சில பயணக் குறிப்புகள்

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue

காஞ்சனா தாமோதரன்


இங்குதான் அவள் உயிர்ப்பாள். கிளைத்துப் பரந்து குவியும் பரவசத்தின் மையத்தில். அலையடிக்கும் நீரின் அண்மையில். நீரின் மீதான ஆசையும் ஏக்கமும் என்றும் அவளுள் நீங்காதிருக்க. அப்பா அம்மா இருவருக்கும் அலைகளின் பாடல் பிடிக்கும். கூடவே மொழியில் செதுக்கிய பாடல்களும். அர்த்தம் பொதிந்த கவிதைகளை இருவரும் சேர்ந்து பாடுவதை நினைத்துப் பார்ப்பது அவளுக்குப் பிடிக்கும். கவிமொழியே அவளையும் கடலையும் அவளைப் பெற்றோரையும் வரவழைத்ததாகக் கற்பனை செய்வதும் அவளுக்குப் பிடித்தமானது. அங்கு எடுத்த அவர்களின் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறாள். பழுப்பேறிய தங்கநிறத்தில் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள். அலைநுரைக்கும் ஒரு சின்ன தட்டைப்பாறை மேல் அம்மா, சரிகை மாங்காய் நெய்த வெல்வெட் ரவிக்கையும் ஷிஃபான் புடவையுமாய். இதே நாகரீகம் அவளது கல்லூரி நாட்களில் மீண்டும் திரும்பி வந்து சிரிப்பூட்டியிருக்கிறது. படத்தில், பறக்கும் முன்றானையைத் தோளோடு அணைக்கும் அம்மாவின் முகத்தில் பயம் கலந்த மென்சிரிப்பு. பாறை மேல் பாசி வழுக்கோ. கேட்க வேண்டுமென்று நினைத்துக் கேட்காமல் விட்ட எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்று. அப்பாவுக்கு அப்போது மெலிந்த தேகம். அவர் பின்னால் கடலுக்கு நடுவே தெரிந்த பெரிய பாறை மேல் நினைவுச்சின்னம் இன்னும் எழும்பியிருக்கவில்லை. பாறையில் தேங்கிக் கிடக்கும் ஒற்றைக் கால் தவச்சுவடு படத்தில் தெரிய வாய்ப்பில்லை.

இந்தத் தொலைவிலிருந்து அவர்கள் பிரார்த்தனையும் பெருமூச்சும் கேட்பதும் சாத்தியமில்லை. சிரிப்புக்கடியில் இருந்த அந்தப் பயம். முந்தைய இரண்டும் தக்கவில்லை. அவள் வரமாக வேண்டப்படுபவள். அளவுக்கு அதிகமாகவே. அறியாத எதிர்காலத்தின் மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கையும் ஆசையும் தொட்டு உணர முடியும் திண்மையுடன், துடிப்புடன். அவளாவது தங்க வேண்டும். கடலோரச் சன்னலருகே அப்பா. அவரைக் கடந்து பிறை மின்னும் கடல் மீது படர்ந்த பார்வையுடன் ஒருக்களித்திருக்கும் அம்மா. அவளின் சின்னச் செதிலொன்று அம்மாவுள் முளைக்கிறது. செதில் உள்ள மீன்குஞ்சு. கடல் குழந்தை. அவள். மூக்குத்தியால் கப்பல்களை மூழ்கடித்தவளிடம் அம்மா ஏதோ நேர்ந்து கொள்கிறாள். மூக்குத்தி சிமிட்டிச் சிரிக்கிறது. பெருந்துயரும் மகிழ்வும் ஒரே புரிதலாய் அவளுள் அரும்புகிறது: தக்காத இருவர் ஒரு புறம். இதயத்தில் துளையுடன் பிறக்கப் போகும் தம்பி மறுபுறம். நடுவில் அவள். முழுமையாய். அதிசயமாய். அன்புக்குரியவளாய். அவர்கள் நம்பிக்கையில் ஓர் ஆவேசமும் வேகமும் இருந்திருக்க வேண்டும். அந்தக் கலவையே அவளுள் குளிர்ந்த நிதானமும் அணையாத தீச்சுடருமாய் உயிர்த்திருக்க வேண்டும். இன்று வரை.

