நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

வெங்கட் சாமிநாதன்கடல் வழி வணிகம் போன்ற ஒரு புத்தகம் வந்து அது பலர் பார்வைக்குப் பட்டிருக்கிறது என்றால், இருண்ட மேகங்களிடையேயும் கூட ஒரு மின்னல் கீற்று பளிச்சிடுவது போல்தான் எனச் சொல்லத்தோன்றுகிறது எனக்கு. இப்படி பொதுவாசக வட்டத்திற்கு அப்பால் விழும் ஒரு துறை பற்றிய புத்தகம் புத்தக வணிகத்தின் அக்கறைக்குள்ளும் விழுந்துள்ளதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். ஆசிரியர் குறிப்பிட்டுள்ள மூல நூல்கள் பட்டியலில், மயிலை சீனி வேங்கட சாமியின் பழங்காலத் தமிழ்ர் வாணிகம், சாத்தன் குளம் அ.ராகவனின் நம் நாட்டுக் கப்பற்கலை, பா.ஜெயக்குமாரின் தமிழகத் துறைமுகங்கள், முனைவர் ப.சண்முகத்தின் சங்க கால காசு இயல், தமிழ் நாட்டு வரலாற்றுக் குழுவினரின் தமிழ் நாட்டு தொல் பழங்கால வரலாறு போன்ற புத்தகங்கள் முன்னர் வணிக, கல்வி நிறுவனங்களால் வெளியிடப்பட்டனவே ஆனாலும், இத் தகவல் கூட பரவலான பொதுப் பார்வைக்கு வந்துள்ள கடல் வழி வணிகம் புத்தகம் மூலமே நமக்குத் தெரிய வருகிறது. நரசய்யாவின் இப்புத்தகத்தைப் படிக்கும்போது அவர் மேற்சொன்ன புத்தகங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களைச் சொல்லும்போது, அப்புத்தகங்களும் கூட, கவனிக்கப்படாவிட்டாலும், தமிழின் பல்துறை அறிவார்த்த விஸ்தரிப்பிற்கு நல்ல வரவுகள் என்று தான் சொல்லவேண்டும். அவற்றையும், அவை போன்ற, சரித்திரம், இலக்கியம், கல்வெட்டு, நாணயவியல், தொல்பொருள் ஆய்வு, அகழ்வாராய்வு என்று பல துறைகளிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள அத்தனையையும் உள்ளடக்கியது நரசய்யாவின் இப்புத்தகம். இதை ஏதோ தகவல் தொகுப்பு என்று இப்போது சொன்னதைப் புரிந்து கொண்டால்,அது பெரும் பிழையாகும். holistic ஆங்கிலத்தில் சொல்வார்கள், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒருமையும் முழுமையும் கொண்ட இன்னொரு பார்வை என்று சொல்லவேண்டும். இதில், நரசய்யாவின் வாழ்வும், ஆளுமையும் உள்ளடங்கியது என்பது முக்கியமும் விசேஷமுமானது, ஏனெனில், இந்த holistic பார்வையைத் தந்துள்ளது, அவரது வாழ்வும், ஆளுமையும் தான். கடற் படைப் பொறியாளராகவும், மாலுமியாகவும் பணிபுரிந்தவர், பங்களாதேஷ் போரிலும் தன் கடமையாற்றி, பின் துறைமுகங்களைப் பற்றிய ஆராய்வு எல்லாம் இது சார்ந்த பல துறைகளைப் பற்றிய புத்தகங்களையும் ஆராய்வுகளையும் தன் இயல்பில் தன் சுயமாகத் தேர்ந்த அக்கறையிலும் தேடல் தாகத்திலும் சேர்ந்தவையெல்லாம், இப்புத்தகமாக வடிவெடுத்துள்ளன. நான் மிக விசேஷமாகக் குறிப்பிட விரும்புவது, இயல்பான அக்கறைகள், இயல்பாக வளர்ந்த ஆளுமை, தன்னிச்சையாகப் பிறந்த தேடல், எல்லாம் ஆளுமையின் அனுபவத்தின் வழி விளைபவை. அத்தகைய ஆளுமையிடமிருந்துதான் முதலில், நாற்பது வருடங்களுக்கு முன் கடலோடி வந்திருக்கமுடியும்.

