நினைவுகளின் சுவட்டில் – (47)

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

வெங்கட் சாமிநாதன்


ரயில் செண்டிரல் ஸ்டேஷனை விட்டு, மதராஸைவிட்டு விரைந்து கொண்டிருந்தது. நான் பார்த்திராத என்றுமே பிரயாணம் செய்திராத புதிய இடங்கள், ஊர்கள். எனக்குத் தெரிந்தது, நிலக்கோட்டைக்கும் கும்பகோணத்துக்கும் இடையேயுள்ள பூமிதான். அதிகம் போனால் குமப்கோணத்துக்கு வடக்கே என்று ரயில் தண்டவாளத்தின் மீது நடந்தே இருப்புப் பாதை இட்டுச் செல்லும் அடுத்த ஊர் திருநாகேஸ்வரம் வரை போயிருக்கிறேன். கும்பகோணத்துக்கும் பட்டணத்துக்கும் இடையேயான தூரத்தைக்கூட முந்தின நாள் பிரயாணத்தை இருட்டில் தான் கடந்திருக்கிறேன். உடையாளூர், தங்கைகள், நிலக்கோட்டை மாமா என்று தான் நினைவுகள் படர்ந்து கொண்டிருந்தன. நினைவுகளுக்கிடையேயே இருள் கவிந்து விட்டது. ஒன்றும் சாப்பிடத் தோன்றவில்லை. வண்டியில் என் இருக்கையைச் சுற்றி புதிய மனிதர்கள். அவர்கள் பேச்சுக்களின் சலசலப்புக்கள். ஆனால் நான் தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தேன். அவர்களோடு பேசலாம் என்று கூட தோன்றவில்லை. அளவுக்கு நான் வாழ்க்கையில் வளர்ந்துவிடவில்லை. அவர்களும் என்னைக் கவனித்தவர்கள் இல்லை. இருக்கைக்குப் பக்கத்தில் வைத்திருந்த இரும்புப் பெட்டியின் மீது தலை வைத்தே தூங்கிவிட்டேன். என்னையறியாது தான். விழித்தபோது ரயில் எங்கோ விரைந்து கொண்டிருந்தது. சுற்றி சில நேற்றையவர்கள். சிலர் புதிதாக வந்து சேர்ந்தவர்கள்.

நான் விரும்பித் தேர்ந்த பயணம் இது, திருப்பம் இது என்று தோன்றவில்லை. ஏதோ நடக்கிறது, நான் இட்டுச் செல்லப்படுகிறேன். இதில் எனக்குப் பங்கில்லை. எனக்கு எதிர்ப்பும் இல்லை என்பது போன்று ஒரு உணர்வில் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தில்லியில் இருந்து வந்திருந்த ஒருவர் எனக்கு நண்பரானால் உடையாளூரில் என்று சொன்னேனே, அவர் நான் ஜெம்ஷெட்பூர் போகப் போகிறேன் என்று தெரிந்தது, தன் பிரயாண அனுபவங்களைச் சொல்வார். அவர் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்: ” வழிலே எல்லா ஸ்டேஷன்லேயும் நல்ல பால் கிடைக்கும். இங்கே மாதிரி தண்ணிப் பாலா இருக்காது. அவங்களுக்கு பால்லே தண்ணி விடணும்னே தெரியாதுன்னா பாத்துக்குங்கோ. நல்ல கெட்டியா கள்ளிச் சொட்டு மாதிரி இருக்கும். கெட்டில்லே சூடா கொண்டு கொடுப்பான். பழமும் கொண்டுவருவான். திருப்தியா சாப்பிடலாம். அதிலேயே பசி அடங்கிடும் கவலையே படாதேங்கோ.” அதுவும் காதில் விழுந்து கொண்டிருந்தது, என்னமோ அவர்தான் கிட்ட உட்கார்ந்து கொண்டு திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது போல.

