தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி

This entry is part 2 of 3 in the series 19991128_Issue

ராண்டி ஹட்டர் எப்ஸ்டான்


எனது மகள் மார்த்தா மூன்று வயதாகியும் இன்னும் தாய்ப்பாலை மறக்க மாட்டேன் என்கிறாள். இத்தனைக்கும் அவளது இரட்டைப் பிறவியான எனது மகன், அவளது அண்ணன் இரண்டு பேரும் 10 மாதங்களிலேயே தாய்ப்பால் மறந்தார்கள்.

எனக்கு ஒரு சிறுமிக்கு தாய்ப்பால் கொடுப்பது நான் நினைத்து செய்தது இல்லை. அவள் அழுதாலும், தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது வீட்டில் வேண்டுமானால் எளியதாக இருக்கலாம். வெளியிலும், கடைகளிலும், உணவு விடுதிகளிலும் நான் பிடிவாதமாக இருப்பது மேலும் பிரச்னையை வளர்ப்பதாக இருக்கிறது.

எனது வீணான முயற்சிகளின் பிறகு, நான் ‘தாய்ப்பால் மறப்பது ‘ என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இதற்கு ஏதாவது மருத்துவ ரீதியான காரணங்களும், அல்லது தாய்ப்பால் நிறுத்துவதற்கு இறுதி நாட்களும் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தேன்.

நான் இருக்கும் வடமேற்கு மண்ஹாட்டன்(நியூயார்க்) இடத்தில் வேண்டுமானால் மூன்று வயது குழந்தைக்கு பால் கொடுப்பது வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் உலகத்தின் பல இடங்களில் இது மிகவும் சாதாரணம் என்று பல நிபுணர்களிடமும், மருத்துவர்களிடமும் பேசியதன்பின் அறிந்தேன். உலக சராசரி 3 வருடங்கள். இன்னும் முக்கியமானது என்னவென்றால், குரங்குகளையும், மனிதன் போன்ற விலங்குகளையும் ஆராய்ந்து பார்க்கையில், மனிதர்கள் இன்னும் சில வருடங்கள் கூட தாய்ப்பால் கொடுப்பது புத்திசாலித்தனம் கூட என்று கூறுகிறார் டெக்ஸாஸ் அ.மா. பலகலைக்கழகத்தில் மானுடவியல் உதவிப் பேராசிரியராக இருக்கும் கேத்ரைன். அ. டெட்வெய்லெர்

டாக்டர். டெட்வெய்லெர் சிம்பன்ஸிகள், கொரில்லாக்கள், சீல்கள், மூஸ்கள் போன்ற பெரும் மிருகங்களை ஆராய்ந்தார். அவர் சில முக்கியமான அளவுகோல்கள் (குழந்தை வயிற்றினுள் இருக்கும் காலம், வளர்ந்த விலங்கின் முழு அளவு, பாலுணர்வு முதிர்ந்த விலங்கின் வயது) கொண்டு எந்த வயதில் தாய்ப்பால் மறக்கும் என்று கணக்கிட்டார். இதன் மூலம் பார்த்தால், மனித குழந்தைகள் இரண்டரை வயதிலிருந்து 7 வயதிற்குள் தாய்ப்பால் மறக்க சரியான தருணம் என்கிறார்.

‘உலகம் முழுதும் உள்ள கலாச்சாரங்களில், சராசரியாக 3, 4, 5 வருடங்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள். ‘ என்கிறார் டாக்டர் டெட்வெய்லெர். ‘எல்லா கலாச்சாரங்களில் எது குறைந்த அளவு என்பதும் எது அதிக காலம் என்பதும் வேறுபடுகிறது ‘ என்கிறார் இவர்.

டாக்டர் டெட்வெய்லெர் நெடுங்காலம் தாய்ப்பால் குடிப்பதன் நீண்டகால விளைவுகளை 1429 அமெரிக்கக் குழந்தைகளைக் கொண்டு ஆராய்கிறார். ஒரு குழுவில் 3 குழந்தைகள் அவை 9, 10 வயதுவரையும் 7 குழந்தைகள் 8 அல்லது 9 வயதுவரையும் தாய்ப்பால் குடிக்கின்றன என்கிறார். இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது.

