டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

கே. ராமப்ரசாத்



டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை படித்தபோது இழுத்துச் செல்லப்படும் இரையைப் போல நான் என்னை உணர்ந்தேன். இந்தப் புத்தகத்தை நான் முதலில் புத்தகக்கடையில் எடுத்து நின்றபடியே லேசாக வாசித்து பின் வியந்து, விலையைப் பார்த்தேன்… ‘டபக்’ என்று மூடி எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

கடையை ஒரு சுற்று சுற்றியபின் மனம் இல்லாமல், திரும்பவந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு பில் போட சென்றேன். அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி. 80 பக்கங்கள் கொண்ட இச்சிறு புத்தகத்தின் விலை 25/- தான். ஆனால், விலைக்குச் சரிசமமாக அதன் அருகிலேயே 80 பக்கங்கள் என்பதை முதலாவதாக புத்தகத்தின் வலப்பக்கத்திலும், இடப்பக்கத்தில் அதைவிடச் சர்று சிறிய ஃபான்ட்டில் விலையையும் அதன் கீழே ஏதோ ஒரு சில ஆங்கில எழுத்துக்களையும் அச்சடித்துள்ளார்கள் (கவிதா வெளியீடு). இது பார்க்க 80/- ரூபாய் போல உள்ளது. Pages என்று ஆங்கிலத்தில் போட்டாலும் விலை என்று பார்க்கப் போகும்போது தனியாக கொட்டை எழுத்தில் உள்ள எண்களையே கண்கள் கவனிக்கின்றன.

நான் டாக்டர் ருத்ரனின் தேடாதே என்ற புத்தகத்தை 1996 ஆன் ஆண்டு 18/- ரூபாய்க்கு வாங்கினேன்.(96 பக்கங்கள்). இப்போது அதை எடுத்துப் பார்த்தால் அதிலும் இப்படியே பக்கங்களைச் சரிசமமாக விலைக்கு அருகிலேயே சற்று தள்ளி முதலாவதாகப் போடப்பட்டுள்ளது. இது என்னைப்போல விலை பார்த்து வாங்க முடிவெடுப்பவர்களுக்கு சற்று இடராதா ?

இவர் புத்தகங்கள் தேடல் என்ற ஒரு அம்சத்தை மனநல மருத்துவர் பார்வையில் அலசும் தன்மை கொண்டவை. தேடாதே புத்தகம் ஒரு அற்புதப் படைப்பு. அதன் நீட்சியாகவே நான் இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது உணர்ந்தேன்.

இவரின் முதல் புத்தக அறிமுகம் எனக்கு GUSH வெளியீடாக 1995 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் போவோர் வருவோருக்கெல்லாம் இலவசமாகக் கொடுத்த 30 பக்க (LIC OF INDIA CHENNAI DIVISION இலவசமாக வெளியிட உதவிய) இலவசக் கையேடு – மன நலம் சில குறிப்புகள் என்ற புத்தகம். அதை நான் இன்றும் மிக பத்திரமாக வைத்து அவ்வப்போது குறிப்புதவிக்குப் பயன்படுத்துகிறேன்.

பகிர்தலின் சுகம் கண்ட மொழி சும்மாயிருக்காது என்று சொல்லும் டாக்டர் ருத்ரனுடன் நான் உடன்படுகிறேன்.

மூன்றாண்டுகளுக்குப் பின் (டிசம்பர் 2005 வெளியீடு முதல் பதிப்பு) எழுதிய புத்தகம் இது என்று டாக்டர் ருத்ரன் இதில் கூறியுள்ளார் . தேடாதேயுடன் இதை ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது.

தேடாதே பத்து மாடு பற்றிய ஒரு ஸென் நூல். உயிர் மனித வாழ்வைப் பற்றிய தன்னம்பிக்கை நூல்.

மகாகவியின் (பாரதி) கோட்டுச் சித்திரங்கள் அழகாக இந்தப் புத்தகத்தில் உள்ளன. நான் சிலவற்றை வரைந்து பார்த்தேன். பாரதியை வரைவது மிகச் சுலபம் என்று என்னை மகிழ வைத்த ஒரு அனுபவத்தை இப்புத்தகம் எனக்கு அளித்தது.

உயிர் வாழ்கிறேன் என்று உரக்கச் சொல்லும் நாம், உயிருடன் இருக்கிறோமா, உயிருடன் வாழ்கிறோமா ? என்ற கேள்வியுடன் துவங்கும் இப்புத்தகத்தை தேடாதே போல வரிசையாகப் படித்தால் தான் புரியும் என்பதில்லை. இப்புத்தகத்தின் எந்த பக்கத்தையும், எந்த பாராவையும் தனியாகப் படித்தாலும் அது தனியாக ஒரு பொருள் கொண்டு நிற்பது, விளங்குவது ஒரு விசித்திரம். மனம் விரும்பியபோது புத்தகத்தை விரித்து எந்தப் பக்கமும், எந்த பாராவையும் தேர்ந்தெடுத்து அதை மட்டும் வாசிக்கலாம். தனியாகப் புரியும். அழகாக அவ்விதம் எழுத்து நடை அமைந்துள்ளது.

