மொழியாக்கம்: ஜடாயு
நான் ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தைப் பார்க்கவில்லை. என் நண்பர் திரை விமர்சகர் ஜீவானந்தம் திக்கற்றுத் தெரிவில் திரியும் சிறுவர்கள் எப்படி உருவாக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எத்தகையது என்பதை கூறும் படம் இது என்று சொன்னார். ஆர்வமும், ஆச்சரியமுமாக இருந்தது. ஏனென்றால், என் இளவயதில் நானே பழனிமலைப் பகுதிகளில் இலக்கின்றித் திரியும் பரதேசியாக இருந்திருக்கிறேன்.. எனது சமீபத்திய புதினம் ஒன்று முழுக்க முழுக்க பிச்சைக் காரர்கள் மிருகங்களைப் போல் வாங்கி விற்கப் படுவதையும், மிருகங்களை விடக் குரூரமாக நடத்தப் படுவதையும் பற்றியது தான். “இந்த ஸ்லம்டாக் படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.
இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் “நான் கடவுள்” படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். “நான் கடவுள்” படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.
அதை விடுங்கள். கேள்வி என்னவென்றால், ஒரு பிரிட்டிஷ்-இந்தியு திரைப்படம் ஏன் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து மும்பையின் சேரி வாழ்க்கையைச் சித்தரிக்க வேண்டும்?
இந்தப் படம் ஒரு வெளிநாட்டுத் தூதர் 2005-ல் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப் படுகிறது. இருப்பினும், உண்மையில் இந்தியா பற்றி ஊடகங்கள் கொட்டும் செய்திகள் தான் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தன என்று எண்ணத் தோன்றுகிறது. அண்மைக் காலங்களில், ஆங்கிலத்தில் வரும் இந்திய நாவல்களும் சரி, “மாற்று” (cross over) திரைப்படங்களும் சரி, அப்போதைய பரபரப்புச் செய்திகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தேசிய நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் கொண்டுவரும் மனித வாழ்க்கைச் சித்திரங்கள் பற்றிய செய்திகள். பொதுவாக அவை நமது கலாசாரத்தின் கீழ்தட்டில் இருக்கும் சேரி மக்கள், பாலியல் தொழிலாளர்கள், பிச்சைக் காரர்கள் இவர்களையே அதிகம் கவனிக்கின்றன. என்னைப் பார்க்க வரும் பெரும்பாலான திரையுலக நண்பர்களில், “மாற்று” திரைப்படங்கள் எடுக்க விரும்புவர்கள் எப்போதும் தங்கள் கண்களில் தட்டுப் பட்ட வித்தியாசமான செய்திகளைப் பற்றிப் பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.
கடந்த பல வருடங்களாக, நமது ஆங்கில நாளிதழ்களின் பார்வை இந்தியாவுக்கு வரும் ஒரு மேற்கத்திய சுற்றுலாப் பயணியினுடையது போலவே முற்றாக மாறிவிட்டிருக்கிறது. அவற்றின் பதிவுகள் ஒரு சராசரி வெள்ளைக்கார சுற்றுலாப் பயணியின் ரசனைக்கு முற்றிலும் ஏற்றதாக இருக்குமாறு சமைக்கப் படுகின்றன. எனவே இன்று உலகெங்கும் பிரபலமாக இருக்கும் இந்திய-ஆங்கில எழுத்து, அடிப்படையில் நமது வெகுஜன ஆங்கில ஊடகங்களின் ஒரு விரிவாக்கம் போலவே இருப்பதில் ஆச்சரியமில்லை தான். இந்த ஊடகங்கள் அத்தகைய எழுத்தை ஊக்குவிப்பதும் இயல்பாகவே நிகழும். அது ஒரு பரஸ்பரம் சாதகமான உறவு.
