புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

எச். பீர்முஹம்மது” நான் கலகமடையவில்லை
தேனீக்கள் பூக்களை உருவாக்குகின்றன
பனித்துளிகள் நட்சத்திரத்தை வரைகின்றன
நான் நிர்வாணமாக இருக்கிறேன்
அவன் சொன்னான் என் புகைப்படம் எவ்வளவு மோசம்
அவன் சொன்னான் அது எவ்வளவு அழகானது
நான் ஒரு சிவந்த மாமிசம்
சாவு மணி, சாவு மணி
சிலருக்காக நிகழ்கிறது”

– சில்வியா பிளாத்

காற்றின் அகோர கனத்தை கிழித்து கொண்டு வரும் விமானங்கள் தங்களுக்குள் இலக்கை நிர்ணயித்து கொண்டு வெடிகுண்டுகளை வீசுகின்றன. அதன் கோரத்தில் கரிந்து விழும் உயிர்கள் தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன. இதன் நீட்சியில் சாவு மணி, சாவு மணி சிலருக்காக நிகழ்கிறது என்ற சில்வியாவின் வரிகளை தான் இஸ்ரேலின் கொடூரத்தை பற்றி விளக்கும் போது நினைவுப்படுத்த வேண்டியதிருக்கிறது. பயங்கரவாதம் என்பதை பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பார் நோம் சாம்ஸ்கி. அதன் முடிவில் பெரும்பாலும் பலமானவர்களே வெல்கிறார்கள். வரலாற்றின் நெடிவில் நாம் இதையே காணமுடிகிறது. லௌகீக உலகம் காலம் முழுவதும் இரண்டு விஷயங்களை செய்து வந்திருக்கிறது. ஒன்று தன்னை பின்தொடர்பவற்றை அது ஆதரிக்கும். மற்றொன்று தன்னை எதிர்ப்பவற்றை அது தண்டிக்கும். வரலாறு முழுக்க தண்டனைகளின் உலகமாகவே இருக்கிறது. கிரேக்க இனக்குழு மோதல்களின் இருந்து தொடங்கி இன்றைய பாலஸ்தீன் வரை அதன் எச்சங்கள் நீள்கின்றன. இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லா போராளிகள் அல்லது பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. எவ்விதமான சிந்தனைகளுமற்று போர்தொடுக்கும் அதன் செயலானது மத்தியகிழக்கின் வெயிலை விட வெப்பமானது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இம்மாதிரியான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அரேபிய மண்டலம் என்றறியப்பட்ட தற்போதைய இஸ்ரேல் பல்வேறு இனக்குழுக்களின் வாழ்க்கை சூழலோடு தொடங்குகிறது. கி.மு 3500 ல் சுமேரிய இனக்குழுக்கள் இங்கு குடியேற்றத்தை தொடங்குகின்றன.ஆபிரஹாமின் வருகைக்கு பிறகு இந்த மக்களுக்கான ஓர் அடையாளம் உருவாக்கப்படுகிறது. மோசே(மூசா) அதற்கு செயல்வடிவம் கொடுத்தார். பரோயா (பிர்அவ்ன்) அரசனின் கொடுமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு செங்கடலை தாண்டி சென்றார். இதன் பிற்பாடு இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். பல்வேறு நாடுகளில் நிரந்தர குடியேற்றத்தை தொடங்கினார்கள். இதன் விளைவாக டயஸ்போரா நிலைக்கு தாங்கள் உட்படுத்தப்பட்டதை உணர்ந்தார்கள்.

