படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

ஆதிபுரீஸ்வரன்நவீன கவிதைகளையோ, பின் நவீன கவிதைகளையோ, புதுக் கவிதைகளையோ, மரபுக் கவிதைகளையோ நான் வெறுத்ததில்லை. நல்ல படைப்புக்களாக இருப்பவை அனைத்தையும் உண்மை இரசிகனாக இரசித்திருக்கிறேன். அதே போல் எந்த விதமான எழுத்து வடிவத்தில் இருந்தாலும் நல்ல கதைகள், கட்டுரைகளை இரசித்திருக்கிறேன்.
ஆனால் சமீபமாக சாதாரண எழுத்து நடை நிறைய பேரால் விரும்பப்படுவதில்லையோ என்று தோன்றுகிறது.
ஒன்று, ஒரேடியாக, முற்றுப்புள்ளியே இல்லாத பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய வரிகளில், பெரீய்ய்ய்ய்ய்ய  பத்தியாக எழுதுவது; அதுவும் மிகவும் கடினமான சொற்களைக் கொண்டு எழுதுவது அல்லது ஒரேடியாக வட்டார சொற்களைக் கொண்டு எழுதுவது. இவை இரண்டிற்குத்தான் இப்போது அதிக  மவுசு இருப்பது போல் தோன்றுகிறது. இவைகளை தவறென சொல்லவில்லை. ஆனால் சாதாரண நடைகளை பெரும்பாலோர் விலக்கவே விரும்புகின்றனர் என்பது போல் ஒரு தோற்றம் புலப்படுகிறது.
சென்ற வாரம் ஒரு நண்பரை சந்திக்க வேண்டி வந்தது. அவரும் எழுத்தில் நாட்டம் கொண்டவர்தான்;படைப்பாளி தான்.  என்ன வருத்தம் என்றால் அவர் பேசுவதும் எழுத்தைப் போலவே இருந்ததுதான். முடிவேயில்லாத பெரீய்ய்ய்ய்ய வாக்கியங்களும், கடினமான சொற்களும் அவரது பேசும் முறையாக இருந்தது. மெய்யாக‌வே புரிந்துக் கொள்ள‌ மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து.
இப்போதெல்லாம் எளிமையாக பேசுவபரும், எழுதுபவரும் இல்லையோ எனும் ஒரு ஆதங்கம் எனக்குள்!
நாளடைவில் ஒரு கோப்பை தேநீர் வேண்டும் என்றால் கூட,
 
” நிறம் மாறிய அப்புவின் இயற்கை நிலை கெட்ட நிலையும், பழுப்பேறிய சாகச போர்வையுடன் கூடிய தன்மையும்,அக்கினி குழம்போ என மனமயங்கும் கொதிப்பேறிய புகையுடன், தாங்கியின் உட்புறத்தை தழுவி என் நாவை இழுத்தணைக்க தா”
 
என்று பேசப்பட்டால் வியப்பில்லை.அப்ப‌டி பேசி முடித்த‌வுட‌ன் அவ‌ருக்கு ஒரு கோப்பைக்கு இர‌ண்டு கோப்பையாக‌ தேநீர் தேவைப்ப‌ட்டாலும் ப‌ட‌லாம்.
அதே போல் வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு சொற்க‌ளை வைத்து எழுத‌ப்ப‌டுபவைகளில் அள‌விற்கு அதிக‌மாக‌ வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு  சொற்கள் இருக்கின்றன. அவ்வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு சொற்க‌ளுக்கு அந்நிய‌மான‌வ‌ர்க‌ளுக்கு அந்த‌ ப‌டைப்பை ப‌டித்து முடிக்கும் போது ல‌யிக்க‌ முடியாம‌ல் போய்விடுகிற‌து. அள‌விற்கு மிஞ்சிய அமுதங்கள் இவை!

