செவி மட்டும் செயல் படட்டும் .

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

கோமதிநடராஜன்


கையில் இருக்கும் வரை,
கந்தல் துணி.
கை விட்டுப் போன பின்,
பட்டுப் பீதாம்பரம்.
கண்ணில் தெரியும் வரை
கடங்காரன்
கானலாய் போன பின்
கருணாகரன்.
அருகில் நிற்கும் வரை
அடங்காப் பிடாரி
அடங்கிப் போன பின்
அஷ்ட லக்ஷ்மி.
பக்கத்தில் நின்ற வரை
பரம வைரி
பயணம் போன பின்
பால்ய சினேகிதன்
பார்வையில் பட்டவரை
பங்காளி
பறந்து போன பின்
பாசமுள்ள சகோதரன்.
ஒருவரை-
இருக்கும் போது
இடிக்கின்றோம்
இழந்த பின்னே
துடிக்கின்றோம்.
இனியாவது-
எட்டும் இடத்தில் இருப்பவரை
ஏளனம் செய்யவும் வேண்டாம்
பெட்டிக்குள் வைத்தபின்
பெருமை பேசவும் வேண்டாம்.
————————–
பார்வையில் பட்டவரைப்
பாராட்ட நமக்கோ,
மனமில்லை
பாராட்டும் போது அதைக்
கேட்க அவருக்கோ,
செவியில்லை.
இறைவா! உனக்கு ஒரு
வேண்டுகோள்.
அவயங்கள் அத்தனையும்
அடங்கிப் போனாலும்,
செவியை மட்டும், சில
மணித் துளிகள்
செயல் பட வைப்பாயா.
விடை பெறும் ஆத்மா
பாராட்டு மழையில் நனையட்டும்
உவகையுடன் உயிர்,
உடலை விட்டுப் ,பிரியட்டும்

Series Navigation