தன்னுடலை பிளந்து தந்தவள்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

ஹெச்.ஜி.ரசூல்1)
தெங்கோலைகளில் அசைந்தெழும்பும்
மெல்லிய காற்றின் வருடலில் தவித்து
மர்மங்களைக் கொண்டு நீண்டுவளைந்ததென்
விரல் தொட்டு முத்தமிட
சிறு தென்னம்பூக்களின்
இசைக்கப் படாத பாடலொன்று
நதியில் மிதந்தது.
பிரபஞ்சத்தை இசையால் மயக்கும்
நாபியின் காற்றதிர
திசையெங்கும் ஊர்ந்து திரிந்து
அத்தாள பின்னிரவொன்றில்.
நடுஇரவொன்றில் உடம்பின் மயிர் நீக்கி
கபன் துணியால் உடல் பொதிந்து
இறந்ததின்பின் உயிர்பெற்ற
பக்கிர் கொட்டிய தப்ஸின் தாளம்.
அந்தரங்க வானின் அர்வாஹில்
கீதமொழி தாவூதின் இரண்டு கண்கள்
தன்னையே வெட்டிப் பிளந்து
நான்காய் பார்த்திருக்க
2)
தன்னுடம்பிலிருந்து படைப்பதற்கு
தயாராகிக் கொண்டதொரு கணத்தில்
அண்ட சராசரமெங்கும்
இருளற்று எதுவுமில்லை.
உடம்பிலிருந்து ஒவ்வொன்றாய் உதிர்ந்தது.
சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்
பூமி கடல் மலைகள்
அமாவாசை முதல் பிறை
வட்ட சுழற்சியின் பெளர்ணமி
காலத்தின் நுனி தொட்டு
கடந்து மீள்தலைக் கண்டு
எவ்வித பிரமிப்புகளுமின்றி
அசாதரணமாய் விழித்தவாறு
யுகங்களை ஒவ்வொன்றாய்
விரல்மடக்கி எண்ணுகிறாள்.
எல்லோருக்கும் தாயாய்
வாழ்தல் தொடர்கிறது.
தன்னுடலை பிளந்து தந்தவள்
இன்றும் இனியும்


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்