ஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

நேச குமார்


சங்கர மடம் மேல் மிகுந்த அபிமானமோ, ஜெயேந்திரரை பெரிய ஆன்மீகவாதியாகவோ, இந்து மதத்தின் எடுத்துக்காட்டாகவோ நான் கருதியதில்லை என்றாலும், கொலைக் குற்றம் சாட்டப் பட்டபோது பலரைப் போல நானும் அதிர்ந்தேன். பின், இதன் பிண்ணனியில் வேறு யாராவது இருந்திருக்கலாம், மடத்தின் மற்ற பிரதானிகள் ஜயேந்திரர் மீதுள்ள அபிமானத்தால் இதனை செய்யத் தூண்டியிருக்கலாம், வேறு யாராவது செய்திருக்கலாம் என்றெல்லாம் சந்தேகங்கள் ஆட்கொள்ள, என்னதான் உண்மை என்பது வெளிவரட்டும் எனக் காத்திருந்தேன், காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இப்போது புறப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள், மிகவும் அதிரவைக்கின்றன.

கொலைக் குற்றச்சாட்டு பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், எனது நன்பர்களிடம் பாலியல் குற்றச்சாட்டுகளும் அரசல் புரசலாக காதில் விழுகின்றன என்றும் அதில் ஏதேனும் உண்மையிருந்தால் அது இதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதே மாதிரியே நிகழ்ந்து விட்டது. ஜெயலலிதாவின் பேட்டியை நேற்று பார்த்தேன் most painful decision in my political life என்று இதை விவரித்திருக்கிறார்.

கொலை பற்றிக் கூட நிரூபிப்பது கடினம், ஏனெனில் ஜெயேந்திரர் மீது கொலைக்குத் தூண்டியது, கிரிமினல் கான்ஸ்பிரஸி போன்ற குற்றச் சாட்டுகள் தாம் உள்ளன. அவற்றை நிரூபிப்பது மிகவும் கடினம். இதையெல்லாம் மீறி கோர்ட்டில் நிரூபனம் ஆனால் கூட, அதில் அவரின் அபிமானிகள் யாராவது தாமாகவே, மடத்தின் வசதிகளை பயன்படுத்திக் கொண்டு செய்திருக்கலாம் என்ற ஐயத்தின் பேரில் அவரின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ளக் கூடும்.

ஆனால், அனுராதா ரமணன் கூறியிருக்கும் குற்றச் சாட்டில் ஜெயேந்திரரே சம்பந்தப் பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குற்றச் சாட்டு உண்மையாயிருக்கும் பச்சத்தில், அனுராதா ரமணனை பாராட்டத் தான் வேண்டும். அவரது குற்றச் சாட்டை உண்மையா பொய்யா என்பதை உறுதி செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. அப்போது அவர் மடத்து இதழின் ஆசிரியராக இருந்தாரா இல்லையா, பின் அவராகவே அப்பொறுப்பிலிருந்து நீங்கினாரா, நீக்கப் பட்டாரா, அவரது குற்றச்சாட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் பெண், அப்பெண்ணின் கணவர், அவர் மீது தாக்குதல் நிகழ்ந்தபோது தாக்கல் செய்யப் பட்ட முதல் தகவல் அறிக்கை, அவரது தோழியான பெண் போலீஸ் அதிகாரி, மன்னிப்பு கடிதம் கொணர்ந்த உதவியாளர் என்பன போன்ற எண்ணற்ற நூலிழைகளைப் பின்பற்றி இக்குற்றச்சாட்டின் உண்மையை தோண்டிப் பார்த்துவிடலாம்.

