பங்குக்கு மூன்று பழம்தரும் எழுத்து – சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

பி.கே. சிவகுமார்


புலவர்களின் திறனையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிற கதைப்பாடல்கள் நம்மிடையே உள்ளன. பட்டுப்பட்ட பலாமரம் தழைக்கப் பாடி ஒரு படி திணையைக் கொடையாகப் பெற்ற அவ்வையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே அவ்வை, நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழம்தர வேண்டுமென்று பனைமரம் துளிர்க்கப் பாடியப் பாடலும் தமிழில் உண்டு. தம் குலத்தின்மேல் நூலொன்றை ஒட்டக்கூத்தர் பாடவேண்டுமென்று தம் தலைகளைப் பரிசாகக் கொடுத்தோர் தலைகள் மீதமர்ந்து அவர்கள் உயிர்பெற ஒட்டக்கூத்தன் பாடிய பாடலும் உண்டு. இத்தகைய கதைகளையும் பாடல்களையும் கேட்கும்போது அவை அந்தந்த புலவர்களைப் போற்றுகிற மிகையுணர்ச்சி மிக்க கதைகளாகவே எனக்குத் தோன்றியிருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமோ, உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் நிலையிலிருந்த புலவர்களுக்கு, இன்னோர் உயிருக்குத் தம் கவியால் உயிர் தருகிற திறம் நிஜமாகவே இருந்திருக்குமோ என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனாலும், இக்கதைகள் எல்லாம் அடிப்படையில் ஓர் உண்மையைச் சுட்டுகின்றன. அது உயிர்களை உயிர்ப்பிக்கின்றனவோ இல்லையோ, மனம் என்கிற பிரபஞ்சத்தின் பல்வேறு ஆழ அகலங்களைத் தொட்டுத் துழாவி அதனுள் துயில் கொண்டிருக்கும் பல்வேறு உணர்வுகளையும் சஞ்சலங்களையும் கனவுகளையும் பலவீனங்களையும் நிராசைகளையும் வெறுமையையும் சந்தோஷத்தையும் துயரத்தையும் கண்டுணர்தலையும் இன்ன உணர்வென்று நமக்கே தெரியாத இன்னபிற உணர்வுகளையும் உயிர்ப்பிக்கிற – அடையாளம் கண்டுகொள்ள உதவுகிற – காரியத்தை ஒரு நல்ல எழுத்தால் செய்ய முடியும் என்பதைச் சொல்கிற உருவகங்களாக (metaphor) இக்கதைகள் அமைந்துள்ளன. இந்த உண்மையையே நம் இலக்கியத்திலும் வாழ்விலும் நிரம்பிக் கிடக்கும் இத்தகைய கதைகள் சொல்வதாக நான் எடுத்துக் கொள்கிறேன். சுகுமாரனின் திசைகளும் தடங்களும் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது அந்தத் தொகுப்பு என்னுள்ளே எழுப்பிய எண்ணங்களையும், சலனங்களையும் உணர்ந்தபோது இந்தக் கதைகள் என் நினைவுக்கு வந்தது தவிர்க்க இயலாதது.

