தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

செந்தில்


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளான தேமுதிக, இடதுசாரி கட்சிகள், மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் எதிர்பார்த்த படியே மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளுடன், சில வார்த்தைகள். இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான வாக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் நிலவும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான எதிரான, இலங்கை போன்ற நாடுகளுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் வாக்களிப்பாகவும் கொள்ளலாம்.

இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு இடதுசாரிகளின் பங்களிப்பு அளவிடற்கரியது. ஏனெனில், நடப்பு பொருளாதார கொள்கைகளினாலும், ஊழலினாலும் மிகவும் பாதிப்பு அடைந்திருப்பது, இடதுசாரி கொள்கைகளினால் ஈர்க்கபடும், அவர்களது கொள்கைகளினால் பலனடையக்கூடிய நடுத்தர வர்க்கமும், கீழ்தட்டு மக்களின் மக்களின் வாக்கும்தான் மிக முக்கிய பங்களித்திருக்கிறது அதிமுகவின் வெற்றிக்கு.

ஆதலினால், அதிமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்யக்கூடிய முக்கிய கடமைகள் பல எனலாம். முதலில் விலைவாசியை கட்டுபடுத்த இந்த அரசு மாநில அளவில் மட்டுமல்லாது, மத்திய அரசின் கொள்கைகளையும் மாற்றி அமைக்க தீவிர அழுத்தத்துடன் செயல்படல் அவசியம். இது குறித்து செய்ய வேண்டியது, அத்தியாவசிய பொருள்களான மண்ணெண்ணய், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு மற்றும் உணவு பொருட்களின் விலையை கட்டுபடுத்த, குறைக்க, எல்லா நடவடிக்ககைகளும் எடுத்தல் அவசியம். ஒன்று இந்திய பெட்ரோலிய நிறுவனங்களை மறுபடியும் நாட்டுடைமையாக்கல் (அதாவது, பங்கு வர்த்தகத்தின் தாக்கத்தை இந்த நிறுவனங்களின் பொருள் விலை நிர்ணயித்தலில் மட்டுபடுத்தல்); விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் (மான்யங்கள், நீர்வளம், கடன் தள்ளுபடி, விளை நிலங்களை பாதுகாத்தல், வேளாண்மை கல்லூரிகளின் நிர்வாகத்திற்குள் உபயோகத்தில் இல்லாத விளை நிலங்களையும் தரிசு நிலங்களையும் கொண்டு வருதல், விவசாய தொழிலாளர்களுக்கான காப்பீடுதிட்டங்கள் என பல); தமிழகத்தில் 1000க்கும் மேலான ஏரிகள் இருந்ததாக வரலாற்று சான்றுகள் உண்டு. என்ன ஆயிற்று இந்த 50 கால சுதந்திர இந்தியாவில் இந்த ஏரிகள், குளங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, வீட்டு மனைகளாகவும், பாலை வனங்களாகவும் மாறிவிட்டன. ஒரு பெரிய திட்டத்தின் மூலம், இந்த ஏரிகள் மீட்கபட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு மதில் சுவர்களுடன் பாதுகாக்கபடும் எனில், தமிழக மக்கள் (வர இருக்கிற!) உணவு, தண்ணீர் பஞ்சங்களில் இருந்து தப்பிப்பார்கள். இது தவிர நதிகளை காப்பதற்க்கு, பேரினவாத நோக்கில் செயல்படும் கேரளம், கர் நாடக அரசுகளுடன் வாதிட்டு என்ன பலன்? மத்திய அரசுடன் தமிழகம் மோதித்தான் பார்க்க வேண்டும்.

அடுத்து மின் உற்பத்தி: இந்திய அரசு செயல்படுத்த உள்ள அணுமின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெறுவதற்க்கு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு மேலாகும். ஆதாலால், அவசர கால நடவடிக்கையாக, சூரிய ஒளி மின்சாரம், காற்றாடி ஆலைகள், நிலக்கரி மற்றும், மினி டீசல் மின்சார உற்பத்தி நிலையங்கள் என மான்யங்கள் மூலமும், வளர்ந்த நாடுகளுடன் (Joint ventures) அரசு-வியாபார கூட்டு முயற்சிகள் மூலமும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் எனில், தமிழகம் இருளில் இருந்து தப்பித்து தொழி வளர்ச்சிக்கு வழி செய்யும்.

