பொம்மைஜின்களின் ரகசியம்

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நீர் நிறைந்த குளத்திற்கு
இன்று பறவைகள் வரவில்லை
மனசில் புரண்டலைந்து
தீமிதித்துக் கிடக்கும் கண்கள்
ஊருக்குள் புகுந்த காட்டானைப் பெருவெள்ளம்
மரங்களைப் பிடுங்கிச் சென்று
மரணத்தின் கூக்குரலில் நடும்
வாசலோரம் வந்து நிற்கும்
நூறுவருச நீளமுள்ள கவிதையை
கடித்து துப்பப் பார்க்க
நாக்கும் உதடுகளும் கதறி
மரித்துப் போன மய்யித்தின் காதில்
ரகசியம் பேசும் ஜின்னென
2)
பொம்மைகளின் விளையாட்டில்
படைக்கப்பட்ட உலகம்
உனக்கு வசப்படாதது
பார்ப்போருக்கும் கேட்போருக்கும்
பொம்மைகளின் பேச்சு பிடிபடுவதாக இல்லை.
இடியோசை கேட்டும்
மின்னல்களைப் பார்த்தும்
பொம்மைகள் பயப்படவில்லை
பொம்மைகள் பொம்மைகளாய் இருந்தவரை.
ஏற்கெனவே அறிமுகமான
பொம்மை ஜின்களின் தலையில்
கொம்புகளும் இருந்தன.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்