பருப்பு குழம்பு (சாம்பார்)

This entry is part [part not set] of 7 in the series 20000507_Issue

(இருவருக்கு தேவையான அளவு)


துவரம் பருப்பு – அரை ஆழாக்கு

மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

புளி – 2 கொட்டை பாக்கு அளவு

சாம்பார் பொடி – 1 ஸ்பூன்

வற்றல் மிளகாய் – அரை ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

உப்பு – 1 ஸ்பூன்

பெருங்காயம் – சிறு துண்டு

கொத்தமல்லி, கருவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் – வாசனைக்கு

பருப்பை (உருளியிலோ, குக்கரில் சாதம் வைக்கும் பாத்திரத்திற்கு மற்றொரு பாத்திரத்திலோ) ஒர் ஆழாக்கு ஜலத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு நன்றாக வேகவைத்துக் கொள்ளவேண்டும். இதற்குள் புளியை ஓர் ஆழாக்கு ஜலத்தில் ஊற வைத்துகொள்ளவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து புளியை கசக்கி பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாம்பார் பொடியை போட வேண்டும். வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் (நல்லெண்ணை அல்லது ரீபைண்டு ஆயில்) ஊற்றி அதில் கடுகு, இரண்டாகக் கிள்ளிய மிளகாய், வெந்தயம்,பெருங்காயம் இவற்றை போட்டு தாளித்து, புளித்தண்ணீரில் கொட்டி கொதிக்க விட வேண்டும். பருப்பு நன்றாக குழைய வெந்த பிறகு புளித் தண்ணீரை அதோடு சேர்த்து உப்பும் போட்டு பொடி வாசனை போக பத்து நிமிடங்கள்வரை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை வாசனைக்குச் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளிப் பழமும் சிறு துண்டுகளாக்கிப் போடலாம். நன்றாகக் கொதித்தவுடன் அரை கரண்டி நீரில் சிறிது அரிசி மாவைக் கரைத்து கொதிக்கும் குழம்போடு ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவைக்கவும். ஒரு பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளி குழம்பு கொதிக்கும்போது அதில் போட்டால் வாசனையாக இருக்கும்.

இரண்டாம் வகை (அரைத்துவிட்ட குழம்பு)

இதில் சாம்பார் பொடிக்குப் பதில், தனியா – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வற்றல் மிளகாய் -4 , வெந்தயம் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு இவற்றை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து அம்மியில் நன்றாக அரைத்து புளித்தண்ணீரில் சேர்க்க வேண்டும். மற்ற செய்முறைகள் மேற் சொன்னபடிதான். கடைசியில் கடுகு மட்டும் தாளித்துக் கொட்டவேண்டும். (குழம்புக்குச் சாமான்கள் அரைக்கும்போது 1 ஸ்பூன் தேங்காய்த் துருவலையும் வைத்து அரைத்து குழம்போடு சேர்த்தால் ருசியாக இருக்கும்.)

தான்கள் சேர்க்கும் முறை

வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றைப் புளித்தண்ணீரிலேயே போட்டுத் தனியாக கொதிக்க வைத்தால் வெந்துவிடும். மற்ற கடினமான கறிகாய்கள் அதாவது காரட், உருளை, சேப்பங்கிழங்கு போன்றவற்றைத் தனியாகத் தண்ணீரில் போட்டுச் சிறிது உப்பையும் சேர்த்து வேகவைத்து, நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்து குழம்போடு சேர்க்கலாம். (கறிகாய்களை வேகவைக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்க்கலாம்.)

வெங்காய சாம்பார்

தனியாக ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் போட்டு நன்கு சிவந்து வேகும்வரை வதக்கிப் பருப்புக் குழம்போடு சேர்க்கலாம்.

 

 

  Thinnai 2000 May 07

திண்ணை

Series Navigationசித்ராதேவி >>

(இருவருக்கு தேவையான அளவு)

(இருவருக்கு தேவையான அளவு)