தமிழ் வாழ்க!

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

பரிமளம்


திராவிட முன்னேற்றக் கழகம் ‘திமுக’ என்றழைக்கப்படுவது நமக்குத் தெரிந்த செய்தி. திமுக என்று எழுதினாலும் உச்சரிக்கும்போது ‘தீமூகா’ என்றுதான் உச்சரிக்கிறோம். தமிழ் இலக்கண மரபுப்படி இப்படி உச்சரிப்பது தவறில்லை. ஆனால் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பலர் ‘தீமூகா’ என்று உச்சரிக்காமல் ‘தீமூக’ என்று உச்சரிக்கின்றனர். அதாவது எழுதுவது போல உச்சரிக்கவேண்டும் என்பது அவர்களின் கொள்கை போலும். ஆனால் ஏன் இப்படித் தப்புந்தவறுமாக உச்சரிக்கவேண்டும் ? குறிலோசையைக் ‘க’ வுக்கு மட்டும் ஒதுக்காமல் ‘திமுக’ என்று மூன்று எழுத்துகளையும் குறிலாகவே உச்சரிக்கவேண்டியதுதானே ? திமுக, திமுக.. .. ..

***

இயக்குநர் சங்கர் தன் பெயரை ‘ஷங்கர்’ என்று எழுதியது தமிழர்களிடம் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. இப்போதெல்லாம் யாரும் சகர எழுத்தைப் பயன்படுத்துவதில்லை. பிரசாந்த்- பிரஷாந்த், சரத்குமார் – ஷரத்குமார், சாந்தி – ஷாந்தி, சக்தி – ஷக்தி, சிவன் – ஷிவன், சிவா – ஷிவா, சிவகுமார் – ஷிவகுமார் அல்லது ஷிவ்குமார், சுப்ரமணி – ஷுப்ரமணி, சேகர்- ஷேகர் என்று எல்லாமே மாறிவிட்டன. தமிழர்கள் ஷாம்பார் ஊற்றி ஷாதம் ஷாப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு முறை சன் தொலைக்காட்சியில் (மீண்டும் சன் தொலைக்காட்சி!) ஒரு சிறுமி (படைப்பாளர்) மிகவும் வருந்தி சிவாஜி கணேசனை ‘ஷிவாஜி கணேஷன்’ என்று உச்சரிக்க முயன்றுகொண்டிருந்தார்.

வேறொரு பெண்ணால் ‘கலைஞர்’ என்று உச்சரிக்க இயலவில்லை. ‘கலைனர்’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.

தமிழில் எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் ஆரம்பிப்பதில்லை. ஆனால் ‘ப்ரியம்’, ‘ப்ரியா’ ‘க்ருபா’, ‘க்ருஷ்ணன்’ என்றெழுதுவதும் வழக்கமாகிவிட்டது. இதுபோலவே மஹாகவி பாரதி மகாகவியாகி மீண்டும் ‘மஹாகவி’யாக மாறிவிட்டார். மகாலட்சுமி-மஹாலக்ஷ்மி, மகாலிங்கம் – மஹாலிங்கம், அரியரன், அரிகரன் – ஹரிஹரன் என்பனவும் மாறிவிட்டன. முருகன் என்னும் தன் பெயரை ஒருத்தர் முருஹன் என்று எழுதுகிறார்.

***

பழந்தமிழ்த் திரைப்பாடல்களுக்கான ஒரு சில குறுந்தகடுகளில் (CDs) காணப்படும் தமிழைக் காணும்போதெல்லாம் எனக்குச் சிரிப்பும் எரிச்சலும் ஒருசேர வருகின்றன.

சில பாடல்கள்

பள்ளம் மேடுல்ல பாதை இல்லை (பள்ளம் மேடுள்ள பாதையிலே)

எங்கள் திராவிட பொன்னாடை (பொன்னாடே)

மனக்கும் செந்தமிழ்

போதும் உந்தன் ஜாலமை (ஜாலமே)

ஆரநங்கை (ஆரணங்கே)

சில படங்கள்

பணித்திரை

கன்னகியின் சபதம்

அரவள்ளி

குலைபகாவலி

பொம்மை கல்யானம்

திருமனம்

ஆழுக்கொரு வீடு

***

ரஞ்சன் என்னும் நடிகரின் பெயர் ‘ரஞ்ஜன்’ என்று எழுதப்படுகிறது. ‘மஞ்சள்’, ‘இஞ்சி’ இவை மஞ்ஜள், இஞ்ஜி என மாறினாலும் வியப்படைவதற்கில்லை.

***

சில வியப்புகள்

அர்ஜெண்டின நாட்டைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் ஆட்டக்காரரின் பெயர்: நல்பாண்டியன் (David Nalbandian). தமிழ்நாட்டில்கூட இப்படிப்பட்ட தமிழ்ப்பெயரை யாரும் சூட்டுவதில்லை.

ஒரு பேஸ்பால் ஆட்டக்காரரின் பெயர்: சுப்பன் (Jeff Suppan)

மஞ்சினி (Mancini) என்பது ஒரு இத்தாலியப் பெயர்.

ஒரு காற்பந்து ஆட்டக்காரரின் பெயர்: முத்து (Adrian Mutu)

Charles Bronson (ஒரு காலத்தில் வாத்தியாருக்கு அடுத்த என் தெய்வம்) நடித்த Chato’s Land என்னும் படத்தை அண்மையில் பார்த்தேன். இதில் நடித்திருந்த ஒரு நடிகையின் பெயர்: சோனியா ரங்கன் (Sonia Rangan)

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்