புஷ்ஷின் ‘வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ‘

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

டெக்ஸன் ஆன்லைன் – டெக்ஸன்


‘வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ‘ என்று பட்டி தொட்டியெல்லாம் யாரும் போஸ்டர் ஒட்டவில்லையே தவிர, புஷ்ஷின் நூறாவது நாள் நிறைவு பற்றி எழுதாத பத்திரிகையோ, செய்தித்தாளோ இல்லையெனலாம். அமெரிக்காவில், ஜனாதிபதி பதவியேற்ற பின்பு நடைபெறும் ஒரு தவிர்க்கமுடியாத சடங்காக, இது ஆகிவிட்டது.

கிளிண்டனின் முதல் நூறு நாட்களோடு ஒப்பிடுகையில், இது வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை.

கிளிண்டனை அதற்குள் மறந்து விட்டவர்களுக்கு சுருக்கமாய்: பதவியேற்ற முதல் வாரத்தில், முடிவெட்ட நூறு டாலருக்கு மேல் செலவழித்ததில் தொடங்கி, ராணுவத்தில் Gays இன் நிலை குறித்து சட்டமியற்ற முயன்று மாட்டிக்கொண்டது, Healthcare சீர்திருத்தத்தில் கண்ட மாபெரும் தோல்வி, வின்சென்ட் பாஸ்டரின் சந்தேகத்துக்கிடமான தற்கொலை, சந்தி சிரிக்க வைத்த கென்னத் ஸ்டாரின் விசாரணைகள் என்று (White Water மற்றும் மோனிக்காவுடனான லீலைகள் பற்றியதான), கிளிண்டனின் ஆட்சியில் கிளுகிளுப்புகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், நமது சீதக்காதிக்குச் சவால் விடும் வகையில், பதவியிலிருந்து விலகுவதற்கு முந்தின இரவு, Justice Department ‘ற்குக் கூட அறிவிக்காமல், தனக்கு வேண்டிய, தன் கட்சிக்குப் பண உதவி செய்த, பல குற்றவாளிகளுக்கு, மன்னிப்பு அருளிச் சென்றார் கிளிண்டன். இவ்வாறு மன்னிப்பு வழங்கப் பெற்றவர்களில், பல மில்லியன் டாலர்கள் வரிப்பணம் தராமல் அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றி, நாட்டில் நுழைய முடியாமல், வெளி நாட்டில் வசித்து வந்த புண்ணியவானும் ஒருவர். எட்டு வருடங்கள் நிலவிய பிரகாசமான பொருளாதார நிலை காரணம், பெரும் பாலோர் இதையெல்லாம் அதிகம் கண்டு கொள்ளவில்லையென்பது வேறு விஷயம்.

புஷ்ஷுக்கு வருவோம். கிளிண்டன் பதவிக்கு வந்த போது, எவ்வளவுக்கெவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்தனவோ, அதற்கு நேர் எதிர் புஷ் பதவியேற்ற போது. இந்தத் தேர்தல் முடிந்தால் போதும் என்று அசந்திருந்த அமெரிக்கர்கள், புஷ்ஷிடம் நிறைய எதிர்பார்க்கவில்லை. இது புஷ்ஷுக்கு ஒரு விதத்தில் வசதியாய்ப் போயிற்று.

வாஷிங்டனில் விஷயம் தெரிந்தவர்கள் இப்போது பல முக்கிய வித்தியாசங்களைக் கவனிக்கிறார்கள். வெள்ளை மாளிகையிலிருந்து முன்பு மாதிரி செய்திகள் ( நல்லதோ, வம்போ) எளிதாய் வெளிவருவதில்லை. எல்லாக் கிசுகிசுக்களுக்கும் கசிவுகளுக்கும் தடை. ஜனாதிபதி பதவியை அவமானப்படுத்தக் கூடாது என்பதில் புஷ் வெகுகவனமாக இருக்கிறார். அடக்கம், எளிமை இவற்றுடன், ஒரு சோம்பேறியான நரியைப் போன்ற லாவகமும் பொருந்தியவர் என்று Newsweek இவரை வர்ணிக்கிறது.