1862 ஆம் ஆண்டு மோசஸ் ஹெர்ஸ் என்பவரால் ரோமும் ஜெருசேலமும் என்ற நூல் வெளியிடப்பட்டது.இதன் முதலே யூத தேசியம் குறித்த பார்வை வெளிப்பட்டது. புதிய இன அடையாளத்திற்கான ஒரு முன் வடிவும் இது சார்ந்து உருவானது. அதன் பின்னர் 1896 ஆம் ஆண்டு தியோடர் ஹெர்ஸ் என்பவர் யூதநாடு என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதன் பின்னர் யூத தேசியம் , தங்களுக்கான தேசிய இருப்பிடம் போன்ற கருத்துருவங்கள் இன்னும் வலுப்பெற்றன. 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட்27ம் தேதி தியோடர் ஒரு மாநாட்டை கூட்டினார். அதன் மூலம் சிதறிக்கிடந்த யூத அமைப்புகள் ஒன்று சேர்ந்தன. அதன் முடிவில் யூதவாதம்(zionism) கட்டமைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் மூலமாக பின்வரும் செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
1.யூத விவசாயிகளும், தொழிலாளிகளும் பாலஸ்தீனில் குடியேறுவதை தக்க வழிகளில் மேம்படுத்த வேண்டும்.

2.ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கும் ஏற்றாற்போல் ஸ்தல மற்றும் சர்வதேச அளவில் தகுந்த அமைப்புகளை உருவாக்கி இந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்துவது, அனைத்து யூதர்களையும் ஒன்றிணைப்பது

3. யூத தேசிய மன உணர்வை பலப்படுத்துதல்

4.யூத வாதத்தின் நோக்கங்களை அடையும் பொருட்டு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பது.

இதன் பிறகு பாலஸ்தீன் ஆக்கிரமிப்புக்கான வியூகம் வகுக்கப்பட்டது. ஹெகனா, இவான் சுவிங், ஸ்டெர்ன் ஹங் ஆகியோர் தலைமையில் இஸ்ரேல் மீட்பு படை உருவாக்கப்பட்டது.பாலஸ்தீனுக்கு எதிரான பல்வேறுபட்ட தாக்குதல்கள் தொடர்ந்தன. சுமார் எட்டு இலட்சம் மக்கள்அகதிகளாகி பல்வேறு நாடுகளில் குடியேறினர். 80% பாலஸ்தீனிய பகுதிகள் இஸ்ரேல் வசமாயின. ஐ.நா சபையால் உருவாக்கப்பட்ட அதன் எல்லைக்கோட்டிற்கான தனி வரைபடத்தை சியோனிச தலைவர்கள் ஏற்க மறுத்தனர். சியோனிச தலைவரான மோசே ஷாரத்தின் டைரிக்குறிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது.

1. போரின் மூலம் புதிய நிலப்பரப்பை பெறுவது.

2. 1949-1950 பாலஸ்தீன் -இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்த உடன்படிக்கையின் படி பெறப்பட்ட நிலப்பரப்பில் இஸ்ரேலிய தலைவர்கள் திருப்தி அடையவில்லை. இருந்த போதிலும் சர்வதேச
நாடுகளை மதித்தே தற்காலமாக நாம் ஏற்றுக்கொண்டோம். குறைந்தப்பட்சம் நாம் பாலஸ்தீனின் எல்லைக்கோட்டையாவது தாண்ட வேண்டும். நிலப்பரப்பின் விரிவாக்கம் என்பது பிராந்தியத்தில் அதிகார
உறுதிப்பாட்டுக்கான வழியாகும்.

3. அரசியல் மற்றும் ராணுவ செயல்பாடுகள் மூலம் பாலஸ்தீனியரை அரபு மற்றும் அரபுலகத்திற்கு அகதிகளாக அனுப்ப செய்வது மற்றும் அதன் உரிமைகளை பறிப்பது.

4. தீவிர போர்நடவடிக்கைகள் வழியாக அரபுலகத்தையும், அரபு தேசிய இயக்கத்தையும் நிலைகுலைய செய்வது. இதன் மூலம் பிராந்திய இஸ்ரேல் அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.

5.மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு ராணுவ படையை அமைக்க வேண்டும்.