சுகுமாரனை நான் திண்ணை.காம் மூலமாகவே கண்டு கொண்டேன். இப்படிதான், பல நேரங்களில் நம்மருகிலேயே இருக்கிற பல விஷயங்களைப் பற்றித் தாமதமாகவோ அதற்கான நேரம் வரும்போது மட்டுமே தெரிந்து கொள்கிறோம். அப்படித் தெரிந்து கொள்ளும்போது, ‘அடடா, இவ்வளவு காலம், இவரைப் பற்றி அல்லது இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே ‘ என்று உளமாற வருந்துகிறோம். வாழ்வின் நெருக்கடிகளில் இப்படி நம்மருகிலேயே இருக்கிற பல விஷயங்களைப் பற்றி அறியாமல் இருந்து விடுகிறோம். இண்டர்நெட் வந்த பிறகு எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொள்வது சுலபமாகி விட்டது. ஆனாலும், ‘இன்பார்மேஷன் ஓவர்லோட் ‘ ஆகிப் போய், வெகு சீக்கிரமே அலுப்பும் ஆயாசமும் தட்டவும், எதை எடுப்பது எதை விடுவது என்ற அயர்ச்சியிலும், அங்கும் இப்படி விஷயங்களைத் தவறவிட்டு விடுவது மனிதர்களுக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. என் திருமணத்துக்குத் தலைமை வகித்த என் தந்தையின் நண்பர் ஒரு புகழ்பெற்ற ஓவியர். அவரின் சில ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். அவர் புகழ்பெற்ற ஓவியர் என்பதைத் தவிர வேறேதும் அறியாத நிலையில் நானும் என் திருமணத்துக்குப் பிறகு பல வருடங்களை ஓட்டி விட்டிருக்கிறேன். ஓவியம் குறித்த ஒரு பாமர ரசனை மட்டுமே எனக்கிருப்பதை இதற்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் அருகிலிருந்தும் அறிந்து கொள்ளாத விஷயங்கள் பல இருக்கின்றன. அந்த ஓவியரைப் பற்றிய விரிவான அறிமுகத்தைச் சுகுமாரனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் கண்டபோது, சுகுமாரன்பால் ஒரு நன்றியுணர்ச்சி பொங்கியது. இவ்வளவு நல்ல ஓவியரை இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமல் இருந்தோமே என்ற குற்றவுணர்வும் எழுந்தது. என் திருமணத்துக்குத் தலைமை தாங்கிய ஓவியரைப் பற்றி அதிகம் அறியாதவன் என்ற பழியைச் சுகுமாரன் போக்கி வைத்தார்.

சுகுமாரன் உரைநடையில் காணக்கிடைக்கிற கவிதைகளும், பகுத்தறிவின் தர்க்கத்தைவிட உள்மனதின் நுணுக்கமான உணர்வுகளுக்கு அவர் தருகிற முக்கியத்துவமும் அவரை ஆர்வமுடன் படிக்கிற வாசகனாக என்னை வெகுவிரைவிலேயே மாற்றி விட்டன. சில எழுத்தாளர்களைப் படிக்கும்போது உண்டாகிற ஆனந்தம், பரவசம் இவற்றுடனேயே நம்முடைய வாசிப்பு எவ்வளவு குறுகியது என்ற குறுகுறுப்பும் எழும். அந்தக் குறுகுறுப்பு இன்னும் தீவிரமாக வாசிக்கத் தூண்டுகிற ஆர்வமாகவும் உருவெடுக்கும். அத்தகைய எழுத்தாளர்களில் சுகுமாரனும் ஒருவர். இத்தொகுதியில் உள்ள கட்டுரைகளை ‘எழுதப்பட்ட காலத்துடனும் சூழலுடனும் ஓர் ஆர்வலன் மேற்கொண்ட எதிர்வினைகள் ‘ என்று சுகுமாரன் அடக்கமாகக் குறிப்பிட்டுக் கொள்கிறார். எதிர்வினை என்ற சொல்லுக்குத் தமிழ் மனதில் ஓர் எதிர்மறையான பொருள் குடிகொண்டுவிட்டதோ என்ற கேள்வி எனக்கு உண்டு. விவாதம், சண்டை, உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அடுத்தவரைக் கேள்வி கேட்டல், கிண்டல் செய்தல் என்ற பொருள்களில் அல்லாமல், எதிர்வினை என்பது கிரியேடிவ்வாகவும் கவித்துவமாகவும் இருக்கமுடியுமென்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.

