சுஜாதா எழுதாத கதை

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

நரேந்திரன்


கத்தரி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.

அர்மீனியன் ஸ்ட்ரீட்டில் ஜன சந்தடி வெகுவாகக் குறைந்து போய், சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், நகரில் அங்கிங்கெனாதபடி எங்கும் கண்ணில் தென்படும் காக்கைகள் கூடக் காணாமல் போயிருந்தன.

வசந்த் மேசையின் மீது கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு, அந்த நிமிடம் முகேஷாக மாறி, “கபீ கபீ மேரே தில்மே கயாலு ஆத்தாஹே…” என சுருதி தப்பிப் பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டிருக்க, தடுப்புக்கு அப்பால் கணிப்பொறித் திரையின் பின்னே, சந்த்யா வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலுவலகம் சந்தடியின்றி இருந்தது. ஜூனியர்கள் அனைவரும் வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுச் சென்றிருக்க, ஆ·பிஸ் பையனை சில சில்லறை வேலைகளுக்காக வெளியில் ஏவியிருந்தான் வசந்த்.

கணேஷ் ஒரு வழக்கு விஷயமாக பொள்ளாச்சி சென்றிருந்தான். போலி தஸ்தாவேஜுகள் மூலம் கோவில் நிலங்களையும், தரிசு நிலங்களையும் விற்றுக் கோடிக் கணக்கில் காசு பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபல அரசியல்வாதிக்கெதிரான பொதுநல வழக்கு. அதன் சம்பந்தமாக சில சாட்சியங்களைச் சேகரிப்பதற்காகப் போயிருந்தான். இன்று மாலைக்குள் திரும்புவதாகத் திட்டம்.

அலுவலகத்தில் அவனுடன் சந்த்யா மட்டுமே இருக்க, வசந்தின் கொட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

சந்த்யா, புதிதாகச் சேர்ந்த கணேஷின் ஜூனியர். நீண்ட நாளைய கட்சிக்காரரான சவுகார்பேட்டை சேட்ஜி ஒருவரின் ஒரே மகள். சேட்ஜி பெரும்பணக்காரர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சட்டம் படித்து விட்டு, வீட்டில் வெறுதே இருக்கப் பிடிக்காமல் கணெஷிடம் ஜூனியராகச் சேர்ந்திருந்தாள். தவிட்டு நிறத்தில், சிக்கென இருந்த அவளின் பின்னே மந்திரித்து விடப்பட்டவன் போலத் திரிந்து கொண்டிருந்தான் வசந்த்.

“கடிச்சித் திங்கணும்போல இருக்காளே…இவளை மார் வாடின்னு சொல்றவனை ஏர்வாடிக்கு அனுப்பி வெக்கணும் பாஸ்” என்றான் வசந்த் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு.

“அது மார்வாரிடா பத்மாஷ்”

“ஏதோ ஒண்ணு….அதுல பாருங்க, இந்த பட்டினத்தார் என்ன சொல்றாருன்னா….”

“அடேய்…உன் வால்தனத்தை கொஞ்சம் அடக்கி வை. சேட்டு கொஞ்சம் வெவகாரமானா ஆளு. குஞ்சாமணிய அறுத்து கூவத்துல போட்டுப்பிடுவாரு…சொல்லிட்டன்” என்றான் கணேஷ்.

“சே…என்ன வார்த்தை சொல்லிட்டீங்க பாஸ். நான் திருந்தி ஆச்சே ஒரு மாமாங்கம்!”

“பாக்கத்தானே போரேன்”

தற்சமயம் வசந்த், “துஜே ஜமீபே புலாயா கயாஹே மேரேலியே….” என நீட்டி முழக்கிக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய அடுத்த அடியை அவன் பாடத் துவங்குமுன், ஏழெட்டு பேர் கைகளில் நீட்டிய உருட்டுக் கட்டைகளுடன் அலுவலகக் கதவைத் தள்ளிக் கொண்டு வேகமாக நுழைந்தார்கள். கண்ணிமைப்பதற்குள் கணிப்பொறிகளை அடித்து நொறுக்கினார்கள். கேஸ் கட்டுகள் மூலைக்கொன்றாய்ப் பறந்தன. நாற்காலிகளும், மேசைகளும் இழுத்தெறியப்பட்டு துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க,

வசந்த் சுதாரித்து எழுவதற்குள் இருவர் அவனைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள்.

“த்தா….எங்க தலிவர் மேலியா கேஸ் போட்றே…”

வசந்த் மயங்கிச் சரிவதற்கு முன், சந்த்யா “போலீஸ்….போலீஸ்” எனக் கீச்சுக் குரலில் அலறுவது கேட்டது.

விழிப்பு கண்டபோது ஆஸ்பத்திரிக் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான் வசந்த். உடலெங்கும் அங்கெங்கே கட்டுகள். தலை ‘விண் விண்’ணென்று தெரித்துக் கொண்டிருந்தது. நர்ஸ் ஒருத்தி குனிந்து அவனின் கைகளில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருந்தாள். நல்ல மலையாள முகம். ஏதேனும் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் அறைக்கு அந்தப்புறம் பார்வையை ஓட்ட, கணேஷ் கவலையுடன் அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

வசந்த் மெலிதாகப் புன்னகைத்து, “எப்போ வந்தீங்க பாஸ்?” என்றான்.

“நான் வந்து அஞ்சு மணிநேரத்துக்கு மேல ஆகுது…” என்றான் கணேஷ், கவலை தேய்ந்த முகத்துடன்.

நர்ஸ் “ஞான் பின்னே வரும்…” எனப் பறைந்து அறையை விட்டுச் செல்ல, வெளியில் நகரம் உறங்குவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது.

