பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்

This entry is part 8 of 49 in the series 19991203_Issue

கோ ராஜாராம்


தமிழ்ப் படம் என் கிற வினோத ஜந்துவுடன் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு. சினிமா என் கிற கலையைப் பற்றியோ , தொழில் நுட்பம் பற்றியோ கவலைப் படாமல் விசித்திர நிழலாட்டத்தில் மனதைப் பறி கொடுக்க ஒப்புக் கொண்டால் தமிழ் சினிமாவை ரசிக்கவும் செய்யலாம் என்று நினக்கிறேன். அவநம்பிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு, யதார்த்தத்தை எதிர் பார்க்கும் மனத்தைச் சற்றே அடக்கி வைத்து விட்டு ,கண்டதும் காதல் என்பதில் நம்பிக்கையுடன், ஹீரோவைத்தொழுகிற மனப்பான்மையுடன் , மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடுவது தமிழ்ச் சினிமாப் பண்பாட்டின் முக்கிய அங்கம் என்ற நினைப்புடன், கற்பழிப்பு என்பது அன்றாடத் தமிழ் வாழ்வில் சர்வசாதாரணம் என்ற நினைப்புடன் சினிமாவை அணுக வேண்டும் என்பது முதல் நிபந்தனை. ஆனால் தமிழ் சினிமாவையும் கரையேற்றிவிடலாம் என்ற பகல் கனவுடன் செயல் பட்ட சிலரும் இருக்கிறார்கள்.

பராசக்தி: சிவாஜி கணேசனை அறிமுகப் படுத்தியது என்பதே ஒரு சகாப்தத்தின் முடிவு, இன்னொரு சகாப்தத்தின் ஆரம்பம் என்கிற குறியீடு. சினிமா ஆடல் பாடல் மீடியத்திலிருந்து பேச்சு மொழி மீடியமாய்ப் பரிணாம வளர்ச்சி பெற்றதைக் காணமுடிகிறது. ஆனால் இதன் வளர்ச்சியாக சினிமா ஒரு காட்சி மீடியம் என்பது வெளிப் பட்டிருக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் கலை வறுமையின் ஒரு அங்கமாக சினிமா வெறுமே காமிரா முன்னால் நின்று உரையாடும் நாடகத் தன்மையை நிரந்தரமாகச் சுவீகரித்துக் கொண்டது. இன்னமும் சினிமா இதிலிருந்து விடுபடவில்லை. பராசக்தியை முன் வைத்து திராவிட இயக்கம் தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்களிப்பை எடை போடலாம். பிராமண எதிர்ப்பை மேடை தோறும் முழங்கிய திராவிட இயக்கத்தினர் சினிமாவில் பிராமண எதிர்ப்பைப் புகுத்தவே இல்லை என்பது கவனத்திற் கொள்ளத் தக்கது. பராசக்தியில் குணசேகரன் பாத்திரம் ஏற்ற சிவாஜி கணேசனால் தாக்கப் படுவது பூசாரியே தவிர புரோகிதன் அல்ல. இவனுடைய கெட்ட செயல்கள் அடிப்படையில் ஒரு தனி மனிதனின் சறுக்கலே தவிர சமூகப் பரிமாணம் கொண்டதல்ல. திராவிட இயக்கத்தினரின் சினிமாவில் தான் பாலியல் குற்றங்கள் மிகுந்த லயிப்புடன் சித்தரிக்கப்பட்டன. கற்பழித்தவனை த் தேடிப்பிடித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்வது பெண்ணின் தலையாய கடமையாகச் சித்தரிக்கப் பட்டது. இல்லாவிடில் இருக்கவே இருக்கிறது தற்கொலை. இந்தப் பாணியைப் பிரபலப் படுத்திய குற்றம் திராவிட இயக்கத்தினரது தான். ஆனாலும் பராசக்தியில் யதார்த்ததின் கூர்முனை இருககவே செய்கிறது.