தமிழ் இலக்கியம், பிற இந்தியமொழி இலக்கியங்கள், வெளிநாட்டு இலக்கியங்கள், சங்கீதம், ஓவியம், சினிமா, சமூகம் என்று ஏழுபிரிவுகளில் சுகுமாரன் எழுதிய 31 கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதியில் உள்ள பல கட்டுரைகள் அளவில் சிறியவை. பெரும்பாலானவை ஆறிலிருந்து பத்து பக்கங்களுக்குள் அடங்கி விடுபவை. ஆனாலும், அவை எழுப்புகிற சிந்தனைகள் நீண்டவை. ‘ஓர் அனுபவத்தைச் சக மனதுடன் பகிர்ந்து கொள்ளும் முனைப்புதான் எழுதத் தூண்டுகிறது. இந்த எழுத்துகளால் சிறிய அளவிலாவது சலனமடைய எங்கோ ஒரு மனம் ஆயத்தமாக இருக்கிறது என்பதுதான் எழுத்தை முன்நகர்த்துகிறது ‘ என்று புத்தகத்தின் முன்னுரையில் எழுதுகிறார் சுகுமாரன். அத்தகைய சலனங்கள் இருவகைப்படும். ஒன்று, மனதின் மேற்பரப்பில் அலையெழுப்பிவிட்டு சிறிது நேரத்தில் வாழ்வின் நெருக்கடியினாலோ அடுத்த அலையினாலோ மறைந்து போகிற மேம்போக்கான சலனங்கள். இரண்டு, நெஞ்சின் அடிப்பரப்பில் சுடர்விட்டு எரிந்தபடி, வாழ்வின் காண்கிற காட்சிகளை இதனுடன் முடிச்சிப் போட்டொ, முரண்பட்டுப் பொருத்தியோ பார்க்கச் சொல்கிற ஆழமான சலனங்கள். தூக்கத்தில் காண்கிற கனவில்கூட இச்சலனங்கள் எழுப்புகிற காட்சிகள் இடம்பெறுகிற அளவுக்கு அவை நம்மையுமறியாமல் நம்மை பாதித்திருக்கும். அத்தகைய ஆழமான சலனங்களை ஏற்படுத்தவல்லவை இதில் உள்ள பல கட்டுரைகள்.

‘நவீன கவிதை, வடிவ ரீதியான மாற்றம் மட்டுமல்ல. காலநிகழ்வுகளின் இயக்கத்தால் உணர்வில் நேர்ந்த மாறுதல் ‘ என்று சுகுமாரன் எழுதும்போது அதுவே கவிதைமாதிரி தெரிகிறது. இப்படிப் பல இடங்களில் நிறுத்திப் படிக்க வைக்கிற வரிகளைக் காணும்போது, அவற்றையெல்லாம் விரித்து இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. உதாரணமாக, பிச்சமூர்த்தி கவிதைகள் என்ற தலைப்பிலான கட்டுரை, கவிதையில் பாரதி என்ற ஆளுமை என்கிற விரிவான முன்னுரையுடன் தொடங்குகிறது. பாரதியின் கவிதை உலகத்தின் இரண்டு பொது இயல்புகளாக ஆசிரியர் கருதுவதை ஒரு பத்தியில் சொல்கிறது. பின்னர், பாரதியிடமிருந்து பாரதிதாசன் எவ்வாறு வேறுபடுகிறார் – அதனால் விரிந்த எல்லைகளை அடையாமல் போகிறார் என்பதை ஒரு பத்தியில் சொல்கிறது. இவற்றையெல்லாம் இன்னும் விவரித்து எழுதியிருக்கலாமே என்று அறியத் துடிக்கிற ஒரு வாசகனாக நான் பேராசைப்படுகிறேன். ஆனால், பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரையில் இந்த முன்னுரை போதும் என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டு அடுத்த பத்திக்குப் போகிறேன். பிச்சமூர்த்தியின் பிறப்பு, படிப்பு, வழக்கறிஞர் தொழில், கு.ப.ரா.வுடனான நட்பு, மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகள், புதுக்கவிதை என்கிற புதுவடிவத்தை அவர் காணத் தூண்டுதலாக இருந்த வால்ட் விட்மன் என்று வேகமாக ஓடுகிற கட்டுரை, அடுத்த இரண்டு பக்கங்களில் வாசகர் எதிர்பாராவண்ணம் திடாரென்று முடிந்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று மிட்டாய்க்காக அடம்பிடித்து அழுகிற குழந்தையின் மனம் போல ஆகிவிடுகிறது வாசகரின் மனம் அப்போது.

