திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

பாவண்ணன்


எண்பதுகளின் இறுதியில் ஜூனியர் விகடன் வார இதழில் கி.ராஜநாராயணன் “கரிசல் காட்டுக் கடுதாசி” என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினார். அத்தொடரில் செவிவழிச் செய்தியாக அறிந்தவர்கள் என்றும் நேரில் பார்த்துப் பழகியவர்கள் என்றும் பலவிதமான மனிதர்களையும் சில அபூர்வமான வாழ்க்கைத் தருணங்களையும் அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டினார். வாசகர்களின் நெஞ்சில் இன்றும் நிலைத்திருப்பவை அச்சித்திரங்கள். அந்த எழுத்துச் சித்திரங்களுக்கு உய்¢ரூட்டும்வகையில் எளிமையும் அழகும் மிளிரும் கோட்டுச் சித்திரங்களை ஒவ்வொரு வாரமும் அத்தொடருக்காக வரைந்தளித்தவர் ஆதிமூலம். எழுபதுகளின் சிற்றிதழ்களின் வழியாகவும் சிறிய பதிப்பகங்களின் முகப்போவியங்கள் வழியாகவும் இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் கி.ரா.வின் எழுத்துலகத்துக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கின. நல்ல எழுத்துகளும் நல்ல சித்திரங்களும் இணைந்து சிந்தனைக்கு ஊக்கமளித்தன. எழுத்தின் ஆழத்தைநோக்கிச் செல்ல சித்திரத்தின் ஏதோ ஒரு கோடு வாசலாக அமைந்தது. சித்திரத்தின் ஆழத்தைநோக்கிச் செல்ல எழுத்தின் சில வரிகள் தூண்டுகோலாக அமைந்தன. ஒன்றுக்கு மற்றொன்று வாசலாகவும் து¡ண்டுகோலாகவும் இருந்து கலையுணர்வை மேம்படுத்தின. அந்த அனுபவத்தை மீண்டும் அசைபோடத்தக்க வகையில் ஆத§முலத்தின் ஓவியங்களையும் அவற்றுக்குப் பொருத்தமான வரிகளைக்கொண்ட கி.ரா.வின் கடுதாசிப் பகுதிகளையும் அருகருகே இணைத்துத் தொகுத்திருக்கிறார் பதுவை இளவேனில். தேர்ந்தெடுத்த 55 கோட்டோவியங்களும் அவற்றுக்கான எழுத்தோவியங்களும் இத்தொகுப்பில் உள்ளன. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது பார்க்கும்போதும் இருவகைச் சித்திரங்களும் வசீகரிப்பவையாகவே உள்ளன.

தொகுப்பில் மனம் லயித்துப் பார்க்கத்தக்க ஒரு சித்திரம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மொப்பய்யனின் சித்திரம். ஒவ்வொரு கோடும் உயிர்க்கோடு எனச் சொல்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. கடுமையான உழைப்பாளி அவன் என்பதை வரையறுத்துக்காட்டும் அகன்ற தோளும் கட்டுக்குலையாத கைகளும் ஒரே பார்வையில் நெஞ்சில் பதிகின்றன. அவன் மார்பெங்கும் அடர்ந்திருக்கும் கரிய முடிக்கற்றைகூட கோடுகள்வழியாக எளிமையாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அசதியில் தரைமீது படிந்திருக்கிறது ஒரு கை. குறுக்காக மடித்த இன்னொரு கையின்மீதே வைக்கப்பட்டிருக்கிறது அவன் தலை. அவிழ்க்கப்படாத அந்தத் தலைப்பாகையைப் பார்க்கும்போது முதல் பார்வையில் அதை அவிழ்க்கக்கூட நேரமில்லாமல் உறங்கிவிட்டானோ என்று தோன்றுகிறது. சற்றே யோசித்தால் வெட்டவெளியில் உறங்குபவன் காதுகளில் உட்புகுந்து குளிரை அதிகமாக உணரவைத்துவிடாதபடி காற்றைத் தடுப்பதற்காக தனக்குத்தானே செய்துகொண்ட ஏற்பாடு என்பதை உய்த்துணர்ந்துவிடலாம். அந்தக் கரிய உருவத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்க்கப்பார்க்க சில கணங்களில் உலகுக்கெல்லாம் படியளந்துவிட்டு அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் திருமாலின் உருவம் மனத்திலெழுந்து மறைகிறது. ஒரேஒரு கணம்தான். மனிதனிடம் உறைந்திருக்கிற கடவுளையும் கடவுளிடம் உறைந்துள்ள மனிதனையும் அடையாளம் காட்டுவிட்டு அக்காட்சி மறைந்துபோய்விடுகிறது. இரண்டு தோற்றங்களிலும் எவ்விதமான வேறுபாடும் இல்லை. அப்படியென்றால் கடவுள் என்பது என்ன? கடுமையான மனந்தோய்ந்த உழைப்பா? அந்த உழைப்பினால் அடையப்படும் அமைதியிலும் ஆனந்தத்திலும் திளைப்பிலும் உறைந்திருப்பவை உண்மையிலேயே கடவுள்தன்மையா? ஆதிமூலத்தின் கோடுகள் பல திசைகளைநோக்கிக் கேள்விகளை எழுப்புகின்றன.

