பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

லதா ராமகிருஷ்ணன்



அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலுக்கான விமர்சனக் கூட்டம் 3.6.07 அன்று சென்னையில் நடந்தேறியது. நவீன தமிழ்க் கவிதை வரலாறாக முன்வைக்கப்படும் பல கட்டுரைகளில் அமிர்தம் சூர்யாவின் பெயர் இடம்பெற்றிருக்காத நிலைக்கு ‘இலக்கிய விமர்சன உலக அரசியல் தான் காரணமாக இருக்க முடியும். ஏனெனில், அமிர்தம் சூர்யாவின் கவிதைகள் உண்மையிலேயே தரமானவை, நவீனத்துவம் வாய்ந்தவை என்பதை அவற்றைப் பொருட்படுத்திப் படிக்கும் எவராலும் நன்கு உணர முடியும். ஆனால். சூர்யா ஒரு எளிய தொழிலாளி. பகுதி நேர எழுத்தாளர் என்று வாழ்வு குறித்த நுண்ணுணர்வு வாய்க்கப் பெற்றவராக பலராலும் பெரிதும் போற்றப்படும் படைப்பாளி ஒருவரால் சக-படைப்பாளி நோக்கி எள்ளலாக எறியப்பட்ட வர்க்கத்தவர். தினசரி வாழ்க்கையின் போராட்டங்கள், இயந்திரத்தனங்கள் எல்லாவற்றிற்கு மத்தியிலும் இலக்கியம் குறித்த, நாடகம், ஓவியம், கவிதை குறித்த தனது ஆர்வத்தையும், தேடலையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர்; பேணிப் பராமரித்து வருபவர். நியாயமான விமர்சனங்களைப் பொருட்படுத்தி உள்வாங்கிக் கொள்பவர். அதன் காரணமாகவே தனது விமர்சனக்கூட்டத்தை விமர்சன விழா என்று அழைப்பிதழில் குறிப்பிட்டதாக விழாவில் தெரிவித்தார் கவிஞர் !

சென்னைவாசியான கவிஞர் அமிர்தம் சூர்யா 1966ல் பிறந்தவர். ஏறத்தாழ ஐந்து வருடங்கள் ‘அமிர்தம்’ என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்தியவர். எண்பத்தியைந்திலிருந்து எழுதி வரும் இவரின் முதல் கவிதை நூல் ‘உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை’ 2000ல் வெளியாகியது. அதன் நவீன படிமங்களுக்காகவும், குறியீடுகளுக்காகவும் உண்மையான கவிதை ஆர்வலர்களிடையே நிறைய விவாதங்களை எழுப்பிய தொகுப்பு இது. இலக்கியம், சமூகம்சார் பல அகல்விரிவான திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளவர் சூர்யா. இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு 2001ல் ‘முக்கோணத்தின் நான்காவது பக்கம்’ என்ற தலைப்பில் வெளியாகியது. இவருடைய சிறுகதை தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. ‘ மனிதம் ‘ என்ற அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து தொடர்ந்து சமூகப் பணியிலும் இவர் ஈடுபட்டு வருகிறார் என்பதை இந்த இரண்டாம் கவிதைத் தொகுப்பில் தரப்பட்டுள்ள குறிப்பிலிருந்து அறிய முடிகிறது.

பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு என்ற அமிர்தம்சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த பல்வேறு கருத்துக்களை விழாவில் உரையாற்றிய சக-படைப்பாளிகள் செந்தூரம் ஜகதீஷ், பா.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்மணவாளன், எழிலரசு, சொர்ணபாரதி, இளம்பிறை, ராம குருநாதன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். ஏறத்தாழ மூன்று மணிநேரத்திற்கும் மேலாய் நடந்தேறிய விழாவின் முடிவில் ஏற்புரையாற்றிய கவிஞர் அமிர்தம் சூர்யா எல்லோருடைய விமர்சனங்களும் தன்னை கௌரவிப்ப்பதாக மனதாரக் கூறினார். அமிர்தம் சூர்யாவின் கவிதைகள் குறித்து என்னுடைய ‘வரிகளின் கருணை’ என்ற கட்டுரை நூலில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இன்னொரு கட்டுரை கண்டிப்பாக எழுத வேண்டும். கூடிய சீக்கிரம் எழுதுவேன். அமிர்தம் சூர்யாவின் கவிதைகளின் நவீனத்தன்மை, பூடகத்தன்மை குறித்தெல்லாம் அகல்விரிவாகப் பேசப்பட வேண்டியது அவசியம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ கணக்காய் அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பிலிருந்து மூன்று, நான்கு கவிதைகள் இங்கே தரப்படுகின்றன. அமிர்தம் சூர்யாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


.தேனீர்


என்னைத் தேடிக் கொண்டிருந்த நீ
ஆயுதமற்ற என் பதுங்குக் குழியில்
கால் இடறி வீழ்ந்த போது
ஆயுதத்தைத் தவற விட்டதையும்,
நிராயுதபாணியான நாம் இப்போது
தேநீர் பருகிக் கொண்டிருப்பதையும்
நமது அதிகாரவாதிகளுக்கு
தெரிவித்து விட வேண்டும் பாவம்
ஆசுவாசமாய் தேநீர் குடித்து
நீண்ட நாள் ஆனது அவர்களுக்கும்


.நாட்குறிப்பேடு

என் கனவுகளுக்கு நான் பொறுப்பல்ல
ஆயினும் பொறுப்பேற்று
குறித்து வைக்கிறேன்
நாட்குறிப்பேட்டில்.

கனவின் பதற்றத்தை ஆசுவாசப்படுத்தி
மெய்ம்மை அர்த்தங்களை
கண்டெடுக்கவே
வாழ்வை துழாவுகிறேன்
சுருக்குப் பையில்
கடைசி ஒற்றைக் கொட்டைப்
பாக்கைத் தேடும்
பாட்டியின் விரல்களைப் போல.

“அது சரி, பசியால் செய்யப்பட்ட
பிரபஞ்சத்தில்
யாரின் கனவு நீயும் நானும்”

“ஏன் கேட்கிறாய்”

“ஒன்றுமில்லை உன்
நாட்குறிப்பேட்டிலிருக்கும்
கனவுகளை கறையான்கள் தின்கிறதே
அதற்காகக் கேட்கிறேன்.”

இருத்தல் குறித்தான அரங்கில்


காட்சி – 1

இங்குமங்கும் துள்ளிக் குதித்து
ஆலம்பழங்களை உதிர்க்கச் செய்யும்
விருட்ச தொப்புள் கொடியான விழுதில்
கட்டிய இளங்கன்று

உதிர்ந்த பழங்களைப் பெருக்கி
வீசுவாள் கூன் கிழவி –
வீட்டுமனையாகிப் போன வயல்வெளியெங்கும்
மர பிரசவங்களை மனதில் எண்ணி

காட்சி – 2

பாம்புக்கு நீ போஷாக்கு தந்த சேதி கேட்டு
என் கீரிப்பிள்ளைக்கு ஊட்டினேன் ஊட்டச்சத்து
பருத்து பெருத்தது கீரியும் பாம்பும்.
நமை கடந்து போன அழுக்குக் கிறுக்கன்
எச்சில் பூசிய வரியை அவிழ்த்தான்

“மனசுக்குள்ளிருந்த
மண்புழு பெருச்சாளியை
பாம்பு கீரியாய் மாத்துற மடப் பசங்க”

விக்கித்திருந்தோம் சிவனேயென சிலகாலம்
அவன் பேச்சால் – போதும்
திரும்பவும் எதையாவது எழுதலாமா நண்பா
பாவம் நமது மண்புழுவும் பெருச்சாளியும்.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்