இக்குற்றச் சாட்டு உண்மையாயிருக்கும் பட்சத்தில், இதன் ஆழம், இன்வால்வ் ஆனவர்கள் என்று அதன் வளையம் விரியும் வாய்ப்பு இருக்கிறது, நிச்சயமாக இதை ஆழ-அகல விசாரிக்க வேண்டும்.இப்போது இதை எழுதும் நேரத்தில் தினகரனில் பார்க்கிறேன், யுவஸ்ரீ என்ற சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக யுவஸ்ரீயின் தாயார் புகார் எழுதிக் கொடுத்திருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மரணமடைந்தது தொடர்பாக சில தகவல்களை விசாரணையின் போது தெரிவிப்பேன் என்று இறந்தவர் கூடப் படித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குற்றம் சாட்டும் பெண்களின் மீது பதில் குற்றச் சாட்டுக்களை வைப்பது,பன்னிரண்டு வருடம் ஏன் சும்மா இருந்தார் என்பது, அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி பேசி, அவர்களின் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது போன்ற காலகாலமாய் பயன்படுத்தும் ஆயுதங்களை எதிர்க்குழுக்கள் உபயோகிப்பதை கண்டுகொண்டு, அம்மாதிரியான திசை திருப்பல்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். மேலும், யாரேனும் இம்மாதிரியான குற்றச் சாட்டுகளுடன் முன்வந்தால், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து, யார் யார் சம்பந்தப் பட்டிருக்கின்றார்கள் என்று தீவிர ஆய்வு செய்யவேண்டும்.

இதெல்லாம் படிக்கும் போது, இதைத் தொடர்ந்து இணையத்திலும், நேரிலும் நிகழும் விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தனிப்பட்ட முறையில் கவலை தருவது ஒட்டு மொத்த சந்நியாச தர்மத்தின் மீது நிகழும் தாக்குதல்கள் தாம்.

சந்நியாச முறையையே குற்றம் சாட்டும் நன்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விழைகிறேன். இல்வாழ்வைத் துறந்த பல மகான்கள் உலகின் சரித்திரத்தையே மாற்றியுள்ளனர். குடும்பத்தைத் துறந்த புத்தராகட்டும், நசிந்து போன குடும்பத்துக்காக தொழில் செய்ய மறுத்து இவ்வுலகின் அனைத்து ஜீவர்களும் எனது குடும்பத்தாரே அவர்களுக்காக நான் துறவு மேற்கொண்டு சேவை செய்தே ஆவேன் என்று அறிவித்த விவேகானந்தராகட்டும், வள்ளலாராகட்டும், பட்டினத்தாராகட்டும், காட்டிலும் மேட்டிலும் காட்டுமிராண்டிகளிடத்தும் உயிரையும் பொருட்படுத்தாமல் தனியே சென்று இறை சிந்தனையையும் , பண்புகளையும் பரப்பிய எண்ணற்ற புத்த பிட்சுக்கள், சந்நியாசிகள் ஆகியோரின் தியாக வாழ்வு இத் தருணத்தில் நமது கண்ணில் படட்டும், கவனத்துக்கு வரட்டும். துறவறம் என்ற பெயரில் தவறிழைப்பவர்களுக்கு தண்டனை தாருங்கள், துறவறம் என்ற கான்சப்டையே குற்றம் சொல்லாதீர்கள்.

உலகெங்கிலும், துறவிகள் என்ற பெயரில் உலவும் கயவர்கள் எல்லா மதங்களிலும், சமுதாயங்களிலும் உள்ளனர். பக்கத்தில் உள்ள பாகிஸ்தானில் கூட இம்மாதிரியான குற்றச் சாட்டுகள் எழும்போதெல்லாம், சூஃபி முறையே தவறென்ற பிரச்சாரமே மேலோங்குகிறது. ஐரோப்பாவிலோ பெரும்பாலோனோர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, எல்லா அவலங்களுக்கும் ஆதாரம் கத்தோலிக்கர்களின் பிரம்மச்சார்ய முறையே என்று தீர்மானித்து விட்டனர். இது ஆன்மீகத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்று ஓரிடத்தில் விவேகானந்தர் வருந்துகிறார்.

போலிச் சாமியார்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பல புல்லுருவிகள் இருப்பது உண்மைதான். அவர்களிடம் பலர் ஏமாந்து போவதற்கு, ஆன்மீகக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளாமல் ஆதாயம் தேட ஓடிடும் ஆடவர் கூட்டமும், அப்பாவிப் பெண்டிரும்தான் காரணம். இப்படிப்பட்ட கயவர்கள் உள்ள அதே சமயத்தில் பல உண்மையான துறவிகள் எல்லாக் காலத்திலும் ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். இப்போதும் உள்ளனர். ஒட்டு மொத்த துறவறத்தையே தவறென குற்றம் சாட்டுவது, இவர்களின் தியாக வாழ்வை அவமதிப்பதாகும். இவர்களால், இவ்வுலகுக்கு ஏற்பட்ட அக-புற முன்னேற்றங்களை இகழ்வதாகும்.

அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவது இயல்பே. ஆனால் துறவு முறையே தவறு, பெண் உறவு இல்லாமல் யாராலும் ஒழுக்கத்தோடு இருக்க முடியாது என்று கோரிக்கை வைப்பவர்கள் புத்தர், ஏசுநாதர், விவேகானந்தர், வள்ளலார், ஆதிசங்கரர் போன்றவர்களை நினைவு கூறுங்கள்.

அதே போன்று எனக்கு கவலையளிக்கும் மற்றொரு விஷயம், இதை இந்து மதத்தின் மீதான தாக்குதலாக தீவிர இந்துக்கள் சிலர் கருதுவதும், அதை நிரூபிப்பது போன்று இந்து மதத்தைத் தொடர்ந்து தாக்கிவருபவர்கள் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு, அப்போதே சொன்னோம் பார்த்தீர்களா ? மதமே தவறு, சாமியார்கள் எல்லோரும் இப்படித்தான், அத்வைதம் தவறு, பிரம்மச்சர்யம் தவறு என்று பிரச்சாரம் செய்வது. இதுவும் தவறே. ஏராளமான போலிச்சாமியார்கள் இருப்பது உண்மைதான். எப்போது சாமியார்கள் தோன்றினார்களோ அப்போதே போலிச் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இந்து எதிர்ப்பாளர்களின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக , கண்மூடித்தனமாக ஜயேந்திரரை ஆதரிப்பது, விசாரணையை குறைகூறுவது, இந்து மதத்திற்கு நல்லதல்ல.அம்பு விடுபவர்களுக்கு பதில் அம்பு விடுமுன், எதைக் காக்க நினைக்கிறோமோ அதை நோக்கியே அவசரத்தில் ஏவிவிடும் அபாயம் உண்டு.ஆதலால், உணர்ச்சி வசப்படாமல், தொலைநோக்கில் சமுதாய நலன் கருதி, நிதானித்து செயல்பட வேண்டும்.

போலிச் சாமியார்கள் பலர் மீது தைரியமாக பாதிக்கப் பட்டவர்கள் குற்றம் சாட்ட, அதைத் தொடர்ந்து அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்க இவ்வழக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று தோன்றுகிறது எனக்கு.இப்பிரச்சினையைத் தொடர்ந்து, பொதுப் பணத்தைப் பெறும் அனைத்து மத நிறுவனங்களையும் கண்காணிப்பது போன்ற ஒரு அமைப்பு, இம்மாதிரியான பாலியல் குற்றச் சாட்டுகளை விசாரிப்பது போன்ற ஒரு அமைப்பு இருந்தால் கூட நல்லதோ என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் இதைப் பற்றிய ஒரு பரந்த விவாதமாவது சமுதாயத்தில் நிகழ வேண்டும்.இம்மாதிரி நிகழ்வது அனைத்து மத நிறுவனங்களையும், மதத் தலைவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

குற்றம் சாட்டப் பட்டவர்களை காபந்து செய்ய முயல்வோர், இந்து மதம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இந்து மதம் என்பது, இந்து மதத்தைக் காப்பவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் அல்ல. இந்து மதத்தைக் காப்பவர்கள் என்று நாம் கருதுபவர்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது, எதைக் காக்க நினக்கிறோமோ அந்த அஸ்திவாரத்தையே அழித்துவிடும். அமெரிக்காவில் பீடோபைல் பாதிரியார்களுக்கு எதிராக கொண்டுவரப் பட்ட ஜீரோ டாலரன்ஸ் பாலிஸியை எதிர்த்த வாடிகனின் செயலே இப்போது நிகழும் ஆர்ப்பாட்டங்களை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. எங்கும் மதவாதிகள் ஒரே மாதிரிதான் யோசிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