அதன் பிறகு இஸ்ரேலின் கொடூரங்கள் தொடர்ந்தன.1949 ல் இஸ்ரேலிய படையானது பாலஸ்தீனின் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலின் கொடூரங்களுக்கு பல உயிர்கள் இரையாயின.
வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதன் இரத்த சுவாசிப்பாக மாறியது. இஸ்ரேல் தன்னுடைய வரைபடத்தை இன்னும் ஸ¤மிங் செய்ய விரும்பியது. தெற்கு லெபனான், ஜோர்டானின் வடபகுதி,சிரியா போன்றவற்றையும் உள்ளடக்க விரும்பியது.அதன் விளைவே இன்று வரை அந்நாடுகளில் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. சியோனிச தலைவர்களின் நூல்கள் மற்றும் டைரிக்குறிப்புகளை நாம் படிக்கும் போது இது வெளிப்படுகிறது.
1922 ல் ஒருங்கிணைந்த பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 83000. அதன் பிறகு இவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமானது.ஜெர்மனியில் ஹிட்லரின் யூத படுகொலையை அடுத்து பெரும்பாலான யூதர்கள் இங்கு குடியேறினர். அதன் பிறகே இவர்களின் பேராண்மை திட்டம் உயிர்பெற தொடங்கியது. சியோனிச தலைவர்கள் உலகெங்கும் உள்ள யூதர்களுக்கு அழைப்பு விடுத்தனர். தியோடர் ஹெர்ஸ் மற்ற நாடுகளில் குடியிருக்கும் யூதர்களை உடனடியாக பாலஸ்தீன் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விளாடிமிர் ஜபோன்ஸ்கி என்ற திருத்தல்வாத சியோனிச தலைவர் தன்னுடைய ‘இரும்பு சுவர்’ (iron wall) என்ற நூலில் “அரபுகளிடம் யூதர்கள் உடன்படிக்கை செய்வது கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களுக்கு புதிய அரசு அவசியம். எனவே அதற்காக ராணுவபடையை உருவாக்க வேண்டும் என்றார். இதிலிருந்து மாறுபட்டதாக தொழிலாள சியோனிசம் இருந்தது. இதன் தலைவர்கள் யூதர்களை மற்ற பாலஸ்தீன் மக்களுடன் இணைந்து சுரண்டலுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு குறைவான கூட்டமே இருந்தது. பெருங்கூட்டம் தனி இஸ்ரேல் ஏற்படுத்துவதில் குறியாக இருந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உதவியுடன் சியோனிச தலைவர்கள் அமைத்த படையானது பாலஸ்தீன அரபுகள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை இடம்பெயர செய்தது. இதற்கு எதிராக பாலஸ்தீனில் முப்பதுகளில் பெரும் கலகம் உண்டானது. யூதர்களில் சிலர் கொல்லப்பட்டனர்.இப்படியான கலகம் – மறுகலகம் என்ற சூழலில் ஐக்கிய நாட்டு சபை முன்னிலையில் 1948 ல் பாலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டு மேற்கு கரை, காசா பகுதிகள், சிரியாவின் தெற்கு பகுதி ஆகியவை அரபு பகுதிகள் எனவும் மற்றவை இஸ்ரேல் எனவும் அறிவிக்கப்பட்டன.