ஆசிரியர் கூற்றுப்படி, ‘முன்னரே வெளிவந்துள்ள சிறந்த நூலகளிலிருந்து முக்கியமான பகுதிகளைத் தொகுத்து எளிமையான முறையில் தமிழில் சாதாரண மக்கள் படிப்பதற்குத் தக்கவாறு அளிப்பதும், ‘தொடர்ந்து அகழ்வாராய்வு, சாசனங்கள் மற்றும் மண்பாண்டச் சான்றுகளுடனும், நணயவியல் குறிப்புகளுடனும், அப்போதிருந்த வணிக முறைகள், செயல்பட்டு வந்துள்ள வணிகக் குழுக்கள் ஆகிய சான்றுகளுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது” Periplus of the Erythrean Sea, Plini, Xinru Liu, என்றெல்லாம் தொடங்கி, வின்செண்ட் ஸ்மித், நொபொரு கரஷிமா டெலோச் போன்றோரை யெல்லாம் கடந்து, நீலகண்ட சாஸ்த்ரி, நாகசாமி, ஜெயகுமார் என்று சுமார் 50 மூலாசிரியர்கள், நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் முழுதையும் ஒரு வாசிப்பில் உள்வாங்கிக்கொள்ள முடியும், ஜீரணித்து விட முடியும் என்பது என்னால் ஆகாதது. அதை இங்கு எடுத்துரைப்பது, சுருக்கமாகவேணும் என்பதும், நரசய்யாவுக்கு நியாயம் செய்யும் முறையில் என்பது என்னால் ஆகாது. ஆக, ஒவ்வொரு அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதை ஒரிரு வாக்கியங்களில் சொல்வது தான் சாத்தியம். படிக்கும் ஆவலைத் தூண்ட அது போதும். அத்தோடு ஆங்காங்கே எனக்கு மிகவும் புதியதாக, ஆசிரியர் நமக்குத் தரும் முழுச்சித்திரத்தின் ஒரு சுவாரஸ்யமான காட்சியாக, செய்தியாக, அந்த ஒன்றே சற்றே திறக்கும் ஒரு ஜன்னல் கதவாக, நுழைவாயிலாக இருக்கும் சாத்தியத்தை நம்புவதால் அவற்றையும் சொல்லிச் செல்வேன்.

சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே இயற்கையாக துறைமுகம் எங்கு அமையும் சாத்தியமோ அங்கில்லாமல், கடல் நீர் ஏற்றமும் இறக்கமும் அடிக்கடி நிகழும், கடல் கொந்தளிப்புகள் கொண்ட குஜராத், கட்ச் கரைகளில் தான் துவாரகா, லோதால், போன்ற பழங்கால துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. ஹரப்பா மக்கள் கடல் வணிகத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இக்காலம் கி.மு. 2400. ஆழ்கடலில் துறைமுகக் கட்டடங்கள் சிதைந்து ஆழ்ந்துள்ளன. இவ்வாறு தொடங்கிய வாணிகம் மேற்கே, கிரேக்கர்கள், ரோமர்களிடமிருந்து இடையே அராபியர்கள் மூலமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வாணிகம் பரந்திருந்தது. தெற்கே கொங்கணம் வரை. இப்பகுதி மிளகின் வாசனை கி.பி. 525-ல் காஸ்மாஸ் இண்டிகா பிளஸ்டஸ¤க்கு இந்த மிளகு பற்றியும், சீனாவிலிருந்து வந்த பட்டு பற்றியும் தெரிந்திருக்கிறது. சீனாவிலிருந்து பட்டு கிழக்குக் கடற்கரை வந்து, அங்கிருந்து தரைவழியாக, மேற்குக் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அராபியர் மூலம் செங்கடல் வழியாக ரோமுக்கும், கிரீஸ¥க்கும் சென்றது. இந்த வணிகம் பற்றி சங்க இலக்கியங்கள் நிறைய பேசுவது நமக்குத் தெரியும். அரிக்காமேடு போன்ற பல இடங்களில் ரோம நாணயங்கள் அகப்பட்டுள்ளன.

