தியாகத்தின் கதை – போர்க்குதிரை – நுால் அறிமுகம்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

பாவண்ணன்


ஏராளமான தொன்மக்கதைகளால் நிரம்பியிருப்பது மனிதமனம். அத்தொன்மங்களில் இடம்பெற்றவர்கள் அனைவரும் ஒருவகையில் நம் மதிப்புக்குரியவர்கள். நம்மால் மேற்கொள்ளமுடியாத அளவுக்கு வீரசாகசங்களில் ஈடுபட்டவர்கள். நம்மால் நினைத்தப்பார்க்கமுடியாத அளவுக்கு தியாகங்களைச் செய்தவர்கள். நம்மால் நம்பவே முடியாத அளவுக்கு மானுடகுலத்தின்மீது அன்பும் கருணையும் இரக்கமும் நிறைந்தவர்கள். தொடர்ந்து கொட்டும் மழையிலிருந்து தம் மக்களையும் ஆவினங்களையும் காப்பாற்றுவதற்காக கோவர்த்தனமலையையே துாக்கி குடையாகப் பிடித்து நின்ற கிருஷ்ணனின் அக்காலக் கதை ஒரு தொன்மமாக இன்னும் நம் மனத்தில் இடம்பெற்றுள்ளது. சொந்த மண்ணை ஆள்வதற்காக, ஆங்கிலேயனுக்கு வரிகட்ட மறுத்து சுதந்தரத்துக்கான கனலை நாட்டுமக்களின் நெஞ்சில் சுடர்விடச்செய்து துாக்குமேடையேறிய வீரபாண்டிய கட்டபொம்மனைப்பற்றிய கடந்த நுாற்றாண்டுக் கதையும் ஒரு தொன்மமாக நம் மனத்தில் இடம்பெற்றுள்ளது. பல வகைகளில் நம்மையறியாமல் அன்பு, பாசம், ஈகை, சீற்றம், வீரம், கோபம் என நம் குணங்களை வடிவமைப்பவை ஆழ்மனத்தில் படிந்திருக்கும் இத்தகு தொன்மங்களே என்பது மிகையான் கூற்றாகாது.

கட்டபொம்மனைப்போல சூ என்னும் பூர்விக அமெரிக்கப் பழங்குடி இந்திய மக்களின் மனத்தில் அழியாத தொன்மமாக நிறைந்திருப்பவர் போர்க்குதிரை. அம்மக்களின் நல்வாழ்வுக்காக அமெரிக்க ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மறைந்த வீரர் அவர். நுாற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்னர்தான் நடந்த சம்பவமென்றாலும் ஒரு புராணக்கதையைப்போல அவருடைய கதை பழங்குடி இந்திய மக்களின் ஆழ்மனங்களில் பதிந்துவிட்டது. அவ்வீரர் உயிருடன் வாழ்ந்த காலமும் வெறும் முப்பத்தேழு ஆண்டுகளே. ஆனால் மக்களுடைய நெஞ்சிலும் நினைவிலும் நீக்கமற நிறைந்துவிட்டவர் அவர். தஸ்டர்ஹெட் மலையில் கோர்ஷாக் சியோல்கோவ்ஸ்கி குடும்பத்தினர் ஐம்பது ஆண்டுகளுக்கும்மேல் போர்க்குதிரையின் உருவைச் செதுக்கிவருகிறார்கள் என்னும் செய்தியொன்றே பழங்குடிமக்களின் மனம் போர்க்குதிரைக்கு வழங்கியிருக்கிற கெளரவத்தையும் அன்பையும் காட்டக்கூடியது. (போர்க்குதிரையை தன்னுடைய நினைவுச்சின்னமாகக்கொண்டு காட்சியளிக்கும் சிறுநகரத்துக்கு அவருடைய பழைய எதிரியான ஜார்ஜ் ஆர்ம்ஸ்ராங்க் கஸ்டர் என்னும் அதிகாரியின் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரலாற்றுமுரண்.)