லெபனான் மீதான இஸ்ரேலின் இன்றுவரையிலான தொடர் தாக்குதலானது பல வரலாற்று நிகழ்வுகளின் எச்சமாகும். லெபனான் அது பிரான்சிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதலே (இது மத்திய கிழக்கின் பிரான்சு என்றழைக்கப்படுகிறது.) இது மாதிரியான சவால்களை சந்தித்து வருகிறது.பொனீஸியர்களின் நாடாக இருந்த லெபனான் பின்னர் ரோம, சிரியா, பைஸாண்டிய, உதுமானிய பேரரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தது. முதல் உலகப்போருக்கு பின்னர் அது பிரான்சின் கட்டுப்பாட்டில் வந்தது. இன்றும் லெபனானியர்களில் பலரின் முகச்சாயல்கள் ஐரோப்பியர்களை ஒத்து இருக்கின்றன. 1943 ல் அதன் சுதந்திரத்திற்கு பிறகு லெபனான் தனக்கான சொந்த ராணுவப்படையை உருவாக்கிக் கொண்டது. 1948 ல் லெபானான் பிரதமர் ரயீத் சோல் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை தடுக்கும் படி அரபு லீக்கை கேட்டு கொண்டார்.அதன் தொடர்ச்சியாக அரபு விடுதலைப்படை உருவாக்கப்பட்டது. இந்த படையானது 1948 மேய்15 ல் இஸ்ரேலின் ரோஸ் கனிகா என்ற இடத்தில் வைத்து இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஆனால் அமெரிக்கா துணையுடனான இஸ்ரேலின் மறு தாக்குதல் அரபு விடுதலைப் படையை பின்வாங்க செய்தது. ரயீத் சோல் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் சூழல் உருவானது. இதே ஆண்டில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அகதிகளாக லெபனானில் குடியேறினர். எழுபதுகளில் சிரியா மற்றும் லெபனான் இடையே ஏற்பட்ட உராய்வானது பாலஸ்தீன மக்களை மேலும் எரியூட்டச் செய்தது. 1976 ல் சிரியா தன்னுடைய 40000 தரைப்படையை பெய்ரூட்டிற்கு அனுப்பி லெபனானுக்கு எதிராக அங்குள்ள பாலஸ்தீன அகதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக அங்குள்ள பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானுக்குள் குடிபுகுந்தனர். அவர்களில் கொஞ்சம் பேர் தெற்கு லெபனானுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் சிரியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது சிரியாவை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு கூட்டு சேர வைத்தது. இருந்த போதிலும் லெபனானின் ஒருபகுதி இன்றும் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஈரான் முதல் மொராக்கோ வரையிலான மத்திய கிழக்கை பொறுத்தவரை குவைத், சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு குடியரசு, ஓமன், கத்தர் ஆகிய பாரசீக வளைகுடா பகுதிகள் வளைகுடா (gulf) நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் 1982 ல் தங்களுக்குள் வர்த்தக உடன்படிக்கையை உருவாக்கி கொண்டு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை ஏற்படுத்தின.(GCC). இவை அல்லாத மற்ற நாடுகள் பிற மத்திய நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.வளைகுடா நாடுகளை பொறுத்தவரை பெட்ரோலியமே அதன் உயிர்நாடி. மண் அது சார்ந்தே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோலும், உணவு உற்பத்தி பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் பூனை சிங்கத்தை விட வீரமானது என்று நினைப்பதை எலிகள் ஒரு போதும் நிறுத்தாது என்பது மாதிரி பெட்ரோல் தாங்கள் உலகின் நிர்ணய சக்தி என்றுகருதுகிறது.பெட்ரோல்- பெட்ரோல் அல்லாத பொருள் என்ற பிரிவினையானது வளைகுடா நாடுகளுக்கும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குமான உராய்வின் வாசிலினாக இருக்கிறது. வரலாற்று அணிசேரல்களை நாம் கூர்ந்து கவனிக்கும் போது இதை உணர முடியும்.