ஆனாலும் நான் எதுவும் வெளியே வாங்கிச் சாப்பிடத் துணியவில்லை. பள்ளியில் படித்த ஹிந்தியை வைத்துக்கொண்டு ஏதாவது பேசமுடியுமா என்பதை இனித் தான் சோதனை செய்து பார்க்கவேண்டும். செய்வேனா தெரியாது. வண்டி தெலுங்கு தேசத்தில் இருந்தது. நேற்று சாயந்திரம் வண்டி ஏறினதிலிருந்து இது வரை நான் யாரோடும் பேசவில்லை. வெளியேயும், வண்டிக்குள்ளும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு சரி. பதினைந்து பதினாறு மணி நேரம் ஆயிற்று. இவ்வளவு நேர பிரயாணம் புதிய அனுபவமாயிற்றே.

பின் வருடங்கள் ஒன்றில் என் எதிரே ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி தன் இரு குழந்தை களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். இரண்டு பசங்களும் அவளிடம் என்னமோ சொல்லி சிணுங்கிக் கொண்டிருந்தனர். அவள் சிரித்துக் கொண்டே என்னிடம், “இவ்வளவு தூரம் ரயிலில் பிரயாணம் செய்து இவர்களுக்குப் பழக்கமில்லை. எப்போ இறங்கப் போறோம் என்று அலுத்துக் கொள்கிறார்கள்.” என்றாள். அப்போது தான் எனக்கு இதில் இப்படிக் கூட ஒருவர் உணரக்கூடும் என்று தெரிந்தது.

எனக்கு அலுப்பாக இல்லை. பேச யாரும் இல்லையென்றாலும், சுவாரஸ்யமாகவே இருந்தது. இன்னமும் உட்கார்ந்த இடத்திலேயே பொழுது என்னை அறியாது போய்க்கொண்டிருந்தது. சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற தேவையும் தெரியவில்லை. புதிய அனுபவங்களிடையே பசியும் மறந்து போயிற்று. எப்படியோ நேரம் கழிந்து போய்க்கொண்டிருந்தது. வால்டேர் ஸ்டேஷன் வந்ததும் தெரியவில்லை. வந்தது தான். ஆனால் அதன் முக்கியத்வத்தை நான் உணரவில்லை. திடீரென, “நீ உடையாளுர்லேர்ந்து தானே வரே? என்று ஒருவர் அருகில் வந்து கேட்டார். “ஆமாம்” என்றேன். “சாமிநாதன்?” தலையாட்டினேன். அப்போது தான் சித்தப்பா சொன்னது ஞாபகம் வந்தது. “சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். கீழே இறங்கி வா. சௌகரியமா உட்கார்ந்து சாப்பிடலாம்.” என்றார். பக்கத்திலிருந்தவர்களிடம் ஏதோ தெலுங்கில் சொன்னார்.
நாங்கள் இதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. சொல்லப்போனால், வால்டேருக்கு சித்தியோட அண்ணாக்கு லெட்டர் எழுதியிருகேன்டா என்று சொல்லும் வரை சித்திக்கு ஒரு அண்ணா இருக்கிறார், அவர் வால்டேரில் இருக்கிறார் என்றும் தெரியாது. அவருக்கும் நான் ஒருத்தன் இருக்கிறேன் என்று தெரிந்திராது தான். கல்கத்தா மெயிலில் இவ்வளவு பேருக்கு இடையில் எப்படி என்னை அடையாளம் கண்டார்? ஆச்சரியமாக இருந்தது. நான் கேட்டதாக நினைவில்லை. பழகினால் ஒழிய புதியவர்களிடம், அதிலும் பெரியவர்களிடம் சகஜமாகப் பேச வந்ததில்லை எனக்கு. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன். வயது ஒன்று, அது போக, சுற்றி இருப்பவர்களைப் பார்த்து மிரள மிரள் விழித்துக்கொண்டு அந்நியப்பட்டு உட்கார்ந்திருக்கும் இன்னொரு பதினாறு வயசு பிள்ளையாண்டான் அந்தக் கல்கத்தா மெயிலில் கிடைப்பது கஷ்டம் தான்.