ஒரு நீண்ட பத்திரிகை விவரணமே படைப்பிலக்கியமாக ஆகிவிட்டதற்கு ஒரு சரியான உதாரணம் “தி ஒயிட் டைகர்” (The White Tiger). அதைப் படித்தவுடன், அதன் ஆசிரியர் அரவிந்த் அடிகா ஒரு பெரிய நாளிதழின் கவர் ஸ்டோரிக்காகக் காத்திருப்பது போலவே தோன்றியது. மிகக் கச்சிதமாக எழுதப் பட்ட, சீரமைக்கப் பட்ட, ஆனால் மிகமிகச் சாதாரணமான செய்திகளைக் கொண்ட உயிரற்ற சித்திரம். வழக்கமாக ஆங்கிலச் செய்திகள் படிக்கும் வாசகர்களுக்கு உடனே புரிந்து விடக் கூடிய விவரிப்பு, ஏனென்றால் இதையே தானே அவர்கள் தினந்தோறும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தப் பரந்த தேசத்தின், பல்வேறு கலாசார, சமூக சூழல்களில் வாழும், பல்வேறு பட்ட மக்களையும் ஏற்றவாறு சித்தரித்துச் செல்லவேண்டிய மொழி பற்றி அடிகாவுக்கு முன் பெரிதாக எந்த சவால்களும் இல்லை. ஏனென்றால், அவர் நமது வெகுஜன ஆங்கில ஊடகம் பேசும் அந்த “மீண்டும் மீண்டும் முலாம் பூசப்பட்ட” மொழியிலேயே கவலையின்றி சறுக்கி விளையாடலாம்.
அதனால், இயல்பாகவே ஒரு வசனகர்த்தா என்ன செய்வார்? இந்திய செய்தி ஊடகங்களில் இருந்து “கதைகளை” பொறுக்கி எடுப்பார். அப்புறம் மும்பை சேரி ஒன்றுக்கு ஒரு சின்ன விசிட் அடிக்கவேண்டியது, அவ்வளவு தான். விளைவு: ஸ்லம்டாக் மில்லினியர் போன்ற ஒரு படம். அது எப்போதுமே பாதுகாப்பான ஒரு “தீம்”, ஏனென்றால் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்குலகம் இந்தியா பற்றிய ஒருவிதமான ‘யதார்த்தத்தை’ அப்படியே முழுதாக நம்புமாறு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. முந்தைய காலங்களில், மதமாற்றப் பிரசாத்திற்காக பெரும்பணம் திரட்ட வேண்டி, கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துஸ்தானத்தை ஒரு வளர்ச்சிகுன்றிய, பண்பாடற்ற, “கிறிஸ்தவ மேன்மைகள்” அற்ற காட்டுமிராண்டி “பாகன்” (pagan) தேசமாக சித்தரித்தார்கள். இன்றைக்கு, அதே கருதுகோள் தான் ஆங்கிலம் படிக்கும் மேல்தட்டு இந்திய மக்களிடமும் பரவலாக உள்ளது – அவர்கள் தங்களையறியாமலேயே உள்மனதில் ஐரோப்பிய காலனியத்தின் வாரிசுகள் என்று தங்களை எண்ணிக் கொள்கிறார்கள்.
சல்மான் ரஷ்டியின் “மிட்நைட் சில்ரன்” ஆகட்டும், அடிகாவின் “தி வைட் டைகர் ஆகட்டும்”, இந்தப் படைப்பாளிகளின் அடிப்படை தாகம் ஒன்று தான்: இந்தியாவைக் குத்திக் கேலி செய்தல். அவர்களது இந்தியா தன்னை இயல்பாக ஆளவேண்டியவரை இழந்து விட்ட விசித்திர தேசம். ஆனால் இந்த விஷயம் சில இடங்களில் மட்டும் ஒரு அடிக்கோடாக மட்டுமே வரும். மேற்கத்திய தார்மீக முறைப்பாடுகள் இந்தியாவின் எல்லாத் தீமைகளையும் துடைக்கும் ரட்சகர்கள் போலக் காட்டப் படும் அருந்ததி ராயின் “காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” நூலில் வருவது போல.