காஞ்சி மடமோ, ஏனைய சங்கர மடங்களோ, இத்தகைய சாமியார்களோ, இந்து மதத்திற்காக குரல் கொடுப்பவர்களோ இந்து மதத்தின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல. ஜயேந்திரரை இந்து மதத்தின் ‘போப் ‘ என வர்ணித்து சில ஆங்கில பத்திரிகைகள் எழுதுகின்றன. அதுவும் தவறு. தமிழகத்திற்கு வெளியே ஜெயேந்திரரை இந்து மதப் பிரதிநிதியாக பெரும்பாலோர் பார்க்கும் வேளையில், உள்ளே அவர் பிராம்மணர்களின் பிரதிநிதியாகத் தான் காணப் படுகிறார். அப்படியும் அனைத்து பிராம்மணர்களின் பிரதிநிதி அவர் அல்ல. மூன்று சதவிகிதத்துக்கும் குறைவான தமிழ் பிராம்மணர்களில், சுமார்த்தர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்களிலும் எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் எண்ணவில்லை. பொதுப்படையாக நான் உட்பட பல பிராமணரல்லோதோர் சங்கர மடத்தின் பிராமணத்துவத்தை சங்கடத்துடன் நோக்கிவந்திருந்தாலும், பிராமணர்களுக்குள்ளேயே பல குழுக்கள் சங்கர மடத்தை தீவிரமாக எதிர்த்து வந்துள்ளன. அதில் வைணவர்கள், சிருங்கேரி ஆதரவாளர்கள் போன்றோர் வெளிப்படையாகவே சங்கர மடத்தை எதிர்த்தும் வந்திருக்கின்றனர்.

சங்கர மடம் தமிழகத்தில் சமீபகாலமாக மிகவும் பிரபலமடைந்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம், அவர்கள் கும்பாபிஷேகம் போன்றவற்றிற்கு உடனடியாக உதவிகளை செய்ததும், ஜாதி வித்தியாசம் பார்த்துக் கொண்டிருந்த முறையை மாற்றி இப்போதெல்லாம் எல்லா ஜாதியினருக்கும்(பெயரளவிற்காவது) உதவ ஆரம்பித்ததுதான்.இதில் ஜயேந்திரரின் பங்கு நிறைய என்றாலும், இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது மறைந்த மகாப்பெரியவர் சந்திரசேகரர் தான். பிராமணன் அல்லாதவன் என்ற வகையில் அவரது கருத்துக்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும், அவரது ஆன்மீக சிந்தனைகள், ஆழமான கருத்துக்கள், எளிய வாழ்வு, துறவறம் போன்றவற்றால் உயர்ந்து நின்றவர் அவர். பிராமணத்துவத்தை எதிர்த்தவர்கள் கூட மிகவும் மதிக்கும் அளவிற்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்தவர் அவர்.

தமிழகத்துக்கு வெளியே இந்துப் பிரதிநிதிகள் போல சங்கர மடத்தாரைப் பற்றி ஒரு இமேஜ் அவரைப் பற்றி ஏற்படக் காரணம், மறைந்த பெரியவரின் ஆன்மீகம் மற்றும் சமீப காலமாக ஜெயேந்திரரின் அரசியல் மற்றும் சேவை செயல்பாடுகள். மற்ற மடத் தலைவர்கள் சும்மா இருந்தபோது ஜெயேந்திரர் முன்னின்று பல (சரியோ, தவறோ) கருத்துக்களையும் தெரிவித்து வந்தார், அயோத்திப் பிரச்சினை, மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றால் இந்தியா முழுவதும் இந்துக்களிடையே மிகவும் பிரபலமானார். ஒரு கட்டத்தில் வி.எச்.பி போன்ற இயக்கங்கள், தீவிர இந்துக்களிடையே அவரின் மீதான அபிமானம் வளர்வதைக் கண்டு இவர் அவர்களின் அடித்தளங்களை ஹைஜாக் செய்து விடுவாரோ என்று அஞ்சும் அளவிற்கு இந்துப் பிரதிநிதி போன்ற தோற்றத்தை இம்மாதிரியான செயல்பாடுகள் ஏற்படுத்தின.

