மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

பித்தன்


—-

இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அக்கிரமம் தாங்கமுடியவில்லை. குறிப்பாக மகாத்மா காந்தியின் மேல் – அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் – அவர்கள் தொடுக்கும் மட்ட, மலின தாக்குதல்கள். அவர் என்ன இவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மண் அள்ளியா போட்டுவிட்டார் ? அவர் பெருமையைக் குலைப்பதற்காக எத்தனை கீழ்த்தரமான வாதங்களையும் புரிய தயாராக இருக்கிறார்கள். கருவிலே திரு இருப்பதாகக் கருதிக்கொள்பவர்களும் இதில் விதிவிலக்கல்ல. முன்பே மகாத்மாவை தேசத்தந்தை என்று அழைக்கக் கூடாது என்பதாக ஒரு கருத்தைப் பரப்பி வந்தார்கள்.

அப்போது நான் திண்ணையில் எழுதியதை அப்படியே அடைப்புக்குறிகளுல் [ ] தருகிறேன்.

[ மகாத்மா காந்தியை ஏன் ‘தேசத்தின் தந்தை என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒத்துக்கொள்வதில்லை ? ‘ என்று ஒருவர் கேள்வி கேட்கிறார். என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று அறிய நானும் ஆவலாக இருந்தேன். பார்த்தால் வழக்கம்போல சமாளிப்புகள். ‘ஜின்னா ஏன் ‘மகாத்மா ‘ என்று சொல்லவில்லை ? ஏன் ‘வந்தே மாதரம் ‘ சொல்லவில்லை ? ‘ என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்! கேள்விக்கு எதிர்கேள்வ  2 பதிலாகிவிடாது (எல்ல சமயங்களிலும்), என்று பல முறை இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அது பதில் சொல்லமுடியாதவர்கள் சமாளிப்பதற்குத் தான். எதிர் கேள்வி கேட்பதில் தவறில்லை. பதில் சொல்லிவிட்டு எதிர் கேள்வி கேட்கலாம். இப்போது என்ன சொல்ல வருகிறார்கள் ?

ஜின்னா காந்திஜியை மகாத்மா என்று சொல்லாததினால் இவர்கள் காந்திஜியை தேசத் தந்தை என்று ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்களா ?! இது என்னடா காந்தியடிகளுக்கு வந்த சோதனை!

மகாத்மா காந்தி இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திலேயே ஒரு ஒப்பற்றத் தலைவர். ‘இந்தியாவின் தேசத் தந்தை ‘ என்று அழைப்பதால் எதோ காந்திக்கு பெருமை சேர்த்துவிட்டதாக நினைப்பது தவறு. உண்மையில் அப்படி அவரை அழைப்பதும், அவர் இந்தியாவில் பிறந்ததும் இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாகும். இதை மறுப்பதற்காக இந்த அசடுகள் கேட்கும் கேள்வி, ‘காந்தி மட்டும்தான் சுதந்திரத்திற்க ாக பாடுபட்டாரா ? மற்றவர்கள் பாடுபடவில்லையா ? ‘.

கோடிக் கணக்கான மக்கள் போராடினார்கள். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் யார் தலைமை ஏற்று நடத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் வரலாறு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பதுதான் நடைமுறை உண்மை. கங்கைக் கரை வரை படையெடுத்து சென்ற கரிகாலச் சோழனும், இராஜேந்திர சோழனும், வாதாபிக்கு சென்று அதை அழித்த

நரசிம்மவர்ம பல்லவரும், தனியாகவா இவற்றை சாதித்தார்கள் ? இலட்சோப இலட்சம் வீரர்களும்தான் அதற்கு உதவினார்கள், என்றாலும் வரலாறு, கரிகாலனையும், இராசேந்திரனையும் தான் கங்கை கொண்ட சோழர்கள் என்கிறது. நரசிம்மரை ‘வாதாபி கொண்டான் ‘ என்கிறது. எனவே தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு கிடைக்கும் புகழைக் கண்டு

பொறாமைப்படுவது அர்த்தமற்றது. காந்தியடிகள் செய்தது இந்த மன்னர்கள் செய்ததைவிட அருமையான காரியம். ஏனெனில் இந்த மன்னர்களுக்கு கட்டுப்பாடான படைவீரர்கள் உதவினார்கள். கஜானா நிறைய பொருள் இருந்தது.

