டெல்லிக்குப் போகும் முஷாரஃப்

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் புட்டோ


.

ஆச்சரியமாக, இந்தியப் பிரதமர் வாய்பாய் பாகிஸ்தானிய ராணுவ ஆட்சித்தலைவரான ஜெனரல் முஷாரஃப் அவர்களுக்கு நியூதில்லி வந்து பேச அழைப்புவிடுத்திருக்கிறார்.

அழைப்பிதழ் கொடுத்த மாதம் மே மாதம். முந்தைய மே மாதங்களில் ஒரு மே மாதத்தில் அணுகுண்டு சோதனைகளும், மறு மேமாதத்தில் கார்கில் பகுதியில் இரு தேசங்களும் போரும் புரிந்தன.

இந்தியப் பிரதமர் கொடுத்த அழைப்பிதழ் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பாகிஸ்தானிய ஜெனரலுக்கு மூச்சுக்காற்றுப்போல வந்திருக்கிறது. 1999 அக்டோபரில் ராணுவப்புரட்சி செய்து ஆட்சிக்கு வந்த இவர் தினந்தோரும் பேச்சுவார்த்தைக்குக் கெஞ்சிக்கொண்டிருப்பதால், உடனே அழைப்பிதழை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

முஷாரஃப் தான் பிறந்த இடமான தில்லிக்கு திரும்பிச்செல்ல மூட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தாலும், அவரைப்பார்த்துப் பொறாமைப்பட முடியாது. பழைய எதிரியான இந்தியாவிடம் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் எந்த பாகிஸ்தானியத் தலைவரை விடவும் மிகவும் பலகீனமான நிலையில் இவர் அங்கு போகிறார். பாகிஸ்தான் இந்தியாவுடன் 3 போர்களை நடத்தியிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் , இந்திய ராணுவத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என பலகாலம் முயன்று வந்திருக்கிறது.

விஷயங்களை இன்னும் மோசமாக்க, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் உறவும் கசந்து வருகிறது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் அணுகுண்டுத் திட்டங்களைப்பற்றி இருக்கும் கவலையை வெளிப்படையாக எழுதியிருக்கின்றன.

இந்த சூன் மாதத்தில், ரிச்சர்ட் ஆர்மிடாஜ் என்ற துணைச் செயலாளர் (deputy secretary of state), ‘அணுகுண்டு தொழில்நுணுக்கத்தை பாகிஸ்தான் பரப்புவது பற்றி அமெரிக்கா கவலை கொண்டிருக்கிறது ‘ எனத் தெரிவித்தார். ‘அணுகுண்டு திட்ட அமைப்புகளில் இருந்த பழைய , இப்போது ஓய்வு பெற்று விட்ட சிலர் ‘ பற்றி குறிப்பாக கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் சுல்ஃபிகார் அலி புட்டோ அணுகுண்டு வரைபடங்களைக் கொடுத்து அணுகுண்டு உருவாக்க பணித்த டாக்டர் காதீர் அவர்களை இந்த முஷாரஃப் அரசாங்கம் ஓய்வு பெற வைத்துவிட்டது. இஸ்லாமாபாத் அரசாங்கத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தினர் சொல்லும் ஓய்வு பெற்ற நபர் இந்த காதீர் தானா அல்லது வேறு ஒருவரா என்று தெரியவில்லை. முன்னாள் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கம் (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இது பெனசீர் புட்டோவின் கட்சி அரசாங்கம்) பாகிஸ்தான் அணுகுண்டு அமைப்பில் இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. பாகிஸ்தான் அணுகுண்டு தொழில்நுட்பத்தைப் பரப்புவது பற்றி அமெரிக்கா கொண்டுள்ள கவலை, இந்தியப்பிரதமர் வாஜ்பாய் அவர்களும் ஜெனரல் முஷாரஃப் அவர்களும் பேசும் இந்தத் தருணத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் பாகிஸ்தான் இந்தியாவிடம் பேசும்போது பாகிஸ்தானைப் பாதிக்கும். ஏற்கெனவே பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது. முஷாரஃப் அவர்களைப் போலன்றி வாஜ்பாய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர். அவர் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசிவிட்டே பாகிஸ்தான் தலைவரைக் கூப்பிட்டிருக்கிறார்.

முஷாரஃபிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை கூட கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் நாடுகடத்திவிட்டார்(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு- பாகிஸ்தானில் மூன்று முக்கிய கட்சிகள். மொஹாஜிர் குவாமி மூவ்மெண்ட் என்ற கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹ்உசேனை பெனசீர் நாடுகடத்தினார். இவர் லண்டனில் வசிக்கிறார். பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரான பெனசீர் அவர்களை நவாஸ் ஷெரீப் நாடு கடத்தினார். பெனசீர் எமிரேட்ஸில் வசிக்கிறார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவரான நவாஸ் ஷெரீப் அவர்களை ஜெனரல் முஷாரஃப் நாடு கடத்தினார். நவாஸ் ஷெரீப் இன்று சவூதி அரேபியாவில் வசிக்கிறார்) எனவே முஷாரஃப் அடுத்தவர் தேசத்தில் போய் அரசியல்கிரிக்கெட் ஆடுகிறார். அங்கு மக்கள் தங்கள் குழுவுக்குத்தான்(இந்தியாவிற்கு) ஆதரவு கொடுப்பார்கள்.

வட கொரியாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் பாகிஸ்தானிய விஞ்ஞானிகள் பற்றி பாகிஸ்தான் அரசாங்கம் உடனே ‘அப்படியெல்லாம் இல்லை ‘ என்று சொல்லிவிட்டது. இருப்பினும், வட கொரிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் பாகிஸ்தானிய அணுகுண்டு அமைப்பு நிலையங்களைச் சுற்றிப்பார்த்ததற்கு தடயங்கள் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

பிரதமர் சுல்பிகார் அலி புட்டோ அவர் இருந்தபோது அணுகுண்டு விஞ்ஞானிகளுக்கு கட்டளை இட்டு அணுகுண்டு தயாரிக்க நேரவரைபடம் வரைந்து தந்தபோதும் அதன் பின்னரும் அவரது கட்சி (பெனசீரின் கட்சி) அந்த திட்டங்களுக்கு ஆதரவு தந்து அதை முன்னேற்றியது. கட்சி ஆட்சியில் இருந்த இரண்டு சமயத்திலும் ராக்கெட் தொழில்நுட்ப அமைப்பு ஒன்றை உருவாக்கி ராக்கெட் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் சென்றது. இந்த கொள்கைகளும் வேலைகளும் அந்த அரசாங்கத்தை பதவி இறக்கம் செய்யவைத்தன.

ஆனால் இன்றைய அமெரிக்க கவலைகள் எல்லாம், இன்றைய பாகிஸ்தானிய தலைமையின் கீழ் ஏவுகணை தொழில்நுட்பம் இருப்பது பற்றிதான்.

ஜனாதிபது புஷ் தன் நாட்டை ராக்கெட்டுகளிலிருந்து பாதுகாக்க பாதுகாப்புக்குடை ஒன்றை நிறுவ முனைந்திருக்கிறார். அதனால் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் அமெரிக்கர்கள்.

அணுகுண்டுகளை பாகிஸ்தான் வெடித்ததன் பின்னர், பாகிஸ்தான் அணுகுண்டு கட்டுப்பாடு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இருப்பினும், இந்தியா மேமாதம் 1998இல் அணுகுண்டு வெடித்த பின்னர் இந்தியாவின் மீது போடப்பட்ட தடைகளை நீக்கத்தான் அமெரிக்கா யோசித்து வருகிறது. பாகிஸ்தான் மீது போடப்பட்ட தடைகள் அப்படியே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். இந்தத் தடைகளோடு, ஜனநாயகம் கொல்லப்பட்டதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் மீது போடப்பட்ட தடைகளும் இணைந்துகொள்ளும்.

வெளிநாடுகள் பாகிஸ்தான் மீது போட்டிருக்கும் தடைகள், பாகிஸ்தான் உள்ளேயே உள்நாட்டு ஆதரவுத்தூண்கள் இல்லாதது, பொருளாதாரம் திவாலாகும் என்று தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி, வெளிநாட்டு நிதி நிறுவனங்களை மட்டுமே நம்பி பாகிஸ்தான் இன்றைய நிலை எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால், ஜெனரல் முஷாரஃப் தில்லிக்குப் போவது எத்தனை முக்கியமான விஷயம் என்று தெரியும். தில்லி, ஜெனரல் முஷாரஃப் அவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுத்திருக்கின்றது என்பது புரியும்.

