போர் நிறுத்தம்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

சந்துஸ்


எந்தக் கணத்திலும்
சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருக்கும்
துப்பாக்கி முனையின் விளிம்பில்
வந்தமரும் ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு
ஓயாத, இரக்கமற்ற போரை
நிறுத்தும் ஆற்றல் இருக்குது
என நினைப்பது
ஹவிசர்ஹ முற்றிப் போய் விட்டதன்
தேர்ந்த அறிகுறியாக
இருந்துவிட்டுப் போகட்டும்.

யார் கண்டது?

காற்றும் மீன்குஞ்சுகளும்
சிறுகுருவிகளும் அணில்களும்
இந்த வண்ணத்துப்பூச்சியும்
இருந்த உலகில் இருந்து
பிரித்தெடுத்து வந்து
இருமுனைகளிலும்
போரிடவிடப்பட்டிருக்கும்
பிள்ளளைகளைத் தேடிவந்த
ஓரு வண்ணத்துப்பூச்சியாக
அது இருக்கலாமல்லவா?

மற்றது,

செட்டைகளை அடித்துத் துள்ளும் அதன் உடல்
கடைசியாகப் பிரியும் போது
துடித்து நின்ற இமைகளை,

புதர் மறைவினில் அவசரமாய்
சின்னக்காதலி – காதலனின்
காற்சட்டை விலக்கி
இளமம் பார்த்த படபடப்பை,

விளையாடும்போது
கை பிழைபாட்டுக் குற்றத்தில்
செத்துப் போன
இன்னுமொரு பூச்சியின்
சிறகுகளை,

உறவுகளுடன் வாழும் கணங்களுக்குமுன்
எந்த நிர்ப்பந்தமும் தூசு
எனும் நினைப்பை,

இவற்றில் ஏதாவது ஒன்றை,
அல்லது வேறோன்றை,
நினைவு படுத்தாதா என்ன?

பால்ய வயது நினைவுகளின் நீட்சிக்கு
மலைகளைப் புரட்டி விடும் சக்தி இருப்பது
அவை சிறுகுருவிகளினதும்
வண்ணத்துப் புச்சிகளினதும்
சிறகுகளால் செய்யப்படுலதனாலா?

எந்தப் பிள்ளைக்கு வண்ணத்துப் பூச்சிகளின் உலகம்?
எந்தப் பிள்ளைக்கு வெடிகுண்டுகளின் உலகம்?
என்ற தீர்மானம்
போரை நடத்தும் தளபதிகளின் கைகளில்

போரின் தளபதிகளின்
பிள்ளளைகள் எங்கே
என்ற கேள்வியை
வண்ணத்துப் பூச்சிகள் தூண்டாது
என்பதற்கு
என்ன உத்தரவாதம்?

போர் எப்ப தொடங்கும் என்பதற்கும்
எப்ப நிற்கும் என்பதற்கும்

எந்த நிச்சயமும் இல்லை.

அது போலத்தான்
இதுவும்.

சந்துஸ்
Santhushkumar@aol.com

நன்றி: உயிர்நிழல்

Series Navigation

சந்துஸ்

சந்துஸ்