பெரும்பாலான குழந்தை மருத்துவர்கள் ஒரே வருடத்தில் குழந்தையை தாய்ப்பால் மறக்கடிக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதாக நான் எண்ணிவந்தேன். சிக்காகோ பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியரும், தாய்ப்பால் அறிவுரைக்கான அமெரிக்க குழந்தை மருத்துவக்குழுவின் தலைவருமான டாக்டர் கார்ட்னர், அது உண்மையில்லை என்கிறார். ஒரு வருடத்துக்கும் மேலாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்றும், முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும் என்றும் அமெரிக்க குழந்தை மருத்துவர்கள் வற்புறுத்துவதாக கூறுகிறார்.

மார்த்தாவிடம் எந்த குறையும் இல்லை என்கிறார் டாக்டர் கார்ட்னர். ‘ இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாகவும், கூட்டத்தை எளிதாக சமாளிக்க முடிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம் ‘ என்கிறார்.

1950இல் மூன்று வருடங்களுக்கு மேல் தாய்ப்பால் அருந்திய குழந்தைகளைப்பற்றி நீல்ஸ் நியூட்டன் என்கிற மனநோய்மருத்துவர் ஆராய்ச்சி செய்தார். ‘குழந்தையை ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் புகட்டினால் அது சரியான அம்மாபிள்ளையாக வளரும் என்பது ஆராய்ச்சிக்கு முன் அவரது எண்ணமாக இருந்தது. ‘ என்று விளக்குகிறார் குழந்தை மருத்துவத்துறை, மகப்பிறப்பு பற்றிய பேராசிரியராக ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரூத் லாரன்ஸ்.

ஆனால் நியூட்டனோ எதிர்பார்த்ததற்கு மாறான விஷயத்தை கண்டறிந்தார். நெடுங்காலம் தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் பெரியவர்களானபோது, அவ்வாறு அருந்தாத குழந்தைகளைவிட, அவர்கள் உறுதியானவர்களாகவும், மனத்திலும், உடலிலும் வலிமையுள்ளவர்களாகவும், சமூக நிகழ்ச்சிகளில் சுவாதீனமுள்ளவர்களாகவும் இருந்தை கண்டறிந்தார்.

தாய்ப்பால் ஆதரவாளர்களின் ஆசை எண்ணங்களிலிருந்து அவர்களது உண்மையான கண்டுபிடிப்புகளை பிரித்து அறிவது கடினம்தான். தாய்ப்பால் அருந்துவது குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தருகிறது என்கிறார் டாக்டர் கார்ட்னர். குழந்தை பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் உணர்வது முக்கியம் என்கிறார்.

குழந்தை தாய்ப்பால் அருந்தும் போது ஏராளமான வேதியியல் ரீதியான செய்திகள் மார்பிலிருந்து மூளைக்குச் செல்கின்றன. இதனால் இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் தாயின் மூளை உற்பத்தி செய்கிறது. முதலாவது ப்ரோலாக்டின் இது பால் உற்பத்தியாக உதவுகிறது. இரண்டாவது ஆக்ஸிடோசின் இது தாய்ப்பால் வெளியேற உதவுகிறது.

ப்ரோலாக்டின் அதிகரிக்கும்போது, கருப்பை சம்பந்தமான மற்ற ஹார்மோன்கள் (எஸ்ட்ரோஜன்) மிகவும் குறைந்து விடுகின்றன. இதனால்தான் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் வருவதில்லை. கருத்தரிப்பதும் இல்லை. ஆனால், எஸ்ட்ரோஜன் குறைவதால் அதன் பக்க விளைவுகளான காய்ந்த உணர்வும், ஆரோக்கியமாக உணர்வது குறைந்தும் விடுகின்றது.

ஆனால் நெடுங்காலம் பெண் தாய்ப்பால் கொடுத்தால், ப்ரோலாக்டின் திடாரென அதிகரிப்பது குறைந்து விடுகிறது. மற்ற ஹார்மோன்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றன. அதாவது ஒருவயதுக்கு குறைந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கும், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கும் மிகவும் வித்தியாசமான முறையில் ஹார்மோன்கள் வேலைசெய்கின்றன. மார்த்தா என்னிடம் பால் குடிக்கும் போது என் உடலில் ப்ரோலாக்டின் சுரக்கத்தான் செய்கிறது. ஆனால் முன்பு போல் ஒரேயடியாக அதிகரிப்பதில்லை.

