பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

கே. செல்வப்பெருமாள்


உலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே ‘சுமங்கலி’. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமணம் ஆனவர்களை சுமங்கலி என்று அழைக்கிறோம். ஆனால், தற்போது உலகமயச் சூழலில், இவ்வார்த்தை சுரண்டலோடு இணைத்துக் கொண்டுள்ளது. சுமங்கலி என்று சொன்னால் அது பெண்ணியச் சுரண்டலின் உச்சகட்டம் என்று அர்த்தப்படுகிறது.

சுமங்கலி திட்டம் என்றால் என்ன?

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளில் பணியாற்றுவதற்கு ‘சுமங்கலி திட்டம்’ என்ற பெயரில் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவ பெண்களை மூன்று வருட காண்ட்டிராக்ட் அடிப்படையில் வேலைக்கு அமர்த்துகின்றனர்। மூன்று வருடம் முடிந்தவுடன் அவர்களுக்கு சம்பளமாக ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படுகிறது. இந்த மூன்று வருடமும் அவர்கள் அப்ரண்டீ° என்ற நிலையிலேயே வைக்கப்படுவர். மூன்று வருடம் கடந்த பின்பு அவர்கள் நிரந்தரமாக்கப்படுவதில்லை. அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்டுவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகையைக் கொண்டு அவர்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் திட்டத்தின் உள்ளடக்கம்.

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் திட்டம், இளம் பெண்களை மிகக் கடுமையாக சுரண்டும் முதலாளித்துவ கொடுமையின் உச்சகட்டமாகவே இருக்கிறது।

இத்திட்டத்தில் நாகை, இராமநாதபுரம், தேனி போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து, வறுமை வாட்டும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து, பெரும்பாலும் தலித் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது। அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி இத்திட்டத்தில் சேர்க்கின்றனர். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஆட்களைப் பிடிப்பதற்காக ஏஜண்டுகளை வைத்துள்ளது. ஒரு இளம் பெண்ணை வேலையில் சேர்த்து விட்டால் அவருக்கு ரூ. 500 கமிஷனாக வழங்கப்படுகிறது.

கிராமப்புற வேலையின்மையால், நிலமற்ற கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் கொத்துக் கொத்தாக பஞ்சை, பராரிகளைப் போர் ஊரை விட்டு வெளியேறி நகர்ப்புறம் நோக்கி தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தஞ்சமடைந்து வருகின்றனர்। பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களை நோக்கியும் செல்கின்றனர். பல கிராமங்கள் மக்களின்றி வெறிச்சோடி போயுள்ளது.

குடும்பத்தின் வறுமை காரமணாக பள்ளிக் கல்வியைக் கூட முடிப்பதில்லை। 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டு, குடும்ப பாரத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ளவேண்டிய சூழலில், சுமங்கலி திட்டம் என்ற சிலந்தி வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லாத சூழலே தமிழக கிராமப்புறங்களில் நிலவுகிறது.

வட்டமடிக்கும் வண்ணத்துப் பூச்சிபோல் தங்களின் இளம் பருவ வாழ்வின் எதிர்கால கனவுகளோடு, துள்ளி விளையாடும் இந்த இளம் மங்கைகளை திருமணம் என்ற ஆசை வார்த்தையாலும், குடும்ப வறுமை காரணமாக இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் வேலைக்கு சேரும் இப்பெண்களின் திருமண கனவுகள் பஞ்சோடு பஞ்சாவதைத்தான் இந்த மூன்றாண்டு காலத்தில் அவர்கள் எதிர் கொள்கின்றனர்।

வேலையில் சேரும் பெண்களுக்கு 8 மணி நேர வேலை என்பது வெறும் கனவு மட்டுமே। அவர்கள் 24 மணிநேரமும் வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். குறைந்தது 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் கூட தங்களது கடுமையான உழைப்பை செலுத்துகின்றனர். உழைத்து களைத்தவர்களுக்கு தங்குவதற்கும், உறங்குவதற்கும் கூட சரியான சுகாதாரமான இடமின்மை கொடுமையிலும் கொடுமையாக அமைகிறது. வெறும் 10 அடிக்கு 10 அடி என்ற அறைகளில் 8 முதல் 12 பேர் வரை அடைத்து வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையானதாகவோ, சத்தானதாகவோ இருப்பதில்லை. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையிலேயே இப்பெண்களின் வாழ்வு கரைகிறது. இது மட்டுமின்றி இப்பெண்கள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக வேண்டிய கொடுமையான நிலையும் நீடிக்கிறது.

இவ்வாறு வேலைக்கு சேரும் பெண்கள் முதல் மூன்று மாதத்தில் டிரெய்னிங் என்ற பெயரில் மிக கடுமையான வேலை வாங்கப்படுகின்றனர்। இக்காலத்தில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 34 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதில் ரூ. 20 அவர்களது தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு பிடித்துக கொள்ளப்படும். மேலும், இவர்கள் எந்த நேரத்திலும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே சூப்பர்வைசர்கள் எழுப்பி வேலைக்கு அழைத்தால் எந்தவிதமான மறுப்பும் இன்றி வேலையை கவனிக்க வேண்டும். இரவு நேரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற நெறிகூட கடைப்பிடிக்கப்படுவதில்லை.