குறிப்பிட்டு எந்த‌ வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு சொற்க‌ளையும் உதார‌ண‌மாக‌ சொல்லி, யாரும் புண்ப‌ட்டு விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ மெட்றாஸ் பாஷை aka சென்னை செந்த‌மிழில் ஒரு எடுத்துக்காட்டு:
” மாமே மெர்ஸ‌ல் ஆயிட்டானு, க‌ண்டுக்கினு திரும்ப‌ சொல்லோ, க‌ந்தா வ‌ன்டான்! அல்லு க‌ல‌ங்கிட்ச்சு! ‘கோரு! நா செய்லேடா’னு அட்ச்சி வுட்டா, க‌ந்தா சொல்றான்: “பாம்ப‌டிக்காதேனு”.  ‘கொலா ப‌ட‌க்கு டாமே’னு ஆயிட்ச்சு”

இதே ரீதியில் போனால் த‌மிழ் ப‌டைப்புக்க‌ளுக்கே த‌மிழில் மொழிப்பெய‌ர்ப்பு தேவைப்ப‌டும் நிலை ஏற்ப‌ட‌லாம்.
அடுத்து சாதார‌ண‌மாக‌ ஒருவ‌ரை த‌ப்பித்த‌வ‌றி கூட‌ பாராட்டி விட‌க்கூடாது என்னும் க‌லாசார‌ம். யாரையாவாது பாராட்டி எழுதுவ‌து உய‌ர்ந்த‌ எழுத்து வ‌கையாகாது என்ப‌து போல் ஒரு பொய்த்தோற்ற‌ம் க‌ச்சை க‌ட்டிக் கொண்டு உலா வ‌ருகிற‌து.
ஒருவ‌ரிட‌மோ, ஒருவ‌ர‌து ப‌டைப்பிலோ எத்த‌னை ந‌ல்ல‌து இருந்தாலும் அதை எல்லாம் விட்டு விட்டு இருக்கின்ற‌ ஒன்றிர‌ண்டு குறைக‌ளை பெரிதுப்ப‌டுத்து ஒரு சின்ன‌ தாக்கு ந‌ட‌த்துவ‌து மேம்ப‌ட்ட‌ எழுத்தாக‌ இருக்கிற‌து. விம‌ர்சிக்க‌ வேண்டிய‌வைக‌ளை விம‌ர்சிக்க‌லாம். த‌ப்பே இல்லை. ஆனால் க‌ஷ்ட‌ப்ப‌ட்டாவ‌து ஒருவ‌ரை க‌டுமையாக‌ விம‌ர்சிக்க‌ துடிப்ப‌து என்ன‌ வகை எழுத்து?

ஆக‌, புரியாத‌ க‌டின‌ சொற்ந‌டை, அள‌விற்கு மிஞ்சிய‌ வ‌ட்டார‌ சொற்க‌ள், பிற‌ரை போட்டு உருட்டி புர‌ட்டி எடுக்கும்  விம‌ர்ச‌ன‌ வேட்கை ஆகிய‌ மூன்றும்தான் இன்று ச‌க்கை போடு போட்டு கொண்டிருக்கின்ற‌ன‌.

எழுத எடுத்துக் கொள்ளும் கரு! பாலின‌ ஈர்ப்பை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு ஈர்க்கும் படைப்புகள், ம‌த‌வெறியோடு பாயும் ப‌டைப்புக‌ள், த‌னி ம‌னித‌ சீண்ட‌ல்க‌ள் என்ப‌வைக‌ளே காணுமிட‌மெங்கும்!
எளிமையான‌, தெள்ளிய‌ நீரோடை போன்ற‌ ப‌டைப்புக்க‌ளை ப‌டிக்க‌ விரும்பும் என்னை போன்றோருக்கு ரொம்ப‌வும் க‌ஷ்ட‌ம்!
இப்போதெல்லாம் யாராவ‌து புரியும்ப‌டி பேசிவிட்டால்,புரியும்ப‌டி பாடிவிட்டால், புரியும்ப‌டி எழுதிவிட்டால் என் பிற‌வி ப‌ய‌ன் கிடைத்துவிட்டாற் போல் ஆகி விடுகிற‌து.
 
க‌விஞர் அப்துல் இர‌குமான் ஆன‌ந்த‌ விக‌ட‌னுக்காக‌ பாடிய‌ க‌விதை நினைவிற்கு வருகிற‌து.
“சுண்ணாம்பையே வெண்ணையாக‌
எண்ணி விட்டோம்  இனி
வெண்ணை கிடைத்தாலும்
வெற்றிலையில் தான் த‌ட‌வுவோம்”


adipureeswaran@gmail.com

Series Navigation