* * * * * *

ஆறு வயதில் தம்பி வீட்டை விட்டு ஓடிப் போனான். ஏழு அடித் தூரத்திற்கு. பின்தோட்டத்தில் தென்னைக்கும் மாதுளைக்கும் இடையே கூடைகளை அடுக்கி வைத்து அதன் பின்னுள்ள இடம்தான் இனித் தன் வீடு என்றான். பக்கத்து வீட்டுச் சிவப்புச் சேவல் சுவரேறிக் குதித்து அவனைக் குசலம் விசாரிக்க வந்தது. அதை விரட்டினான். தன் இடம் என்றான். கூடைச் சுவரின் மறுபக்கத்தில் குத்த வைத்து அவனை உற்றுப் பார்த்தபடி அவளும் அவள் எண்ணங்களும். இவனுக்கு ஒரு தனி உலகம் தேவையாய் இருக்கிறது. அந்தத் தேவையை அவனால் எப்படி உணர முடிந்தது. தான், தன் இடம் என்று அவனால் எப்படி நினைக்க முடிந்தது. அவன் மேல் அவளுக்குப் புது மரியாதை உண்டாயிற்று. பெர்லின் சுவராய்க் கூடைச்சுவர் அம்மாவால் விரைவில் தகர்க்கப்பட்டது.

ஆனால், அவளுள் அலைந்த ஓர் உணர்வுக்கலவையை அன்று அவள் இனங்கண்டு கொண்டாள். சுதந்திர தாகம். எதிலிருந்து, ஏன் என்பதெல்லாம் இன்னும் சரியாய்ப் பிடிபடாத கேள்விகள். தேவையற்றவையும் கூட. உண்மையில், சுதந்திரம் என்பதை அடைவதை விட அருவமாய் அதைப்பற்றி எண்ணிச் சஞ்சரிக்கும் உணர்வே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அப்போது. யதார்த்த தளத்தில் பூரண சுதந்திரம் என்பதன் இருப்பு கேள்விக்குரியது என்று புரிந்தது பின்புதான்.

சிறுவயதில் பார்த்த ஒரு திரைப்படப் பூதத்தின் மேல் அவளுக்குப் பொறாமை. அது ஜாடிக்குள் சுருண்டு படுத்து வெளியுலகைப் பார்க்கும், ஜாடிக்கு வெளியே வந்து விந்தைகள் புரியும். பிறரால் அதன் உலகத்தைப் பார்க்கவோ நுழையவோ முடியாது. ஆமைகளின் மீதும் அவளுக்குப் பொறாமைதான். ஓட்டிற்குள் எவ்வளவு அடக்கமான எளிய வாழ்வு. அவளுள் வளர்கையில் தான் பார்த்த அகலத்திரை டி.வி. என்று அவள் மகள் ஒரு முறை குறுங்காவியம் வடித்தாள். அவர் சிரித்தார். அவளுக்கு மீண்டும் ஆமை ஞாபகம் வந்தது. உள்ளுறுப்புகள் மட்டுமல்லாது பலதரப்பட்ட அறைகளைப் பல்வேறு உபயோகங்களுக்காக ஆமைகளும் தம் ஓட்டினுள் மறைத்து வைத்திருக்கலாமோ. மறைவிடங்கள். படிக்கட்டுச் சரிவின் கீழுள்ள சின்ன இருட்டறை. செருப்பு வாங்கி வரும் அட்டைப் பெட்டி. பிஸ்கட், பென்சில் தகர டப்பாக்கள். கற்பனையில் படரும் சில வரிகளின் கவிதை நிழல். துண்டுக் காகிதத்தில் பொதிந்த இரகசியத் துணுக்கு. அந்தத் துண்டுக் காகிதம் கூட வாழ்வை விடப் பெரிதான ஒன்றின் இருப்பை நினைவுறுத்தி அதன் பிரதிநிதியாய் வடிவெடுத்து, அவளுள் புத்துயிர்ப்பும் பலமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும். அவளின் தனி உலகம்.