எப்படியோ எல்லாம் நடந்து விடுகிறது. அதுவும் நல்ல பசியில் உருளைக் கிழங்கு கறியும், வெங்காய சாம்பாருமாக வந்தால்… எப்படி தெரியும் இவை எனக்கு மிகவும் பிடித்தவை என்று? என் இருக்கைக்கு எதிரே ப்ளாட்·பாரத்தில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டேன். அவர் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு முடிந்ததும் வேறே ஏதாவது வேணுமா? என்று கேட்டார். நான் தலையை ஆட்டினேன். சரி போ உன் இடத்தில் போய் உட்கார்ந்து கொள், நேரம் ஆயிடுத்து என்றார். முதல் தடவையா தனியா ரொம்ப தூரம் போறே. பயப்படாமே போ. அப்பாக்கும் சித்தப்பாக்கும் லெட்டர் எழுது என்றார். வண்டி கிளம்பியது.

பொழுது எப்படியோ போய்விடுகிறது. பிற்பகலில் எப்படியோ வண்டியில் கூட்டம் நிறைந்தது. இரண்டு வாலிபர்கள், 24, 25 வயது இருக்கும். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். என் இடத்தில் ஜன்னல் ஓரமாக நானும் என் பெட்டியும். அவர்கள் கொஞ்ச நேரம் பார்த்திருந்தனர். பின்னர் பக்கத்திலிருந்தவர்களிடம், “இந்த பையனை பெட்டியை சீட்டுக்கு அடியில் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். நாங்கள் உட்காரலாமே” என்றான் ஒருவன். அவர்கள், ” ஏன்? உனக்குப் பேசத்தெரியாதா? நீயே சொல்லேன்” என்றார்கள். பாவம், எனக்கு பெட்டியை கீழே வைத்துவிட்டால் அதை எப்படி திருட்டுப் போகாமல் பாதுகாப்பது? என்ற கவலை. பக்கத்தில் வைத்துக்கொண்டு இது வரை செய்து கொண்டு வருவது போல கையால் அணைத்துக்கொண்டிருந்தால் தான் திருட்டுப் போகாமல் இருக்கும் என்ற நினைப்பு எனக்கு. சின்னப் பையன் பயந்துகொண்டிருக்கிறான் என்று அவர்களும் என்னிடம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு நான் பெட்டியைக் கீழே வைத்து இடமும் கொடுக்கவில்லை. பாவம் நின்று கொண்டே தான் வந்தார்கள். எனக்கு அவர்கள் பேசுவது ஒருவாறாகப் புரிந்தாலும், எனக்கு பதில் பேச ஹிந்தியும் தெரியவில்லை. புதிய இடத்தில் புதியவர்களிடம் ஏதோ பாஷையில் பேசவும் தோன்றவில்லை. அவர்கள் சொல்லச் சொல்ல நான் ஒன்றும் பதில் சொல்லாமல் விழித்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். நினைத்துப் பார்க்கிறேன். இப்போது இது மாதிரி நடப்பது சாத்தியமா? தாம் கஷ்டப்பட்ட போதிலும் அந்த வாலிபர்கள் புரிந்து கொள்ளாது பிடிவாதம் பிடிக்கும் ஒரு சிறு பையனிடம் அதட்டிப் பேசவோ, மிரட்டவோ, கூச்சல் போடவோ இல்லை. வெறுத்துப் போய் அலுத்துக்கொண்டார்கள். இன்று அவர்களே கூட அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். மனித உறவுகள் மாறிவிட்டன.

நன்றாக சாப்பிட்டு விட்டதால், தனிமையில் சீக்கிரமே உறக்கம் வந்து விட்டது போலும். காலையில் விழித்தது தான் எனக்கு நினைவில் இருக்கிறது. காலை ஏழு மணி அளவில் என்று நினைக்கிறேன். வண்டி கரக்பூர் வந்து சேர்ந்தது. இங்கு நான் இறங்க வேண்டும். பன்னிரண்டு மணிக்கு இங்கிருந்து பம்பாய் மெயில் பிடிக்கவேண்டும். பெட்டியுடன் இறங்கி ப்ளாட்·பாரத்தில் நின்று கொண்டேன்.