ப்ரோலாக்டின் வேறு ஏதாவது முறையில் எனது உடலை பாதிக்கிறதா என்று அறிய விரும்பினேன். 1922 இல் கண்டுபிடிக்கப்பட்டபோது இதன் முழு வேலை பாலை உருவாக்குவது ஒன்றே என்று நம்பினார்கள். இன்று இது பலதரப்பட்ட வேலைகளை செய்வதாக சந்தேகப்படுகிறார்கள். உடலின் நோய் தடுப்புச் சக்தியை அதிகரிப்பது, உடலில் உள்ள தண்ணீர், உப்பு முதலியவற்றை சமப்படுத்துவது, நடத்தையை பாதிப்பது போன்றவைகளை ப்ரோலாக்டின் செய்வதாக ஆரம்ப ஆதாரங்கள் இருக்கின்றன.

ப்ரோலாக்டின் இல்லாத எலிகள் குழந்தை எலிகளை புறக்கணிக்கின்றன என்பதையும், மிக அதிகமாக இருக்கும் எலிகள் கூடுகளை கட்டுவதும், குழந்தைகளை பாதுகாப்பதையும் கண்டறிந்திருக்கிறார் டாக்டர் ப்ரீமென்.

இருந்தாலும் எலிகளை வைத்துக் கொண்டு மனிதத்தாயின் நடத்தையை நிர்ணயிப்பது கொஞ்சம் அடாவடிதான். ஆனால் அறிவியலறிஞர்கள், ப்ரோலாக்டினும், ஆக்ஸிடோஸினும் தாயிடம் மனஅமைதியை உருவாக்குவதை அறிந்திருக்கிறார்கள். அதேநேரம் இது மிகவும் விழிப்புணர்வான நிலையையும் உருவாக்குவதை மற்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த மிகுந்த விழிப்புணர்வு தாயிடம் ஒரு எரிச்சலான மனபாவத்தையும் உருவாக்குவதாக கூறுகிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் இந்த எரிச்சலான மனோபாவம் எரிச்சலின் காரணமாக பிரசவத்துக்குப் பின் வரும் மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக சில மருத்துவர்கள் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் இதற்கான அறிவியற்பூர்வமான ஆதாரங்கள் இல்லை.

எந்த தாயும் உறுதியாக கூறுவது போல, எது ஹார்மோனால் ஏற்படும் உணர்ச்சிமாறுதல் என்று பிரித்தறிதல் மிகவும் கடினம்.

அதேபோல், தாய்ப்பால் கொடுப்பதால் மன அமைதி உண்டாகுமா, மன எரிச்சல் உண்டாகுமா என்று கூறுவது கடினம்.

என்னைப்பொறுத்தவரையில் நான் தாய்ப்பால் கொடுக்கையில் எனக்கு மன அமைதி உண்டாகிறது. என் குழந்தைகளின் சிறிய கண்களைப்பார்த்து அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னால் அடிக்கும் கூத்து பற்றி கனவு காண்பது எனக்கு பிடித்தமாக இருக்கிறது.

ஆனால், இரண்டு வயது பெரிய குழந்தை அழாமல் இருக்க சில நிமிஷங்கள் தாய்ப்பால் கொடுக்க நேர்வது வேறானது. இதில் சந்தோஷமில்லை. இணைப்பில்லை. இது வெறுமே குழந்தை அடம் பண்ணுவதை தற்காலிகமாக நிறுத்த ஒரு சின்ன வழி அவ்வளவுதான்.

***

டாக்டர். ராண்டி ஹட்டர் எப்ஸ்டான் நியூயார்க்கில் வாழும் எழுத்தாளர்.

Thinnai, November 28, 1999

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< வண்ணநிலவனின் ‘எஸ்தர் ‘ இலக்கிய அனுபவம்மூன்று கவிதைகள் >>

Scroll to Top