நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர்


அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் `வீடு பேறு’ மறு பிறவியில் அடையக் கூடியது. இவ்வுலக வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகிய முன்றையும் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் நீதி அறம்நூல்கள் அல்லது கீழ்க்கணக்கு என்று அழைக்கப்படுகின்றன. இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், பன்னிரு பாட்டியல் போன்றன இவற்றுக்கான இலக்கணத்தைத் தருகின்றன.

தொல்காப்பியம் தரும் இலக்கணம்
“வனப்பியல் தானே வகுக்குங்காலைச்
சின் மென் மொழியால் தூய பனுவலொடு
அம்மை தானே அடிநிமிர்பு இன்றே”

இதனுள் வந்துள்ள `தூய பனுவலொடு’ என்ற அடையுடன் கூடிய பகுதி அறம் பொருள் இன்பமென்னும் முன்றிற்கும் இலக்கணம் கூற வந்த நூல்களைப் பற்றியதாகும்.

வனப்பு அடிப்படை சார்ந்த அம்மை பற்றித் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் பொழுது, சிலவாகிய மெல்லியவாகிய மொழியினால் தொகுக்கப்பெற்ற அடிகள் மிகுதியில்லாமல் வரும் செய்யுட்கள் அம்மையாகும் என்கிறார். தொல்காப்பியர் கூறும் `அம்மை’ எனும் வனப்பில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இடம்பெறுகின்றன. இவ்விலக்கணமே தொல்காப்பிய அடிப்படையில் நீதி நூல்களுக்கானது ஆகும். எனவே நீதி நூல்கள் அடிஅளவில் மிகுதிப்படாமல் இருக்க வேண்டும் என்ற வடிவ வரையறை தொல்காப்பிய அடிப்படையில் கிடைத்ததாகும். இது கருதியே அடியளவில் சுருங்கியதாகவே நீதி நூல்களின் பாடல்கள் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.

பன்னிரு பாட்டியல் தரும் இலக்கணம்
“அகவலும் கலிப்பாவும் பரிபாடலும்
பதிற்றைந்து ஆதி பதிற்றைம்பது ஈறாக
மிகத்துடன் தொகுப்பன மேற்கணக்கு எனவும்
வெள்ளைத் தொகையும் அவ்வகை எண் பெறின்
எள்ளறு கீழ்க்கணக்கு எனவும் கொளலே (346)

அடி நிமிர்வு இல்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வத்
திறம்பட வருவது கீழ்க்கணக்கு ஆகும் (348)

மேற்கண்ட இரு நூற்பாக்களும் நீதிநூல்களுக்கான வடிவத்தை எடுத்துக் காட்டும் பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூலின் பகுதிகள் ஆகும்.

அறம், பொருள் இன்பம் என்னும் முன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதிநூல்களுக்கு உரியதானது.

குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது.

இதனை அறிந்துணர நீதிநூல்களின் அடிஅளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டி உள்ளது.

திருக்குறள்
திருக்குறறள் குறள் வெண்பா யாப்புடையது. இதனாலேயே இப்பெயர் பெற்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முற்பட்டது திருக்குறள் ஆகும். இதனை எழுதியவர் திருவள்ளுவர். இந்நூல் முப்பாலினை உடையது. நூற்றி முப்பத்தி முன்று அதிகாரங்களையும் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களையும் கொண்டுள்ளது. உலக அறம் பேசுவது.

நாலடியார்
இந்நூலும் வெண்பா யாப்பில் ஆனது. இது நாலடி நானூறு என்றும் அழைக்கப்படுகிறது. இதனை எழுதியோர் சமண முனிவர்கள் ஆவர். இந்நூலில் நானூறு வெண்பாக்கள் உள்ளன. இதனைத் தொகுத்தவர் பதுமனார் என்பவராவார். இந்நூல் திருக்குறளைப் போன்று அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முன்று பிரிவுகளையுடையது.

நான்மணிக் கடிகை
நான்மணிக் கடிகை நான்கு அடிகளையுடையது. இது வெண்பா யாப்பினது. ஆசிரியர் விளம்பி நாகனார் ஆவார். நூற்றியொரு பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது. இப்பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. இந்நூலின் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு ஆகும்.