அதெல்லாம் சரி. அன்றைய தமிழ் நாட்டுக்கும் ரோமுக்கும் இடையே அராபியர் இடைத்தரகர்களாக வாணிபம் நடந்துள்ளதே தவிர, தமிழர் கடல் கடந்துள்ளனரா என்பது தெரியவில்லை. தமிழர் நாணயங்கள் ரோமில், கிரீஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளனவா என்பதும் தெரியவில்லை. ஹிமாலயச் சரிவின் புல் பூண்டுகளைப் பற்றி சங்கப் பாடல்கள் பேசுகின்றனவே தவிர, கடல் வாழ்க்கை பற்றி, ரோம நாட்டு வளம் பற்றி ஏதும் பேசவில்லை. உமறுப் புலவர் கூட முகம்மது நபி பிறந்ததாக தமிழ் நாட்டு வளம் தான் பேசுகிறார். தமிழ் நாட்டுத் துறைமுகம் பற்றி ப்ளினியும் மற்றோரும் தான் பேசுகிறார்களே தவிர தமிழ் கவிஞர் யாரும் ரோம் துறைமுகத்தில் கொட்டிக்கிடக்கும் மிளகு, பட்டு பற்றிப் பாடவில்லை. ஜியாகிர·பிக்கா என்னும் புகழ் பெற்ற நூலில், ஸ்த்ராபோ என்பவர் கி.மு.63-64 ல் பிறந்தவர், நைல் நதிகரையில் சோகித்து உட்கார்ந்திருந்தவனை என்னவென்று விசாரித்த எகிப்து அரசனுக்கு, அவன் இந்தியன் என்றும் தன் கப்பல் கவிழ்ந்து விட்டதென்றும், சொன்னதாக எழுதியுள்ளார். ஆனால் அக்காலத்திலிருந்தே, ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றுசொல்லி வந்திருக்கிறோம். கடலோடிய கதை ஏதும் நம்மிடம் இல்லை. ஆனால், கிழக்குக் கடல் தாண்டி படையெடுத்து, நாடுகள், தீவுகள் வென்று, கோவில்கள் கட்டி, ராமாயணக் கதைகளை சிற்பங்களாகச் செய்துள்ளதாக சிறப்பான வரலாறு உண்டு. கிழக்கே இத்தனை வீரமும், வாணிகமும், பண்பாட்டு விஸ்தரிப்பும் நிறைந்திருக்க, மேற்கே ஏன் அது ஒரே வரட்சியாக இருக்கிறது என்று தெரியவில்லை. கி.பி. 20-ல் அகஸ்டஸின் தர்பாரில், பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததாக, வின்சண்ட் ஸ்மித் எழுதுகிறார் ரோமர், தமிழ்த் துறைமுக இருப்புகளில் முஸிரி போன்ற இடங்களில் வசித்து வந்ததாகவும் நம்ப இடமுள்ளது என்று . கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பழமையான அரிக்காமேடு, வீராம் பட்டினம் போன்ற பெயர்களே சமண மதத் தொடர்பைச் சொல்கின்றன என்றும், மணிக்கிராமம் போன்றவை ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையான வர்த்தகக் குழுக்களைச் சொல்லும் என்றும், கிராமம் என்ற சொல்லுக்கே குழு என்று பொருள் என்றும், விமல பெக்ளி என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். கீழ்க்கரை, அழகன் குளம், மருங்கூர் பட்டினம், முசிரி, மரக்காணம், மாமல்லபுரத்தில் கடலில் ஆழ்ந்துள்ள துறைமுகம், காயல் பட்டினம், என்று தெரிந்த தெரியவராத பல துறைமுகங்கள் நிறைய. நரஸய்யா கொடுத்துள்ள துறைமுகங்களின் வரைபடம் ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வளவா? நாம் படித்தது கொற்கை, காயல் பட்டினம், முஸிரி என்று ஒரு சிலவே.

