நிதானம்

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

கிருஷ்ணகுமார் வெங்கடராமன்


“சாப்பிடறத்தே என்ன அவசரண்டி உனக்கு! சீக்கிரம் கிளம்பினால் செளகரியமா சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போய் சேரலாம் இல்ல ?. அவசரப்படாமா நிதானமா போய் வா !”, என்று அவள் அம்மா எப்போதும் சொல்வதை ரம்யா நினைத்துப் பார்த்தாள். போகும் போது ஆட்டோவில் போய் பள்ளி அருகே இருக்கும் ரயில் கேட்டுக்குப் போய் நடந்து போக வேண்டும். வரும்போது ஸ்கூல் பஸ்.

அந்த ரயிலைப் பார்த்தால் ரம்யாவிற்குப் பயம் வரும். ‘ தட் தட் ‘ வென்று தண்டவாளம் அதிர தூரத்தே வரும் போது, அதற்குள் தண்டவாளங்களைக் கடந்து போய்விட வேண்டுமென்று ஒரு வேகம் வரும் அவளுக்கு. ஆனால், பயத்தினால் அப்படியே உறைந்து போய்விடுவாள். அந்த நாலு X 2 = எட்டுத் தண்டவாளங்களைக் கடந்து மூடியிருக்கும் ரயில்வே கேட்டைக் கடந்தோ, அது மூடியிருந்தால் கதவின் கீழ் குனிந்தோ பள்ளிக்கு ஓட வேண்டும்.

8.10 மணிக்கு வரும் ரயில் தாமதமாகி விட்டால் …அவ்வளவு தான், கூட்டம் அதிகமாகி, நெருக்கடியில் மீண்டும் கேட் திறந்து, கூட்டத்தோடு கூட்டமாகப் பள்ளிக்கூடத்தின் பிரேயர் ?ாலுக்குப் போக 8.35 மணி ஆகிவிடும். பின்னே, லேட் டாக வந்ததால் பி.டி. மாஸ்டர் முட்டி போடச் சொல்லுவார். உதவித் தலைமை ஆசிரியை வந்து வேறு மிரட்டி, அப்பாவிடம் அடுத்த நாள் கையெழுத்து வாங்கச் சொல்வாள். இது முடிந்து முதல் பீரியட் கணக்கு வாத்தியார் லேட்டாய் வந்ததற்கு மேலும் கணக்குகள் கொடுப்பார். ரம்யாவிற்குக் கோபமாக வரும். “யார் மீது தப்பு. நிதானமாய் வந்த அந்தப் பாழாய்ப் போன ரயில்வேமீது ‘இடி ‘ விழ !’ என்று ரம்யா நினைப்பாள்.

அன்று, 8.10 மணிக்கு வரும் மின்சார வண்டி “நிதானமாய்“ வழக்கம் போல் லேட். டாசல், பெட்ரோல் புகையில் ஆட்டோ, கார், வேன், ஸ்கூட்டர், மோட்டார் பைக் என்று அவளை அனைத்து வாகனங்களும் நெருக்கின. ஆட்டோக்காரன் ரயில்வே கேட் மூடிவிட்டதால் அதன் பக்கத்திலேயே இறக்கி விட்டான். அனைவரும் பொறுமையில்லாமல் ‘உர் உர் ‘ ரென்று உறுமிக் கொண்டிருந்த வாகனங்களை மேலும் முறுக்கிக் கொண்டிருந்தனர்.

சிலர், உயிருக்குப் பயமில்லாமல் எட்டுத் தண்டவாளங்களையும் கடந்து சென்றனர். பள்ளியில் ரயில்வே ‘பாயிண்ட் ‘ பற்றிச் சொல்லியிருந்தனர். சரியாகக் கவனிக்காவிட்டால், தண்டவாளங்களின் இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு விடுமென்று. ரம்யா பயந்து கொண்டே அப்படிக் கடப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள். எதுக்குப் பள்ளியில் ‘விதிமுறைகள், ஒழுக்கங்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் ?. இப்படி மீறுவதற்கா ?. பார்த்தால் படித்தவர்கள் மாதிரி தெரிகிறதே ! ‘, நன்றாக அவதிப்படட்டும் ‘ என்று நினைத்துக் கொண்டாள்.

கால் மடிந்து போலியாவினால் அவதிப்பட்டு, ஒரு காலை ஊன்றி நடக்கும் அந்தப் பையனை அப்போது தான் பார்த்தாள். அவள் பள்ளியில் அவன் படிப்பதாக ஞாபகம். அட ! இது என்ன ? நன்கு நடக்கும் நாம் காத்திருக்க, ஊன்றிக் கொண்டே இவன் மூடியக் கதவினை மீறுகிறானே ‘ பதறிப் போனாள் ரம்யா. அவள் பார்க்க, பார்க்க அது நடந்தது.

அவசரமாக அவன் காலை இழுத்து நடக்க, காலில் மாட்டியிருந்தச் செருப்பின் ‘வார் ‘ அறுந்து தொங்க அவன் கால் ‘சடக் ‘ கென்று தண்டவாளத்தில் மாட்டியது. அப்போது தான் வரவேண்டிய ரயிலுக்காக ‘பாயிண்ட் ‘ மாற்ற ஒரு பக்கம் தண்டவாளம் ‘டக் ‘ கென்று அவன் குதியங்காலைப் பதம் பார்த்த படி காலை நசுக்கியது. ‘அம்மா ‘ வென்று அலறியபடி அவன் கீழேச் சரிய, பை கீழே விழுந்து, அதன் உள்ளே இருந்த லன்ச் டப்பா சிதறி தயிர் சாதம் சிதறியது. புத்தகங்கள் சிதறின. அவன் விழுவதைப் பார்த்த மற்ற பெரியவர்கள் திகைத்து நிற்க, ரம்யாவும், ஒரு ஆளும் அவனை நோக்கி ஓடினார்கள். சரியானவன்! நிதானமாய் போகக் கூடாது. ? என்று நினைத்தரம்யாவிற்கு எப்படி அந்த தைரியம் வந்தது என்றுச் சொல்ல முடியாது.