விடிய விடியக் கண் விழித்து சின்னச்சின்ன வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு micromanage செய்வாராம் கிளிண்டன். தனது தளபதிகளிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, தினம் எட்டு மணி நேரம் நிம்மதியாய்த் தூங்குகிறார் புஷ் என்று கேள்வி.

இந்தத் தளபதிகளுள் உதவி ஜனாதிபதி Dick Cheney யும், Chief Strategist (சாணக்கியர் எனலாமா ?) Karl Rove ‘ம் முக்கியமானவர்கள். உண்மையில் ஜனாதிபதி Dick Cheney தான் என்று பரவலாகப் பேசப் பட்டது முதலில். இப்போது, இந்தக் கார்ல் ரோவின் ஆகிருதி அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள். வேகமாய் வளர்ந்து வரும் நட்சத்திரமாகக் கருதப் படுகிறார் இவர். தேர்தல் பிரச்சார சமயத்தில் தொடங்கி, புஷ்ஷின் இமேஜைக் காப்பாற்றுவது இவரது தலையாய பணி. புஷ்ஷின் தயவு வேண்டுபவர்கள் எவரும் இன்று இவரைச் சந்தித்தாக வேண்டும். (சற்று மோசமான உதாரணமென்றாலும், ஜெயலலிதாவிற்கு, சசிகலா மாதிரி ?)

சீனாவில் 24 அமெரிக்க அகதிகளுடன் ( ?) மாட்டிக் கொண்ட, வேவு பார்க்கும் விமானம் புஷ்ஷின் முதல் முக்கியப் பரீட்சை. இதில் புஷ் தேறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 63 சதவீதம் அமெரிக்கர்களின் அங்கீகாரம் இவருக்கு இப்போது இருக்கிறதாம். (மீதி 37 சதவீதத்தினர் ஆங்கில ஆசிரியர்கள் என்று கிண்டலடித்தார் யாரோ. புஷ்ஷின் தவறான ஆங்கில வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் பிரசித்தம். புஷ்ஷைக் கேலி செய்வதையே முழு நேரத் தொழிலாய்க் கொண்டு, பல இரவு நேர நகைச்சுவையாளர்கள் காலாட்சேபம் செய்து வருகிறார்கள்)

புஷ்ஷின் பிரம்மாண்டமான வருமான வரிக்குறைப்புத் திட்டம் (1.6 டிரில்லியன் வரி நிவாரணம்) முக்கியமாய்ப் பெரும்பணக்காரர்களுக்காகத்தான் என்றாலும், பொருளாதார மந்த நிலை காரணமாய், மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

ஆனால், சுற்றுப்புறச்சூழல் விஷயத்தில் புஷ் நிச்சயமாய்த் தேறவில்லையெனலாம். தினம் பெரிதாகி வரும் ஓஸோன் லேயரிலுள்ள ஓட்டையின் வளர்ச்சியைத் தடுக்க, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டுமென்று Kyoto வில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சமீபத்தில் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஒத்து வரரதென்று அலட்சியம் செய்து விட்டார் புஷ். இதே போல், குடி நீரில் ஆர்ஸனிக்கின் சதவீதத்தைக் குறைக்க வேண்டி கிளிண்டன் போட்ட சட்டத்தையும் ரத்து செய்து விட்டார். அடுத்தது, அலாஸ்காவில் இது நாள் வரை பாதுகாக்கப்பட்டு வந்த பகுதிகளிலெல்லாம் எண்ணெய் தோண்டுவது பற்றி யோசித்து வருகிறார். (தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு கோடிக்கணக்கில் செலவழித்த பெரும் நிறுவனங்களின் முதலாளிகளைத் திருப்திப் படுத்தியாக வேண்டிய கட்டாயம்!)

Series Navigation