நகரத்தார் என்று நாம் இன்று அறியும் வணிகர் சமுதாயத்தின் வரலாறு மிக நீண்டது தமிழ் நாட்டில் வர்த்தகம், கடல் வழி வாணிகம், ஐந்நூற்றுவர் நாட்டுச் செட்டி, வீரக் கடியார், தன்மாச் செட்டிகள். பதினெண்விஷயத்தார் என்றெல்லாம் வணிகக் குழுக்கள் ஒரு கட்டுப்பாடான ஸ்தாபனமாக வளர்ந்து, ஒவ்வொரு பொருளுக்குமான தனிப்பட்ட வரி வசூலும், சுங்கமும், நாடு எந்த அரசு கைப்பட்டாலும், குழுக்கள் எவ்வித இடையூறுமின்றி இயங்கி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. இங்கு மட்டுமல்ல, கடல் வழி வாணிகம் பரவியிருந்தவிடமெல்லாம் இக்குழுக்கள் இயங்கி வந்துள்ளனர். கடல் கடந்த நாடுகளிலும் தான். ஸ¤மத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி. 1010-ல் பொறிக்கப்பட்டது. அதில் ஆயிரத்து ஐந்நூற்றுவர் கொடுத்த கொடை பற்றி சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது இதன் பொருள், சுமத்ரா தீவில் தமிழர் வணிகர் குழு ஒரு முக்கிய இடத்தைத் தம் இடமாகக் கொண்டு அங்கு இறங்கும் கப்பல் தலைவனும், மரக்காயர் எனும் முஸ்லீம் வணிகர்களும் எவ்வளவு தங்கம், கஸ்தூரி செலுத்திய பிறகே தரை இறங்கவேண்டும் என்ற வரி வசூலைப்பற்றிய கொடை இது. இது வணிக மேலாண்மையையும், அவர்கள் செயல்படும் விதிமுறைகளையும் சொல்கிறது. சீன நாட்டிலும் 1281-ல் சம்பந்தப் பெருமாள் என்னும் தமிழ் வணிகன் அந்நாட்டு அரசன் செக்கா சைக்கான் (குப்ளே கான்?) அனுமதியுடன் சிவ பெருமானின் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறான், அரசனின் நன்மையை முன்னிட்டு. இக்கோவிலின் பெயர் திருக்கானேஸ்வரம். கிருஷ்ணன் கோவிலாக இருந்தாலும் தில்லியில் பிர்லா கட்டிய கோவில் பிர்லா மந்திராகத்தானே பெயர் பெறுகிறது! இதற்கு முன்னோடிகளுண்டு. கி.மு. 140-86-ல் ஹ¥வாங் சு (காஞ்சீபுரம்) வோடு வணிக தொடர்புகள் இருந்தன. கியோ தங்க் சு என்ற சீன நூல், சீன வணிகர்களுக்காக, பல்லவர்கள் கோவில் கட்டித் தந்ததாகச் சொல்கிறது. இம்மாதிரியான பரிமாறல்கள் மனித உறவுகளுக்கும், நாடுகளிடையே உறவுக்கும், கடைசியாக வணிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன மேலும் இவ்வணிகர் குழுக்கள் (அக்காலத்திய Chambers of Commerce) தம் விதிமுறைகளையும் வரிகளையும் தாமே நிர்ணயித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான குழுக்கள் கி.பி. ஓன்றாம் நூற்றாண்டிலிருந்து 9ம் – நூற்றாண்டு வரை தொடர்ந்து பின் படிப்படியாக குறைந்துள்ளதாகத் தெரிகிறது இவையெல்லாம் பழங்கால இடைக்கால கடல்வழி வாணிகம், வணிகக் குழுக்களும் வணிகப் பெருமக்களும் என்னும் அத்தியாயங்களில் எனக்கு மிக விசேஷமாகத் தோன்றிய நிகழ்வுகளில் ஒரு சில.