காந்திக்கோ, கட்டுப்பாடற்ற, முக்காலும் படிப்பறிவில்லாத மக்களை ஒன்றிணைத்து செல்லவேண்டியிருந்தது.

பரவலாக அங்கங்கே இருந்த சுந்தந்திர போராட்டங்கள், ஒன்றிணைந்த ஒரு பெரும் போராட்டமாக, இந்தியா என்று இப்போது அறியப்படுகிற நாட்டின் ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டமாக மாறியது காந்தியின் வருகைக்குப்பின் தான் என்றால் அது மிகையில்லை. காந்திதான் சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் என்பது யாவரும் அறிந்த உண்மை. காந்தியின் அகிம்சையை கண்டுதான் இங்கிலாந்து அரசு ஸ்தம்பித்து நின்றது என்பதும் வரலாறு கண்ட உண்மை. பாதுகாப்பிற்கு ( ?!) என்ற பெயரில் இலவசமாக சூலம் வழங்கி, மற்றவர்களை குத்துவதற்கு தூண்டுவதோ, பிற மதத்தினரைத் தூற்றுவதற்கோ, பிற மத சின்னங்களை அழிப்பதற்கோ, உணர்ச்சிவசப்பட்டு ஆட்டு மந்தைகள் போலிருக்கும் ஒரு கூட்டத்தைத் தூண்டுவது மிக எளிது. அதை எந்த மடையனும் செய்யலாம். ஆனால் அதிகம் படிப்பறிவில்லாத ஒரு சமூகத்தை, உணர்ச்சிவசப் படக்கூடிய மக்கள் கூட்டத்தை அகிம்சை வழியில் கொண்டுசெல்வது என்பது ஒரு அருபெருஞ்செயல். அதை காந்தி செய்திருக்கிறார். வாய் கிழிய பேசுவதும், பிறரை அவமதிப்பதும், அடிப்பதும், அழிப்பதும் வீரமல்ல. அடி வாங்கிக்கொண்டு ஒரு கொள்கைக்காக பேசாமலிருப்பதும், தன் கோபத்தையே கட்டுபடுத்துவதும்தான் மிகப் பெரிய வீரமாகும்.

கொள்கைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். தனக்குத் தானே அதை விதித்துக்கொண்டு, அதை கடைசி வரை கடைபிடிப்பது என்பது சாதாரண காரியமில்லை. அதிலும் அந்த கொள்கைகளை மற்றவர்களையும் பின்பற்ற வைப்பது, அதற்கு தானே ஒரு முன்மாதிரியாக இருப்பது என்பது மிக அசாதாரண செயல். பொய் சொல்லமலிருப்பது, மது அருந்தாமல் இருப்பது, நேரந்தவறாமலிருப்பது, சொன்ன சொல் தவறாமலிருப்பது, எளிமையாக இருப்பது, தனக்கு வேண்டியவற்றைத் தானே செய்துகொள்வது, அதிமுக்கியமாக அகிம்சையை கடைபிடிப்பது, தீண்டாமை ஒழிப்பு என்பது போன்ற கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அதை கடைசிவரை பின்பற்றிய காந்தியைப் போன்ற ஒப்பற்ற தலைவர் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருந்திருக்கவேண்டும். (இவற்றில் சில, சாதாரணமான கொள்கைகளாகத் தெரியலாம். ஆனால் அவற்றை கடைசிவரை கடைபிடிப்பதென்பது எளிதானதன்று). ஒரு நாட்டில் தோன்றிய கொள்கையையோ, ஒரு கருத்தாக்கத்தையோ பிற நாடுகளிலுள்ளவர்கள் பின்பற்றுவது சாதாரணம். ஆனால் ஒரு நாட்டில் தோன்றிய ஒரு மாமனிதரை வேற்று நாட்டினர் பின்பற்றுவது- ஆப்பிரிக்க மண்டேலா, அமெரிக்க லூதர் கிங் போன்ற தலைவர்கள்-காந்திக்கு மட்டுமே நடந்த அதிசய உண்மை. அதுவே காந்திஜியின் புகழை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. தலைவர்கள் மட்டுமள்ள எண்ணற்ற மக்கள், காந்தியின் எளிமையையும், அகிம்சையையும் பின்பற்றுகின்றனர். இந்த செய்கைகளில் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டதில் பெருமையடைகிறேன்.]

