வ.ஐ.ச.ஜெயபாலன்
வாழ்த்துங்கள் சாகித்திய விருதை
அது தி க சியை பெற்ற திருவை மனமுவந்து.
காடெல்லாம் தேன் மணக்க
கரையெல்லாம் நெல் மணக்க
நெல்லைக் கடந்தால்
நீலக் கடல் மணக்க
நந்தனைப்போல் காத்தனைப்போல்
ராமானுஜனை, வைகுண்டசாமியைப்போல்
கோவிற் தெருக்களிலே
தமிழின் கலைகள் தளைக்கத் தம் தாளசைத்த
அந்தச் சதுரிகள் போல்
சிதம்பரம்போல்
ஓயாது கதல் கலகம் கலைகள் நிகழ்த்துவதே
தாமும் தம்பாடுமெனும்
தெக்கத்தியாரின் செல்வனுக்குப் பல்லாண்டு.
சென்ற நூற்றாண்டுக்குள்
தமிழரது பண்டைத் தவத்தை எல்லாம்
கொண்டுவந்த பாரதியின் சுவடுகளில்
இந்தப் புத்தாயிரத்துள்
எழுந்தருளும் மா மனிதா.
பாரதியின்,
பாரதியின் யாழெடுத்து
தமிழரது துன்பப் பொழுது தொலைய
பெரியாரின் பாட்டிசைத்த தாசனின்,
கம்பனையும் கார்க்கியையும்
கலந்து செந்தமிழ் செய்த ஜீவாவின்
எண்ணம் வரித்து
புதிய சகாப்தப் பொழுதின் திரை விலக
கட்டியங்கள் பாடி வந்த
காலக் குரலுக்கு
ஈழக் கவிஞன்
இசைக்கின்ற பல்லாண்டு.