அவர் மீது இக்குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சேவை போன்ற நடவடிக்கைகளில் எந்த (இந்து) சந்நியாசியும் ஈடுபடக் கூடாது என்ற பிரச்சாரமும் மேலோங்குகிறது. இது எந்த வகையிலும் சரியல்ல. இம்மாதிரியான பொதுப்படையான கருத்துருவாக்கம் தான் கவலையளிக்கிறது. அவர் தவறிழைத்திருந்தால், அதற்கும் அவரது மற்ற செயல்பாடுகளுக்கும் முடிச்சுப் போட்டு, முன்னுக்கு வந்து உழைக்க நினைக்கும் ஏனையோருக்கு முட்டுக்கட்டை போடுவது சரியல்ல. தவறு யாரிழைத்தாலும் தண்டிப்போம், ஆனால் அதற்காக எல்லா சந்நியாசிகளும் மடத்துக்குள்ளேயே முடங்கி பூஜை,புனஸ்காரம் என்றிருக்க வேண்டும் என்று செய்யப் படும் பிரச்சாரத்தையும் கண்டிப்போம்.

அதே மாதிரி , இதற்கும் பக்திமான்களாக இருப்பதற்கும் முடிச்சுப் போடுவதும் தவறே. ஜயேந்திரருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்கள், அந்த நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்பவர்கள் எல்லோருமே தீவிரமான இந்து மதப் பற்றாளர்கள் தாம். குற்றம் சாட்டப் பட்ட ஜெயேந்திரரை கிரிமினல் என்றழைத்த அரசு வழக்கறிஞர் க.துரைசாமி பக்திமான் தான். வார இறுதிகளில் திருக்கடையூருக்கு சென்று வழிபடுபவர்தாம், அபிராமி மீது தமிழ்ப்பாக்களைப் புனைந்தவர்தாம், வருடா வருடம் சபரிமலைக்கு மாலை போடுபவர்தாம். அவர் மட்டுமல்ல, ஜாமீன் தர மறுத்த காஞ்சீபுரம் மாஜிஸ்திரேட் உத்தமராஜிலிருந்து கிட்டத்தட்ட அனைவருமே இம்மாதிரியான பக்தி மிகு இந்துக்கள் தாம். இவர்கள் யாரும் தமது இந்துத் தன்மைக்கும், பக்தி உணர்வுக்கும் இவ்வழக்கிற்கும் இடையே எவ்வித முரண்பாடுகளையும் காணவில்லை.

இந்து மதத்தின் பன்முகத்தன்மையே அதன் பலம். இச்சம்பவத்தினால், இந்து மதமும், சமுதாயமும் மேலும் ஆரோக்கியமாகுமே தவிர பலவீனமடையாது. ஆன்மீகப் பிடிப்புள்ள, மதப்பிடிப்புள்ள இந்துக்கள் முன்வந்து இவ்விஷயத்தில் உண்மையை கொணர்வதை ஆதரிக்க வேண்டும். அதிர்ச்சியடைந்து முடங்கிப் போய், அமைதி காப்பது, தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்து வருபவர்களுக்கும், அவர்களை பின்னிலிருந்து தூண்டிவிட்டு குளிர்காயும், ஆதாயம் தேட முயலும் விஷமிகளுக்கும் வசதியாய்ப்போய்விடும்.

இந்து சமுதாயம் மறுமலர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று உறுதியாக நம்புபவன் நான். அப்பாதையில், ஆண்டவன் போடும் கணக்கு நமக்குப் புரியவில்லை. தனிப்பட்ட முறையில், இது இந்து சமுதாயத்திற்கு நன்மையையே கொணரும் என்பது எனது அபிப்ராயம். காவியுடையில் நடமாடும் சில கயவர்களால் மதத்தின் மீதும், கடவுளின் மீதும் நம்பிக்கையிழந்து நாளடைவில் புரையோடிப்போய் மதமும், மடங்களும் ஒரேயடியாக வீழ்வதை விட அவ்வப் போது இம்மாதிரியான சம்பவங்கள் வெளிவருவது, சம்பந்தப் பட்டோர் தண்டிக்கப் படுவது நல்லதுதான். இது நடக்காமல் இருந்தால், கத்தோலிக்க கிறித்துவம் பல முன்னேறிய நாடுகளில் துடைத்தொழிக்கப் பட்டது போல இங்கேயும் ஏற்பட்டுவிடும். புத்தமதம் இந்தியாவில் அழிந்ததற்கு, அவர்களது சங்க அமைப்பில் நிலவிய பாலியல் மோசடிகளே காரணம் என்று சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகவே தொலைநோக்கில் மதத்திற்கும், மடங்களுக்கும் ஏற்படப் போகும் நன்மைகளை உத்தேசித்தும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி ஏற்படவும், பாதிப்புகள் தொடராமல் இருக்கவும், இம்மாதிரியான விசாரனைகளை, வெளிக் கொணரல்களை ஆதரிப்போம்.

