பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

செல்வன்


காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.(1)
காதல் என்ற ஒருவார்த்தை அடக்குமுறைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் எத்தனை கசக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். இவர்களின் அடிப்படைவாதத்தை தகர்த்தெறியும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் காதல் என்பதே அதை இவர்கள் முழுமூச்சில் எதிர்க்க காரணம்.

காதல் என்பது மானுட விடுதலைக்கான ஒரு ஆயுதம் என்பதை மானுட விடுதலைக்கு போராடும் பலரும் உணர்ந்தே வந்துள்ளனர். அடிப்படைவாத சமூகங்களில் மறுக்கப்படும் முதல் உரிமையே காதல் தான். காதலை இச்சமூகங்கள் எதிர்க்க காரணம் பெண்விடுதலையை வலியுறுத்தும் தன்மையை காதல் கொண்டிருத்தலே ஆகும்.

பெண் விடுதலையை மானிட விடுதலை எனும் கோட்பாட்டிலிருந்து பிரித்து பார்த்தல் இயலாத காரியம். பெண் விடுதலையை ஆண்-பெண் சமத்துவம் எனும் ஒற்றை பரிணாமத்தில் அடக்குதல் முறையான செயலன்று. சான்றாக தலித்பெண் ஒருவருக்கு தலித் ஆணுக்கு சமமான உரிமை தந்தால் போதுமா? இங்கே ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை எனும்போது அவனது உரிமைக்கு சமமான உரிமையை பெண்களும் அடைதல் என்பது தவறான ஒருகுறிக்கோளாகும்.

பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

பாலியல் சுதந்திரம் என்பது ஏதோ கிளப்புகளுக்கும், டிஸ்கோக்களுக்கும் போகும் பெண்களின் பிரச்சனை என்றும் கிராமப்புற பெண்களின் பிரச்சனைகள் வேறானவை என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. கிராமப்புற (நகர்ப்புற) பெண்கள் சந்திக்கும் கல்வி அறிவின்மை, ஜாதி கட்டுப்பாடுகள், சிசுக்கொலை,வரதட்சணை, குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு பாலியல் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்கப்படுகிறது.

கூர்ந்து பார்த்தால் இதுபோன்ற சமூக கட்டமைப்புகள் நிலவ அடிப்படையே பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுவதுதான் என்பது புரியும். காதல் எனும் ஒற்றை வார்த்தையை போல் வரதட்சணையை அழிக்க கூடிய ஆயுதம் வேறேதுமில்லை. ஜாதி, மதம் எனும் சமூக இழிவுகளையும் அழிக்கும் சக்தி காதலுக்கு உண்டு. காதல் திருமணங்கள் நடந்து வரதட்சணை ஒழிந்தால் பெண் சிசுக்கொலை, குடும்ப வன்முறை ஆகியவை அடியோடு அழிந்து ஒழிந்துவிடும். ஜாதியாலும், மதத்தாலும் கட்டப்பட்டு சீரழியும் சமூகங்களுக்கு விடுதலை அளிக்க அந்த சமூக கட்டமைப்புகளையே அழித்து ஒழிக்க சக்தி படைத்த காதல்மணங்களாலும், பாலியல் சுதந்திரத்தாலும் தான் சாத்தியம். இது போன்ற அடிப்படைவாத சமூகங்கள் நிலவ காரணமே இவற்றில் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுவது தான்.

ஆக பெண் விடுதலை துவங்குவதே பாலியல் சுதந்திரம் எனும் புள்ளியில்தான். இதை மறுத்து வேறு கோணத்தில் பெண் விடுதலையை அணுகும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடியும். காமம், காதல், குடும்பம்,ஜாதி, மதம் எனும் அனைத்து புனிதங்களையும் அறுத்து போஸ்ட்மார்ட்டம் செய்தால் அவற்றின் அடிநாதமாக விளங்கும் ஒற்றை கோட்பாடு பெண்களுக்கு பாலியல் சுதந்திர மறுப்பு என்பதாகவே இருக்கும்.இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தால் மேலே சொன்ன கோட்பாடுகள் பலவும் புரட்டி போடப்பட்டும், ஜாதி, மதம் போன்ற கோட்பாடுகள் ஒட்டுமொத்தமாக துடைத்தும் எறியப்படும்.

இந்துத்வா இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், ஜாதிகட்சிகள் ஆகிய கொள்கை முரண்பட்ட கும்பல்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து முழுமூச்சாக காதலர் தினத்தை எதிர்ப்பது ஏன் என்று சிந்தித்து பார்த்தால் எளிதில் விளங்கும். இவற்றின் இருப்புக்கு வேட்டு வைக்கும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் காதல் தான் என்பது.

மதம் ஒழிந்தால் அதன்பின் மதவாத இயக்கங்களுக்கு வாழ்வேது? ஜாதி அழிந்தால் ஜாதிக்கட்சிகளுக்கு எதிர்காலமேது? இதை எல்லாம் செய்யும் வலிமை வாய்ந்த காதலையும், அதன் அடிப்படையான பாலியல் சுதந்திரத்தையும் இந்த இயக்கங்கள் எப்படி ஆதரிக்க இயலும்?

மானிட விடுதலையையும், பெண்விடுதலையையும் வலியுறுத்த வந்த காதலர் தினத்தை வாழ்த்தி வரவேற்கிறேன்.

References:

1. http://www.dinamalar.com/2007feb15/specialnews1.asp?newsid=6


செல்வன்

http://www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz

Series Navigation