இப்போது வந்தாரய்யா மலர்மன்னன். சொல்கிறார் மகாத்மா காந்தியை ‘மகாத்மா ‘ என அழைக்கக்கூடாது என்று. இதற்கு முன்னாலும் பல ஹிந்துத்துவ தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இப்படி சொல்லியிருக்கிறார்கள். என்றாலும் அதற்கு ஒரு காரணத்தை யாரும் சொல்லவில்லை. இவர் கருவிலேயே திருப்பெற்றவரல்லவா, பலமாக யோசித்து ஒரு காரணத்தைக் கண்டிபிடித்து சொல்கிறார். என்னவென்றால், ‘மகாத்மா என்று ஒதுக்கி வைத்துவிட்டால்( ?!) அவர் கருத்துக்களை சாதாரணர்கள் பின்பற்ற மாட்டார்கள். அது மகாத்மாவிற்கான கருத்து, நானோ சாதாரண ஆத்மா எனவே இதை நான் பின்பற்றமுடியாது ‘ என சொல்லிவிடுவார்களாம். அடடா என்னே ஒரு வியாக்யானம். இந்த மதவெறி படுத்தும் பாட்டைப் பாருங்கள். மகாத்மா இஸ்லாமியர்களையும் சமமாக நினைத்து, அவர்களுக்கும் ஆதரவாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரின் மகாத்மா பட்டத்தைப் பறிக்க மிக கடினமாக யோசித்து ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். ஆனால், இப்படி சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் மலர்மன்னன், இதைவிட முட்டாள்தனமான கருத்தை நான் கேட்டதேயில்லை. எப்படி என்று பார்ப்போம்.

ஒரு சாதாரண மனிதன் இருக்கிறான். அவன் கடுமையாக உழைத்து பெரும் பணக்காரணாகிவிட்டான். இப்போது அவன் செய்யும் வேலையை மற்றொரு சாதாரணமானவரிடம் செய்ய சொல்கிறீர்கள். ‘அது பணக்காரர் செய்வது எனக்கல்ல என்று சொல்லி ‘ சும்மா இருப்பனா அல்லது, முயற்சி எடுத்து அவன் பணக்காரன் ஆகியதுபோல நானும் முயற்சித்தால் பணக்காரனாகிவிடலாம் என்று நினைப்பானா ? அல்லது இப்படி பார்ப் போம். தெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும். கிரிக்கெட்டின் கடவுள் என்று கூட சொல்லிவிட்டார்கள். இப்போது புதியதாக வரும் ஒரு ஆட்டக்காரரிடம் தெண்டுல்கர் போல விளையாட சொன்னால், ‘ஐயோ அது கிரிக்கெட் கடவுளின் ஆட்டம் போன்றது நான் ஆடமாட்டேன் ‘ என்றா சொல்வார் ? நம்மைப் போல இருந்து மேலான நிலையிலிருப்பவர்களைப் பார்த்தால் நமக்கு உந்துதல் தானே கிடைக்கும். அவர் சொல்லும் கருத்துக்களை கேட்கவேண்டும் என்றுதானே நினைப்பார்கள்.

ஒரு சாதாரண இந்தியராகப் பிறந்து, தன் உழைப்பாலும், நடத்தையாலும், தியாகத்தாலும், ஒழுக்கத்தாலும், தொண்டாலும், காந்திஜி ‘மகாத்மா ‘ ஆனால் அது மற்றவர்களுக்கும் ஓர் உந்துதலாகத்தானே இருக்கவேண்டும் ? அவர் நடத்தையால் மகாத்மா ஆனதுபோல நாமும் ஏன் ஆகக்கூடாது என்று நினைப்பதுதானே சரியாக இருக்கமுடியும்.