இதே போன்று, சங்கர மடம் பிராமணாள் ஜாதிச் சங்கம் மாதிரி செயல் படுகிறது என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பிராமணன் அல்லாதவன் என்ற முறையில், ஜெயேந்திரரின் சிலபல ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட உதவிகளையும் கூட நான் ஒரு சில வேளைகளில் சந்தேகத்துடனே பார்த்து வந்திருக்கிறேன். என்னைப் போன்றே பல இந்துமத விசுவாசிகள் (பிராமணரல்லாதோர்) சந்தேகப்படுவதையும் பார்த்திருக்கிறேன். இந்நிலையில், ஆசாரத்தின் சிகரமாக தங்களைக் கருதிக் கொள்பவர்கள் சிலரின் ஆதர்ஷ புருஷர், ‘சூத்திரர்களே ‘ பெரும்பாலும் வசிக்கும் சிறையில் வாசம் செய்வது, ‘சூத்திரர்கள் ‘ தயார் செய்யும் சிறைச் சாப்பாடு என்று பலவித வெளியாசாரங்களை மீற நேர்ந்தது, இம்மாதிரி ஆசாரசீலர்களை சமத்துவப் படுத்தி, ஜாதி வித்தியாசங்கள் பாராட்டாமல் இருக்க வழிகோலும் என்றும் தோன்றுகிறது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, இனி கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் பிராமண ஆதிக்கசக்திகளும் தமிழ்நாட்டில் அடங்கிப் போகும். இது உடனடியான நன்மை. நான் இப்படிச் சொல்வது பிராம்மண ஜாதியில் பிறக்க நேர்ந்த பலருக்கு வருத்தம் தரலாம், ஜாதி மத வித்தியாசங்களைக் கடக்க முயலும் வேளையில், நிதர்சனத்தை மறுதளிப்பது, உண்மைகளை மூடி மறைப்பது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். மேலும், சில தனிப்பட்ட பிராமணர்களின் ஜாதி உணர்வால், அவர்களின் நடவடிக்கை கண்டு எழுந்த கோபத்தால் இந்து சமயத்தையே வெறுக்கும் அளவுக்குப் போன, போயிருக்கும் பலப்பல சம்பவங்களை, நபர்களை நான் நன்கறிவேன். ஜயேந்திரருக்குக் கிடைத்திருக்கும் இந்த ‘தண்டனை ‘( அவரது நோக்கில்), ஜாதீயத்தால் மனமுடைந்து போன பெரும்பான்மையினருக்கு உண்மையிலேயே இத்தனைநாள் அடக்கிவைத்த கோபத்தை எல்லாம் வெளியேற்ற ஒரு வடிகாலாய் அமையும். உண்மையிலேயே சமத்துவம் கொண்ட இந்துசமுதாயம் மலர இது வழி வகுக்கும்.

இது பிராமணர்களுக்கும் தொலைநோக்கில் நன்மையைத்தான் கொடுக்கும். இனி அவர்களை ஆரியசக்தி, ஆதிக்கசக்தி என்று வைக்கோல் கன்றுக்குட்டி மாதிரி காட்டிக்காட்டி உள்ளேயும் வெளியேயும் பல கூட்டங்கள் பால் கறந்து கொண்டிருந்தது தொடராது. கட்டுப் பெட்டித்தனத்தையும், காலத்துக்கொவ்வாத ஆசாரக் கருத்துக்களையும் கடைப் பிடிப்பதை அவர்கள் மாற்றிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.

இப்படி இந்த விவகாரத்தால் விளையப் போகும் நன்மை தீமைகள் என்று இப்படி இறுதியாய்ப் பார்த்தால் நன்மைகளே அதிகம் என்று தோன்றுகிறது. அதுதான் சிவபெருமான் சித்தம் போல. ஆகவே, இந்து சமுதாயம் இப்பிரச்சினையில் துவண்டு விடாமல், இந்த திசை மாறித் திரும்பும் அம்புகளை ஜாக்கிரதையாய் எதிர் கொண்டு, தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

– நேச குமார் –

Series Navigation