இதை வைத்துப் பார்க்கும்போது, பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு இந்த மாதிரியான எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை. அவர் சிரித்துக்கொண்டே சொல்லலாம், ஒரு பூச்சியைப் பார்த்து சிலந்தி சொல்வது போல ‘வலைக்குள் வந்துவிடு ‘ என்று அவர் சொல்லலாம்.

பாகிஸ்தானிய ஜெனரலை அழைக்கும்போது கூட, இந்தியத்தலைவர் தன் கட்சியில் உள்ள தீவிரவாதிகளை திருப்தி செய்துவிட்டார். கடந்த ஒரு வருடமாக காஷ்மீரில் இருந்த ‘போர் நிறுத்தத்தை ‘ வாபஸ் வாங்கிக்கொண்டே இந்த அழைப்பிதழை செய்திருக்கிறார். ‘போர் நிறுத்தம் ‘ வாபஸ் என்பது அதிகமான இந்திய ராணுவச்செயல்களும், காஷ்மீர தீவிரவாதிகளின் செயல்களையுமே குறிக்கின்றன. தில்லிக்குப்போகும் இந்த நேரத்தில் , பேச்சுகளிலிருந்து விலக்கப்பட்ட காஷ்மீரப்போராளிகள் பக்கமிருந்து, முஷாரஃபிடமிருந்து, இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். மிகக்குறுகியகாலமே இருந்தது அந்த நல்ல உறவு. அப்போது ராணுவத்தலைவராக இருந்த முஷாரஃப் மிகவும் வெளிப்படையாகவே வரவேற்பு அணியில் இல்லை என்பது தெரிந்தது. அவர் இல்லாதது, அவருக்கு இந்திய தலைவர் வருகைக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதையே காண்பித்தது. இப்போது முஷாரஃப் அவர்களின் தில்லி விஜயம், ராணுவ பார்வைக்கும் அரசியல்பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தையே காண்பிக்கிறது. வாய்பாய் அவர்கள் லாகூர் வந்தபோது எதிர்த்த அதே ராணுவத்தலைவர், இன்று ‘சீஃப் எக்ஸகூடிவ் ‘ என்று பெயர் போட்டுக்கொண்டபின்னர், ‘எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ‘ பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று அறிவித்ததும், தில்லிக்கு பயணம் செய்யவும் ஒப்புக்கொண்டதும் நாம் காண்பதே.

பாகிஸ்தானிய எதிர்க்கட்சிகள் இந்த இரண்டு அணுஆயுத நாடுகளிடையே பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதை வரவேற்கின்றன. தேர்ந்தெடுக்கப்படாத இந்தத் தலைவர் கொண்டுவரும் எந்த தீர்ப்புக்கும் நாங்கள் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுக்கப்போவதில்லை என்றாலும், முஷாரஃப் விஜயம் வரலாற்று ரீதியான எதிரிதேசங்களிடையே பேச்சுவார்த்தைத் தொடர்பு ஆரம்பிப்பதை வரவேற்கவே செய்கிறோம். இரண்டு தேசங்களுக்கிடையே அமைதி இல்லாமல் இருப்பதில் பாகிஸ்தானிய ராணுவத்துக்கு ஆதாயம் இருப்பது காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை ஒரு நல்ல தீர்ப்பையும் வழங்கப்போவதில்லை என்பது எதிர்க்கட்சிகளின் கணக்கு. வரும் வருடத்தில் பொதுத்தேர்தல் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், இந்த விஜயம் கடினமான பிரச்னையை மென்மையானதாக ஆக்கி தீர்வுக்கு எதிர்காலத்தில் வழிவகுக்கும் என நம்புகிறோம்.

பாகிஸ்தானிய மக்கள் கருத்தும் மாறிவருகிறது. முன்பு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர்கள் துரோகிகள் என்று கருதப்பட்டார்கள். அணுஆயுத வெடிப்புகளுக்குப் பின்னர் வந்த தடைகளும், இந்தியாவுடனான போரும், பாகிஸ்தானில் மோசமாகி வரும் பொருளாதாரத்தை உருவாக்கி விட்டன.

முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தானின் அணுஆயுத திட்டத்தில் பெருமை கொண்டாலும், அந்த அணுஆயுதத்திட்டத்துக்கு பணம் கொடுக்கவோ, பாகிஸ்தானுக்கு பண உதவி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தவோ முடியவில்லை. படுபாதாளத்துக்குச் செல்லும் பொருளாதாரம், எல்லாத்தரப்புகளிலும் வெகுவேகமாகப் பரவி வரும் வறுமை, பசித்தவர்கள் அதிகமாகத் தேர்ந்தெடுக்கும் தற்கொலைகள் போன்றவை பாகிஸ்தானின் இன்றைய தலைமுறையையும், இன்றைய சமுதாயத்தையும் பற்றிய புதிய சித்திரத்தை வரைகின்றன.

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கும் இன்றைய பாகிஸ்தான், அமெரிக்காவின் ‘தோழர்களுக்கெல்லாம் மேம்பட்ட தோழனாக ‘ இல்லை. இந்தியா பாகிஸ்தான் பற்றிய ‘சமசீர் நோக்கு ‘ என்று பேசியதெல்லாம் மாறிவிட்டது. அமெரிக்கா அதிவேகத்தில் இந்தியாவுடனான உறவுகளை முன்னேற்றி வருகிறது. இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் வெவ்வேறு விதங்களில் உறவுகொள்வோம் என்றும் அமெரிக்கா பேசிவருகிறது. புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வெளியுறவு கொள்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும்.

மாறிவிட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் புதிய பிரச்னைகளைப் புரிந்து கொள்ளவும் ஜீரணிக்கவும் வேண்டும். பாகிஸ்தான் அணுஆயுதங்களை விற்பது பற்றிய உலகத்தின் கவலை, நம்பிக்கை வளர்ப்பது, இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது, இந்தியாவுடனான பிரச்னைகளை நல்லமுறையில் அணுகுவது, இன்றைய ஆஃப்கானிஸ்தான் கொள்கையை உதறிவிட்டு ஆஃப்கானிஸ்தான மக்கள் பயங்கரவாதிகளை ஒதுக்கவும், பொருளாதார முறையில் முன்னேறவும் வழிவகுப்பது போன்றவை இவை.

முஷாரஃப் அவர்களின் நியூதில்லி விஜயம் பரவலாக எல்லோராலும் பார்க்கப்பட்டு விவரிக்கப்படும். பாகிஸ்தான் பிரிவினையின் போது அவர் விட்டுவிட்டு வந்த ஊருக்குச் சென்று அவரது வீட்டைப் பார்ப்பது அவருக்குச் சந்தோஷமாக இருக்கும். ஆனால் அவர் திரும்பிவரும்போது அவரது பைகளில் எந்தவிதமான நல்ல தீர்ப்பும் இருக்காது.

அப்படித்தான் இருக்கவேண்டும். முஷாரஃப் தீர்வுகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் எந்தவிதமான சட்டப்பூர்வமான அங்கீகாரமும் பாகிஸ்தானில் இருக்காது. இந்தியா தன்னை உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு ஒரு சர்வாதிகாரியுடன் உறவுகொள்வது அதன் மரியாதைக்கும் மதிப்புக்கும் ஏற்றதாகாது.

இருந்தும் இந்த விஜயம் ஒரு குறியீட்டளவில் சரியானதுதான். பழைய வழிகள் வேறு புதிய வழிகள் வேறு என்பது கார்கில் போரை கட்டியமைத்தவர் புரிந்துகொண்டால் சரி.

1989இலும் 1999இலும் இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை எதிர்த்த பாகிஸ்தானிய ராணுவம் இதைப் புரிந்துகொண்டதே ஒரு பெரிய சாதனை. இதைப் புரிந்துகொள்வதற்கு பத்தாண்டுகளுக்கு மேல் பிடித்தாலும்.

(நேஷன் என்னும் பாகிஸ்தானிய தினப்பத்திரிக்கையில் பெனசீர் புட்டோ எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

Series Navigation

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் புட்டோ

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் புட்டோ