புரிந்து கொள்..

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

தேன்சிட்டு


அன்பே,என் சாம்பலை அள்ளி,
உன் தோட்டத்தில் உரமாக்கு.
இங்கே,தினமும் எனக்கு,
தீப் படுக்கைதான்.

என் கொலுசு ஒலிகளும்,
வளையல் சத்தமும் ஓய்ந்துவிட்டது,
ஆனால் உன் மனதின் ஓசைகள்
என் உயிரைக் கிழிக்கிறது.
என்ன செய்வேன் ?

அன்பே, என்னை உடனடியாக,
புதைத்துவிட ஒரு இடம் கொடு,
என் நெஞ்சிலே நிலநடுக்கம்,
கண்களிலே காட்டாற்று வெள்ளம்.

அன்பே,நீ ஒரு பாலைவனம்,
என் கண்களின் ஈரத்தை கடன்வாங்கி,
உன்னில் நிரப்பி விடு.

மலரொன்று,
உன் முகம் பார்த்து சிரிக்கையில்
அள்ளி அணைத்து நுகராமல்
கிள்ளி எறிவது ஏன் ?

ஆனாலும் அன்பே,
அலைபோல மீண்டும்,மீண்டும்
வருவேன், உன் பாதம் தொட
அன்றாவது புரிந்து கொள்,
என் அன்பான இதயத்தை…

Series Navigation