அப்பு மாமா எழுதியிருந்த அவரது நண்பருக்கு என்னை அடையாளம் கண்டு கொள்வதில் ஏதும் சிரமமிருக்கவில்லை. காலில் செறுப்பில்லாது, வேட்டி கட்டிக்கொண்டு ஒரு இரும்புப் பெட்டியும் ஜமக்காளமுமாக காலை நேரத்தில் கல்கத்தா மெயிலிலிருந்து இறங்கி கரக்பூர் ப்ளாட்·பாரத்தில் நிற்கும் பதினாறு வயசு பிள்ளையாண்டான்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? ஒருவர் என்னைச் சற்று தூரத்திலிருந்தே பார்த்ததும் கிட்ட நெருங்குவதும் தெரிந்தது. “நீ தான் நாராயணஸ்வாமி சொன்ன பையனா? டாடா நகர் போறவனா?” என்று கேட்டார். ஆமாம் என்று தலையாட்டினேன். அவர் பெட்டியை எடுத்துக் கொண்டார். நான் படுக்கையை எடுத்துக்கொண்டு அவரோடு நடந்தேன். ” வா, க்வார்ட்டர்ஸ்க்கு போலாம். முதல்லே குளி, என்ன? ரெஸ்ட் எடுத்துக்கோ, ரொம்ப களைச்சுப் போயிருப்பே. சமையல் ஆனதும் சாப்பிடு. அப்பறம் நான் வந்து உன்னை அழைச்சிண்டு வந்து ரயில் ஏத்தி விடறேன். என்ன? சரியா? என்று பேசிக்கொண்டே வந்தார். நானும் ஒவ்வொன்னுக்கும் தலையை ஆட்டிக்கொண்டே வந்தேன்.

ஒரு அழகான வசதியான வீடு தான். மர கேட்டைத் திறந்து கொண்டு போனால் வீட்டுக்கு முன்னால் சின்ன தோட்டம். வால்டேரில் சித்தியோட அண்ணாவைப் போலவே இவரும் ரயில்வேயில் வேலை பார்ப்பவர் போல இருந்தது. எல்லா வீடுகளும் ஒரே மாதிரி. வீடும் ஸ்டேஷனுக்கு அருகிலேயே. “சங்கோஜப் படாதே வா உள்ளே” என்று சிரித்த முகத்தோடு வரவேற்றாள் அவருடைய மனைவி. ” முதல்லே குளிச்சிட்டு வந்துடுப்பா. குளிக்க வெந்நீர் வேணுமா, பச்சத் தண்ணீயே பரவாயில்லையா? என்று கேட்டாள்.

“இல்லே வெந்நீர் வேண்டாம். பழக்கமில்லே” என்று சொல்லிக் குளிக்கப் போனேன். குளித்துவிட்டு வந்தேன். சுகமாக இருந்தது. காபி வந்தது. இங்கு வெயில் அவ்வளவாக இல்லை. வெளியில் வந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவும் சந்தோஷமாக இருந்தது. “என்ன போர் அடிக்கிறதா? ஏதாவது புஸ்தகம் தரட்டுமா, படிக்கிறயா, ஆனந்த விகடன், கல்கி எல்லாம் இருக்கு?” என்று கேட்டாள். புன்னகை பூத்த முகத்துடன். “உம்,” தான் என் பதிலாக இருந்தது. இவர்கள் இருவரும் தான் போலிருந்தது. குழந்தைகள் எதுவும் கண்ணில் படவில்லை. தோட்டத்தை ஒட்டிய சின்ன தின்னையிலேயே உட்கார்ந்து படிப்பதும் தோட்டத்தைப் பார்ப்பதுமாக பொழுது கழிந்தது. ஒரு நாள் இடைவெளியில் எங்கோ வந்தாயிற்று. புது புது மனிதர்கள். புதிய இடங்கள். நன்றாகத்தான் இருந்தது. “நீ சாப்பிட்டுடேன். அவர் உன்னை ரயிலில் ஏற்றிவிட்டு வந்து சாப்பிடுவார்,” என்று அழைப்பு வந்தது. சாப்பிட்டு வந்து மறுபடியும் தோட்டத்தின் முன் திண்ணையில். அவரும் வந்தார். “வா போகலாம்.” என்றார். “வருகிறேன்,” என்று சொல்லி விடைபெறுவது போல் தலையசைத்துக்கொண்டே கிளம்பினேன்.