சரளமாக மனதில் தோன்றுவதை தாவோ, ஸென், ஷேக்ஸ்பியர், கண்ணதாசன், பகவத் கீதை, கடோபநிஷத் என்று கலந்துகட்டி ( ?!) எழுதியுள்ளதை வாசிப்பது ஒரு சுகமான அனுபவம்.

தன்னைப் பாதுகாத்தல்தான் தன்னையறிதலின் முதல் கட்டம். தன்னையறிவதே வாழ்வின் உச்சகட்டம். எளிதாகத் தொனிக்கும் இது பலருக்கு அமைவதில்லை. பார்வையில் தெளிவிருந்தால் தான் பாதை புலப்படும். இலக்கும் வசமாகும். (பக்கம் 77) என்று இவர் சொல்லியுள்ளது என்னை யோசிக்க வைத்தது.

தன்னையறிவதே வாழ்வின் உச்சகட்டம் என்பது சரி, அடுத்தது என்ன? எப்படி? என்பது ஒரு முட்டுச்சுவர். வாழ்வில் சுகமும் உண்டு என்று இவர் சொல்வது ஏற்க்கொள்ளத் தக்கதே. அந்த ‘உம்’ என்பது எந்த அளவிற்கு நம்மால் அளவிடப்படுக்கிறது? இந்த சுகம் என்பது தன்னை அறிவதால், நேசிப்பதால் மட்டும் வந்துவிடாது. இதற்கு அடுத்தவரின் ஒத்துழைப்பும் தேவை. மேலும், நீ முதலில் உன்னை சரிபடுத்திக் கொள். உன்னைப் போன்ற பலர் சேர்ந்தது தான் ஒரு சமூகம். அது எப்படி இருந்தால் உனக்கென்ன ? என்னும் வாதம் சரிதானா என நான் எனக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டேன். இங்குதான் மனவியலும், சமூகவியலும் பார்வைக் கோணங்களை மாற்றுகின்றன.

என் பார்வையில் எவருக்குமே இரண்டு வித பார்வைகள் தம் வாழ்வு பற்றி உண்டு.

ஒன்று வேலை செய்வது – உயிர் வாழ. இது தனியாகச் செய்தாலும் அடுத்தவரின் உறவு வேலை செய்ய தேவையான ஒன்று. ஒரு சமூகமாக, குழுவாகத் தான் இங்கு செயல்பட முடியும்.

இரண்டாவது தேடுவது – இது தன்னைப் பற்றியோ, அல்லது தான் வாழும் சமூகம் பற்றியோ இருக்கலாம். இதற்கு தனிமையில் சில நாட்கள் அல்லது நேரங்களைக் கழிப்பது மற்றும் தம்மை விட வலிமை குறைந்தவர்களுக்குத் தாமகவே சென்று உதவி அதில் ஒரு நிறைவு காண்பது.

ஒரு வினோதமான உண்மை என்னவென்றால் இந்த இரண்டுமே ஒருவருக்குத் தேவையான ஒன்று ஆனால் அவை எந்த விகிதத்தில் அமைத்துக் கொள்வது என்பது அவரவர் அறிவு, வாழ்வின் வசதி இதைப் பொறுத்தது. சுயம் என்பது தான் அனுபவித்ததையும் நம்பும். அடுத்தவரின் வாழ்வைப் பார்த்து புரிந்துகொண்டதையும் நம்பும். அது தான் குழப்பம்.

டாக்டர் ருத்ரன் சொல்கிறார், “சரியான சந்தர்ப்பம், தவறான சந்தர்ப்பம் என்று எதுவுமில்லை. அணுகுமுறைகள் தான் சரியாகவும், தவறாகவும் விளைவுகளை உருவாக்குகின்றன”. என் மனதில் உடனே தோன்றிய எண்ணம் என்னவென்றால் கற்ற வித்தை பயன்பட வேண்டிய நேரத்தில் பயன்படாமல் போகும் சாபம் எல்லோருக்கும் வாழ்வில் உண்டு. இந்த சாபத்தை நீக்க நம் மனபயிற்சி மற்றும் அணுகுமுறை உதவும் என்றாலும் சூழ்நிலை என்பது மற்றொரு முக்கிய அம்சம்.