சூ பழங்குடியைச் சேர்ந்தவர் வயது வந்தவராகி தனக்கொரு பெயர்பெறும் விதமாக ஏதாவது ஒரு செயலைப் புரியும்வரையில் அவருக்கு நிரந்தரப் பெயர் சூட்டப்படுவதில்லை. சூட்டப்படும் பெயர்கள் அவர்கள் புரியும் செயல்களின் தன்மையையே பெரிதும் சார்ந்திருந்தாலும் சிற்சில சமயங்களில் அவர்களுடைய பழக்கம் அல்லது சாயல் அல்லது நிறம்சார்ந்தும் அமைந்துள்ளன. வெறிபிடித்த கரடி, குள்ள எருமை, புள்ளிவால், உட்கார்ந்திருக்கும் எருது, பேராசைக்காரன், கொலைவாள், கறப்புநீர்நாய், இரண்டுநிலா என்பவை அவர்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் சில பெயர்கள். துடிப்பும் வேகமும் வீரமும் வேட்டையாடும் ஆற்றலும் சேர்ந்திருந்ததாலேயே போர்க்குதிரைக்கு அப்பெயர் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

போர்க்குதிரையைப்பற்றிய வீரக்கதைகள் நெடுங்காலமாக மக்களின் வாய்வழிமரபினாலேயே காப்பாற்றப்பட்டு வருகின்றன. பிறகுதான் வரலாற்றாசிரியர்களின் பதிவுகளில் அப்பெயர் இடம்பெற்றது. அமெரிக்காவை வாழவைத்தது மத்திய சமவெளிப்பகுதியைச் சேர்ந்த சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம். அத்தங்கத்துக்காக அப்பகுதியில் வசித்த ஏராளமான பழங்குடி இந்திய மக்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்த பழங்குடியினரும் குடியமர்த்தப்பட்ட புது இடங்களால் அதிருப்தியுற்ற பழங்குடியினரும் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் ராணுவ அதிகாரிகளால் ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் செல்வ வரலாற்றுடன் பழங்குடி இந்தியர்களின் படுகொலைகளும் மரணங்களும் இணைந்தே உள்ளன. செல்வம் விளைந்த வரலாற்றை எழுதமுனையும் பல வரலாற்றாசிரியர்களால் பல சமயங்களில் பழங்குடிமக்களின் மரண வரலாறு ஒதுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்திருக்கிறது. மனச்சாட்சி உள்ள சிலர்மட்டுமே அதை உரிய முக்கியத்துவத்துடன் பதிவுசெய்திருக்கின்றனர். ஒருபக்கம் அமெரிக்கர்களின் செல்வமுகம். அதற்கு அடிக்கல் நாட்டியவர் கஸ்டர் என்னும் ராணுவ அதிகாரி. மறுபக்கம் ராணுவத்தினரின் வேட்டையால் பழங்குடிமக்களின் மரணம். அவர்களின் மனசாட்சியாக நின்றவர் போர்க்குதிரை. எழுத்துபூர்வமான வரலாறு இல்லையென்பதால் அவரைபற்றிய தகவல்கள் அதிக அளவில் இல்லை. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் வழியாக சேகரிக்கப்பட்ட வாய்மொழித் தகவல்களே ஆதாரமாக உள்ளன. கிடைத்திருக்கும் தகவல்களும் பெரும்பாலும் அவருடைய மரணத்துக்கு முற்பட்ட மூன்று மாதங்களில் நடந்த நிகழ்ச்சிகளே. அலைந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையிலும் பல நுால்களிலிருந்து திரட்டியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் லாரி மேக்மர்த்தி இந்த வரலாற்றை எழுதியுள்ளார். சுவைபட இந்த வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.பாலச்சந்திரன்.

போர்க்குதிரையின் காலத்தில் சூ பழங்குடி மக்கள் வடஅமெரிக்காவின் மத்திய சமவெளியில் பரவியிருந்தார்கள். ஒன்றுக்கொன்று நெருக்கமாக இராத பழங்குடிக் குழுக்களைக்கொண்ட இம்மக்கள் பெரும்பாலும் ஒரே தலைவரால் அன்றி, திறமையும் அனுபவமும் விவேகமும் வாய்ந்த பழங்குடித் தலைவர்களைக் கொண்ட குழுவால் வழிநடத்தப்பட்டுவந்தார்கள். வேட்டையாடுவதே இவர்களது பிரதான தொழிலாக இருந்தது.

தற்போது தெற்கு டகோட்டா என்று அழைக்கப்படும் பியர் பட்டேவுக்கு அருகில் 1845 பிறந்தவர் போர்க்குதிரை. தந்தையின் பெயர் புழு. தாயின் பெயர் தெரியவில்லை. ஆரோகன் பாதை என்று அழைக்கப்படும் புனிதச்சாலை வழியாக தங்கமெடுக்க பழங்குடி மக்களுக்குரிய காடுகளுக்குள் சுரங்கத் தொழிலாளர்களைக் குடியமர்த்த படைத்தளபதிகள் நுழைந்தார்கள். பழங்குடியினரை வெல்ல இரண்டு தந்திரங்களைக் கையாண்டார்கள். அவர்களை சமவெளிப்பகுதியிலிருந்து வெளியேற்றி விளிம்புப்பகுதிக்கு அனுப்பிக் குடியேற்றுவது ஒரு தந்திரம். வேட்டையாடும் தொழிலில் ஈடுபட முடியாமல் போகும் சூழலுக்கு இழப்பீடாக ஏதாவது பணத்தைக் கொடுப்பது என்பது இரண்டாவது தந்திரம். மாற்றிக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்க வீரர்கள் மொத்தமாகக் கொல்லப்படுகிறார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் பழங்குடி மக்கள் அதிகாரிகளின் பீரங்கிகளுக்குப் பலியாகிறார்கள். பகை நிரந்தரமாகிறது. இப்படி நிகழ்ந்த பல போர்களைப்பற்றிய பதிவுகள் உணர்வுமயமான காட் சிகளாக இந்த நுாலில் விரிந்துகிடக்கின்றன.