ஆனாலும், அந்த இரண்டு பக்கங்களிலேயே ‘பிச்சமூர்த்தியின் கவிதை மனத்தில் அடிப்படையாக நின்ற வாழ்க்கைப் பார்வை ஆன்மீகம் சார்ந்தது. வாழ்க்கை முதன்மையானது. கலை முதலிய யாவும் இரண்டாம் பட்சமானதே ‘ என்று பிச்சமூர்த்தி கொண்டிருந்த நம்பிக்கை ஆகியவற்ற்றின்மீது வெளிச்சம் காட்டி, தமிழ்க் கவிதையின் கற்பனாவாத மரபுக்கும், புதிய போக்குக்கும் இணைப்புக் கண்ணியாக நின்றவர் பிச்சமூர்த்தி என்று அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர். கட்டுரை என்ற அளவில் இக்கட்டுரை முழுமை பெற்றிருக்கிறது. ஆனால், படித்து முடித்தபின் இப்படி ‘இன்னும் கொஞ்சம் சேர்த்தும், இன்னும் கொஞ்சம் விவரித்தும் எழுதியிருக்கலாமோ ‘ என்று வாசகரை எண்ண வைக்கிறதே, அங்கே சுகுமாரனின் எழுத்து வெற்றி காண்கிறது. இப்படி என்னை எண்ண வைத்த ஆனால் அவையளவில் முழுமையான பல கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. ‘எழுத்து ‘ கவிஞர்களில் நவீனமானவர்கள் என்றும் விதிவிலக்கு என்றும் மூன்று கவிஞர்களைச் சுகுமாரன் குறிப்பிடுகிறார். அவர்கள் தர்மு சிவராமு (பிரமிள்), பசுவய்யா, எஸ். வைதீஸ்வரன். இதிலே பிரமிள் தமிழின் செழுமையான மரபோடு பொருந்தக்கூடிய அதேசமயம் புதியபார்வை கொண்ட கவிமொழியை உருவாக்கியவர் என்றும் – புதுக்கவிதை என்பது உணர்வு நிலையில் ஏற்பட்ட மாறுதல் என்பதை இனங்கண்டவர்கள் பசுவய்யாவும் வைதீஸ்வரனும் என்றும் குறிப்பிடுகிறார். இப்படித் தமிழ்க் கவிதை வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளையும் போக்குகளையும் அந்தத் தலைமுறையைச் சாராத என்னைப் போன்ற வாசகர்களுக்கு உதவும்படியாகச் சொல்கிற பல புதிய தகவல்களும் பரிமாணங்களும் இக்கட்டுரைத் தொகுதியில் நிறைந்துள்ளன.

அதேபோல நவீன கவிதைக்கும் ( ‘ஐரோப்பிய மைய வாதத்தைப் பின்புலமாகக் கொண்டது, அவை நமது மரபு சார்ந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டன ‘ என்கிறார்), பின்நவீனத்துவக் கவிதைக்கும் ( ‘விரிவடைந்த மொழிவட்டம், வாழ்வனுபவத்திலிருந்து நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமல்ல என்ற நிலைப்பாடு உடையது, அகம் புறம் என்ற வேறுபாடுகளைத் தவிர்த்தது ‘ என்கிறார்) உள்ள வேறுபாட்டைச் சுகுமாரன் விவரிக்கிற இடம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல – யோசிக்கத்தக்கதாகவும், என்னளவிலே புதுமையானதாகவும் (முக்கியமாகப் பின்நவீனத்துவக் கவிதை என்பதற்கு இவ்வளவு சுலபமாகப் புரியக்கூடிய ஒரு விவரணையை நான் வேறெங்கும் படித்ததில்லை.) இருந்தது. என்னுடைய நண்பர் ஒருவர் சங்கப் பாடல்கள் பலவற்றில் புதுக்கவிதையின் கூறுகள் இருப்பதாகச் சொல்வது உண்டு. அதேபோல, அகம் புறம் தவிர்த்த கவிதைகள் தனிப்பாடல் திரட்டிலும் உள்ளன என்பார் அவர். எனவே, சுகுமாரனின் கருத்துகளை இப்படிப்பட்ட கருத்துகளுடன் பொருத்திப் பார்க்கும்போது ஓர் ஆரோக்கியமான் விவாதத்துக்கான சாத்தியக்கூறுகள் இங்கே உள்ளன.