ஆதிமூலத்தின் கற்பனை வெளிப்படும் இன்னொரு சித்திரம் ஒரு முதியவரும் எமனும் அருகருகே காணப்படும் சித்திரமாகும். பல பருவங்கள் தாண்டியும் உயிரைக் கையால் பிடித்துக்கொண்டு மண்ணுலக வாழ்வில் திளைத்திருக்கும் முதியவர்களைப்பற்றிய கட்டுரைக்காக தீட்டப்பட்டது அச்சித்திரம். “என்ன பாட்டையா, இந்த அடைப்புல கிளம்புறதா உத்தேசமா? இல்ல அடுத்த அடைப்புதானா?” என்று கேட்கும் இளவட்டத்திடம் “நம்ம கையில என்ன இருக்குது பேரப்புள்ள? அவன் வந்து கூப்பிட்டா முடியாதுன்னாலும் விடுவானா?” என்று பதில் சொல்கிறார் முதியவர். இந்த வாசகத்துக்குத்தான் அந்தச் சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. “அவன் வந்து கூப்பிட்டால்..” என்கிற வாக்கியத்தை மீண்டும்மீண்டும் படிக்கும்போது அவன் வந்து கூப்பிடும் தோரணை எப்படி இருக்கும் என்கிற கற்பனை நமக்கு எழுகிறது. எமனைப்பற்றி நம் மனத்துக்குள் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கற்பனைகளுக்குத் தகுந்தபடி இந்தத் தோரணைகள் மாறிமாறி வெளிப்படுகின்றன. கையில் பாசக்கயிற்றோடு வந்து முன்னால் நின்று “ம், வா” என்று அதட்டுவாரா? “நீதானா இன்றோடு கணக்கை முடித்துக்கொள்கிற ஆளா, வா இங்கே” என்று கதாயுதத்தோடு வந்து கட்டளையிடுவாரா? “எங்கே போய் ஓடி ஒளிந்தாலும் என்னிடமிருந்து தப்பிவிட முடியுமா?” என்று திசையதிரச் சிரித்து அச்ச்முட்டுவாரா? “அற்ப மானுடப் பதரே, ஒழுங்காக பின்னாலே வா என்று கர்ஜிப்பாரா?” இப்படிப் பல கற்பனைகள் எழுகின்றன. ஆனால், ஆதிமூலத்தின் கற்பனை வேறு விதமாக இருக்கிறது. எமன் கைகூப்பி வணங்கி முதியவரை அழைக்கிறார். சாப்பிடுவதற்கோ அல்லது விளையாடியது போதும் வந்து து¡ங்கு என்று உறங்க வைப்பதற்கோ ஒரு குழந்தையை ஒரு தாய் அழைப்பதைப்போல எமன் அந்த முதியவர் முன்னால் நின்று அழைக்கிறார். அந்த அழைப்பில் அச்ச்முட்டும் தன்மை எதுவும் இல்லை. மாறாக, கனிவு நிறைந்திருக்கிறது. தாய்மையின் கரிசனம் நிறைந்திருக்கிறது. வயதான பிறகு முதியவர்களும் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். முதுமை ஒருவகையில் நாம் நுகரும் இரண்டாவது குழந்தைமை என்று சொல்வதுண்டு. முதல் குழந்தைமையை அருகிலிருந்து பார்க்கிறவள் பெற்றெடுத்த தாய். இரண்டாவது குழந்தைமையை அருகிலிருந்து ரசித்து உண்மையை உணர்த்துகிறவள் மரணம் என்னும் தாய். “வாழ்ந்தது போதும், வா” என்று அன்போடு அழைக்கிறாள் அவள். “என் செல்லம், என் தங்கம்” என்று தாய்மார்கள் கொஞ்சுவதைப்போல மரணத்தாயும் கொஞ்சுகிறாள். எமனிடம் நிறைந்திருக்கும் தாய்மையுணர்வை வெளிப்படுத்துகின்றன ஆதிமூலத்தின் கோடுகள்.

