து ை ண – குறுநாவல் – 1

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ம.ந.ராமசாமி


—-

மு ன் னு ை ர

புதிய வானத்தின் கீழே…

/ஞானவள்ளல்

சிலைகள்

அறியுமோ

கற்பூர வாசனை

/ஞானக் கோமாளி, கவிதைத் தொகுதியில் எஸ். ஷ./

அன்பு நண்பர் ம.ந.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுதி /வாழத் துடிப்பவர்கள்/ பெற்ற வரவேற்பு புதிய செய்தியல்ல. சுயம்பு அவர். காலங் காலமாய் வழிவழியாய் நமக்கு போதிக்கப் பட்டுள்ள சிந்தனைகளை தத்துவங்களை பழக்கவழக்கங்களை ம.ந.ரா. தம் படைப்புகளில் வியூகப்படுத்தி அலசுகிறார். எக்கால கட்டத்திலும் இப்படி எழுத்துக்கள் சராசரி மனிதத் தேவைதான்.

/யன்மே மாதா/ என்ற அவரது கதை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றென்பேன். ம.ந.ரா.வின் சிறப்பு சராசரிகளிடம் அவரது தோளணைத்த நட்பு. அலட்சியமற்ற ஆதுரம். உனக்குத் தெரியவில்லை, என்ற எள்ளலோ, எனக்குத் தெரியும் என்ற மமதையோ அவரிடம் இல்லை.

/துணை/ என்கிற இந்தக் குறுநாவல் கடவுள் என்கிற கற்பனாவாதத்தை விசாரிக்கிறது. மரபுகளைச் சுமந்து திரிகிற ஓர் இளைஞனையும் – தன்னுள் ஆராய்ந்து கடவுள் என ஒருவர் இருக்க முடியாது எனத் தெளிந்த, ஓய்வுபெற்ற ஒரு முதியவரையும் அறிமுகப்படுத்தி, இருவருக்குமான தள வித்தியாசங்களை முரண்பாடுகளை அலையெழுப்பி நகர்கிறது.

கடவுள் இல்லை – என அவனுக்கு எடுத்துக்காட்ட பெரியவர் முயல்கிறார். பேய், பிசாசு பற்றிய அவனது பயத்தைப் போக்க முன்வருகிறார். மெல்ல கடவுள்சார்ந்த அவன் அனுமான நம்பிக்கைகளை அசைக்கிறார். சுயமாய் சிந்திக்கவும் கேள்விகள் கேட்கவும் மறுத்துப் பேசவும், தன் கருத்துகளை எடுத்துச் சொல்லவும் அவர் அனுமதிக்கிறார்.

தம் கருத்தைத் திணிக்க அவர் முயலவேயில்லை. அவன் முன்னால் கடவுள் படத்தைச் செருப்பால் அடிக்கவோ, அவன் பூநுாலை அறுக்கவோ நினைக்கவில்லை.

கடவுள் அவனுள் புனித சிம்மாசனம் போட்டு அமர்த்தப்பட்ட கனமான மதிப்பு. கடப்பாரை கொண்டு அந்த பீடத்தைத் தகர்ப்பது சரியல்ல. இளைஞன் தானே முன்வந்து சலுானில் முடியுதிர்ப்பது போல, தனது ஆதாரமற்ற நம்பிக்கைகளை உதற வேண்டும் என பெரியவர் விரும்புகிறார். காத்திருக்கிறார்.

அடாடா பெரியவர் ஒரு தவறு செய்கிறார். அவனது நம்பிக்கைகளை, அவை போலி என அடையாளங் காட்ட முனைந்தவர், வேறு புதிய நம்பிக்கைகளை, அவனவன் தானே உணர்ந்து அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளைப் பதியன்போட, அவனது உள்வெற்றிடத்தை நிரப்ப தவறி விடுகிறார். சாதாரண மனிதன் அவன். அவன் திகைக்கிறான். வாழ்க்கைக்கே அர்த்தமில்லையோ என விரக்தியை எட்டுகிறான். மனிதனை மனிதன் நம்புகிற, நேசிக்கிற சமூக வாழ்வுக்கு அவர் அவனைக் கரைசேர்ப்பதுடன் கதை முடிகிறது.