 

குணா: தமிழின் முதல்(கடைசியும் கூட) மனோதத்துவப் படம். பராசக்தி படத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய படம். பராசக்தியில் குணசேகரனாக வெளிப்பட்ட சிவாஜி கணேசனின் வாரிசாகவும் வளர்ச்சியாகவும் கமல் தன்னைஇனங்கண்டு கொண்ட படம். (இந்தப் படம் தமிழில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போய் விட்டது. ஆனால் தன்னை சிவாஜியின் வாரிசாக வேறு விதமாய் -தேவர் மகனாய்- வெளிப்படுத்திக் கொண்ட போது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.) ‘கோயில் ேகூடாது என்பதல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதே ‘ என்கிற அந்தக் குரல் 40 வருடங்களில் என்னவாகியிருக்கிறது என்பதன் ஆய்வாய் எழுகிறது. குணா பைத்தியமாகி விட்டான் கிட்டத்தட்ட. தூய்மையைத் தேடிவந்த அவன் எதிர் கொண்டதெல்லாம் அவலமும், அழுக்கும், அசிங்கமும் தான். இதிலிருந்து விடுபடுதல் பேரழகின் புனிதத்தில் உள்ள்து என்று எண்ணுகிறான். அந்தப் பேரழகைத் தரிசிக்கிற பாக்கியம் அவனுக்கு சாமியார் வேஷமிட்ட சமயம் கிட்டுவதும் அந்தப் பேரழகின் கிறக்கத்தில் அவன் புரிகிற குற்றங்களுமே கதை. மனவியல் பாதிப்புக்குட்பட்ட கமல் நடிப்பில் யதார்த்த வாதப் படமாய் ஒரு புறமும், இன்னொரு புறம் யதார்த்தத்திற்குத் தப்பிச் செல்வதற்காக சினிமா என்ற மாய அழகில் மனம் பறிகொடுத்து உளப் பிறழ்வு கொண்ட தமிழ் மக்களுக்குமே குறியீடாய் நிற்கிறான் குணா .

அன்னக்கிளி: இளையராஜா என் கிற இசைமேதையை இனங்காட்டிய படம். தமிழ் மொழியின் இசை சாத்தியக் கூறை முழுக்க வெளிப்படுத்திய படம். தமிழ்ப் படங்களின் ஃபார்முலாக்களில் தலையாயது மகாபாரதம்- பங்காளிச்சண்டையெனில் அதற்கு அடுத்தது கண்ணகி புராணம். இதன் ஃபார்முலா கொஞ்சம் ஒரு தலைக்காதல்-தியாகம் என்று போகிறது.

பதினாறு வயதினிலே: பாரதிராஜாவின் முதன்மையான படம். கிராமத்தின் வன்முறையும், தனிமையோ அந்தரங்கமோ இல்லாத ஒரு அலாதித் தன்மையும் அசலாக வெளிப் பட்ட படம். கமல் ஹாசன் , ரஜினி காந்த் , ஸ்ரீதேவி மூவருமே அருமையாக நடித்திருந்தனர். காந்திமதி ஏற்றிருந்த பாத்திரம் மிக உரக்கப் பேசுவதும் கூட தமிழ் கிராமியத் தன்மையுடன் இழைந்து போகக் கூடியது தான்.

வீடு: உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிடக் கூடிய ஒரே தமிழ்ப் படம் இது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் பிண்ணணியுடன் அழுத்தமாக வெளிப் படுத்தப்பட்டுள்ளது. ‘மெலோட்ராமா ‘ என்கிற அதிஉணர்ச்சித் தூண்டுதல்கள் இல்லாமலே கூட நெகிழ்ச்சியை உண்டு பண்ண முடியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு நல்ல உதாரணம். தமிழ் நாட்டின் மத்திய தர வர்க்கத்தின் ஒரு கனவு சொந்தவீடு. அந்தச் சொந்த வீடை அடைவதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை மிக அருமையான முறையில் காட்டுகிறது இந்தப் படம். அர்ச்சனாவின் நடிப்பிலும், காமிராவின் அசைவிலும் , கதையை நடத்திச் செல்லும் முறையிலும் ஒரு சிறந்த டைரக்டரின் முத்திரை பதித்த படம் இது.