இந்த மூன்று மாத காலத்திற்கு பின் அவர்கள் தேர்ந்த தொழிலாளியாகவே மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளிக்கு ஆண்டொன்றிக்கு ரூ. 2 மட்டும் அதிகமாக வழங்கப்படுகிறது. மொத்தத்தில் அவர்களது மாதச் சம்பளம் ரூ. 1200 லிருந்து 1500 தாண்டுவதில்லை. இவர்களுக்கு தொழிலாளி என்ற அந்த°தோ, தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகளோ கொடுப்பதில்லை. ஏன்? தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் கூட அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாது! அவர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லை. உலகமயத்தின் நவீன கொத்தடிமைகளாகவே இப்பெண்களின் வாழ்க்கை அடிமைத்தனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் நலத்துறை என அனைத்து அரசு இயந்திரங்களும் பஞ்சாலை தொழிலாளிகளின் இந்த கொடூரமான சுரண்டலுக்கு பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். மக்களை காக்க வேண்டிய அரசுகளே இளம் பெண்களின் வாழ்வை சூறையாடும் இந்த அசுரத்தனத்திற்கு எதிராக விரலைக்கூட அசைப்பதில்லை.
மேலும், மூன்று ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இன்றி வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அவர்கள் நிர்ணயித்த ரூ। 30,000 கொடுப்பார்கள். இடையில் விலகினாலோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தை காட்டி நிர்வாகம் விலக்கினாலோ அவர்களுக்கு இந்த தொகைகூட கிடைக்காது. பல்வேறு பஞ்சாலை நிர்வாகங்கள் மூன்று வருட காலம் முடிவதற்கு உள்ளாக ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அவர்களை வேலையில் இருந்து விரட்டி விடுவார்கள். இவ்வாறு வறுமையின் விதியால் வேலைக்கு வந்த பெண்களின் ஆரோக்கியமற்றதாகவும், பெண்களுக்கே உரிய பல்வேறு பலகீனத்திற்கு உள்ளாகி, கடும் நோய்கள் தாக்கும் அபாயத்திற்கே செல்கின்னர். சுமங்கலி திட்டம் என்ற பெயரில் திருமண கனவுகளோடு நுழைந்தவர்கள் திருமணத்திற்கு லாயக்கற்றவர்களாகவே அவர்களை திருப்பியனுப்புகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மட்டும் 35,000த்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வேலை செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது। இருப்பினும் இது ஒரு லட்சத்தை தாண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமங்கலி கனவுகளோடு இந்த சிலந்தி வலையில் சிக்கும் பல பெண்கள் இடையில் தப்பித்தால் போதும் என்று உயரமான மதில் சுவர்களை ஏறி குதித்து, அடி பட்டு, உதைப்பட்டு வரும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றுள்ளது.

இந்த இளம் பெண்கள் நிர்வாகத்தின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்துவதோடு, அவர்களை சந்திக்க வரும் பெற்றோர்களை கூட பல நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை। சிலர் மனுப் போட்டு விட்டு மூன்று நாள் காத்திருந்த பின்பே சந்திக்கின்றனர். தங்கள் மகளை ஆவலோடு காண வரும் பெற்றோர்கள் எலும்பும், லோலுமாக வெளிறிப்போன உருவங்களைக் கன்டு மனநோயாளிகாளகவே மாறுகின்றனர். குற்றம் செய்து விட்டு தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு கூட அளவான வேலையும், தரமான உணவும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்பட்டால் மருத்துவ வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கிறது சிறை நிர்வாகம். ஆனால், இங்கே மருத்துவ வசதி கூட பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. வறுமையின் சூழலில் சிக்கித் தவிக்கும் இம்மக்கள் இதன் கோரப்பிடியில் சிக்கி அவர்களின் வாழ்வையே அர்த்தமற்றதாக்குகின்றனர்.

மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிக்கப்படும் பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம் என்று ஐரோப்பிய நிறுவனங்கள் ஜம்பமாக அறிவித்திருந்தாலும், நடைமுறையில் இவை அமலாக்கப்படுவதில்லை। இத்தகைய இளம் பெண்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்து அரக்கர்களிடம் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை கூட சர்வதேச தொழிலாளர் சட்டங்களும், உள்நாட்டு சட்டங்களும் பெற்றுத் தருவதில்லை.

இத்தகைய அவலங்கள் குறித்து தொழிற்சங்க அமைப்புகளும், சமூக நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திய பின்னணியில் அனைத்து நிறுவனங்களிலும் இத்தொழிலாளர்களின் துன்பங்களை அறிந்துக் கொள்வதற்கு தபால் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று கூறியது। இதனை 99 சதவீதம் நிறுவனங்கள் இதுவரை அமலாக்கவில்லை. மாநில ஆட்சியாளர்களும் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. தற்போது இந்நிறுவனங்களில் நடைபெறும் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக என்ன நடைபெறுகிறது என்று கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றன. இத்தகைய கண்காணிப்பு குழுக்களுக்கு உண்மையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பல்வேறு சமூக நலப் பிரதிநிதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் இந்த சுமங்கலிச் சுரண்டலுக்கு முற்றிலுமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்। இதில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இளம் பெண்களை அப்ரன்டீ° என்ற பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டு இவர்கள் நடத்த வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாத நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்திட வேண்டும். இதனை நமது ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார்களா?

சுமங்கலி திட்டத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும பரவலாக விழிப்புணர்வும், கண்டன இயக்கங்களும் வலுவாக நடைபெற்றால் மட்டுமே ஆட்சியாளர்கள் அசைவார்கள்.

K. Selvaperumal

Series Navigation

கே. செல்வப்பெருமாள்

கே. செல்வப்பெருமாள்