திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

குருராகவேந்திரன்


ஜுலை 28 திண்ணை மின்இதழில் “மகத்தான பணியில் மக்கள் தொலைகாட்சி” என்கின்ற தலைப்பில் திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை படித்தேன்.

அதில் சுரேஷ், ரமேஷ், தினேஷ் ஆகிய பெயர்களுக்கு உண்மையான அர்த்தம்கேட்டு பின் மூன்று வகையான நாற்றங்களை வரிசைப்படுத்தியதாக கூறியுள்ளார். இதை எங்குபடித்தார் என தெரியவில்லை. வடமொழியில் ஈஷா என்றால் இறைவன், தலைவன் எனபொருள். சுர ஈஷா – சுரேஷா -சுரேஷ் (தேவர்களின் தலைவன்), ரமா ஈஷா – ரமேஷா -ரமேஷ் (லக்ஷ்மியின் தலைவன்) என பொருள்படும். இதேபோல் கணேஷ் (கணங்களின் தலைவன்), நரேஷ் – நர ஈஷா (மனிதர்களின் தலைவன்), மகேஷ் (பெரும் இறைவன்), பரமேஷ் ,உமேஷ் எனசொல்லிகொண்டு போகலாம். இந்தப்பெயர்களுக்கு என்ன நாற்றங்களை அவர் கூறுவார்?. பிறமொழிவார்தைகளுக்கு வேண்டுமென்றே இழுத்துப்பிடித்து தவறாக திரித்து அர்த்தம் கூறுவது அறியாமையையும் தவறான மனப்பான்மையையும் குறிக்கும். இது தமிழை வளர்க்காது. தன் குழந்தைக்கு உதயநிலவன் என தமிழில் பெயர் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார். உதயம் (விடியல்) என்பது வடமொழிச் சொல், தமிழ்ச்சொல் அல்ல. அகிலன் என்பதும் வடசொல்லே. தனித்தமிழ் எது, வடமொழி எது என தெரியவில்லை போலும். தமிழை நீட்டிமுழங்கும் அனேகம்பேர் வீட்டில் ஆங்கிலம் தாண்டவமாடும். (‘பாலோ’ பண்ணமுடியாதவற்றை மனைவி கூறியதாக வெளிப்படையாக கூறியுள்ளார். ‘கடைபிடிக்க’ என்று திருப்பிசொல்லத் தெரியவில்லையா?)

பாபு என்ற வார்த்தைக்கு ஏதோ ஒருமொழியில் நாற்றம் எனபொருள் உள்ளதாக சொல்லி அதை வடமொழிபெயர்களூடன் சேர்த்து பல்வேறு நாற்றங்களை சொல்வது சரியில்லை. வேல் என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழில் திமிங்கிலம் எனபெயர். வெற்றிவேல் எனும் பெயருக்கு வெற்றித்திமிங்கிலம் என பொருள் சொல்லலாமா? தவறில்லையா?

தமிழ் வளர நினைப்பதும், அதற்கு உதவும் வகையில் மக்கள் தொலைகாட்சியின் நல்லவிஷயங்களை சொல்லியதும் பாராட்டவேண்டியது. தமிழ்மேல் அவருக்குள்ள ஈடுபாடு அவரது கட்டுரையில் தெரிகிறது. ஆனால் பிறமொழியை வேண்டுமென்றே இழிவுபடுத்துவது தமிழினத்தின் பெருமையா?

குருராகவேந்திரன்.


gururagav@gmail.com

Series Navigation

குரு ராகவேந்திரன்

குரு ராகவேந்திரன்