இலட்சிய மீசை முறுக்காத பெரியவர் நல்ல பாத்திரப் படைப்பு அல்லவா ? அவர் தாமும் தம்மை சிறு பிசகு ஏற்பட்டபின் சரிசெய்து கொள்வது யதார்த்த வீர்யத்தை அதிகப்படுத்துகிறது அல்லவா ?

இளமையில் எகிறல், முதுமையில் பிரமைகள் நடைமுறை. உத்திரீதியாக மாற்றிக் கொள்கிறார் ஆசிரியர். வந்தது இதுவே, வாய்த்தது இதுவே என வறட்டு வேதாந்தம் பேசவில்லை பெரியவர். கலாச்சார பாரம்பரிய அடிநாதத்தின் தேவையை அவர் புறக்கணிக்கவும் இல்லை. பழைய சட்டையை உதறுக. மனிதனை மனிதன் விலகிப்போய் என்ன வாழ்க்கை, என்ன தத்துவம் என்கிறார் பெரியவர். நியாயம்தானே ?

சரிதானே அது ?

சராசரி மனித வாழ்வை ஒரு கலைஞன் விசாரணைக்கு உட்படுத்தும்போது எதிர்க்குரல்கள் எழவே செய்யும். ஒரு விரோதிபோல சமுதாயம் அவனை முறைத்துக் கொள்ளலாம்.

கேள்விகளைக் கிளப்புவது விஞ்ஞானபூர்வமானது. மதவாதிகள் அன்றாட தண்ணர்க்கஷ்டம், வேலையில்லாத் திண்டாட்டம், பசி… போன்றவற்றை நிராகரிக்கிறார்கள். லெளகிக வட்டத்தை மற. இறைவனை நினை. சுகம் கிடைக்கும்… என்கிறார்கள். படும் துயரங்களுக்கு முற்பிறவி, பாவம் என வியாக்கியானங்கள் தருகிறார்கள். புறவுலக வாழ்க்கை பொய். மேலுலக வாழ்க்கை, இறந்த பின்னான வாழ்க்கை, அதுவே நிஜம்… என்கிறார்கள் அவர்கள்.

மனிதனின் அன்றாட இக்கட்டுகளுக்கு ஆறுதல் அளிக்கிற கவனத்தில், மதங்கள் அவனது எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கின்றன. அதைவிடப் பெரும் தவறு ஒன்றும் நிகழ்கிறது. சமூகத்தை நசுக்கி முதுகில் ஏறியமர்கிற அதிகார வர்க்கத்தை, பணக்காரர்களை அவை பாதுகாக்கின்றன. மதத் தலைவர்கள் பணக்காரர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்யவோ, அவர்களின் கார்களில் போய் மதப் பிரச்சாரம் செய்யவோ வெட்கப்படுவது இல்லை. மதத்தலைவர்கள் காலமாற்றத்தில் அவர்களே பெரும் தனவந்தர்களாகவும் ஆகிப் போகிறார்கள்!

பிறந்ததில் இருந்து சாகும்வரையும், செத்த பின்பும் திவசம் அது இதுவென்றும் ஒரு கும்பல் பயந்த சாமான்ய ஜனங்களைப் பணவேட்டையாடி வருகிறது.

எதிர்ப்புகள் வலுக்கும்போது எழுத்தாளன் பணி தீவிரமாகிறது. பூமி உருண்டையானது, என்று முதலில் சொன்னவன் கதி என்னாயிற்று ?

ம.ந.ரா. தமது எழுத்தைப் பயிற்சிக் களமாக்குகிறார். மிகுந்த நளினத்துடன் அவர் வாதம் புரிகிறார். சிநேக பாவம் அவருடையது. பில்லி சூன்யம் ஏவல், பற்றிய ஒரு விவாதத்தில் அவர் சொல்கிறார்- ரெண்டாம் உலகப்போரை உசுப்பிவிட்டவன் ஹிட்லர். இத்தனை சண்டை சச்சரவுல்லாம் எதுக்கு ? பேசாமல் ஹிட்லர் காலடி மண் எடுத்து அவன்மேல் பில்லி சூன்யத்தை ஏவி விட்டு போரை முடிச்சிருக்கலாமே-

கையருகேயான ஓர் உதாரணம், என நமது மதத் தலைவரைச் சொல்லி விளக்க அவர் முற்பட்டிருந்தால் சராசரி மனித முகத்தில் இந்தப் புன்னகை இராது. ம.ந.ரா. அதை அறிந்திருக்கிறார்.