என் எழுத்து என்ற தலைப்பிலோ என் கவிதை என்ற தலைப்பிலோ அந்தக் கருவிலோ நான் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நிலையில் – இந்தப் பொருளிலே நிறைய எழுதுகிறேன் என்று எனக்குத் தோன்றவும், என் நண்பர் ஒருவரும் அதைச் சுட்டிக் காட்டவும் அதைக் கட்டுப்படுத்தி நிறுத்தினேன். பசுவய்யாவின் பலவீனமாக கவிதை பற்றி எழுதப்படும் அவர் கவிதைகளைச் சுகுமாரன் குறிப்பிடும்போது, அதை என் சொந்த அனுபவத்துடன் பொருத்தி அடையாளம் காண முடிகிறது. கலாப்ரியாவின் கவிதைகளைச் ‘சாதாரணனின் கலகம் ‘, ‘பார்வையாளனின் பதற்றம் ‘ ஆகிய சூத்திரங்களின் அடிப்படையில் சுகுமாரன் விளக்குகிறார். இப்படி எளிய சூத்திரங்களின் அடிப்படையில் எழுத்தை அணுகுவது பற்றி எனக்குக் கேள்விகள் உண்டு. ஆனால், சுகுமாரன் முன்வைக்கிற சூத்திரங்களைப் பூர்த்தி செய்கிற விதமாகவும், ஏற்றுக் கொள்ளும்விதமாகவும் அந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபின் நான் உணர்ந்தேன். சுகுமாரன் எழுத்தும் கருத்தும் வாசகனுக்குள் எழுப்பும் ஈர்ப்புக்கு இது ஓர் உதாரணம். கலாப்ரியாவின் எம்பாவாய் என்ற கவிதையை மரபின் மீறலுக்கும் மொழியின் மாற்றத்துக்கும் உதாரணம் என்று சுகுமாரன் சுட்டிக் காட்டுவதைப் படித்தபோது, நவீனக் கவிதையைப் புரிந்து கொள்ள மரபில் அறிவும் அனுபவமும் வேண்டும் என்கிற துணைப்பாடமும் வாசகர்களுக்குக் கிடைக்கிறது.

இந்தியத்துவமும் சமகால அறிமுகமும் என்கிற கட்டுரையில் பாரதியின் இந்தியத்துவம் இரு பக்கம் கொண்ட நாணயம் என்கிறார். தமிழ்த்தன்மை ஒரு பக்கம், இந்தியத் தன்மை இன்னொரு பக்கம். இந்தியத்துவம் என்பதை ஓர் உணர்வாக – கருத்தாக அல்ல – என்று சுகுமாரன் வரையறுப்பது, இந்திய தேசியவாதிகளும் தமிழ் தேசியவாதிகளும் கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும். மேலும் சுகுமாரன் சொல்கிறார்: ‘எந்த மொழியின் இலக்கியமும் அது பிறந்த மண்ணின் இயல்புகளையே பிரதானமாகக் கொண்டிருக்கும். அது சருமம். அதன்மீது படியும் வேறு இயல்போ மேலாடை. தமிழ்க் குணத்தின்மீது கவியும் இந்தியத்துவம் அல்லது பிறமொழி இயல்புகளின்மீது கவியும் இந்தியத்துவம் இது போன்றது என்று கருதுகிறேன் ‘.