அவனைக் காப்பாற்ற வேண்டுமென்ற வெறி வந்தது. கூட வந்த மற்றொரு ஆளிடம் ‘சார்! எப்படிக் காலை எடுப்பீங்க ? ‘ என்றாள். ‘ஸ்டேஷனில் சொல்லி மாற்றினால் தான் உண்டு. அதற்குள் வண்டி வந்துவிட்டால் …. ? ‘ என்று மற்றவன் முடிப்பதற்குள், ரம்யா இடது பக்கமிருந்த ரயில்வேஸ்டேஷனின் பிளாட்பாரம் மீது ஓடி கண்ணில் தென்பட்ட வெள்ளை அணிந்திருந்த டிக்கெட் பரிசோதகரிடம் சிறுவனைக் காண்பித்து பேச, பரிசோதகர் ஓடினார். கூட ரம்யாவும் ஓடினாள். உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பதற்றமான இவர்களைப் பார்த்து வரும் வண்டி எங்கிருக்கின்றது என்று கம்ப்யூட்டரில் பார்த்தார். எமெர்கென்சிக்கு வைத்திருந்த பொத்தானை அழுத்த அந்த தடத்தில் உள்ளே ரயிl சிக்னல்கள் ‘சிவப்பிற்கு ‘ மாறியது. அடுத்த ஸ்டேஷனில் உள்ள மின்சார ரயில் புறப்பட்டவுடன் உடனே நின்றது. உள்ளே பயணிகள் ‘ப்ச் ‘ சென்று சலித்துக் கொண்டனர். பையனை நோக்கி ரம்யா, ஓடினாள். இதற்குள், தண்டவாளம் நகர்ந்து இடம் கொடுக்க பையனின் காலை மற்றவர்கள் இழுத்து விட்டனர். கால் அடி பட்டு ரத்தம் கொட்டி கருநீலமாகியிருந்தது. பையன் கண் சொருகியிருந்தான்.

‘அப்பா, புழச்சிட்டான் இல்ல ?. டே! இப்படி கிராஸ் செய்ய, அந்தப் பள்ளி இதைத் தான் சொல்லிக் கொடுத்ததா ? ‘ என்றார் பையனை இழுத்தவர்.

‘அப்படியில்லீங்க, அங்க பாருங்க அந்த பொட்டை புள்ள எப்ப்டி விவ்ரமாப் போய் கரீக்டா, ரைட் ஆள்கிட்ட போய் சொல்லி இவனைக் காப்பாத்திச்சி ?….அதுவும் அந்தப் பள்ளியில படிக்கிற புள்ள தான். ? ‘ என்றார் மற்றொருவர். “நிதானம்ப்பா இந்த வயதில். நாம கூடப் பதட்டப் பட்டோமே ?” என்று இன்னொருவர் சிலாகித்தார்.

‘எல்லாம் தானாய் வர்றதப்பா. பெட்டர் லேட் தன் நெவர் தெரிஞ்சாக் கூட நாம குறுக்கே கேட் மூடிய பிறகு போறோமே ‘ என்று தன் மனித குலத்தையே வெறுத்தார் வெட்கித் தலை குனிந்தார், பையனை இழுத்தவர்.

ரம்யா பள்ளிக்குப் போன போது உதவித் தலைமை ஆசிரியைக் கடுமையாக ‘நெவர் பி லேட்!: என்றாள். ‘ ஐயம் சாரி மேடம் ஸ. ‘ என்று நிதானமாய் நடந்தவையைச் சொன்னாள் ரம்யா. பள்ளியே அவளைக் கொண்டாடியது. இந்த வயதில் இத்தனைப் பொறுப்பா, நிதானமாய் காரியம் முடித்ததை எண்ணி வியந்தது. ரம்யா லேட்டானாலும் அந்தப் பையன் “லேட்” ஆகாமல் தப்பியதை நினைத்து, பள்ளி அவளைக் கெளரவித்தது.

பள்ளி 3.45 மணிக்கு விட்டது. ரம்யா நிதானமாக தன் புத்தகங்களை எடுத்து வைத்து, டிபன் பாக்ஸை மறக்காமல் எடுத்துக் கொண்டு, வகுப்பறை விட்டு வந்து பார்த்தால் அவள் வீட்டுக்குப் போகும் ஸ்கூல் பஸ் அவளில்லாமல் போய் விட்டது.

அம்மா சாயங்காலம் சொன்னாள் “ஏண்டி, இவ்வளவு நிதானமாவாய் வர்ரது ?. பஸ்ஸைக் கோட்டை விட்டியே ? அப்பாவும் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு, தம்பியை மட்டும் விளையாட அழைத்துக் கொண்டு போயிருக்கிறார் ஸஸ”., என்று சொல்லி முடிவதற்குள் சிட்டாய் பறந்து அவசரமாய்ப் போனாள் வெளியே.

ரம்யாவை மோதுவதற்குள் “சக்” கென்று பிரேக் போட்டு ஆட்டோவை நிக்கவைத்த ஆட்டோக் காரன் “ஏன் பாப்பா, அரக்க பரக்க போரீயே ! நிதானமாய் பார்த்து போகக் கூடாது ?” என்றான்.

kksash@aol.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கடராமன்

கிருஷ்ணகுமார் வெங்கடராமன்