ம.ந.ரா.வின் சிறுகதை /யன்மே மாதா/ தமிழின் முக்கியச் சிறுகதை, இந்த /து ை ண/ அவரது முக்கியக் குறுநாவல் என்பேன்.

அவரது /கோயா சாஸ்திரி/ கதையில் ஒரு விவாதம் இது- 1. யாராலயும் தாண்ட முடியாத சுவர் ஒன்றை கடவுளால் கட்ட முடியுமா ? (முடியும்.) 2. அப்படிக் கட்டியபின் அவரால், அந்தக் கடவுளால் அந்தச் சுவரைத் தாண்ட முடியுமா முடியாதா ?

கடவுளுக்கு உன்மேல் இரக்கம் உண்டெனக் காட்டிக் கொள்ளத் தோன்றினால் உன் குதிரைகளைப் பறித்துக் கொண்டு திரும்பத் தருவார், என்பது ஆங்கிலப் பழமொழி.

கவிஞர் நீலமணியின் ஒரு கவிதை-

என்ன வரம் வேண்டும்

என்கிறார் கடவுள்

– அது தெரியாத

நீர் என்ன கடவுள் ?

மகாகவி பாரதியார் ஒரே வரியில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறாரே…

கடவுள் கேட்டார். ‘பக்தா, இதுதான் பூலோகமா ? ‘

எஸ். ஷங்கரநாராயணன்


முதல் பகுதி

மாருதி ஜிப்சியை ஒரு பக்கமாக நிறுத்தினேன்.

கதவைச் சாத்திப் பூட்டிவிட்டு சாவியைப் பையில் போட்டுக் கொண்டு இப்படி சற்றுத் தள்ளி நின்று பார்க்கும்போது காரின் வெண்மை மாலை வெயிலில் தங்கத் தகடு வேலைப்பாடால் ஆனதாகத் தெரிகிறது. பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் வாளிப்பு!

திரும்பி நடந்தேன்.

ஆடவரும் மகளிருமாக மைதானத்தில் குழுமிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆடவர், மகளிர் என்றால் இங்கே முதியவர் என்று பொருள். ஓய்வு ஊதியம் பெறுநர். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலும் கண்களை மூடி சென்றகாலத்தைக் கனவில் அசை போடுகிறவர்கள். மாலை மயங்கி இருள் கவியத் தொடங்கும்போது, அவர்கள் கோவில் குளக்கரையை நாடிச் செல்கிறார்கள். இவர்களுக்கு கதாகாலட்சேபம் என்பது வடிகால்.

தேசிய உயர்நிலைப் பள்ளி மைதானம். இரண்டு நாட்களாக இங்கே நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் பாகவதம் சொல்கிறார்…

கதை கேட்க இளைஞர்களும் வருகிறார்கள்.

இந்த இளைஞர்கள் ஜாதி மதம் பேரில் பிடிப்புள்ளவர்கள். நெற்றியில் மூவிரலால் திருநீறு பூசி, புருவங்களிடை சிவந்த குங்குமம் வைத்திருக்கிறார்கள்.

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் முகம் கை கால் கழுவி, தாயோ மனைவியோ தரும் காபி டம்ளரை வாங்கி அருந்திவிட்டு, நேராக கோவிலுக்குப் போய்ப் பிரதட்சிணம் செய்து மூலவரை விழுந்து நமஸ்கரித்து விட்டு, நவகிரகங்களைத் தவறாமல் எண்ணியெண்ணி ஒன்பது சுற்று சுற்றி திருப்தி செய்துவிட்டு, சண்டிகேஸ்வரரை செவிடாக நினைத்து தாங்கள் வந்து போனதைக் கைதட்டல் மூலம் உணர்த்திவிட்டு, நேராக கதா காலட்சேபம் கேட்க வந்து உட்கார்கிறார்கள்.

அப்படி குறிப்பாக ஓர் இளைஞன் இங்கு வருகிறான்.