மேலும், எல்லாவற்றிற்குமே நீதான் காரணம் நீதான் பொறுப்பு நீ சரியானால், உன் சிந்தனை மற்றும் அறிவு சிறப்பானால் உன் வாழ்வின் பிரச்சினைகள் மறைந்து போகும் என்னும் போதனை பொதுவாக எனக்கு ஏற்புடையதல்ல. எல்லாவற்றிற்கும் மனது தான் காரணம் என்பது வளரும் நிலையில் உள்ள குழந்தைகளுக்குப் பொறுந்தும்.

இவ்விதம் சொல்பவர் பற்றி ஒரு மிருக கதை உண்டு. ஒரு காட்டில் உள்ள மான்களை சாப்பிட சிங்கம் விழைந்தது. ஆனால், அதற்கு ஒரு பிரச்சினை. அது ஒரு மானை சாப்பிடும்போது அடுத்த மான் பார்த்து விட்டால் என்னாகும். பார்த்த மான் பயந்து போய் நம்மையும் இந்தச் சிங்கம் இப்படித்தான் ஒரு நாள் சாப்பிடும் என்று ஓடிப்போகும் அபாயம் உண்டு. எனவே, இந்தச் சிக்கலுக்கு சிங்கம் நரியின் உதவியை நாடியது. நரி ஒரு தந்திரம் செய்தது. அது என்னவென்றால், நரி ஒவ்வொரு மானிடமும் போய் நீ மான் அல்ல நீ வேறு ஒரு பிராணி. நீ உயர்ந்தவன், அழகானவன், இனிமையானவன். அப்படி இல்லாதவர்களும் உன் இனத்தில் உண்டு. அவர்களைச் சிங்கத்துக்குப் பிடிக்காது, எனவே அது அப்படிப்பட்ட மான் போன்ற ஒரு பிராணியைத் தான் அடித்துச் சாப்பிடுகிறது. உனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று ஒரு பிரசாரத்தைச் செய்தது. மான் இனமும் தம்மை உயர்ந்த, அழகான, இனிமையான ஒரு பிராணியாகக் கற்பனை செய்துகொண்டு, அடிபட்டு இறக்கும் சக ஜீவனைப் பற்றி ஒரு பொருட்டாக மதியாமல் அங்கேயே வாழ்ந்தன. சிங்கத்திற்கும் இரை தினமும் பிரச்சினை இல்லாமல் கிடைத்து. என்று முடியும்.

இக்கதை அடுத்தவருக்கு ஒரு பிரச்சினை என்றால் உனக்குமா அப்படி வரும்? நீ அப்படியல்ல நீ தனித்தன்மையானவன் என்று சொல்பவர்காகச் சொல்லப்பட்ட ஒரு கதை.

இதன் தொடர்ச்சியாக நான் 2001 ஆம் ஆண்டு சென்னை ஆன்லைன் இணைய தளத்தில் டாக்டர் ருத்ரன் ஒரு http://www.chennaionline.com/chennaicitizen/2001/rudran1.asp பேட்டியில் சொன்ன சம்பவத்தை இங்கு நினைவு கூர ஆசைப்படுகிறேன்.

படிக்க ஆர்வம் இல்லாத, ஆடல் கலையில் ஆர்வமும், விருப்பமும் உள்ள ஒரு சிறு வயது வந்த பெண், பள்ளிக்குச் செல்வதுபோல யூனிஃபார்முடன் சென்று, ஒரு ஓட்டலில் உள்ள நடன விடுதிக்குச் சென்று ஆடை மாற்றிக்கொண்டு (பையில் கலர் ஆடை) ஆசைதீர நடனமாடிவிட்டு, மாலை மறுபடியும் யூனிஃபார்ம் அணிந்து வீட்டுக்குத் திரும்பிய ஒரு உண்மை நிகழச்சியை டாக்டர் ருத்ரன் விவரித்திருப்பார். இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்தவர்கள் இது நமக்கல்ல நாம் அவ்விதம் கிடையாது என்று எண்ணி ஒரு மனமகிழ்ச்சியடைந்து வாழ்க்கையின் அடுத்த வேலைக்குச் செல்வது எந்த அளவிற்கு கசப்பானதோ, அந்த அளவிற்கு இந்த நோயான சமூகம் ஒரு கசப்பான ஒன்று என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இதுபோன்ற ஒரு பிரச்சினைக்கு நாம் என்ன செய்யலாம் அல்லது என்னதான் செய்ய முடியும் ? இந்தக் கேள்விக்கு என் மனம் குழப்பத்திற்கும் ஸ்தம்பித்துப் போனதற்கும் இடையில் மெளனமாகிறது.
—————————————

kramaprasad@gmail.com

Series Navigation