பள்ளிகள் மற்றும் மேல் கல்வி வளர்ச்சிக்கு: இந்த இருபது ஆண்டுகளில் மிகவும் நலிந்து ஊழலினால் பாதிக்கபட்டு இருக்கும் துறை கல்வித்துறை. பள்ளிகள், கல்வி சாலைகள் எல்லாம் அதுவும் தனியார் நிறுவனங்களால் தொடங்கபட்டிருக்கும் பல (ஆயிரக் கணக்கான பள்ளிகள், நூற்றுக்கணக்கான தொழிற் கல்வி சாலைகள்) நிறுவனங்கள் சாராய வியாபாரத்தை காட்டிலும் மோசமான தரங்கெட்ட நிலையில் செயல்படுகின்றன என்றால் மிகையாகாது. அதுவும் மிக அதிகமான வசூலிக்கபடும் கல்வி கட்டணங்கள், தமிழக நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களை வாழ்நாள்(perrenial) கடனாளிகளாக அடிமைகளாக நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டது எனலாம். தனியார் கல்வி சாலைகளின் கட்டணங்களை மட்டுபடுத்துவது, அரசு கல்லூரிகளின் கட்டணங்களுக்கு இணையான நிலைக்கு கொண்டு வருவது அரசின் கடமையாகும்.

இலங்கை தமிழர்களின் தனி நாடு கோரிக்கை, கொள்கை – இலங்கை மீதான போர்க்குற்றங்கள், இனபடுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை மூலம்- மிகவும் வலுவடைந்துள்ளது.
அதிமுக அரசு இது குறித்து ஒரு குழு அமைத்து (தேமுதிகவின் பா. ராமசந்திரன் போன்றோர் இது குறித்து செயல் ஆற்றியிருக்கிறார்கள்) ஒரு தீர்வை மத்திய அரசை நிர்பந்திப்பது மூலம், அவர்களுக்கு தனி நாடு பெற்றுதர முடியும். இது ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் மற்ற இடதுசாரி தலைவர்களையும் வரலாற்றில் நிலை நிறுத்துவதோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்க்கும் தேவையான நடவடிக்கை எடுத்த பெருமையும் அளிக்கும்.

சுகாதாரம், சுற்றுசூழல் குறித்து: இது பற்றி சொல்லவே தேவையில்லை: ஜெயலலிதா அம்மையார் வெற்றி பெற்று இருக்கும், அதுவும் நடுத்தர மற்றும் செல்வந்தர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் வசிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியை ஒரு முறை சுற்றி வந்தாலே போதும். தமிழகம் எந்த நிலைக்கு சீரழிந்த நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது என புரிந்துவிடும். நீர் நிலைகள், கால்வாய்கள், நதிகள், எல்லாம் விஷ சாக்கடைகளாகவும், சாயக்கழிவு ஓடைகளாகவும் மாறிவிட்டன. சிறந்த திட்டங்களுடனும், தனியார் துறையின் பங்களிப்புடனும், உயர்ந்த தொழில் நுட்ப கருவிகளுடனும், துப்புறவு தொழிலாளர்களின் வாழ்க்கைதரம் உயர்த்தும் நடவடிக்கைகளுடனும் இந்த துறைகளின் நிர்வாகம் சீர்படவில்லையெனில் விரைவில் தமிழகம் நோயாளிகளின் உறைவிடம் ஆகிவிடும்; சென்ற ஆண்டுகளில் வந்து சென்ற deng fever, bird flu, chicken ….ஏதோ ஒரு ஃகுனியா போன்ற நோய்கள் இதற்க்கு ஆதாரங்கள் எனலாம்.

மேற்சொன்ன திட்டங்கள் செயல்படுத்துவதற்க்கு அரசுக்கு நிதி வேண்டும். இது சாராய வியாபாரம் மூலம்தான் எனில், நாம் என்ன சொல்ல? பேசாமல், அரசை சாராய வியாபாரிகளிடமே ஒப்படைத்து விடலாம். மத்திய அரசையும் சேர்த்துதான்! ஆதாலால், வருமான வரி வசூலிப்பில் மாநில அரசுக்கு கட்டாய பங்கு வேண்டும். மேல்தட்டு (5%) மக்களின் வருமானத்தில் அதிகபடி வரிவசூலித்தேயாக வேண்டும். மற்ற வியாபார வரிகளும் ஊழலில்லாமல் வசூலிக்கபட வேண்டும்.

மேற்சொன்னவை குறித்து பேச ஜெயலலிதா அவர்கள் டெல்லி செல்ல தேவையில்லை. டெல்லி அரசியல் தமிழகத்திற்க்கு வரவேண்டும். ஏனெனில், இந்த வெற்றி மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான வாக்கு என்பதும் உண்மை.

வேறு என்ன சொல்ல? ஊழல் செய்பவர்களை, பொது சொத்துகளை அபகரிப்பவர்களை – அக்பர் செய்தது போல – சட்டசபை கட்டிடத்தில் மேலிரிந்து கீழ் தள்ளி சிதறடிக்க வேண்டியதுதான். CBI அனுமதிக்குமா?

Series Navigation