்டைல போட்டாரு ஒரு போடு! அவரு குட்டி ஸ்கங்கை மாத்தவே இல்லை!…”

”அதெல்லலாமில்லை” என்றான் அவன். ”மந்திரவாதி சரின்னு ஒத்துக்கிட்டாரு. குட்டி ஸ்கங்க் திரும்பவும் நாத்தமா நாற ஆரம்பிச்சிட்டது…”

”ஆனா… மத்த மி… மத்த மிருகம்…”

”ஜோ, இது அப்பாவோட கதை. அப்பா இனிமே கதை சொல்லணுமா வேணாமா?” – அகல முகத்தில் நிழல் பரவ திகைப்பாய்ப் பார்த்தாள் அவனை. ”அதாண்டி நடந்தது. ரோஜர் ஸ்கங்க்கும் அம்மாவும் வீட்டுக்கு வந்தாங்க. வந்தா, ரயில்ச் சத்தம். கூ – சிக்கு புக்கு சிக்கு புக்கு… பாஸ்டன்லேர்ந்து அப்பா வந்திட்டிருக்கிற சத்தம். அப்றம் அவங்க வெங்காய சாம்பார், மாங்காய்ப் பச்சடி, அப்பளம், வடை, பாயசம்னு ஒரு கட்டு கட்டினாங்க. ரோஜர் ஸ்கங்க் போய்ப் படுத்துக்கிட்டதும் அம்மா வந்து அதைக் கட்டிக்கிட்டது. என் ராஜாக்குட்டி, இப்பதாண்டி நீ வாசனையா இருக்கே. இப்பதான் எனக்கு உன்னை ஒம்ப ஒம்ப பிச்சிருக்கு-ன்னது. அவ்ளதான். கதை முடிஞ்சது.”

”ஆனா அப்பா?”

”என்ன?”

”மத்த மிருகம்லாம் அதைப் பார்த்து ஓடிப் போயிருமே…”

”அதா இல்ல. காலப்போக்குல அதோட நாத்தம் அதுங்களுக்குப் பழகிட்டதே. அப்பறம் அதுங்க அதோட நாத்தத்தைக் கண்டுக்கலை…”

”காலப்போக்குல-ன்னா என்னப்பா?”

”நாளாக நாளாக-ன்னு அர்த்தம்.”

”அந்த அம்மா ஒரு முட்டாள்ப்பா!”

”சேச்சே, அப்டில்லாம் ஒண்ணில்ல” – என்றான் அவசரமாய். அபூர்வமாய்த் தன் அம்மா ஞாபகம் எப்படியோ வந்திருந்தது அவனில். ”இப்ப நீ உன் பப்ளிமாஸ் மூஞ்சியைத் தலாணில அமுக்கிக்கிட்டு தேமேன து¡ங்கு.” வெளிச்சம் புகாவண்ணம் ஜன்னல் திரையைச் சரி செய்தான். அவள் து¡ங்கி விட்டாப் போலவே பாவித்து, முன்காலில் அடிமேலடி வைத்துக் கதவை நோக்கிப் போனான். திரும்பினான். போர்வைக்குள் நெளிந்தபடி அவனையே அவள் பார்த்தவாறிருந்தாள். ”ஏய் போத்திண்டு நிம்மதியாத் து¡ங்கு. பாபி பார்த்தியா, எப்பவோ து¡ங்கியாச்சு…”

அவள் படுக்கையில் எழுந்து நின்றாள். ஸ்பிரிங் குலுங்கியது. ”அப்பா?”

”ம்”

”நாளைக்கு, மந்திரக்கோலால மந்திரவாதி அம்மாவை அடிச்சதாக் கதை சொல்லணும்ப்பா…” அடிக்கிற சைகையும் செய்தாள். ”மண்டைலியே நச்னு போடறாப்ல…”

”ச். அப்டியில்லடி செல்லம். குட்டிக்கு அம்மான்னா ரொம்ப இஷ்டம். அம்மா எது செஞ்சாலும் தனக்கு நல்லதுதான் செய்வான்னு அதுக்குத் தெரியும்.”

”இல்லப்பா – நாளைக்கு மந்திரவாதி அம்மாவை அடிக்கறாரு… அப்டிதான் நீ கதை சொல்லணும்…” காலை உதைத்து அப்படியே கட்டிலில் அவள் உட்கார, கட்டில் முனகியது. உற்சாக நிமிஷங்களிலும் அவள் இப்படியே உட்கார்வாள் – இப்போது அந்தக் கலகலப்பு இல்லை.

”சரி – பார்க்கலாம். இப்ப நீ பேசாம ரெஸ்ட் எடு. நல்ல பொண்ணில்ல, படுத்துக்க பேசாம…”

கதவைச் சாத்தினான். கீழிறங்கி வந்தான். செய்தித்தாள்களைத் தரையெங்கும் பரப்பி பெயின்ட் டின்னைத் திறந்திருந்தாள் கிளாரா. தளர்ந்த கர்ப்பிணி உடை – மேலே அவனது பாடாவதிச் சட்டை ஒண்ணை அணிந்திருந்தாள். பிரஷ்ஷை முக்கி நாற்காலிப் பட்டைகளில் தீற்றிக் கொண்டிருந்தாள். முதுகுப்பக்கம் படிகளில் அதிர்வு. ”ஏய் நிமிட்டாம் பழம் வேணுமா?” படிகள் தயங்கின.

”பெரிய கதை” என்றாள் கிளாரா.

”குழந்தை… பாவம்!” – மனைவி பாடுபடுவதை அவன் அலுப்புடன் பார்த்தான். அவளைச் சற்றிலும் கூண்டுகள், பலகைகள், பட்டைகள். மங்கிய நிறங்கள். சில சாயம் பூசிப் புதுசாய். தந்த வண்ணம். மத்தியில் தான் அசிங்கமாய், என நினைத்தான். அவளும் அப்படித்தான் இருக்கிறாள், என்று உணர்ந்தாலும் பெண்டாட்டியுடன் பேசவோ, கூட வேலை செய்யவோ, கிட்டே போய் அவளைத் தொடவோ, எதையும் அவன் விரும்பினானில்லை.

>>>
Should wizard hit mummy? – short story by John Updike
from his collection of short stories /pigeon feathers/

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்