பழங்குடி இந்திய மக்களிடையே காணப்பட்ட விசித்திரமான ஒரு பழக்கத்தைப்பற்றிய குறிப்பொன்று இந்நுாலில் உள்ளது. மக்களிடமிருந்து விலகிச்சென்று தனிமையில் இருந்து கனவு காண்பது என்பதுதான் அப்பழக்கம். அவனுடைய எதிர்காலத்தை அக்கனவு தீர்மானிக்கும். அவன் என்ன செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் சொல்லி வழிநடத்தும். அறிவுரைகள் சொல்லப்படும். முடிவெடுக்கமுடியாத பல விஷயங்களுக்கான தீர்வுகள் அளிக்கப்படும். ஏறத்தாழ விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் படிக்கநேரும் மக்களின் வரலாற்றைப்போல உள்ளது பழங்குடியினரின் வரலாறு. விவிலியத்தில் மக்களை வழிநடத்திச்செல்லும் மோசஸ்போலவே இம்மக்கள் வழிநடத்தப்படுகிறார்கள். மக்களின் மனங்களில் நீங்காத இடம்பெற்றுவிட்ட வழிகாட்டியாக உள்ளார் போர்க்குதிரை.

போர்க்குதிரையின் இறுதிக்கணங்கள் கிட்டத்தட்ட இயேசுவின் வாழ்க்கையை ஒத்ததாக எழுதிச் செல்கிறார் மேக்மர்த்ரி. போர்க்குதிரையின் மரணம் முன்கூட்டியே கனவுகள்மூலம் அவருக்கு உணர்த்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. போர்க்குதிரையின் சொந்த மக்களில் ஒருவரே அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டால்மட்டுமே அவரைத் தாக்கிக் காயப்படுத்த முடியும் என்பதுதான் அக்கனவின் சாரம். 1877 ஆம் ஆண்டில் ராபின்சன் கோட்டைக்குள் அவரை அழைத்துச்சென்றபோது அதுவே நேர்ந்தது. இன்னொருமுறை அவருடைய கனவில் தனக்கென எதையுமே வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுததப்பட்டார். ஆனால் அந்த அறிவுரையைமீறி அவர் அராபாஹோ பழங்குடியியைச் சேர்ந்த இருவருடைய வட்டக்குடுமித் தோல்களைத் தன்னிடம் வைத்திருந்தார். உடனே அவருடைய காலில் காயம் ஏற்பட்டது.

போர்க்குதிரையின் காதல் வாழ்க்கைபற்றிய குறிப்புகளில்கூட சாகசக்கதையின் சாயல்கள் உள்ளன. போர்க்குதிரையின் காதலியுடைய பெயர் கறுத்த எருமைப்பெண். போர்க்குதிரை யுத்தத்துக்குப் போயிருக்கும் சமயத்தில் கறுப்பு எருமைப்பெண்ணுக்கும் தண்ணீர் இல்லை என்பவனுக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் வரையில் கூட அவள்மீது ஆசை சிறிதும் குறையாதவராக அவளையும் அவளுடைய வீட்டையும் சுற்றிச்சுற்றி வருகிறார் போர்க்குதிரை. ஒருமுறை தண்ணீர் இல்லை வேட்டைக்குச் சென்றிருந்த சமயத்தில் கறுப்பு எருமைப்பெண்ணை அழைத்துக்கொண்டு வெகுதொலைவு சென்று விடுகிறார். வேட்டையிலிருந்து திரும்பிய தண்ணீர் இல்லை மனைவி காணாமல் போயிருப்பதை அறிந்து கெட்ட எருது என்பவனிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு காதலர்களைத் தேடிச் செல்கிறான். அந்தக் காதலர்கள் ஒரே ஒரு இரவுமட்டுமே ஒன்றாக இருந்தார்கள் என்ற தோன்றுகிறது. அவர்கள் நீண்டதொலைவு செல்லும்முன்னர் வழமறிக்கப்படுகிறார்கள். போர்க்குதிரையின் இடது நாசிப்பக்கமாக காயம் ஏற்படுகிறது. அந்த ஓர் இரவின் அனுபவத்துக்குப் பிறகு அப்பெண்ணிடமிருந்து விலகிவிடுகிறார் போர்க்குதிரை. இதற்குப்பிறகு கறுப்புச் சால்வை என்ற பெண்ணை மணந்துகொள்கிறார் போர்க்குதிரை.

