தட்சணை

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

கோவை புதியவன்



அன்று விஜயதசமி.

எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் இரண்டரை வயது நிரம்பிய தூண்கள் முதன்முதலாய் அரிச்சுவடி படிப்பதற்கான பிள்ளையார் சுழி போட, தம்தம் தாய், தந்தையரோடு அணிவகுத்து நிற்க, அந்த கோவிலே களைகட்டியது.

சமபந்தி போஜனம் போல் அனைவரும் வரிசையாய் அமர்ந்திருக்க, அழகாய் வாழை இலையை விரித்து, கோவில் அர்ச்சகரின் வாய் அசைவிற்காக அனைவரும் காத்திருக்க, அர்ச்சகர் அனைவருக்கும் கதாநாயகனாய் இல்லை…இல்லை….கடவுளாய்த் தெரிந்தார். அவருடைய வாய் உத்திரவின் பெயரில் அனைவரும் அவசர அவசரமாய் வாழை இலையை விரித்து
பச்சரிசியை கொட்டி, பழம், ப+, வெற்றிலை, பாக்கு, மஞ்சள் ஆகியவற்றை அழகாய் இலையில் வைத்தனர் இயந்திர வேகத்தில்.

அப்போது ஒரு பெண்மணி “சாமி, தட்சணை எவ்வளவு?” என்று கேட்டவுடன்,
“தட்சணை 100 ரூபாய் வைய்யுங்கே….” என்றார் அர்சசகர் கேசவன்.

கேசவன் கூறியதைக் கேட்ட அருகில் இருந்த சீனிவாச சாஸ்திரிகள், அந்தப்
பெண்மணியை அழைத்து, “இங்க பாரும்மா…..தட்சணை நீங்க விருப்பப்பட்டதை வையுங்க” என்றார்.

சாஸ்திரகள் கூறியதைக் கேட்டவுடன் கேசவன் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்துத் தள்ளியது. எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் அர்ச்சகர் கேசவன்.

குழந்தையை வைத்திருந்த பெற்றோர்கள் கொண்டு வந்த சிலேட்டில் “ஓம் ஸ்ரீயை நமக” என்று இந்தியில் அர்ச்சகர் எழுதிக் கொடுத்து, அதன் மீதே குழந்தைகளை எழுதச் சொன்னார். பெரும்பாலானோர் அதற்கு ஒப்புதல் தெரிவித்து பிஞ்சு விரல்களை பிடித்து சிரமத்தோடு எழுதத் தொடங்கினர்.

திடீரென்று கூட்டத்தில் “என்னப்பா இது படிக்கப்போறது தமிழ்ல, ஆனால் எழுதறது இந்திலயா…?” என்று கேட்க, சுதாரித்துக் கொண்ட அர்ச்சகர் கேசவன்,

“எல்லோரும் வாழை இலை மேல் இருக்கிற அரிசியை நன்னா பரப்பி வெச்சுண்டு, சிலேட்ல நான் எழுதின வாசகத்தை, அரிசிமேல மஞ்சள் கொம்பை பிடிச்சு தமிழ்ல எழுதுங்கோ……” என்று சமாளித்தார்.

சத்தம் போட்டவர் மகிழ்ச்சியோடு இந்தியில் எழுதிய வாக்கியத்தை தமிழ் எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி தன் குழந்தையின் விரல் பிடித்து “ஓம் ஸ்ரீயை நமக” என்று எழுத வைத்தார்.

“மன்னி….மன்னி…..சித்த இங்கே வாங்கோ…..” என்று கேசவன் கத்த……

“ஏன்?….என்னாச்சு….? இப்படி கத்தறேல்” என்று கேட்க…..

“உங்க ஆத்துகாரருக்கு பைத்தியம் பிடிச்சுபோச்சு. இன்னிக்கு விஜயதசமிக்கு வந்தவங்ககிட்ட தட்சணையா 100 ரூபாய் கேட்டேன். அதுல மண் அள்ளிப் போட்டுட்டார்.” என்று கேசவன் முடிப்பதற்குள்….

“போதும் நிறுத்துடா…..” என்று சீனிவாச சாஸ்திரிகள் உறுமியதும் அடங்கிப் போனார் கேசவன்.

“தட்சணைகிறது நாம கடவுளுக்கு செய்யற பணிக்கு கோவிலுக்கு வரவங்க அவங்க விருப்பப்பட்டு கொடுக்கிறது. அதைப்போய் ஏதோ கந்து வட்டிகாரன் மாதிரி வசூல் பண்றது எவ்வளவு பெரிய அசிங்கம். நோக்கு இது தெரியாதாடா? எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ எல்லா குழந்தைகளுக்கும் மந்திரம் சொல்லி எழுத வைக்கிறேன். ஆனா…. என் குழந்தைக்கு…” முடிப்பதற்குள் தொண்டை அடைத்துக் கொண்டு, கண்களில் கண்ணீர் கொப்பளிக்க இவர்களின் வாக்குவாத சப்தம் கேட்க இயலாத வாய் பேச இயலாத சிறுவன் தனது தந்தை சீனிவாஸ சாஸ்திரிகளை வெள்ளைச் சிரிப்போடு ஓடி வந்து கட்டிக் கொண்டான்.

Series Navigation

கோவை புதியவன்

கோவை புதியவன்