சோதி

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

புதுவைஞானம்.


மங்கலாக இருந்தது சிந்தனை
இளமைக் காலம் தொட்டே.
மந்தகதியான சோம்பல் வாழ்க்கை
ருசித்திருந்தது எனக்கு.
பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை
கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை.
நாட்களை கடத்திவந்தேன்
மாயையிலும் குழப்பத்திலும் – திடாரென

சந்திக்க நேர்ந்தது
நிச்சலனத்தில் வீற்றிருந்த
சத்திய புருஷனை.
வெப்பத்தையும் குளுமையையும்
வாதத்தையும் பித்தத்தையும்
வகைத்துரைத்தார் எந்தனுக்கு.
வாழ்வு என்பது முடிவற்ற துயரம்
விட்டொழி உலகியலை என்றார்.
மனந்திருந்து… ஒரு நாள்
வாழ்வின் அந்திமத்தை எட்டுவாய்
அப்பொழுது…
காலம் கடந்துவிடும்.

எண்வகைத் தவிப்பும்
மூவகைப் பாதையும்
வெருட்டி விழிக்கவைக்கும் என்றார்.
உன்னிப்பாய்க் கேட்டு
உறுதிபூண்டேன் மனந்திருந்த.
வருந்தி மனம் மாறி
வாழ்வியல்பை விட்டொழிந்தேன்.
ஊழ்ப் பயனாய்
உயர்ந்ததோர் குருவாகி
விண்ணையும் மண்ணையும்
நவகோளின் சுழற்சியையும்
வியத்தகு அற்புதங்களை
விளங்க உரைத்ததுடன்
நவகோளின் குளிகைதனை
நயமாக ஊட்டி விட்டார்.
இரவும் பகலுமாய்த்
தொடர்ந்தது என் பயிற்சி
சிரசின் சேற்றுப்பரப்பையும்
உட்காலின் ஊசித்துளைகளையும்
சென்றடைந்தது நவபாஷாணம்.
நாவடியில் (அண்ணாக்கில்)
சுதந்திரமாய்ப் பிரவகித்தது
மாங்காய்ப்பால்
ஊட்டுவிக்கப்பட்டது
நாபித்தளம் முழுவதும்
காளையும் வாலையும்
சக்தியும் சிவமுமாய்ப் புணர
சூரியனாய்ச்சந்திரனாய்
ஈயமும் ரசமும்…
அமிர்தம் பிறந்தது

காயின் கரும்பால் பெண்மை
பொற்தாகத்தின் குருதியை உறிஞ்சியது
சரீரம் பிராணன் ஆன்மாவென
மும்மலர்களும் மலர்ந்தன சிரசில்.
பஞ்ச கோசங்களும்
ஒத்திசைவாய்ப்பாட
பாதம் நோக்கித் திரும்பின
பயிற்சி முடிந்து
ஏறினேன் உச்சிக்கு
விண்ணின்றும் இறங்கிய இரு
சிரஞ்சீவிகளைக் கண்டேன்
வல்லிய உடலும்
தெள்ளிய மனமுமாக
சோதியைக் கண்டேன் – அருட்
சோதியைக் கண்டேன்.

–புதுவைஞானம்.

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்