1876 ஆம் ஆண்டில் மாண்டெனா என்னும் பகுதியில் தங்கம் வெட்டி எடுக்கும் தொழில்வளர்ச்சிக்காக மூன்று கோட்டைகளைக் கட்டத் தொடங்கியபோதுதான் பிரச்சனை தொடங்குகிறது. முதலில் க்ரூக் என்பவர் தன் படையுடன் பழங்குடி மக்களைத் தாக்கினார். அப்போது அவரும் அவருடன்இருந்த எழுபது பேர்களும் மாண்டார்கள். இதற்கு அடுத்த முயற்சியாக பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கு கஸ்டர் தலைமையிலான படை இறங்கியபோது போர்க்குதிரை கொல்லப்பட்டார்.

தன்னிச்சையாக மக்கள் தலைவர்களாக மலர்ந்து போரிடும் எல்லா வீரர்களைச் சுற்றியும் நிழல்போல நிலவும் பொறாமையுணர்வும் காழ்ப்புணர்வும் ஒத்துப்போகவியலாத கசப்புணர்வும் பழங்குடி இந்திய மக்களிடையேயும் துரதிருஷ்டவசமாக இருந்தன. பழங்குடியினரை வெளியேற்றும் திட்டத்தின் தொடர்பாகவும் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது தொடர்பாகவும் சில ஒப்பந்தங்களை வடிவமைத்துக்கொள்வதற்காக அமெரிக்க அரசும் பழங்குடி இந்திய மக்களும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார் கஸ்டர். அரசும் அப்படி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி கஸ்டரைக் கேட்டுக்கொள்கிறது. தம்மை எதிர்த்தவர்களுக்கு தம்முடைய உடைகளை அணிவித்து வாஷிங்டனுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரையும் மற்ற முக்கியமானவர்களை சந்திக்கவைப்பதில் கஸ்டரும் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார். ஆனாலும் ஏதோ காரணத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் தள்ளிப்போகின்றன. பேச்சுவார்த்தைகளிலும் சந்திப்புகளிலும் போர்க்குதிரைக்குத் தரப்படும் முன்னுரிமையை அவருடன் இணைந்து களத்திலிருந்த மற்றவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. பொறாமைக்கு இதுவே தொடக்க வித்தாகிவிட்டது. மெல்லமெல்ல இவ்வுணர்வு வலிமைபெற்று உக்கிரம் கொண்டது. ராபின்சன் கோட்டையில் அவர் கொல்லப்படுவதற்கு அவர்களும் ஒருவகையில் காரணமாகிவிட்டார்கள்.

மக்களின் ஆழ்மனங்களில் ஒரு தொன்மமாக மாறிவிட்டவர் போர்க்குதிரை. அவரைப்பற்றி உலவும் செவிவழிச்செய்திகள் அனைத்தையும் கோர்வையாக அடுக்கித் தந்துள்ளார் மேக்மர்த்தி. வாழ்க்கையின் பொருள் என்பது அது வாழப்படும் விதத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. போர்க்குதிரை வாழ்ந்த வாழ்க்கையின் பொருள் மகத்தான ஒன்று. தியாகங்களால் நிறைந்த ஒன்று. தொன்மமாக மாறிவிட்ட அவருடைய வாழ்க்கை ஒரு சிறந்த குறியீடாகவும் நிலைத்துவிட்டது. அவருடைய தியாக வரலாற்றை அணுகும் ஒவ்வொரு தலைமுறையும் தன் அனுபவத்துக்குத் தகுந்தபடி அக்குறியீட்டின் பொருளையும் பரிமாணத்தையும் விரிவாக்கி உணரமுடியும் .

தமிழுக்கு இந்த நுால் நல்ல வரவு. மேக்மர்த்ரியின் நுாலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் விடியல் பதிப்பகம் பாராட்டுக்குரியது.

( போர்க்குதிரை- லாரி மேக்மர்த்ரி தமிழில் எஸ்.பாலச்சந்திரன். விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிப்பாளையம், கோயம்புத்துார்-641 015. விலை ரூ.60 )

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்