தேவதாஸ்: வேதாந்தம் ராகவையாவின் இயக்கத்தில் நாகேஸ்வரராவின் நடிப்பில் வெளிவந்த சரத் சந்திரரின் அமர காவியம். வேதாந்தம் ராகைவையாவின் மிஸ்ஸியம்மாவும் இதனுடன் குறிப்பிட வேண்டிய படம். சோகத்திற்கு தேவதாஸ் என்றால் நகைச்சுவைக்கு மிஸ்ஸியம்மா.

 

உன்னைப் போல் ஒருவன்:ஜெயகாந்தனை சினிமாக் கலைஞனாக இனங் காட்டிய படம். தமிழ்ப் படம் கூட அதன் சாப விமோசனம் பெற்றுக் கரையேறிவிடக் கூடும் என்கிற நம்பிக்கையைத் தர வல்ல படம். ஆனால் சாப விமோசனம் அத்துணை எளிதல்ல. வியாபாரம் ஒன்றே குறியாகக் கிளர்ந்து எழுந்த சினிமாத் தொழில் மனசாட்சியற்றுப் போய் வெகு நாளாயிற்று.

மணிரத்னம் படம் ஒன்றும் இந்தப் பட்டியலில் இடம் பெறாதது தற்செயலானதல்ல. திறமையான போலித்தனமும், வெற்று ஆரவாரமும் தான் மணிரத்னத்தின் அடையாளங்கள். பம்பாயில் ஒரு சில காட்சிகளைத் தவிர மணிரத்னத்தின் படங்களில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

பத்துப் படங்களைப் பொறுக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் இந்தப் பட்டியலை ஆரம்பித்தேன். ஆனால் இந்தப் பட்டியலில் விரல் விட்டுக்கூட் எண்ண முடியாதபடி நல்ல தமிழ்ப் படங்கள் அருகிப்போயுள்ளன. ஜனநாயகத் தன்மை சுத்தமாக இல்லாமல், தேய்ந்து போன ரிகார்டு மாதிரி சுற்றிச் சுற்றி வருகிற செக்கு மாட்டுத் தனத்தை லஜ்ஜை கொஞ்சமும் இல்லாமல் மேற்கொண்டுவிட்ட இந்தக் கேடுகெட்ட சினிமாவின் ஒரே நல்ல விஷயம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குச் சோறு போடுகிற்து என்பது தான். ஆனால் இதையே காரணம் காட்டி சினிமாத் தொழிலைக் கெடுத்துவரும் பண முதலைகள்தான் இந்தத் திருட்டுத் தனம் மலிந்த தொழிலில் லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் திருட்டு விடியோவை எதிர்த்துக் கூச்சல் போடுவது நகைப்ப்பிற்கு இடமானது.

இது தவிர என் Guilty Pleasures என்று சொல்லத் தக்க படங்கள் உண்டு. பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா ‘ , ‘முந்தானை முடிச்சு ‘ கமலின் ‘பேசும் படம் ‘, ‘மைக்கேல் மதன காமராஜன் ‘ ‘மகாநதி ‘ ‘தேவர் மகன் ‘ , அடுத்த வீட்டுப் பெண் ‘,

‘சொல்லத்தான் நினைக்கிறேன் ‘ போன்றவை சிறந்த படங்கள் இல்லாவிட்டாலும் ர்சிக்கத் தக்க படங்கள். இந்தப் பட்டியலில் ‘மூன்றாம் பிறை ‘( அந்த டான்ஸ்!), ‘சதி லீலாவதி ‘ யையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை  >>

Scroll to Top