அக்காலங்களில் ரோம நாணயங்கள் தான் முதல் வருகை தந்தவை. கி.மு. 79-ல் வெளியிடப்பட்ட ரோம நாணயம் கிருஷ்ணகிரியில் கிடைக்கிறது. தங்க நாணயங்கள், செப்பு நாணயங்கள் குவியல் குவியல்களாக ஆங்காங்கே அகழ்வாராய்வில் கிடைக்கின்றன. இந்நாணயங்கள் இவற்றின் உலோக மதிப்புக்காக இந்தியர்கள் சேர்த்தனர் என்று தெரிகிறது. சில நாணயங்களில் துளைகள் இருப்பதைக் கண்டால், . மாலையாகக் கோர்த்து அணிந்துள்ளனர் எனத் தெரிகிறது. ஆக, இவை, இந்நாளைய சவரன் மாலைகளின் முன்னோடி போலும். சோழர் காலத்தில் தாமிர நாணயங்களையே வெளியிட்டனராம். சுங்க அரசினர்களின் காலத்து சீன நாணயங்களும் கிடைத்துள்ளன. வணிகர் மாத்திரமல்ல,. பொற்கொல்லர், கற்கொல்லர்கள், சிற்பிகள், கட்டிடத் தொழிலாளிகள் போன்றோரும் சீனம், தாய்லாந்து, சுமத்திரா போன்ற இடங்களில் பயணம் செய்தவராக, ஆங்காங்கே குடியிருப்புகள் கொண்டவராக இருந்துள்ளனர், சீன நாட்டில் கிடைத்த கல்வெட்டுகளில், தமிழிலும், சீன மொழியிலும் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தாய்லந்தில் கிராபி மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டு கி.பி.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் ‘பெரும்பட்டன் கல்’ என்று பொறிக்கப் பட்டுள்ளது. இக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்ட இடம் மணிக்குன்று. இன்னொன்று டாகுவா பா என்ற இடம். இதை தாலமி தக்கோலா என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒன்பதாவது நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டு. இங்கு ஒரு ஏரி கட்டப்பட்டதெனவும் அதை சேனாமுகத்தார், மணிகிராமத்தார் என்னும் தமிழ் வணிகக் குழுக்கள் காத்து வந்தனர் என்பதும் தெரிகிறது. இப்படி நிறைய செய்திகள் சுவாரஸ்யமானவை. தமிழ் நாட்டு நகரத்தார் தம் வணிக வரலாற்றுப் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தால், அது மிக பழமையானதும் பிரும்மாண்டமானதுமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இத்தோடு கடல் வழி வணிகம் என்றால் கப்பல் கட்டும் தொழிலிருந்து தூரப்படுமா என்ன?. சீனத் துறைமுகங்களில் இந்தியக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சிக் காத்திருந்ததைப் பற்றி மார்க்கோ போலோ சொல்லியிருக்கிறார். கப்பல்கள் எத்தனை வகைப்பட்டவை, அவற்றின் பாகங்கள் என்னென்ன, எத்தகைய அலங்கார முகப்புகள் அவற்றிற்கு இருந்தன என்றெல்லாம் விரிவாகச் சொல்கிறார் ஆசிரியர். மட்பாண்ட சில்லுகளில் கப்பல் படம் வரையப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில எகிப்துப் பெண்மணியின் சித்திரம் போல வரையப்பட்டிருக்கின்றன.

அராபியர் இங்கிருந்து மிளகு, பட்டு போன்றவை மாத்திரம் மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் கலாச்சாரத் தூதுவர்களாகவும், இங்கிருந்த அறிவுச் செல்வத்தையும் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்திய எண்கள் அராபிய எண் என்று பெயர் சூட்டப்பட்டது நமக்குத் தெரியும். அக்காலங்களில், பூகோளத்தில் அவர்கள் வகித்த இடம் பலபரிமாறல்களுக்கு அவர்களைத் தூதுவர்களாக்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, தந்திரங்கள் நிறைந்த வணிகர்களாகவும் தெரிகின்றனர்.

