தலித் முஸ்லிம்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

ஹெச் ஜி ரசூல்


வைதீக இந்து மதத்தில் உயர்ந்தது x தாழ்ந்தது என்ற கருத்தமைப்பானது தீவிரமாகவும், பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் மற்றும் சாதியற்ற பஞ்சமன் என பிறப்பு, தொழில், அகமண உறவு அடிப்படையில் உருவானதாகவும், சாதி ஏற்றத் தாழ்வின் விளைவாகவும், தீட்டுக் கொள்கையின் உச்சகட்ட வடிவமாகவும் நிலை பெற்றுள்ளது. தலித்திய சொல்லாடல் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட அடித்தள மக்களைக் குறிப்பதாகும். நிர்வாக அமைப்புக்குள் பட்டியலிடப்பட்ட சாதியினராக பள்ளர், பறையர், சக்கிலியர், புலையர், சாம்வர், சண்டாளர் என்பதான எழுத்தாறுவகை சாதிப்பிரிவுகளாக தமிழக சமூக அமைப்பின் இம்மக்கள் இடம் பெறுகின்றனர். பழங்குடி வகுப்பினர் என்கிற வகையில் இருளர், காடர், காணிக்காரர், குறும்பர், தோடர் உள்ளிட்ட முப்பத்தாறுவகை சாதிப்பிரிவுகளும் உள்ளன.
இஸ்லாத்திற்கும் தலித்தியத்திற்குமான உரையாடலில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிக் கொடுமையிலிருந்து விடுபடும் பொருட்டு முஸ்லிம்களாக மாறியதுமுண்டு. தமிழகத்தின் மீனாட்சிபுரங்களை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். எனினும் இந்திய, தமிழக இஸ்லாமிய சமூக கட்டமைப்பு பற்றிய புரிதலில் இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வான அடுக்குகளை குறிப்பிடலாம். இது கருத்தியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இருவித நிலைகளில் உருவாகியுள்ளன.
தமிழ் சமூகத்தில் இடம் பெற்றுள்ள அஞ்சுவன்னம் என்ற சொல்லாடல் முஸ்லிம்களின் குடியிருப்பை அடையாளப்படுத்துகின்றன. இதற்கு அஞ்சு நேரம் தொழுகை புரிபவர்கள் வாழுமிடம், நெசவு தொழில் செய்பவர்கள், அஞ்சுமன் பார்சி சொல்லடிப்படையில் சபையினர், கூட்டாக வாழ்பவர்கள் என்பதான அர்த்தங்கள் உண்டு. இதையும் தாண்டி மனுதர்ம எல்லைக்குள் இடம் பெறும் நான்கு வகை வர்ணம் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் அஞ்சாவது வர்ணம் – அஞ்சு வன்னமாகியது என்பதாக குறிப்பும் உள்ளது.
தமிழகத்தில் பிரதானமாக உருது முஸ்லிம்கள் x தமிழ் முஸ்லிம்கள் என ஒரு கருத்தியல் மொழியடிப்படையில் முஸ்லிம்களிடையே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உருது முஸ்லிம்கள் செய்யது, ஷேக், முகல்ஸ், பதான்ஸ் நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்கள் என்றும், அரபு தாயகத்தின் வாரிசுகள், இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்களின் பாரம்பர்யம் என்றும், இஸ்லாமிய நெறிமுறைகளை தூய்மையான முறையில் கடைபிடிப்பவர்கள் என்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் மரைக்காயர், ராவுத்தர், லெப்பை போன்றோர் கடற்கரைப் பகுதிசார்ந்தும் வாழ்பவர்கள், பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள், இஸ்லாத்தில் பிற சமய பண்பாட்டு கலப்புகளை நிகழ்த்தியவர்கள். எனவே உருது முஸ்லிம்களைவிட படிநிலையில் குறைந்தவர்களாக கருதும் மனோபாவங்கள் அரசியலாகி உள்ளன. நிற அடிப்படை, வாழுமிடம், பேசும் மொழி என்பதான கூறுகளுடன் உயர்ந்தது x தாழ்ந்தது சிந்தனை படிநிலையாகியுள்ளது.
குஜராத் கலவரத்தில் அழித்தொழிக்கப்பட்ட முஸ்லிம்கள் பற்றிய விவாதங்களில் மேலெழும்பி வந்த உண்மை என்பதே ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாகும். அச்சமூக அமைப்பில் முஸ்லிம்கள் அஷ்ரப், அஜ்லப், அர்ஸால் என்பதாக பிளவுண்டு கிடப்பதை அறிய முடிந்தது. அரபு வழித்தோன்றல்கள், உயர் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்கள் உயர் குடிமகன் என்பது அஷ்ரப் சொல்லால் குறிக்கப்படுகின்றது. விவசாயக் குடிகளாகவும், பூர்வீக ஒடுக்கப்பட்ட இந்து சாதிகளிலிருந்து மதம் மறியவர்களும் அஜ்லப் ஆகினர். இவர்கள் அனைவர்களிலும் மிக கீழ்நிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் அர்ஸால் என அழைக்கப்படுகின்றனர். வட இந்தியச் சூழலில் இந்தப் படிநிலையை காணமுடியும்.
கேரள முஸ்லிம் சமூக அடுக்குமுறைகள் குறித்த ஆய்வுப் பார்வையில் இத்தகையதான படிநிலை அமைப்பு சற்று வேறுவிதமாக வெளிப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளலாம். அரபு வழித்தோன்றல்களாகவும், பிராமணர்களிலிருந்தும் உயர்சாதிகளிலிருந்தும் இஸ்லாத்திற்கு மாறியவர்கள் தங்கள்கள், அரபுவழி ஆண்களுக்கும் உள்ளூர்பெண்களுக்குமான வாரிசுகள் அரபுகள், தாய் வழி சமூகமரபினர் மாப்பிள்ளை முஸ்லிம்கள், இந்து மீனவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் புஸலர்கள், முஸ்லிம்களுக்கு நாவிதத் தொழில் புரியும் அடித்தளமக்கள் ஒசான்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழக ஜமாஅத் அமைப்புகளிலும் ஒசாக்கள் தனித்த பிரிவாகவே பிற முஸ்லிம்களால் உயர்சாதி மனோபாவத்தோடு கருதப்படுகின்றனர்.
தௌகீது பிராம­யத்தை இஸ்லாத்திற்குள் கட்டமைக்கும் வகாபிகள் தர்கா கலாச்சாரத்தை பேணும் முஸ்லிம்களை மூடநம்பிக்கையாளர்களாக, இழிந்தவர்களாக அணுகும் போக்கு தீவிரமாக தலைதூக்கியுள்ளது. இக்கருத்தியல் வகாபிகளின் நவீன தீண்டாமை பார்வையாகும்.
இச்சூழலில் இஜாஸ்அலி என்ற சமூக அரசியலாளர் 1994-ல் பாட்னாவில் தலித் முஸ்லிம்கள் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மோர்ச்சா என்றொரு அமைப்பை உருவாக்கி உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், இராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காக இயக்கங்களை நடத்தியுள்ளார். தமிழக அளவிலும் முஸ்லிம்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு அரசியலில் தலித் முஸ்லிம் குறித்த கருத்தாக்கம் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதே மற்றுமொரு உண்மையாகும்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்