மறைவிடங்கள் நுணுக்கம் பொதிந்தவை. அவை இல்லையெனில் எஞ்சுவது வெறும் வாழ்வு மட்டும்தான்.

உள்ளே செல்லரித்து மெல்லத் தேய்ந்து கொண்டிருந்த அப்பா, சில வருடங்களுக்கு முன், ‘ஒவ்வொருவருக்கும் சிலவற்றை வைத்துக் கொள்ள ஒரு சின்ன அட்டைப்பெட்டி தேவை, ‘ என்றார். அப்பாவின் பெட்டியில் என்ன இருந்திருக்கும். அவளும் தம்பியும் அம்மாவும் நிச்சயம் இருந்திருப்பார்கள். அம்மாவுடன் சேர்ந்து படித்த கவிதை இனிமைகளும் பின்னால் தொடர்ந்த மெளனங்களும். இடையே அவர் மனதிற்குப் பிடித்ததாக அம்மா நினைத்த அந்தப் பெண்ணின் நிழலுருவமும் நினைவுகளும் இருந்திருக்கலாம். சரியையும் தவறையும் கடந்த ஒரு சினேகிதமா. சரியையும் தவறையும் கடந்த நிலைக்கு உயரும் மனமுதிர்ச்சி அப்பாவுக்கு இருந்திருக்குமா. அவள் பள்ளிக்கூடம் போன முதல் நாள், வகுப்பு ஆரம்பித்த அப்புறம் அறைச் சன்னல் வழியே இரண்டு சாக்கலெட்டுகளை அவளிடம் நீட்டியபடி, கண்ணில் நீர் துளிர்த்து நின்ற அப்பா. அந்த அப்பாவுக்கு அந்தச் சினேகிதத்தின் மறைவிடம் எப்படியோ தேவைப்பட்டிருக்கிறது.

இன்றுவரை அவளுக்குத் தெரிந்த ஒரே உண்மை அம்மாவால் அதைத் தாங்க முடியவில்லை என்பதுதான். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சும் நீண்ட பச்சைநிற ரப்பர் குழாயால் கழுத்தை நெரித்துத் தன்னை முடித்துக் கொள்ள முயலும் அளவுக்கு. அம்மாவின் கழுத்தைச் சுற்றியிருந்த குழாயைத் தளர்த்திக் கொண்டிருந்த அப்பா இனி அந்தப் பெண்ணைப் பார்ப்பதில்லை என்று கண்ணீர்ச் சத்தியம் செய்ய வேண்டிய அளவுக்கு. தென்னைங்கீற்றினூடே அடர்ந்த நட்சத்திர ஒளியில் இதைப் பார்த்து விதிர்த்து உறைந்து நின்ற அவளின் சிறு உருவத்தை உணரும் நிலையில் அவர்களிருவருமே இல்லை.

அதற்கப்புறம் தம்பி ஒருவனிடம்தான் வீட்டில் உண்மை இருந்தது. மற்ற எல்லோரும் தேர்ந்த நடிகர்கள் ஆனார்கள். அப்பாவிடம் நம்பிக்கை இருப்பதாக அம்மாவும், வாழ்வில் முழுமை இருப்பதாக அப்பாவும், நாடகத்தை நம்புகிற நாடகபாத்திரமாக அவளும். தம்பியைப் பார்க்கையில் அவளுள் ஒரு மென்மை. பாவம், இவனது உலகம் எவ்வளவு நம்பிக்கை நிறைந்தது. அதை உடையாமல் அணைத்துக் காக்க வேண்டுமென்ற ஆவேசத்தில் அவள் உணர்வுகள் குவிந்தன. மற்றபடி, அவள் ஆமையோடும் ஜாடிப்பூதத்தோடும் ஒன்றாய் உணர்ந்தாள். வீட்டின் ஆழ்ந்த மெளனத்தில் புலன்கள் கூராயின. எதிலும் மேல்பூச்சுகளை உதிர்த்து உள்ளிருப்பதை ஊடுருவிப் பார்க்க முடிந்தது. நாளடைவில், நீருக்குள் ஒலியாய் வெளியுலகம் மங்கி அடங்கிப் போயிற்று. உறவுகள் காய்ந்து வெடிப்பு கண்ட உள்வெளியில் நிறைய மறைவிடங்கள் பூத்தன. புத்தகங்கள். இசை. படிப்பு. தானே மனதுள் எழுதி எழுதி மூச்சடக்கி அமிழ்கிற கதைகள். சில சமயங்களில் சிலேட்டில் படம் வரைந்து தம்பியுடன் பகிர்ந்து கொள்ளும் கதைகள்.

நிரந்தரம். பலரையும் போல் இந்த வார்த்தையின் மேல் அவளுக்கு ஒரு மயக்கம். எதையும் சேகரித்து வைப்பது பழக்கமாயிற்று. நினைவில் பதித்த குறிப்புகளுடன்.

பள்ளி இறுதியாண்டின் கடைசிநாளில் பொறுக்கியெடுத்த அந்தப் பழுப்புநிறக் கல்லை இன்னும் வைத்திருக்கிறாள். அன்று காலையோடு பள்ளி முடிந்தாயிற்று. வரப்போகும் அக்கினி நட்சத்திரத்தின் உக்கிரத்துக்கு முன்னோடியான மதிய வெக்கையில் விளையாட்டு மைதானம் காய்கிறது. பல வருடச் சிரிப்பொலிகளும் ஓட்டப்பந்தயங்களும் காலம் கடந்த ஒரு பரிமாணத்தில் கண்ணாமூச்சி ஆடுகின்றன. வழக்கமாய் மரத்தடியில் சிதறும் எச்சில் சோற்றுப்பருக்கை கிடைக்காமல் இரண்டு காக்கைகள் ஏமாற்றத்தில் கரைகின்றன. வாதாம் மரத்தடிக் கல் பெஞ்சு பாவாடை தாவணியையும் மீறிக் கொதிக்கிறது. நல்ல பசி. இருந்தும் எழும்பி வீட்டுக்குப் போக மனமில்லை. பாக்கியாவும் அவளும் ஒருவரையொருவர் பார்க்காமல் உட்கார்ந்திருக்கிறார்கள். மெளனத்தின் கனம் தாங்காமல் அவள் குனிந்து அந்தப் பழுப்பு நிறக் கல்லைப் பொறுக்கி எடுக்கிறாள்.

பாக்கியா பேச ஆரம்பிக்கிறாள். கல்லைப் பற்றி. எருமையின் முழு கனத்தையும் பொறுமையுடன் தாங்கும். தேரையின் அழகை விமர்சிக்காது. சிறு பூ மலரத் தன் நெஞ்சைப் பிளக்கும். இன்னொன்றோடு உரசவும் தன் உள்ளொளியை வெளிப்படுத்தும். சிறுபிள்ளைகள் எறிந்தால் துள்ளிக் குதித்து நீர்ச்சருமத்தில் சுருக்கம் விழ வைத்து, பின் மெளனமாய் அடியில் மூழ்கும். திடுக்கிட்ட மீன்கள் மட்டும் சுற்றி நின்று இரங்கும். இப்படிப்பட்ட கல்லின் உள்ளுக்குள் நிச்சயம் பசிய வெளியின் அமைதியும் குளிர்ச்சியும், நகக்கீறல் பிறையின் மங்கிய ஒளியும் இருக்கும். பொறித்து வைத்த பிரபஞ்சக் குறிப்புகள் ஒளிரும்.

பாக்கியாவால் எப்படி இப்படியெல்லாம் நினைக்க முடிகிறது. இவள் மறைவிடங்களை முழுதுமாய் ஆளுபவள். இந்த உலகை விட்டு வேறெங்கோ இவளால் எளிதாய்ப் போக முடிகிறது, அவளையும் கூட்டிக் கொண்டு. இந்த நட்பைப் பிரிந்து படிக்கப் போவதால் அவளுக்குக் கிடைக்கப் போவது என்ன. சோற்றுச்சீட்டுப் பட்டம் ஒன்று. அது அவ்வளவு முக்கியமா. பாக்கியா பேசப் பேச அவளுள் ஏதோ பொங்கிப் பெருகுவது போல், லேசாகிக் காற்றில் சுதந்திரமாய் மிதப்பது போல். பாக்கியாவின் பேச்சும் ஒரு மறைவிடம். கல்லுக்குள் பிரபஞ்சம். காட்டியவள் இப்போது இல்லை. அந்தக் கோடை விடுமுறையில் அண்ணனின் ஸ்கூட்டரிலிருந்து எகிறி ஒரு சின்னக் கல் மேல் விழுந்தவள்தான். கழுத்து முறிந்து ஒரு நொடியில் உயிர் போயிற்று என்றார்கள்.

எதிர்பார்த்ததும் இல்லாததுமாய்ப் பிற இறப்புகள் பின்பு தொடர்ந்தன. அவை நிகழ்ந்த இடத்துக்கும் அவளுக்குமிடையே மூன்று சமுத்திரங்களும் ஒன்றிரண்டு கண்டங்களும். இறப்பைப் பற்றிய உணர்வுகளிலும் எப்படியோ அந்தத் தொலைவு அப்பிக் கொண்டது. இழப்பிற்கான சோகத்தில் போதுமான ஆழம் இல்லாததாய்த் தோன்றியது அவளுக்கே அதிர்ச்சியளித்தது. உறவே நீர்த்துப் போய் விட்டது போல. உணர்ச்சிகள் மரத்து, உள்மனதில் முங்கிப்போய் மேலே வராமலிருக்கலாம். நுகர்வுக்கலாச்சாரத்தின் இயந்திரத்தனம் மெல்லுணர்வை முழுதாய் நசுக்கியிருக்கலாம். ‘பெரிய பெரிய வார்த்தைகளின் பின் ஒளிந்து நீ உன்னை நியாயப்படுத்தித் தப்பிக்கப் பார்க்கிறாய். ‘ குற்ற உணர்வுகள். துயரத்தை விடக் குற்ற உணர்வே ஓங்கி நிற்கிறதோ. இன்னும் கொஞ்சம் குற்ற உணர்வு. பல நேரங்களில் இறந்தவர்கள் இன்னும் தாய்நாட்டில் உயிருடன் இருப்பது போன்ற ஒரு குழப்பம். தம்பி. அப்பா. இன்னும் சிரித்துக் கொண்டு இளமையுடன். புலம் பெயர்தல் விளைவித்த வினோதமான காலப்பெயர்ச்சி.

‘ஆங்கிலப் புத்தகங்கள் இருப்பதையே மறந்து விட்டாயா. ‘ ஸூஸன் சிரிப்புடன் கேட்டு நினைவைக் கலைக்கிறாள். இருவருக்கும் பிடித்தமான ஏக்கர் பரப்புள்ள இரண்டு மாடிப் புத்தக விற்பனை நிலையம். புத்தக அடுக்குகளின் இடையிடையே வாசகர் வசதிக்காகத் தூவப்பட்டிருந்த ஸோஃபாவொன்றில் இருவரும். கடைக்குள்ளேயே இருக்கும் காஃபி பாரிலிருந்து எஸ்பிரெஸ்ஸோ காஃபியின் வாசம் புதுப்புத்தக வாசத்தோடு சேர்ந்து மிதக்கிறது. சொர்க்க வாசம். வாசங்களைக் கடந்தவளாய் எதிர் ஸோஃபாவில் ஓர் இளம்பெண் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் உச்சந்தலை முடியின் பொன்னிறத்தில் அவதார மனிதன் அணிலுக்கு இட்டது போல் மூன்று செந்நிறப் பட்டைகள். வலது புருவத்தைக் குத்தி ஒரு தங்க வளையம். காது மடல்களில் வளையங்கள், குண்டலங்கள். உறைந்த இரத்த வண்ணத்தில் உதட்டுச் சாயப்பூச்சு. கவிழ்ந்த புத்தகம் தாங்கிய குட்டைச் சட்டைக்கும் கரண்டை வரை நீண்டு புரளும் கண்ணாடித் துண்டு பதித்த பாவாடைக்கும் இடையே தெரிந்த தொப்புளைக் குத்தி ஒரு வளையம். கை நிறைய வளைகள். இடது கையில் வங்கி போல் பச்சை குத்திய மலர்வளையம். வலது கால் கரண்டையில் நிறைய மணிகள் வைத்த கொலுசு. பின்-நவீனத்துக்குப் பிற்பட்ட நவீன புராதனம் இவள். முகத்தைப் பார்த்தால் இவள் பெயர் ஜெனிஃபர் என்று தோன்றியது. வெறும் ஜெனிஃபராய் இருக்க விரும்பாத ஒரு ஜெனிஃபர்.

