நிஜமான போகி

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ஜெ. ரஜினி ராம்கி


போகிப் பண்டிகை. பதினோரு மணி என்பதையே மறக்கடிக்கும் மார்கழி

மாதத்து மிதமான வெப்பம். இணைய நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த

தரைவிரிப்புகளை ஏற்றிக்கொண்டு கரூரிலிருந்து திருப்பாராய்த்துறை தாண்டி

திருச்சி மெயின் ரோட்டில் போய்க்கொண்டிருக்கிறது வேன். திருச்சி

நகரத்துக்குள் நுழைவதற்கு முன்னரே அந்த சோதனைச் சாவடியிலிருந்து சைகை,

வண்டியை நிறுத்தும்படி. மெனக்கெட்டு நடந்து வந்து தார்ப்பாயை விலக்கி,

சுனாமி நிவாரணப் பொருட்கள் என்று சொன்னாலும் திருப்தி வராமல் நிறைய

கேள்வி கேட்டு தங்களது ‘கடமையை ‘ செய்தார்கள் அந்த வெள்ளாடை

வேந்தர்கள். பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதிலளித்த பின்னர் அரை

மனதோடு அனுப்பி வைத்தார்கள். அதற்கப்புறம் இரண்டு மணிநேரத்துக்கு யாரும்

தொந்தரவு செய்யவில்லை.

வண்டி திருபுவனம் தாண்டி மயிலாடுதுறையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.

ஒரு பெட்ரோல் பங்க அருகே எதிர்த்தாற்போல் ஜீப்பிலிருந்து தடதடவென்று

குதித்த வருவாய்த்துறை அதிகார்கள் ஏதோ கள்ளக்கடத்தல் லாரியை பிடித்த

மாதிரி சுற்றி வளைத்து ‘ஸீன் ‘ காட்டினார்கள். இம்முறை சுதாரித்து எனது

ஜாதகத்தை தவிர மற்ற விபரங்களையெல்லாம் சொல்லிவிட்டேன். கொஞ்ச

நேரம் காத்திருக்க சொன்னார்கள். கொஞ்சமாய் ‘கவனி ‘த்தால் சீக்கிரம்

விட்டுவிடுவார்கள் என்றார் வேன் டிரைவர். அப்படியென்னும் தலைபோகிற

அவசரமில்லை காத்திருக்கலாம் என்று சொல்லிவிட்டு கருமமே கண்ணாய்

காத்திருக்க ஆரம்பித்தோம். நமது பொறுமை கண்டு பொறுமையில்லாமல்

அனுப்பி வைத்தார்கள்.

போக்குவரத்து போலீஸாரும், ரெவின்யூ அதிகாரிகளும் துருவியதில் எனக்கு

கோபமில்லை. சுனாமி என்ன சி.எம் வண்டியை கூட செக் செய்துதான்

அவர்களது கடமை. ஆனால், இப்படி கடமை தவறாமலிருக்கும் நல்ல விஷயத்தை

சுனாமி பாதித்த வாரத்திலேயே ஆரம்பித்திருந்தால் வந்து குவிந்த

நிவாரணப் பொருட்கள் வீணாக குப்பைக்கு போகாமல் பாதுகாத்திருக்க முடியும்.

வெளிமாவட்டங்களிலிருந்து உதவிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வருபவர்களை

எல்லையிலேயே நிறுத்தி வேறிடங்களுக்கு செல்ல உதவியாக இருந்திருக்கலாம்.

இதையெல்லாம் செய்வதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது. அரசு இயந்திரத்தை

முடுக்கிவிட்டு இதுபோன்ற அத்தியாவசியமான மாரமத்து பணிகளை

செய்திருந்தால் முன்கூட்டியே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்க முடியும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அவசர கதியில் லட்சங்களை அள்ளித் தெளித்து

இன்னும் இலவசங்களுக்கு எத்தனை காலம்தான் மக்களை அடிமையாக்கி

வைத்திருக்கப்போகிறார்களோ ?

—-

rajni_ramki@yahoo.com

Series Navigation

author

ஜெ. ரஜினி ராம்கி

ஜெ. ரஜினி ராம்கி

Similar Posts