துளிர்க்கத்தொடங்கியிருக்கிற மரத்தோடு கோரிக்கைகளை முன்வைத்துமுன்வைத்து அலுத்து மனம்சோர்ந்த மனிதமுகத்தையும் இணைத்து தீட்டப்பட்டிருக்கும் ஓவியமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்றாகும். வேரூன்றியிருக்கும் அடிமரமாக மனிதனையும் அவனுக்கும் மேல் துளிர்த்திருப்பவையாக இலைகளையும் கிளைகளையும் அவர் செய்திருக்கும் கற்பனை பொருத்தமாக உள்ளது. வனத்துறை வழங்கிய கன்றுகளை நட்டு உயிர் கொடுத்து வளர்த்துப் பெரிதாக்குபவன் விவசாயி அல்லவா? அவன் உழைப்பின் மேன்மையை வேறெப்படி வெளிப்படுத்தமுடியும்? தன் உழைப்பினால் உயிர்பெற்றுச் சிரிக்கும் கன்றுகளைப் பார்க்கும் விவசாயியிடம் வெளிப்படவேண்டியது ஆனந்தமல்லவா என்னும் கேள்வி எழலாம். மாறாக, ஆதிமூலம் அந்த முகத்தில் ஆறாத வேதனை வெளிப்படும்படி ஏன் செய்திருக்கிறார்? இந்தக் கேள்விதான் ஆதிமூலத்தின் ஓவியத்தையும் கி.ராஜநாராயணனின் எழுத்தோவியத்தையும் இணைக்கும் கண்ணி. வனத்துறை வழங்கவேண்டிய ஊக்கத்தொகைக்காக ஆண்டுக்கணக்காக வனத்துறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கால் தேய்ந்த குறிப்புகளைக் கொண்டது அந்தக் கட்டுரை. அந்த நடைகளே விவசாயியைச் சோர்வுற வைக்கின்றன. மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத அரசு நிர்வாகம் அந்தச் சோர்வின் பின்னணியில் உள்ளது. மக்களுக்காக உழைப்பதற்காக உருவாகும் அரசு நிர்வாகம் தன் வளர்ச்சிப்போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தெரியாத அகங்காரம் நிறைந்த உறுப்பாக மாறிவிடுகிறது. அது வழங்கும் கசப்புகளை விழுங்கும் விவசாயியின் முகத்தில் சோர்வைத் தவிர வேறு எதைப் பார்க்கமுடியும்? வேறொரு கட்டுரைக்காக தீட்டப்பட்டுள்ள, ஒரு மின்விசை மாற்றியின் கம்பிகளால் கழுத்து இறுக்கப்படும் விவசாயியின் சித்திரத்தில் வெளிப்படும் பீதியையும் இக்காட்சியுடன் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒருஜோடிக் காளையின் முகங்கள் தீட்டப்பட்டிருக்கும் சித்திரம் ஒருவகையில் வரலாற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. மக்களை மதிக்கத் தெரியாத அதிகாரிவர்க்கத்தைப் பற்றிய இன்னொரு பதிவுக்காக தீட்டப்பட்ட சித்திரம் இது. ஜப்தி செய்யப்பட்ட காளைகள் இரக்கமில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டு பவுண்டுக்குள் அடைக்கப்படுகின்றன. இது ஒரு தொடக்கம். பஞ்சத்தில் அடிபட்ட மக்களின் தவிப்புகளை அந்த அதிகாரிகள் புரிந்துகொள்ளவில்லை. தம் மெளனக்குமுறல்களை வெளிப்படுத்த தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் வஞ்சிக்கப்பட்ட கூட்டத்தினர். காளைகளைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட கட்சி மோசமான தோல்வியைச் சந்திக்க நேர்கிறது. அடைக்கப்பட்ட காளைகளின் உருவம் ஒருவகையில் மானுடமனத்தில் அடக்கப்பட்ட சீற்றத்தின் படிமமாக வெளிப்பட்டு நிற்கிறது.