இனியவை நாற்பது
இனியவை நாற்பதின் பாடல்களும் வெண்பா யாப்பில் அமைந்த நான்கு அடிகளால் ஆனது ஆகும். ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இந்நூல் நாற்பத்தியொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்தில் சிவன், திருமால், நான்முகன் ஆகிய முவரும் வணங்கப்படுகின்றனர்.

திரிகடுகம்
நான்கு அடிகளுடைய வெண்பா யாப்பில் பாடப் பெற்றுள்ள திரிகடுகத்தின் நூலாசிரியர் நல்லாதனார். இந்நூலின் காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். இந்நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன.

ஏலாதி
ஏலாதி நான்கு வரிகளால் ஆன பாடல்களை உடையது. இதன் நூலாசிரியர் கணிமேதாவியார். இந்நூலில் எண்பது வெண்பாக்கள் உள்ளன. காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதியில்தான் மிகுதியான வடசொற்கள் காணப்படுகின்றன.

முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக் காஞ்சியின் பாடல்கள் ஒருவரியில் எழுதப்பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியர் மதுரை கூடலூர் கிழார் ஆவார். இந்நூல் ஓர் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் பத்து அதிகாரங்களுக்கு உரிய நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. உலக நிலையாமையைச் சான்றோர்கள் அனுபவ மொழியினால் கூறுவது முதுமொழிக்காஞ்சி ஆகும்.

ஆசாரக்கோவை
ஆசார கோவையின் மிகுதியான பாடல்கள் முன்று வரிகளால் ஆனவை. சில பாடல்கள் நான்கு வரிகளிலும், ஒரு சில பாடல்கள் ஐந்து வரிகளிலும் எழுதப்பெற்றுள்ளன. பெருவாயின் முள்ளியார் எழுதிய இந்நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன. இந்நூலின் ஆசிரியர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும்.

பழமொழி நானூறு
பழமொழி நானூறு நூலின் பாடல்கள் நான்கு அடிகளால் ஆனவை. இதன் ஆசிரியர் முன்றுறை அரையனார். இவர் சமண சமயத்தவர். இந்நூலின் காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் கடைசி வரியில் பழமொழி இடம்பெற்றுள்ளது குறிக்கத்தக்கது.
சிறுபஞ்சமுலம்
சிறுபஞ்சமுலப் பாடல்கள் நான்கு வரிகளைக் கொண்டன. நூலாசிரியர் காரியாசான். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சமண நூல் இதுவாகும். இந்நூலில் நூற்றி இரண்டு வெண்பாக்கள் உள்ளன. சிறுபஞ்ச முலத்தில் வடமொழிக் கருத்துக்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

இன்னிலை
இன்னிலை நூலின் பாடல்கள் நான்கு வரிகளையுடையன. ஆசிரியர் பொய்கையார். இதனுள் கடவுள் வாழ்த்தோடு நாற்பத்தி ஒன்பது வெண்பாக்கள் உள்ளன. இந்நூல் அறம், பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இவை பன்னிரண்டும் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த நீதி நூல்கள் ஆகும். இவற்றில் மென் மொழிகளால், சிறு அடிகளால் நீதிக் கருத்துக்கள் விளக்கப் பெற்றுள்ளன.

பிற்கால நீதிநூல்களிலும் சுருக்கமான வடிவ வரையறை பின்பற்றப் பெற்றுள்ளது.

ஆத்திசூடி
இந்த நூலை எழுதியவர் ஔவையார். ஒவ்வொரு வரியும் ஓர் அறக்கருத்தினைக் கொண்டுள்ளது. இந்நூல் நூறு வரிகள் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலைப் பின்பற்றியே

கொன்றை வேந்தன்
ஔவையாரால் எழுதப்பட்ட நூல். திருக்குறளின் தாக்கம் கொன்றை வேந்தனில் மிகுதி. இந்நூலில் அறக்கருத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்துள்ளன.

முதுரை (வாக்குண்டாம்)
நூலாசிரியர் ஔவையார். முப்பத்தியொரு வெண்பாக்கள் உள்ளன. வாக்குண்டாம் எனும் பெயரும் உண்டு.

நல்வழி
வாழ்க்கைக்காக நல்வழி காட்டுதல் எனும் பொருளில் நல்வழி எனும் பெயர் பெற்றது. இதனை எழுதியவர் ஔவையார். கடவுள் வாழ்த்தோடு நானூறு வெண்பாக்கள் உள்ளன.