‘மகாத்மா என்று ஒதுக்கி வைத்துவிட்டால் அவர் கருத்தை நாம் பின்பற்ற மாட்டோம். அல்லது அவர் கருத்தை பின்பற்றவேண்டுமானால், அவரை மகாத்மா என்று ஒதுக்கிவைக்கக் கூடாது ‘. என்ன சாமர்த்தியமான வாதம். ஆனால் அதில் ஒரு சிறு பிரச்சனை இருக்கிறது மலர்மன்னன் அவர்களே. உங்கள் வாதப்படி பார்த்தால், நாம் கண்ணனைப் ‘பரமாத்மா ‘ என்று அழைக்கக் கூடாது. பரமாத்மா என்று ஒதுக்கி வைத்துவிட்டால் அவ ன் கருத்தை ‘ஆகா இது பரமாத்மாவிற்கான கருத்து ‘ என்று சொல்லி ஒதுக்கியிருப்போம். அல்லது அவர் கருத்தை (வேதம் என்று) சொல்லிப் பின்பற்றுவதனால் அவரை இனி பரமாத்மா என்று அழைக்கக்கூடாது!! கண்ணனை மட்டுமல்ல, ஏசு, நபிகள், விவேகானந்தர், பிளாட்டோ இப்படி யாரையுமே கடவுளாகவோ, அறிஞராகவோ, ஞானியாகவோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. இல்லையென்றால் அவர்களின் கருத்துக்களை நம்மால் பின்பற்ற முடியாமல் போய்விடும். உண்மையில் நீங்களோ நீங்கள் சார்ந்திருக்கும் ஹிந்துத்துவ கும்பல்களோ கண்ணனை பரமாத்மா என்று அழைக்ககூடாது என்று கூறியதாகவோ (இப்போது காந்திக்கு சொல்வதுபோல), அல்லது அப்படி அழைக்காமலிருந்ததாகவோ அல்லது அப்படி அழைத்து விட்டதற்காக அவர் கூறிய கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டதாகவோ யாருமே கேள்விபடவில்லை. கண்ணனுக்கு ஒரு நியாயம் காந்திக்கு ஒரு நியாயமா ?

கண்ணன் ஒரு கடவுள் என்ற கதையை, நம்பிக்கையை ஒதுக்கிவைத்துவிட்டு, பூமியில் பிறந்த ஒரு சாதாரண மனிதராக வைத்துக்கொள்வோம். பரமாத்மா என்று அவரை அழைப்பதற்கான எதாவது ஒரு காரணத்தை நீங்கள் சொல்ல முடியுமா ? காந்திஜி தன் விவரம் அறிந்தபின் பொய்யே சொல்லாமலிருந்தவர். கண்ணனோ பலபொய்கள் சொல்லியிருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். (நன்மைக்காக தான் சொன்னார் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்). தனிமனித ஒழுக்கத்தில் காந்தி பல மடங்கு முன்னிலையில் இருக்கிறார். கண்ணனுக்கோ, பாமா, ருக்மணி, ராதா என பட்டியல் நீளம். சரி அது தனிமனித விசயம் என்று விட்டுவிடலாம். கண்ணன் செய்த கொலைகளும், எண்ணற்ற கொலைகளுக்கு காரணமாக இருந்ததும் அவர் கதையிலேயே விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. காந்திஜியோ அகிம்சையையே கொள்கையாகக் கொண்டவர். அகிம்சையை போதித்தவர் மட்டுமல்ல, அதற்காகவே வாழ்ந்தவர். அகிம்சை என்பதின் உண்மையான பலத்தை, அதன் நன்மையை உலகிற்கே எடுத்துக் காட்டியவர். கண்ணன் தன் வாழ்வில் செய்த அதர்மங்கள் கொஞ்சமா நஞ்சமா ? அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பதே அதையும் சரிகட்ட நாம் சொல்லிக்கொள்ளும் வாதம். தர்மத்தை நிலைநாட்ட எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்று யார் சொன்னது ? அவரே வசதியாக அதையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அனேகமாக அவர் மனசாட்சியே அவரை உறுத்தியிருக்கக்கூடும். எனவே கீதையில் அப்படி சொல்லிவிடுகிறார். தர்மத்தைக் காக்க அதர்ம வழியில் செல்வது யாராலும் செய்யக்கூடியது. எல்லா அதர்மக்காரர்களும் சொல்லும் வழிதான் அது. தர்மத்தைக் காக்க, தர்மத்தின் வழியிலேயே செல்வதுதான் மிகக்கடினம். காந்திஜி எல்லா அதர்மங்களையும், வன்முறைகளையும் தர்மத்தின் வழியிலேயே, அகிம்சை வழியிலேயே அடைந்தவர். காந்திஜி தீண்டாமை பாவம் என்று சொன்னவர். தீண்டாமை ஒழியவேண்டும் என பாடுபட்டவர். கண்ணனோ தீண்டாமையின் மூலவேர். கீதையிலேயே மக்களைப் பிளவுபடுத்தி கருத்து சொன்னவர். இப்படி பரமாத்மாவிற்கான எந்த தகுதியும் இல்லாத ஒருவரை – அவர் கடவுள் அவதாரம் என்ற ஒரு கதையை, நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு – பரமாத்மா என்று அழைக்க நீங்கள் வெட்கப்படுவதில்லை. மதவெறியையும், மாற்று மதத்துவேஷத்தையும் மட்டும் பரப்பியவரை குருஜி என்று அழைக்க நீங்கள் வெட்கப்படுவதில்லை. (இரண்டு மூன்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அதற்கு சப்பைகட்டி கூறிய காரணம், அவர் கல்லூரி ஆசிரியராக இருந்தவர், அவர் மாணவர்கள் அப்படி அழைத்தார்கள் என்று. ஆசிரியர் என்றால் மாணவர்களுக்கு குருவாகலாம் மற்றவர்களுக்கு எப்படியாவார் ? இல்லை அவர் மட்டும்தான் ஆசிரியரா, வேறு எந்த கல்லூரி ஆசிரியரையும் நீங்கள் யாரும் அப்படி அழைப்பதாகத் தெரியவில்லையே ?). ஆங்கிலேயர்களிடன் மன்னிப்புக் கடிதம் கொடுத்து காலில் விழுந்தவரை ‘வீர ‘ பட்டம் வைத்து அழைக்க நீங்கள் வெட்கப்படுவதில்லை. ஆனால் ஒரு மகா ஆத்மாவை, மாமனிதரை, பரமாத்மாகவே கருதப் படவேண்டிய ஒருவரை மகாத்மா என்று அழைக்க உங்களுக்கு வலிக்கிறது. உங்கள் மதவெறி படுத்தும் பாட்டைப்பாருங்கள்.