நூறாண்டு கால உலக வரலாற்றை நாம் நோக்கும் போது அது முழுவதுமே மனிதர்களின் இடம்பெயர்தலும், தப்பி அலைதலுமாக இருக்கிறது. ஹிட்லரின் கொடூரங்களுக்கு எதிரான யூதர்களின் இடப்பெயர்வு, யூதர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு, வேறுபட்ட போர்களின் விளைவான ஆப்கானியர்களின் இடப்பெயர்வு எல்லாமே ஒன்றை ஒன்று முந்தி கொள்கின்றன.இஸ்ரேல் குண்டுகளின் எதிரொலியாக லெபனான் குழந்தைகளின் முகங்கள் சோமாலியாவிற்கு அழைத்து செல்கின்றன. பாலைவனங்கள் மற்றொருபாலைவனத்தை முந்தி செல்கின்றன. கோடையில் பழுத்து உதிரும் பேரீத்தப்பழங்களை இஸ்ரேல் விரைவாக உதிர வைக்கிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதம் உலக ஊடகங்களுக்கு முன்பு இனவாதத்தை அர்த்தமிழக்க செய்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பது வருடங்களில் விடுதலை
போராட்ட படை அமைத்து அரபுகள் மீது தாக்குதல் தொடுத்த சியோனிசம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து இஸ்ரேலிய அரசு- இராணுவம் என்பதாக மாற்றிக் கொண்டது. நாங்கள் அரபு பயங்கரவாத இயக்கங்களை மட்டுமே எதிர்க்கிறோம் என்கிறது இஸ்ரேல். நியூரம்பர்க் விசாரணையின் போது ஹிட்லரின் ராணுவ அதிகாரி “நாங்கள் எல்லா யூதர்களையும் வெறுக்கவில்லை” என்றார். தேசிய இன அடையாள மோதல் தன்னை சிலசமயங்களில் செயலழிப்பு செய்து கொள்ளும்.அந்நேரத்தில் எதிரி யார் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் வரும். ஹிட்லருக்கு எதிராக ஸ்டாலின் அமெரிக்காவுடன் இணைந்ததும், யூதர்களுக்கு எதிரான ஆரம்ப பாலஸ்தீன கலகத்திற்கு நாஜி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வானொலி மூலம் உரையாடல் நடத்தியதும் இதற்கான உதாரணங்கள். எண்பதுகளுக்கு பிறகு வளைகுடா நாடுகளில் யூத ஆக்கிரமிப்புக்கான எதிர்வினை குறைந்திருக்கிறது. சார்பு நிலை பொருளாதார தளத்திற்குள் இயங்கும் இவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குவியமாக இருக்கின்றது. தங்கள் பெட்ரோ- டாலருக்கான பாதுகாப்பில் அவை எவ்விதமான எதிர்ப்பு கோட்பாட்டையும் வைத்திருப்பதில்லை. ஆகவே தான் அமெரிக்க இந்நாடுகளில் ஜனநாயகம் உருவாகாமல் பார்த்து கொள்கிறது. மன்னராட்சியே அதற்கு பாதுகாப்பான விஷயம். டென்மார்க் பிரச்சினையில் மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த எதிர்வினைகள் வளைகுடாவில் இல்லை. டென்மார்க்கிலிருந்து அதிக அளவில் உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் இவைகள் அதனிலிருந்து விலக முடியாது. இதன் நிலைபாடு இஸ்ரேலிய எதிர்ப்பு, டென்மார்க் எதிர்ப்பு என்ற ஒருபக்கத்தில் ஐரோப்பியர்களுக்கு இங்கு விசா இல்லாத தாராள பயணம், தங்கள் நாட்டினரை விட அதிக சம்பளம் என்ற மறுபக்கமாக இருக்கிறது. மேலும் அவர்களுக்கு இங்கு தனிவரவேற்பும், மரியாதையும் இருக்கிறது. சமீபத்தில் வளைகுடா
ஒத்துழைப்பு கவுன்சிலானது லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தங்களுக்கு அறியாமல் தங்கள் தோப்கள்(தலைவட்டுகள்) தலையிலிருந்து உருவப்படுவதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. பின்நவீனத்துவம் இவ்வுலகை Schizophrenia உலகம் என்கிறது. வளைகுடாக்களின் நிலைபாடு இதை பிரதிபலிப்பதாக உள்ளது. பேரீத்தமர குறியீடு கொண்ட டி.வியின் அலைக்கற்றைகள் வழியாக இஸ்ரேலை காண்பது ஆகாய வெளியில் , விமானங்களின் நெருக்கடியில் அதன் மேல் கோடு கிழிக்கவே உதவும்.

1. Livia Rokach, Israel’s Sacred Terrorism (Belmont, Mass: Association of Arab American University Graduates Press, 1986)

2.Matti Shavitt, On the Wings of Eagles: The Story of Arik Sharon (Tel Aviv: Olive Books, 1972)

3.. Gunther Rothenberg, The Anatomy of the Israeli Army (London: B.T. Batsford, Ltd., 1979)

4.. Ashley Brown, editor, Strike From the Sky: Israeli Airborne Troops (New York: Villard Books, 1986)

5. Ihab Hassn in “Khaleej Times ” (july 15 2006)

6. Mansoor hekmat “islamic terrorism” International news paper (worker-communist party of iran 2004)

peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது