மகத்தான மக்கள் பணியில் மக்கள் தொலைக்காட்சி

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

திசைகள் அ.வெற்றிவேல்


எனக்கு திருமணம் நடந்தது 1987 மே மாதம்.திரு.சுந்தர ராமசாமி தனது மனைவி மகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திருமணத்தின் மறுநாள் எனது மனைவியிடம் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிக்கொண்டு இருந்தேன். இலக்கியம், அரசியல், திரைப்படம்,சமயம் குறித்த எனது பார்வைகள் பற்றி புது மனைவியிடம் தெளிவுபடுத்திக் கொண்டு இருந்தேன். பேச்சின் இடையில் நான் ஒரு கேள்வி கேட்டேன்.தனது வாழ்வில் அதுவரை சந்தித்திராத,கனவிலும் எதிர்பாராத அந்தக் கேள்வியினால் எனது மனைவி சற்றுத் தடுமாறிப் போன அந்த நொடி இன்னும் ஞாபகம் உள்ளது.நான் கேட்ட கேள்வி”ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்று உனது தம்பிகளுக்குப் பெயர் வைத்துள்ளீர்கள்.அதன் உண்மையான அர்த்தம் தெரியுமா என்பது தான் அந்தக் கேள்வி.”பேர் அழகா இருக்குன்னு வைச்சிருப்பாங்க..இதுக்கெல்லாம் அர்த்தம் எதுக்கு? சும்மா கூப்பிடத்தானே”..என்று சொன்ன மனைவியிடம் நான் அதற்கு அர்த்தம் சொல்லவா என்று கேட்டேன். மிகவும் ஆவலுடன் பதிலை எதிர்பார்த்த மனைவியிடம் வேடிக்கையாக அச்சில் ஏற்ற முடியாத ஒரு அசிங்கமான ஒரு பதிலைச் சொன்னேன்.அதுசமயம் நான் படித்த ஓஷோவின் சுயசரிதை தமிழாக்கத்தில் “பாபு” என்பதற்கு நாற்றம் என்று ஏதோ ஒரு இந்திய மொழிகளில் அர்த்தம் இருப்பதாக நான் படித்ததை சொல்லி ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் என்பதற்கு மூன்று வகை நாற்றங்களை வரிசைப்படுத்தினேன். பிறகு தமிழ் மொழியின்சுவையையும்,இனத்தின் பெருமையையும் பல்வேறு நேரங்களில் சொல்லி, பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று சொல்லி அதன்படி நான் எனது குழந்தைக்கு உதயநிலவன் என்று தமிழில் பெயர் சூட்டினேன்.பட்டப்படிப்பு அதுவும் சமூகவியல் படித்தவர் என்பதால், திராவிட இயக்கங்கள் குறித்த ஒருவகை அறிமுகம் இருந்ததால் எனது பணி இலகுவானது.அதன் பின்பு எனது மாமனார் இல்ல வாரிசுகள் பலரும் தமிழில் அகிலன்,எழில்,முகில் எனப் பெயர் சூட்டிகொண்டது எனக்கு ஒருவகை வெற்றியே எனலாம்.

சென்னைக்கு புதிதாக குடித்தனம் வந்தபொழுது கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு அறிமுகமாகி தொலைக் காட்சிப் பெட்டி உள்ள இல்லம் தோறும் அந்நிகழ்ச்சியில் சென்னை நகர மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். எனது மனைவியிடம் நான் வைத்த மற்றுமொரு வேண்டுகோள்” எனது வீட்டிற்குள் கிரிக்கெட் அனுமதி இல்லை”என்பதே.என் மனைவியும் அதில் அதிக ஆர்வம் காட்டாததால், இன்று வரை கிரிக்கெட் எனது இல்லத்தில் நுழைய அனுமதிக்கவில்லை.

திருமணம் ஆன புதிதில் சென்னைத் தொலைக்காட்சியில் வெளிவந்த தொடர்களில் மிகவும் மக்களை கவர்ந்தது “ராமாயணம்” என்ற தமிழாக்கத் தொடர்.அதற்கும் எனது இல்லத்தில் அனுமதி மறுத்துள்ளேன். அதற்குப் பதில் கம்பராமாயணத்தையும், ராஜாஜியின் “சக்கரவர்த்தி திருமகனையும்” வாங்கிக் கொடுத்து மனைவியிடம் படிக்கச் சொல்லியுள்ளேன். அனைத்து விவாத முடிவிலும் எனது கருத்துக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற எனது மனைவி முதலில் மறுப்புத் தெரிவிக்கும் பொழுது “விதண்டாவாதம் பிடித்த மனுஷர்ங்க நீங்க..ஊரெல்லாம் ஒரு மாதிரி யோசிச்சா..நீங்க மட்டும் தனியா வித்தியாசமா யோசிக்கிறதா யாரும் பின்பற்ற முடியாத (மனைவி வார்த்தையில் “பாலோ” பண்ண முடியாத) சிந்தனைகள் செயல்கள் தான் உங்க கிட்ட இருந்து வரும்”

மேலே குறிப்பிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை எனது வாழ்க்கையில் இருந்து நான் எடுத்து வைக்க காரணம், நான் சொல்ல வந்த கருத்தை மிகவும் எளிதாக்குவதற்காகவே.

இன்று வரை நான் மட்டுமே விதண்டாவாதமாக பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்த மனைவி, இன்று மக்கள் தொலக்காட்சியில் எனது வாதங்களையே எடுத்து வைத்து அதன் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘இருபது வருடங்களுக்கு முன்னரே தமிழில் பெயர் சூட்டுவது முடிந்தவரை தமிழில் பேசுவது’என்ற உங்கள் கொள்கைகளை உலகங்கெங்கும் வாழ் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு தொலைக்காட்சி வந்துள்ளது” என்று சொல்லும் எனது மனைவி முகத்தில் மாபெரும் மகிழ்ச்சி காணக்கிடைக்கிறது. தனது கணவன் முட்டாள் அல்ல என்ற மகிழ்ச்சியாக இருக்கும். அல்லது தனது கணவனையொத்த முட்டாள்கள் இன்னும் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியாகக் கூட இருக்கலாம்.

தமிழ் தொலைக்காட்சி அமைப்புகள் நினைத்துப் பார்க்கவே அஞ்சக்கூடிய ஒரு கருத்தை “நீதியின் குரல்” என்ற நிகழ்ச்சி மூலம் ஒரு நாள் பார்க்கக்கிடைத்தது.மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி.20 வருடங்களாக எனது மனைவியிடமும் எனது குழந்தைகளிடமும் நண்பர்களிடமும் நான் சொல்லி வந்த செய்தி.மற்றுமொரு நாள் “ரசிகர் மன்றம்”என்ற பெயரில் சீரழியும் இளஞர் சமுதாயத்திற்காக, மக்களுடன் ஒரு கலந்துரையாடல்,அதே”நீதியின் குரல்” நிகழ்ச்சி மூலமாக.

தினந்தோறும் காலை தமிழ்க்கூடல் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் இலக்கிய நண்பர்களைப் பார்க்கப் பார்க்க..காலையிலே ஒரு புத்துணர்வு.நாஞ்சில் நாடன்,பெருமாள் முருகன் என்று சிறுபத்திரிக்கைச் சூழலில் இயங்கி வந்த பெருமக்களுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டியது நமது கடமை அல்லவா!

சவூதி வரும் எனது மகன்களிடம் சில குறிப்பிட்ட புத்தகங்களின் பெயர்களைச் சொல்லி வாங்கிவரச் சொல்வது எனது வழக்கம். இந்தப் புத்தகம் இங்கு கிடைக்கும்,என்ன விலை?,ஆசிரியர் யார்? புத்தக வெளியீட்டாளர் யார்? என்பதெல்லம் உங்களுக்கு எங்கு கிடைக்கிறது என்பது எனது மகன்கள் இங்கு வரும்போதெல்லாம் கேட்கும் கேள்வி.அவர்களை ஒரு நாள் காலை எழுப்பி நூல்வெளி என்ற நிகழ்ச்சியை காண்பித்து எனக்குத் தேவையான அனைத்து விவரங்களும் நான் பெரிதும் மதிக்கும் திரு.பிரபஞ்சன் அவர்கள் எனது வீட்டிற்கே வந்து சொல்கிறார்கள்.இதில் இருந்தும் தான் நான் எனக்குத் தேவையான
தகவல்களை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை பார்க்க வைத்தேன்.