அராபியர்களே எங்கிருந்தோ மிளகையும், பட்டையும் கொடுத்து, இங்கிருந்து குதிரைகளை வாங்கி விற்று கொள்ளை லாபம் அடிப்பதைப் பார்க்க போர்த்துக்கீசியருக்கோ, டச்சுக்காரர்களுக்கோ பிடிக்குமா. அதை தாமே ஏன் செய்யக் கூடாது என்று நினைக்கமாட்டார்களா. தமிழருக்கு குதிரைகளை ஒவ்வொன்றுக்கும் 500 சக்கி தங்கம் கொடுத்து வாங்கத் தான் தெரியும். வளர்க்கத் தெரியாது. லாடம் அடிக்கவேண்டும் என்று தெரியாது. அராபியர்கள் அந்த ரகசியத்தைச் சொல்லமாட்டார்கள். வெகு சீக்கிரம் குதிரைகள் கால் புண்ணாகிச் சாகும். 2000 குதிரைகள் வாங்கினால் நூறுதான் மிஞ்சும். அப்போதானே வியாபாரம் பெருகும். இதை எழுதியிருப்பது மார்க்கோ போலோ.

போர்ச்சுகீசியர் வந்தது, அவர்களைத் தடுக்க அராபியர் போட்ட சண்டைகள், நடந்த கொலைகள், இப்படி ஒவ்வொரு ஐரோப்பிய வருகையும் அராபியர்கள் வியாபாரத்தைக் கைப்பற்றவும், மதம் பரப்பவும், பின் நாட்டைக் கைப்பற்றவும் என்று சரித்திரம் விரிகிறது. அக்காலங்களில் இந்தியரும் அராபியரும் நிறைய காயம் பட்டுள்ளனர். கடைசியில் அவர்களும், நம் நாடும் சூறையாடப்பட்டது சரித்திரம். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரேயே, இந்தக் கொள்ளையில் நடந்த சண்டைக்கு போப்பாண்டவர் தம் தேவ ஆணை பிறப்பிக்கிறார். கிழக்கு போர்த்துக் கீசியருக்கு, மேற்கு ஸ்பானியருக்கு. இந்த ஆணை 1493-ம் ஆண்டு ஸ்பானிய போப்பால் பிறப்பிக்கப்பட்டது. குரங்கு மத்யஸ்தம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறதோ என்னவோ.

இதன் பின் வரும் சரித்திரம் இந்திய கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தையும் கடல் வழி வணிகத்தையும், கப்பல் உடைமைகளையும் திட்டமிட்டு அழித்து தம் ஏகபோகமாக்கிய ஆங்கில காலனியாதிக்க சரித்திரம் நமக்குத் தெரிந்தது. இதில் சிதம்பரம்பிள்ளை கப்பல் ஒட்ட முயன்று தோற்ற வரலாறு நமக்குத் தெரியும். தெரியாத வாடியா, ஸிந்தியா போன்ற வணிகர்களின் தேசபக்திப் போராட்ட வரலாற்றை ஆசிரியர் சொல்கிறார். அவை நம் வணக்கத்தை வேண்டுபவை. அவர்கள் வெறும் வணிகர்களல்லர்.

கடைசியில் இந்திய துறைமுகங்களின் வரலாறும் இன்றைய வளர்ச்சிக் கட்டம் வரை, விரிவாகச் சொல்கிறார் நரஸய்யா. அவர் வாழ்வு அத்துடன் பிணைந்திருந்திருக்கிறது. விவரமாகச் சொல்லியிருக்கிறார்.

இதில் வரலாற்று அறிவும், தன் மண்ணின் பற்றும், எழுத்துத் திறனும், மக்களுக்கு எளிய தமிழில் சொல்லவேண்டும் என்ற அவாவும் கலந்துள்ளன. ஆசை பற்றி அறையலானேன் என்று சொல்லாமல் சொல்கிறார். இன்னும் ஒன்றிரண்டு முறை படித்து முடிந்த அளவு உள்வாங்கிக் கொள்ளவேண்டும். கடல், வாணிகம், என்ற மையப் புள்ளிகளிலிருந்து பல துறைகள் வட்டங்களாக விரியும் ஒரு என்ஸைக்ளோபீடியா இது. நரசய்யாவுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

—————————————————————————– வெங்கட் சாமிநாதன்./27.4/06

கடல்வழி வணிகம்: நரசய்யா: பழனியப்பா பிரதர்ஸ்: கோனார் மாளிகை, 25 பீட்டர்ஸ் சாலை, சென்னை 14 பக்கம் 382 விலை ரூ. 225.

swaminathan_venkat@rediffmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்