நான் “ஏழாம் உலகத்தை” எழுதிய போது, எனதே ஆன ஒரு சொந்த அனுபவத்தை திறந்து காட்டி, திரைநீக்கம் செய்தேன். பிச்சைக்காரர்களுக்கு மத்தியிலும் நிலவும் அன்பு, பாசம், தியாகம் இவற்றை என் கண்களால் கண்டிருக்கிறேன். அந்தப் புதினம் இந்திய வாழ்க்கை எவ்வளவு இருண்டது என்பதையல்ல, இந்திய வாழ்க்கையின் என்றும் அழியாத நித்திய ஜீவனையே எடுத்துக் காட்டுகிறது என்று சொல்வேன். கடைக்கோடி வாழ்க்கையில் கூட இந்திய விழுமியங்களும், அதன் ஆன்மிகமும் ஆற்றும் பங்கை அது சித்தரிக்கிறது. திரைப்படத்திலும் கூட, இது இப்படியே தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். ஏனென்றால் நான் இந்திய வாழ்க்கை எனும் நீள்பாதையில் வெறுமனே செல்லும் ஒரு வழிப்போக்கன் அல்ல. அதனை வெறும் செய்தியாகப் பதிவு செய்பவனோ அல்லது அன்னியமாக நின்று பார்த்து சாட்சி சொல்பவனோ அல்ல. நான் அதன் உள் ஆழ்ந்து உறைகிறேன்; என் எழுத்தின் மனிதர்களுள் ஒருவனாகவே நான் இருக்கிறேன், அவர்களது மொழியையே நானும் பேசுகிறேன். ஒரு கலைப் படைப்பின் அழகிலும், நுட்பத்திலும் உயிர்நாடியான விஷயமே இது தான் என்று கருதுகிறேன்.
நம் மண்சார்ந்த எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் படுவதைப் பார்த்தாலே “மொழி” என்பதன் முக்கியத்துவம் நமக்குத் தெளிவாக விளங்கும். பெரும்பாலும், இந்த மொழியாக்கப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் மூல மொழியின் சொல்கட்டுமானம் மற்றும் அதன் கலாசார நுட்பங்களில் பிடிப்பும், தேர்ச்சியும் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் மிகச் சிலரே ஆங்கில மொழியைத் தினந்தோறும் பேசும், கேட்கும் சாத்தியம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள். ஒருவேளை புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்த விஷயத்தில் இன்னும் நன்கறிந்தவர்களாக இருக்கலாம். மொத்ததில், இந்திய ஆங்கில எழுத்தும், “மாற்று” திரைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட வகையான படைப்புக்கள் என்று சொல்லலாம். அவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஆனால் அவற்றை ஒருபோதும் “இந்தியப் படைப்புகள்” என்று நாம் அழைக்கவே முடியாது. ஏனென்றால் அவை சித்தரிக்கும் இந்தியா ஒரு சராசரி மேற்கத்தியனின் சராசரி கற்பனைகளில் உதித்தது. உண்மையான இந்தியா அதன் சொந்த மொழிகளின் எழுத்தில் தான் உள்ளது, அதை ஒரு நாள் நாம் கண்டிப்பாகக் கண்டுகொள்வோம்.
ஒரு இந்திய ஆங்கில எழுத்தாளர் தென்னகத்தில் ஒரு கிராமக் கோயிலுக்கு விஜயம் செய்தது பற்றி என் நண்பர் ஒருமுறை சொன்னர். அந்த எழுத்தாரின் பென்ஸ் கார் கிராமத்தின் ஒடிசலான, பழைய தெருவுக்குள் நுழையவே முடியவில்லையாம். கடைசியாக அவர் அகன்ற நால்வழி நெடுஞ்சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட வேண்டியிருந்ததாம். பல நேரங்களில் நம் ஆங்கிலமும் அப்படித் தான், அதனால் உண்மையான இந்திய யதார்த்தங்களை ஊடுருவி உள்செல்ல முடிவதே இல்லை. அதனால் செய்திகள் என்னும் நெடுஞ்சாலையிலேயே தள்ளி நின்றுவிடுகிறது
http://jataayu.blogspot.com
[1]
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=News+is+the+inspiration&artid=G0b9|n5wriw=&SectionID=f4OberbKin4=&MainSectionID=f4OberbKin4=&SEO=&SectionName=cxWvYpmNp4fBHAeKn3LcnQ==
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4
- நிறைவுக்காக
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா ?(கட்டுரை 51)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>
- குறுங்கதைகள்
- சை.பீர்முகம்மது
- செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை
- அவரும் இவரும் நீயும்!
- வேத வனம் விருட்சம் 23
- ‘போல்’களின்றி…
- நாற்காலிகள்…
- மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்
- சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்
- விஸ்வரூபம்
- இடைவெளி
- கடவுள்
- இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை
- கண்ணீரின் குரல்கள்
- உன் பழைய கவிதைகள்
- என் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்
- இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?
- மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !
- ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
- இணையத்தில் தமிழ்
- சாபம்
- மோந்தோ-4
- நினைவுகளின் தடத்தில் – (25)
- காதல் ஒரு விபத்து
- நடிகன்