இந்தியத்துவம் என்ற உணர்வை நவீனமானது என்றும், தற்காலத் தன்மை கொண்டது என்றும் சுகுமாரன் குறிப்பிடும்போது, அவருள்ளே இருக்கிற விசாலமான இலக்கிய மனமும் பிரபஞ்சம் தழுவிய கவிதை நெஞ்சும் இந்த முதிர்ச்சியான பார்வைக்கு வித்திட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது.

பஷீருடனான சுகுமாரனின் அனுபவம் ரஸமாக இருக்கிறது. பஷீர் முன்னிலையில் ‘நான் பேச வந்தவன் அல்ல, பஷீர் பேசுவதைக் கேட்க வந்தவன் ‘ என்று அவர் உணர்ந்தது மாதிரி இன்னோர் எழுத்தாளர் முன் நான் உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர்களைச் சந்திக்கச் செல்கிற சமீபகால வாசகர்கள், தாங்கள் விரும்பிப் படிக்கிற எழுத்தாளரிடம் தங்கள் அறிவுஜீவிதத்தைக் காட்டுகிற ஆசையுடன் – பெற்றோர் முன் வித்தையைக் காட்டுகிற குழந்தை மாதிரி இது – கண்டதையும் பேசவும் கேட்கவும் செய்ய, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே இடைவெளி தேவை என்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி யாரேனும் சொல்லப் போனால், எப்படி அவர் இடைவெளி தேவை என்று சொல்லலாம் என்றும் வாசகர்கள் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். ஓர் எழுத்தாளர் வாசகரிடம் இடைவெளி எதிர்பார்ப்பதற்கான காரணிகள் என்ன என்பதை வாசகர் மனம் ஆழ்ந்து சிந்திப்பதில்லை. பஷீர், தகழி ஆகியோரைச் சந்தித்த அனுபவங்களை சுகுமாரன் எழுதியிருப்பதைப் படித்தபோது, ஓர் எழுத்தாளரின் சுதந்திரத்தையும், கருத்தையும் மதித்து எழுத்தாளரை அதிகம் பேசவிட்டுக் கேட்கிற வாசகராக எப்போதும் அவர் இருந்து வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த முதிர்ச்சி அவரும் ஓர் எழுத்தாளராக இருப்பதால் வந்திருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆனி ஃப்ராங்க்கின் டயரியைப் பற்றியும், வின்சென்ட் வான்கோவைப் பற்றியுமான விரிவான அறிமுகக் கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. தமிழ்ச் சூழலுக்கு இத்தகைய பிறநாட்டு வரலாறு, வெளிநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் அவசியமானவை. முக்கியமாக வின்சென்ட் வான்கோவைப் பற்றிய அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘நீ ஓவியர்களை மிகவும் நேசிக்கிறாய். நான் சொல்லட்டுமா, மனிதர்களை நேசிப்பதைவிட மகத்தான ஒரு கலையும் இல்லை ‘ என்று வான்கோவின் ஒரு கடித மேற்கோளில் இருந்து அட்டகாசமாகத் தொடங்குகிற அந்தக் கட்டுரை ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனைப் பார்க்கிற பார்வையாகும். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பிறமொழி அல்லது தனக்குப் பிடித்த கலைஞர்களைப் பார்க்கும்போதும் (எழுதும்போது) அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், கலகக்காரர்களாகவும் மட்டும் பார்ப்பதில்லை. மனிதர்களுக்கும் கலைஞர்களுக்கும் உரிய பலவீனமும் நெகிழ்ச்சியும் உடையவர்களாகவும், கருத்தியல் ரீதியான இறுக்கங்களைச் சுமக்காதவர்களாகவும் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றனர். இது சரியான வழிமுறைதான். ஆனால், இதே அளவுகோலை தமக்குப் பிடிக்காதவர்களுக்கோ அல்லது தமிழ்ச் சூழலுக்கோ அவர்கள் பொருத்திப் பார்ப்பதில்லை. ஆனால், சுகுமாரன் வான்கோவைப் பற்றி எழுதும்போதும், பசுவய்யாவைப் பற்றி எழுதும்போதும், பஷீரைப் பற்றி எழுதும்போதும், கே.எம். ஆதிமூலத்தைப் பற்றி எழுதும்போதும், ஜான் ஆப்ரஹாமைப் பற்றி எழுதும்போதும் அவர்களை நேர்மையுடனும் அதே அளவுகோல்களுடனும் அணுகுகிறார். அதற்குக் காரணம் சுகுமாரன் தன்னுடைய மதிப்பீடுகளை ரசனை, உள்ளுணர்வு, தன்னுள் தொடரும் தேடல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கிறார். .