வரலாற்றின் சின்னமாக விளங்கும் இன்னொரு சித்திரம் வக்கீல் வைத்தியநாதய்யர் தனது தோளில் ஒரு ஹரிஜனக் குழந்தையைத் து¡க்கி வைத்துக்கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைகிற காட்சியைக்கொண்ட சித்திரம். இச்சித்திரத்தில் கோயில் இடம்பெறவில்லை. வக்கீல் மற்றும் குழந்தையின் தோற்றம்மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலாத பிஞ்சுக்குழந்தையின் முகம் மலர்ந்தவாக்கில் இருக்கிறது. வக்கீலின் கண்களில் உறுதியும் வருத்தமும் ஒருங்கே வெளிப்படுகின்றன. எதிரில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து நீங்கள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும் சக்தி எனக்கில்லையே என்று தன்னையே நொந்துகொள்கிற மாதிரியான பார்வை தெரிகிறது. நாம் அனைவருமே அந்த மீனாட்சியின் குழந்தைகள்தானே, நமக்குள் என்ன பேதம் என்று சொல்லி தெளியவைக்க முயற்சிப்பதைப்போல அவர் உதடுகள் இளகிக்கிடக்கின்றன. உள்ளூர தன் குமுறல்களையெல்லாம் அந்த மீனாட்சியிடம் வருத்தத்துடன் கொட்டி நிற்பதுபோலவும் தோன்றுகிறது. இப்படிப் பற்பல எண்ணங்களை எழுப்பிக்கொண்டே போகிறது ஆதிமூலத்தின் சித்திரம்.

டி.கே.சி, உ.வே.சா. வரிசையில் மிகச்சிறப்பாகத் தீட்டப்பட்ட உருவச்சித்திரம் காந்தியடிகளின் சித்திரம். ஆழத்தையும் அமைதியையும் ஒருங்கே வெளிப்படுத்தும் அக்கோடுகள் எளிதில் மறக்கமுடியாதவை. காந்தியின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சின்னச் சம்பவத்தைப்பற்றிய ஒரு குறிப்பு இக்கட்டுரையில் இடம்பெறுகிறது. 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் குற்றாலத்துக்கு வந்தபோது நிகழ்ந்த சம்பவம். அருவியில் தலைகைக் கொடுப்பதற்கு முன்னால் காந்தி அருகில் இருந்தவர்களிடம் “இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா?” என்று கேட்கிறார். “கிடையாது, கோயிலின் முன்பாக வரவேண்டியிருப்பதால் அவர்கள் இங்கே வந்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை” என்று உண்மையைச் சொல்கிறார்கள் அங்கே இருப்பவர்கள். அவ்வளவுதான், “என்றைக்கு இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களோ, அதன் பிறகு நானும் வந்து குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார் காந்தி. மக்கள்மீது அவருக்கிருந்த அக்கறையும் ஈடுபாடும் ஒவ்வொரு தலைவருக்கும் இருக்கவேண்டிய முக்கியமான குணங்கள். அபூர்வமான அந்த மனிதர் இந்திய மக்களிடம் விடுதலையை நாடும் உணர்வு தழைக்கவேண்டும் என்று மட்டும் நினைத்தவரில்லை. அந்த உணர்வுடன் ஒரு நல்ல மானுடனாக வாழ்வதற்கு வேண்டிய அன்பும் கனிவும் ஒழுக்கமும் பொதுநல விருப்பும் அகிம்சையும் கூட தழைத்தோங்கவேண்டும் என்று விரும்பினார். இன்று நம்மிடையே வாழும் தலைவர்களை முன்வைத்து காந்தியை மதிப்பிடும்போது எவ்வளவு மாபெரும் மனிதர் நம் நாட்டில் பிறந்து வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு சித்திரத்தைப்பற்றியும் இப்படி எடுத்துச்சொல்ல ஏராளமான எண்ணங்கள் எழுந்தபடி உள்ளன. சித்திரங்களுக்குப் பொருத்தமான பகுதிகளை கி.ரா.வின் எழுத்துகளிலிருந்து எடுத்துத் தொகுத்துள்ள இளவேனிலின் முயற்சி பாராட்டுக்குரியது. அழகான முறையில் வெளியிட்டுள்ள அகரம் பதிப்பகமும் பாராட்டுக்குரியது.

வார இதழில் ஒவ்வொரு அத்தியாயத்துக்கு இடையிலும் இடம்பெற்றிருந்த அதே ஓவியங்கள்தாம் இப்போது தனிப்பக்கங்களில் அச்சாகியிருக்கின்றன. ஓவியங்களின்பால் ஆழமான ஈடுபாடு தோன்றுவதற்கும் எண்ணங்கள் பல திசைகளைநோக்கி விரிவடைவதற்கும் இந்த வெளியீட்டுமுறையே ஒருவகையில் காரணமாக இருக்கக்கூடும்.

(உயிர்க்கோடுகள் . கே.எம்.ஆதிமூலம், கி.ராஜநாராயணன். தொகுப்பு: புதுவை இளவேனில். அகரம் பதிப்பகம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7. விலை ரூ250)


Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்