“அதிர்ஷ்டக்காரண்டா நீ….சந்த்யா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீ உயிர்பிழைச்சிருக்கறது சந்தேகம்தான்….”

சந்த்யா போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தோர் கூடி விட, தப்பியோடியவர்களில் இருவர் மட்டும் பிடிபட்டிருக்கிறார்கள். பிடிபட்டவர்களை பீ-த்ரீ போலிஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கிறார்கள் என்றான் கணெஷ்.

“அழகரசனோட ஆளுங்களாத்தான் இருக்கணும் பாஸ்…” என்றான் வசந்த். கணேஷ் புன்னகைத்தான்.

“பத்திரப் பதிவு அலுவலகத்துக் போயிருந்தியா என்ன?” என்றான் கணேஷ் யோசனையுடன். பொள்ளாச்சி போவதற்கு முன், சென்னை நகரைச் சுற்றி இருந்த புறம்போக்கு நிலங்களைப் பற்றிய தஸ்தாவேஜிகளைப் பற்றி அறிந்து வரும்படி வசந்திடம் சொல்லியிருந்தான்.

“காலம்பற போயிருந்தேன். நீங்க சொன்ன ஆளையும் பாத்துப் பேசினேன். அந்த சும்பன் டீடெயில்ஸ் வேணுமின்னா ஒரு பலான சினிமா நடிகையை ஏற்பாடு பண்ணித்தாங்கறான். நான் போடா ஜேட்டான்னு சொல்லிட்டு வந்திட்டன். நல்ல ஆள் பாத்தான் பாருங்க, மாமா வேலை செய்யுறதுக்கு….என்னவோ போங்க பாஸ்…தமிழ்நாடே குட்டிச் சுவராப் போச்சு…”

“ஹ்ம்…நான் உன்னை அங்கே அனுப்பியிருக்கக் கூடாது. இப்ப தமிழ்நாட்டில் நடக்குறது இன்ஸ்ட்டிடியூஸனலைஸ்ட் லூட்டிங். அரசியல்வாதி, அதிகாரி, போலிஸ்காரன் எல்லாரும் இதுல உடந்தை. மேற்படி ஆளு உடனே இதைப் பற்றி அழகரசனுக்குச் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். அதனாலதான் இந்தத் தாக்குதல்…இட்ஸ் எ வார்னிங்”

“கட்டேல போற வயசுல இந்த ஆளு எதுக்கு இப்பிடி பணத்துக்கு ஆலாப் பறக்குறாருன்னே புரியல்லியே”

“இது ஒரு வகையான மனநோய்தான். ஆசைக்குண்டோ அடைக்கும் தாழ்ன்னாக்க, பேராசைக்கு எவ்வளவு பெரிய பூட்டு வேணும்?”

வாசல் கதவு திறந்து, அழுதுச் சிவந்த முகத்துடன் சந்த்யா உள்ளே நுழைந்தான். அவளைப் பின் தொடர்ந்து ஒரு ஆள் பெரிய கூடையைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து வசந்தின் படுக்கை அருகில் வைத்துச் சென்றான்.

அடுத்த அரைமணி நேரம் சந்த்யாவின் அழுகை, ஆர்ப்பாட்டத்துடன் கழிய, அவள் வெளியில் செல்லு முன் காற்றில் முத்தமிட்டு “கெட் வெல் சூன் மேன்….” எனக் கூறிச் சென்றாள்.

“மச்சம்டா உனக்கு” என்றான் கணேஷ் புன்னகையுடன்.

“இவளக் காதலிக்கறதா இல்ல கற்பழிக்கறதான்னே தெரியல்லியே பாஸ்” என்றான் வசந்த வாயைப் பிளந்து கொண்டு.

“பேசாம அவளக் கல்யாணம் பண்ணிக்கயேன்?” என்றான் கணேஷ்.

“அடப் போங்க பாஸ். ரங்கராஜன் ஆவியா வந்து கொதவளையக் கடிச்சித் துப்பிடுவாரு. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்”

“ஆல் ரைட், நீ ரெண்டு நாளு ஆஸ்பிடல்லே இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு வா. ஆபிஸ் குப்பையாக் கிடக்கு. எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தணும்” எனக் கூறியபடி கணேஷ் நாற்காலியில் கிடந்த கோட்டைக் கையிலெடுக்க, செல் ·போன் கிணு கிணுத்தது.

எடுத்துப் பேசிய கணேஷ் உதட்டைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். ·போனை அணைத்து விட்டு வசந்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“பீ-த்ரீயிலேர்ந்து சத்திய மூர்த்தி பேசினாரு….போலிஸ் ஸ்டேசன்ல பிடிச்சு வச்சிருந்த ரெண்டு பேரையும் போதுமான சாட்சியம் இல்லாததால உடனே விடுவிக்கனுமுன்னு மேலிடத்து உத்தரவாம்….” என்றான் சுரத்தில்லாமல்.

மெதுவாக வாசலை நோக்கி நடந்த கணேஷ், சட்டெனத் திரும்பி, “ஐ ஹாவ் டிசைடட் டூ டேக் மைசெல்·ப் அவுட் ஆ·ப் திஸ் கேஸ். வேறொரு வக்கீலைப் பார்த்துக் சொல்லிக் கட்சிக்காரங்ககிட்டே சொல்லிடப்போரேன்….கடவுள் விட்ட வழி” என்றபடி கதவைத் திறந்து வெளியில் நடந்தான்.

வசந்தின் நினைவு தெரிந்து கணேஷ் இதுவரை எந்தக் கேசிலிருந்தும் பின் வாங்கியதில்லை. நிலைமை கைமீறிப் போயிருக்க வேண்டும்.

வசந்த் மூடிய கதவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்