கொஞ்ச நாட்களுக்கு முன் ஓர் இணையக் குழுவில் ‘சிதம்பரம் ‘ மலையாளத் திரைப்படம் பற்றிய ஒரு விவாதம் ஓடியது. அந்தப் படம் புரிந்தது என்று சிலரும், ஒன்றுமே புரியவில்லை, கலைப்படம் என்றால் இதுதானா என்று கிண்டலாக சிலரும் எழுதியிருந்தார்கள். இத்தொகுப்பில் அப்படத்தைப் பற்றிய ஓர் அருமையான கட்டுரை இருக்கிறது. அக்கட்டுரையைப் படித்தவுடன் சிதம்பரம் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகி இருக்கிறது. அந்தப் படம் என் சிற்றறிவுக்குப் புரியாமல் போகாது என்ற நம்பிக்கையை அந்தக் கட்டுரை எனக்குக் கொடுத்தது.

சமூகம் என்ற பிரிவில் பெத்தாபுரத்தில் நடக்கிற விபசார சந்தை பற்றியும், கூவாகத்தில் நடக்கிற அலிகளின் திருவிழா பற்றியும், கேரளப் பழங்குடி மக்களின் போராளி ஜானு பற்றியுமான விவரமான கட்டுரைகள் இருக்கின்றன. சுகுமாரன் என்கிற கவிஞரின், ரசனையாளரின் உள்ளிருக்கும் சமூகப் பிரக்ஞை, சக மனிதர்கள் மேலான அக்கறை ஆகியவற்றை அக்கட்டுரைகள் சிறப்பாக வெளிக்கொணர்கின்றன. இத்தொகுப்பில் இருக்கிற சில கட்டுரைகள் சுகுமாரன் குங்குமம் வார இதழில் பணிபுரிந்தபோது அதிலே வெளிவந்தவையாம். குங்குமத்தின் தரத்தை அவை அந்தக் காலத்தில் கட்டாயம் பல மடங்கு உயர்த்தியிருக்கும் என்று சொல்லலாம்.

மனிதர்களின் இயல்பைப் பற்றிச் சொல்லும்போது காலையில் ஒன்று, மதியம் ஒன்று, மாலையில் ஒன்று என வெவ்வேறான இயல்புடையவர்கள் மனிதர்கள் என்று சொல்கிற ஒரு பழம்பாடல் உண்டு. அதேபோல, இத்தொகுப்பிலே இருக்கிற ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறான தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற இயல்புடைய எண்ணங்களை ஒரே நேரத்தில் எழுப்புகிற தன்மையுடையனவாக இருக்கின்றன. அந்த எண்ணங்கள் ஒரு தேடலின் தீவிரத்தை உண்டாக்குகிற வலிமையுடையவையாகவும் இருக்கின்றன. அந்தத் தேடல் வாசகர் பல விஷயங்களை கண்டடைய உதவுகிற கிரியா ஊக்கியாகப் பலகாலம் செயல்பட வல்லவை. அந்த விதத்தில், சுகுமாரனின் எழுத்து பங்குக்கு மூன்று பழம்தரும் எழுத்துதான்.

(திசைகளும் தடங்களும் – சுகுமாரன் – அன்னம்/அகரம் வெளியீடு – விலை ரூபாய் 90)

http://360.yahoo.com/pksivakumar

pksivakumar@yahoo.com

—-

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்