தாய் தந்தையரை நாம் தெய்வங்களாக வணங்குகிறோம். நமக்காக தியாகம் செய்து, அன்பை பொழிந்து நமக்கு வேண்டியவற்றை நம் கண்முன்னமே தருகிறார்கள். எனவே தெய்வம் என்பது பொருத்தமானதே. பலர் இயற்கையையே தெய்வமாகக் கருதுகிறார்கள். அதுவும், நமக்கு வேண்டியவற்றை, நாம் அறியவே கண்முன்னால் தருகிறது. எனவே அதுவும் நியாயமே. ஆனால் கண்ணன் என்பவர் நம்பிக்கையினால் மட்டுமே ஆனவர். கதாபாத்திரம். நாம் அறிந்து, நம் கண்முன்னால் நமக்கு எதையும் அவர் வழங்கவில்லை. என்றாலும் பலரின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அந்த நம்பிக்கையினால் மற்றவர்களுக்கு ஒரு தொல்லையும் இல்லை என்பதால் கண்ணனை பரமாத்மா என்று அழைப்பதில் ஒரு தவறுமில்லை என்றே கருதுகிறேன். ‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக ‘ என்று கடவுளர் வரிசையில் காந்தியையும் வைத் து கவிஞர் ஏற்கனவே பாடியிருக்கிறார். இப்போது நாம் அதை உண்மையாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொய் சொல்லமலிருப்பது, மது அருந்தாமல் இருப்பது, நேரந்தவறாமலிருப்பது, சொன்ன சொல் தவறாமலிருப்பது, எளிமையாக இருப்பது, தனக்கு வேண்டியவற்றைத் தானே செய்துகொள்வது, அதிமுக்கியமாக அகிம்சையை கடைபிடிப்பது, தீண்டாமை ஒழிப்பு என்பது போன்ற கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அ தை கடைசிவரை பின்பற்றிய காந்திஜியை, பரமாத்மாவிற்கான எல்லா தகுதிகளும் உடைய ஒரு மகாத்மாவை, மகாத்மா என்று அழைப்பதோடு இனி பரமாத்மா என்றே அழைப்போம் வாருங்கள்.

வணக்கங்களுடன்.

– பித்தன்.

piththaa@yahoo.com

Series Navigation

பித்தன்

பித்தன்