ரயிலில் கூட்ட நெருக்கடி ஏதும் இல்லை. தாராளமாக உட்கார இடம் கிடைத்தது. டாடா நகர் வரை, நான்கைந்து மணி நேர பிரயாணம் என்று நினைக்கிறேன். சௌகரியமாகத் தான் இருந்தது. டாடா நகர் வந்து ரயில் நின்றதும் அப்பு மாமா ப்ளாட்·பாரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். இறங்கும் போதே பெட்டியை வாங்கிக்கொண்டார். “சௌகரியமா இருந்ததா? ஒண்ணும் கஷ்டமா இல்லையே?” சம்பிரதாயக் கேள்விகள் இல்லை. பள்ளிப்படிப்பு முடித்த பையன் இரண்டு நாள் ரயிலில் தனியாக வந்திருக்கிறான் என்ற நினைப்பு பின்னிருக்கும் கட்டாயம். ” கரக்பூரில் சாப்பிட்டயா, என் ·ப்ரண்டுக்கு எழுதியிருந்தேனே, வந்தானா, உன்னைக் கண்டு பிடிசுட்டானா, இல்லே ரொம்ப நேரம் காத்திருந்தியா?” என்று சரமாரியாக கேள்விகள். இப்போது நான் வாய்மூடி இருக்கவில்லை. கேள்வி கேட்பது மாமா. அதுவும் தமிழில். ஸ்டேஷனிலிருந்து பஸ்ஸில் தான் போனோம் என்று நினைவு. மாமா இருந்த இடம் பிஷ்டுபூர். டாடா இரும்புத் தொழிற்சாலை நிர்வாகம் உருவாக்கிய குடியிருப்பு.

கரக்பூர் மாதிரியே மிக வசதியாகவும் ஆடம்பரமேதுமின்றியும் கட்டப்பட்ட வீடுகள். இரண்டு முன் அறைகள். முன் திண்ணை. வீட்டின் பின்னே கொஞ்சம் இடைவெளி விட்டு அவுட் ஹவுஸ் போல இரண்டு அறைகள். வீட்டில் மாமி. பத்து வயசில் ஒரு பையன், சதாசிவம். “வாடாப்பா ” என்று மிக அன்போடும் சிரித்த முகத்தோடும் வரவேற்றாள் மாமி.

“ஆமாம். நீ என்ன நார்த் ரோடு, நார்த் ரோடுன்னே எழுதறே?. இது என். ரோடு. நார்த் ரோடு இல்லே. ஏ, பி, சி ன்னு தான் இங்கே ரோடுகளுக்கு பேர் வச்சிருக்கு. நல்ல வேளையா லெட்டர் வந்து சேர்ந்ததே. நார்த் ரோடுன்னு ஒண்ணும் கிடையாதுன்னு அவன் உன் கார்டைத் திருப்பி அனுப்பாமே கொடுத்தானே,” என்றார் மாமா. பக்கத்திலிருந்த மாமி சிரித்துக்கொண்டிருந்தாள். “அட அசடே” என்று சொல்வது போலிருந்தது.

மறுபடியும் “குளிக்கணுமா, வெந்நீர் போடட்டுமா?” என்று கேட்டாள் மாமி. “வேண்டாம். காலேலே கரக்பூரிலேயே குளிச்சாச்சே, அது போதும்.” என்றேன். இரண்டு நாட்களுக்குப் அப்போதுதான் மறுபடியும் வாய் பேச ஆரம்பித்திருக்கிறது என்று தெரிந்தது.

வெங்கட் சாமிநாதன்/3.11.09

Series Navigation