நல்ல தமிழில் பிழையின்றி எழுத,பேச விரும்பும் அனைவருக்கும் பேராசிரியர்.மா.நன்னன் நடத்தும் “தமிழ்ப்பண்ணை” என்ற நிகழ்ச்சி மிகப்பெரும் ஒரு கொடை என்றால் மிகையாது.கவிஞர்.அறிவுமதியின் “புதிய கோணங்கிகள்”..தந்தை பெரியாரையும் இளையராஜாவையும் அறிமுகப்படுத்திய அழகு, நண்பர் தியாகு நடத்திய சங்கப்பலகையில் மறவன்புலவு.கி.சச்சிதானந்தன் ராமர் பாலம் குறித்து எடுத்து வைத்த கருத்துக்கள்,மற்றும் பகவத்சிங் பற்றிய தனது நூல் மற்றும் அவர் குறித்த சிறப்புகளை பேராசிரியர்
திரு.சுப.வீரபாண்டியன் நம்முடன் பகிர்ந்து கொண்ட சங்கப்பலகை.. நமக்கே தெரியாமல் இருக்கும் நாம் பிறந்த மண்ணின் சரித்திரப் பெருமைகளை எடுத்துவைக்கும் “பயணம்” ..போன்ற தொடர்கள் மிகவும் பயனுள்ளவை.

தமிழ் வார்த்தைகள்,சொற்றொடர்களை பரவலாக்கும் ஒரு விளையாட்டு “சொல் விளையாட்டு”.. பட்டுப்புடவை பரிசுடன்.அம்மாவை அம்மா என்றும் அப்பாவை அப்பா என்றும் சொல்லி தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் பேசினால் “தங்கக்காசு”.இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் ஆதரவளிப்போர்களுக்கு நேயர்கள் சார்பாக நன்றிகள்.அழகான சின்னச் சின்ன கேள்விகள் மூலம்,நமது கவனம்,நினைவாற்றலுக்கு சின்னச்சின்ன பரிசுகளுடன் “வேடிக்கை விளையாட்டு”..சிறு தொழில்,பங்குச்சந்தை குறித்து
தேவையான தகவல்களை பரவலான மக்களுக்கு கொண்டு செல்லும் வளாகம் என அனைத்து நிகழ்ச்சிகளுமே பாராட்டத்தக்க நிகழ்ச்சிகள்.

1992 முதல் தமிழகத்தில் தனியார் தொலக்காட்சிகள் தனது சேவைகளைத் தொடங்கின..திரைப்படக் காட்சிகள் அன்றி ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடத்த வக்கில்லாத இந்நிறுவனங்கள், பணம் சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் இயங்குவது மட்டுமின்றி, முடிந்த வரை தமிழ்க்கொலை செய்வதில் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு செயல்படும் இத்தொலைக்காட்சி நிறுவனங்களின் மத்தியில் ‘மக்கள் தொலைக்காட்சி” மக்கள் பணியில் தன்னை இணைத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, பாராட்ட வேண்டியது தமிழ் மொழியின் சுவை,பெருமை அறிந்த ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும்.நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,செய்தி வாசிப்போர் அனைவரும் தமிழை நன்கு உச்சரிப்பதும், நல்ல தமிழ் வார்த்தைகளை பழக்கத்திற்கு கொண்டு வருவதுமாக 24 மணி நேரமும் தமிழ்ப் பணியாற்றுகிறார்கள்.திரைப்படக் காட்சிகள் இல்லாமல் 24 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது இந்தியாவில் இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.இது எழுதுவதற்கு ஒரு வரி செய்தியாக உள்ளது.ஆனால் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது அதை நடத்துபவர்களுக்குத் தான் தெரியும்.விளம்பரதாரர்களைச் சாராமல் 24 மணி நேரத் தொலைக்காட்சி நடத்துவது எவ்வளவு கடினமான காரியும் என்று.

ஆகவே மக்கள் தொலைக்காட்சியின் பணிகளை தமிழாய்ந்த தமிழர்களும்,வெளிநாடு வாழ் தமிழர்களும்,தமிழ் ஆர்வலர்களும் வாய் வழியாகவும்,இணையதள ஏடுகள் மற்றும் இணையதள குழுக்கள் மூலமாகவும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகிறென்.

இவண்
திசைகள் அ.வெற்றிவேல்


vetrivel@nsc-ksa.com

Series Navigation

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்