அறநெறிச் சாரம்
அறக்கருத்துக்களைச் சாறாகப் பிழிந்துத் தருவது எனும் பொருளில் அறநெறிச்சாரம் எனும் பெயர் பெற்றது. ஆசிரியர் முனைப்பாடியார். இவர் சமணசமயத்தவர். காலம் கி.பி. பதின்முன்றாம் நூற்றாண்டு. இருநூற்றி இருப்பத்தி இரண்டு வெண்பாக்கள் உள்ளன. அருகதேவன் சிவபெருமானாகப் பார்க்கப்படுவது வியப்புக்குரியது.

அருங்கலச் செப்பு
அருங்கலச் செப்பு என்பதற்கு அரிய அணிகலன்களால் பாதுகாத்து வைக்கும் செப்பு என்று பொருள். அதுபோன்று அரிய கருத்துக்களைப் பாதுகாக்கும் நூல் எனும் பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நூற்றி எண்பத்தி இரண்டு குறள் வெண்பாக்கள் உள்ளன. அருகதேவன் வணக்கத்துடன் நூல் காணப்படுவதால் இந்நூல் ஒரு சமண நூலாகும்.

வெற்றி வேற்கை ( கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) நறுந்தொகை
ஆசிரியர் அதிவீரராம பாண்டியர். எண்பத்தி இரண்டு வெண்பாப் பாடல்கள் உள்ளன. காலம் கி.பி பதினாறாம் நூற்றாண்டு . இந்நூலாசிரியர் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி குட்டி திருவாசகம் என்று போற்றப்படுகிறது.

நீதி நெறிவிளக்கம் (கி.பி 17 ஆம் நூற்றாண்டு)
இந்நூலின் ஆசிரியர் சிவபிராகாச சுவாமிகள் . காலம் கி.பி பதினேழாம் நூற்றாண்டு. இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு நாற்பத்தியொரு வெண்பாக்கள் உள்ளன. சிவபிரகாசர் பிரபுலிங்கலீலை, நால்வர் நான்மணிமாலை, திருவெங்கைக் கலம்பகம்,சோணசைலமாலை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

உலகநீதி (18 ஆம் நூற்றாண்டு)

உலகநாத பண்டிதர் இயற்றியதால் இந்நூலுக்கு உலகநீதி என்று பெயர் வந்தது. இந்நூல் பதின்முன்று விருத்தப்பாக்களை கொண்டது. காலம் கி.பி பதினெட்டாம் நூற்றாண்டு.

நீதி நூல்
இந்நூல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. ஐரோப்பியர் வருகையால் கிறித்துவ மதத்துக்கு மாறிய அறிஞர்களில் இவரும் ஒருவர். தமிழ் இலக்கியத்தில் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” இவரால் எழுதப்பட்டது. மேலும் இவர் சர்வ சமய கீர்த்தனைகள் பெண் மதிமாலை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
புதிய ஆத்திச்சூடி
பாரதியாரும் புதிய ஆத்திச்சூடி என்ற நீதி நூலை இயற்றியுள் மகாகவி ளார். இவரும் சுருங்கிய அளவில் அதாவது ஓரடி என்ற எல்லையில் இந்தப் படைப்பினைப் படைத்துள்ளார்.

இவ்வாறு சுருங்கிய அடிகளில் நீதிக் கருத்துக்களை உணர்த்தும் முறைமையை தமிழ் நீதி நூல்கள் பெற்றுள்ளன. மேலும் வெண்பா யாப்பே பெரும்பாலும் நீதி நூல் யாப்பாக பயன்படுத்தப் பெற்றுள்ளது. உலக நீதி மட்டுமே விருத்தப்பா யாப்பினது. வெண்மைத் தன்மை வாய்ந்த, தூய்மைத் தன்மை மிகுந்த வெண்பா யாப்பின் தனித்தன்மை கருதி தூய்மையான நீதிக் கருத்துக்களை இதன் வழியாகக் காட்ட நீதி நூல் படைப்பாளர்கள் முயன்றுள்ளனர் என்பது குறிக்கத்தக்க செய்தியாகும்.

இவ்வாறு நீதி நூல்கள் யாப்பில் ஒரு பொதுமைத் தன்மை இருப்பது எண்ணுதற்குரியதாகும்.

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>