அவனும் நானும் இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் அமர்கிறோம். பேசிக் கொண்டது இல்லை. மணி என்னாகிறது, இத்யாதி கேள்விகள் எங்களுக்குள் நிகழவில்லை. நான் ஒருவன் அருகில் உட்கார்ந்திருப்பதை அவன் உணர்ந்திர்க்கிறானா என்பதே சந்தேகந்தான்.

இளைஞனின் கவனம் முழுதும் காந்தம் ஈர்த்தாற் போல பாகவதரின் கதையில் லயித்திருக்கும். சப்பணம் கூட்டி, முதுகை நிமிர்த்தி, ஆடாமல் அசையாமல், நேராகப் பார்வையைச் செலுத்திக் கொண்டு அவன் அமர்ந்திருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது!

ராணுவ அதிகாரியாகப் பணி புரிந்தவன் நான் என்று பேர். ‘அட்டென்ஷனில் ‘ நின்று பார்வை நிலைகுத்தி நிற்கப் பயிற்சி பெற்றவன். அப்படியான என்னால் இப்போது ஒரு நிமிஷம் ஒரே நிலையில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. காலை மாற்றிப் போட்டுக் கொள்வேன். இங்கும் அங்குமாகப் பார்வை அலையும். கதா காலட்சேபக்காரர் சொன்ன ஒரு விவரத்தை வைத்துக்கொண்டு, அதில் லயித்து, அல்லது அதன்மீது சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, கதையைக் கோட்டைவிட்டு விடுவேன்!

மனம் ஒருமித்தல் என் சக்திக்கு மீறிய செயலாக இருக்கிறது.

இந்த இடத்தில் என்னைக் குறித்து இன்னும் சற்று விரிவாகச் சொல்லி விடுவது புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். நான் நாத்திகன். பரம நாத்திகன். எனக்கு இந்த கடவுள்- மதம்- ஜாதி- சகுனம்- ராகுகாலம்- பஞ்சாங்கம்- ஜாதகம்- சோதிடம்- ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை அறவே கிடையாது.

மேஜராக ராணுவத்தில் வேலைபார்த்து இப்போது ஓய்வு பெற்றிருக்கிறேன். லைட் இன்ஃபன்ட்ரியில் பணி. சீனச்சண்டை, பாகிஸ்தான் போர், பங்களாதேஷ் விடுதலை ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டவன்… இன்னலிலும் துயரத்திலும் மீளமுடியாத இடர்ப்பாடுகளில் சிக்கிக்கொண்ட நேரத்திலும், அடிபட்டு மருத்தவமனையில் மாதக்கணக்கில் படுத்திருந்த காலங்களிலும், இறைவா! – என ஒருசொல் கூறி என் பலவீனத்தை உணர்த்தியது இல்லை!

இன்றுங்கூட எதாவது உபயோகமான பணியை மேற்கொண்டு ஈடுபட முடியும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கின்றன.

அவசியம் இல்லை என்று இருக்கிறேன். சமுதாய முன்னேற்றத்க்காக ஊதியமற்ற கெளரவப் பதவி கொடுத்தாலும் வகிக்கக் தயார்தான். எந்தவோர் அமைப்பும் என்னைத் தேடி வரவில்லை. நானே வலியச் சென்று உதவுவது கிடையாது. கொள்கை. நான் கற்ற பாடம் அப்படியொரு கொள்கையைக் கைக்கொள்ள வைத்தது.

ஓய்வூதியம் வருகிறது. ஈட்டிய ரொக்கம், சேமிப்பு ஆகியவை நிரந்தர வைப்புத்தொகை என மாதாமாதம் வட்டியை அளிக்கிறது. என் மனதுக்குத் திருப்தி தரும் வகையில் கலையுணர்வோடு வீடுகட்டிக் கொண்டிருக்கிறேன். சுற்றி தோட்டம் அமைத்துள்ளேன்.

ஓய்வு பெற்றபின் அவளோடு சேர்ந்து நான் பிரியாது இருப்பதில் என் மனைவி சண்பகத்துக்குத் தீராத மகிழ்ச்சி.

மூத்த மகன் தோஹாவில் என்சினீராகப் பணியாற்றுகிறான். அவனிடம் இருந்து மாதா மாதம் தவறாமல் /டிடி/ வருகிறது. மணம் முடிக்க வேண்டும் அவனுக்கு. இளையவன் சென்னையில் டாக்டருக்குப் படிக்கிறான்.

எனக்கு என்ன குறை ? நிச்சிந்தை. சித்தன் போக்கு.

ஜெ. கிருஷ்ணமூர்த்தி முதல் சுஜாதா வரை என் பார்வையில் படுபவைகளை, என் கைக்கு எட்டுபவைகளை எல்லாம் படிக்கிறேன். காலையில் ஆங்கில ஏடு- மாலையில் தமிழ் நாளிதழ் பார்க்கிறேன். வேளைக்குச் சாப்பாடு பழம் பால்… என்று குறைச்சலே இல்லை.

டபாபடாஸ் கிடையாது. இருதயம் சுத்தமாக, சத்தம் இல்லாமல் ஓடுகிறது.

மார்க்கெட் சென்று பொருட்களை வாங்கி வருவதைப் பொறுப்பாக ஏற்றிருக்கிறேன். பேரம்பேசாமல் பெரிய மனிதன் என்று பேர் வாங்கி காய்கறிகள் வாங்கி வருகிறேன்…

கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னாளானால், காரில் சண்பகத்தைக் கூட்டிக்கொண்டு போய் சன்னிதியில் நின்றுவிட்டு வருவது உண்டு. அல்லது அவள் சுவாமி தரிசனம் பண்ண, நான் சிற்பங்களைப் பார்த்துத் திரிவேன்.

சினிமா போவதில்லை. தொலைக்காட்சி பார்க்கிறேன். பாலச்சந்தர் மூன்று தலைமுறையாக அதேகதையை வாய்வலிக்காமல் சொல்கிறாரே என ஆச்சரியப் படுகிறேன். தோட்டத்தைக் கொத்தி, காய் மலர்ச்செடிகளைப் பேணி, நீர்வார்த்து மன நிறைவு பெறுவது வழக்கம்.

இப்படி கதா காலட்சேபங்களுக்குப் போய் நாலுபேரைப் பார்த்து கவனிப்பது பொழுதுபோக்கு.

எனக்கு என்ன குறை ? ‘சொல்லாதீங்க! கண்படும்! ‘ என்பாள் சண்பகம்.

எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது!

‘குட் ஈவ்னிங் மிஸ்டர்! ‘

உட்கார்ந்திருந்த இளைஞன் திரும்பினான். முறுவல் அவனிடம் மலர்ந்தது.

‘குட் ஈவ்னிங் சார்! ‘

‘பாகவதர் வர நேரமாகுமோ ? ‘ – கைக்குட்டையால் தரையை ஒதுக்கிவிட்டு அதையே விரித்து அமர்ந்தேன்.

‘வந்துடுவார். இன்னும் நேரமாகலையே! ஆறரைக்குத்தானே தொடக்கம். கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ரொம்ப பங்க்ச்சுவல்! ‘

‘ரெண்டு நாளாக உங்களை இங்க பார்க்கிறேன்… கதா காலட்சேபம்னா ரொம்பப் பிடிக்குமோ ? ‘

‘பொதுவா எந்தக் கதா காலட்சேபத்தையும் விடமாட்டேன். மாங்குடி… துாப்புல்… இவாளோட கதைகளை விரும்பிக் கேட்பேன். நீடாமங்கலம் அழகாக் கதை சொல்வார். ஜதி ரொம்ப நன்னா இருக்கு. காளிங்க நர்த்தனம் வர சமயத்துல அவர் சொல்ற ஜதியும் ஸ்வரமும் மனசை அள்ளும்… ‘

நான் முன்னேசொன்ன இளைஞர்கள்பற்றிய வர்ணனை இவனுக்கு வெகுவாகப் பொருந்தும். மற்றபடி வட்ட முகம். சிகப்பு இல்லை. கருப்பு என்றும் சொல்ல முடியாத நிறம். ஒட்டி வெட்டப்பட்ட முடி. விகிடு எடுத்து வார முடியாமல் முடி கம்பி கம்பியாக நிற்கிறது.

தடிமனான உடல் வாகு. சாதாரண உயரம். ஊளைச் சதை. உடற்பயிற்சி கிடையாது எனத் தெரிகிறது!

‘உங்க பேர் என்ன தம்பி ? ‘

‘ராமகிருஷ்ணன்! ‘

/ெ த ா ட ர் கி ற து../

Series Navigation