ஸூஸன் தன் கேள்வியை மீண்டும் கேட்டாள். ஆங்கிலப்புத்தகங்களை மறக்கவில்லை. பல வருடங்களுக்குப் பின், இணையம் வழியே தமிழ்ப் புத்தகங்களின் மறுகண்டுபிடிப்பு. ஒவ்வொரு தமிழ்ப் பக்கத்திலும் அதன் பொருளை மீறிய ஏதோவொன்றை இனங்கண்ட அதிர்வு. முதலில் சிறிதாய்த் தொடங்கிப் பின் வட்ட வட்டமாய் விரியும் அதிர்வுகள். இந்த மொழியின் இந்த வார்த்தைகளில் அவளை அவளால் கண்டு கொள்ள முடிகிறது. செவி இன்னும் திறக்காத மீன்குஞ்சாய் உயிர்த்திரவத்தில் மிதக்கையிலேயே இதன் ஒலியலைகளை அவள் அறிவாள். ஒலியின் வடிவத்தை முதன்முறை பிஞ்சுவிரலால் அரிசியில் அவள் எழுதின போது மேலெழுந்த அரிசியின் மணமும் அது விளையும் பச்சைப்பூமியின் குளிர்வும் கொண்டது இது. பெற்றவர்கள் தம் சுயமையத்தால் அற்றுப் போகையில் மனதுள் சுதந்திரமாய்க் கதை சொல்லி மிதக்க வைக்கும் சிறகுகள் உண்டு இதற்கு. இந்த மொழி வரையும் வரிகளுள் இப்போதும் அவள்.

அவள் குரல் உணர்ச்சி மிகுதியால் அவளையுமறியாமல் ஓங்கியிருக்க வேண்டும். வெறும் ஜெனிஃபராய் இருக்க விரும்பாத அந்த ஜெனிஃபர் சட்டென்று விழித்தாள். தன் பையை முதுகில் மாட்டிக் கொண்டாள். ஒற்றைக்கொலுசு ஒலிக்க உயரமாய் நடந்து புத்தக அடுக்குகளுள் மறைந்தாள். கொலுசு மணி தேய்ந்ததும் ஸூஸன் புலம்பெயர்தல், வேர்கள், தேடல் என்று பெரிதாக ஆரம்பிக்கிறாள். தானும் தன் கணவரும் இன்னும் தம் குடும்ப வேர்களைத் தேடும் முயற்சி பற்றிச் சொல்கிறாள். இரண்டாம் உலகப்போர் காலத்தில், யூதர்களான அவளது தாத்தாவும் பாட்டியும் ஆஷ்விட்ஸில் நாட்ஸிகளால் விஷ வாயுவுக்கு இரையாக்கப் பட்டார்கள். அவர்களோடு பல தலைமுறைகள் பற்றிய குறிப்புகள் மறைந்து போய் விட்டன. வேதனைப்படுகிறாள். கண்களில் ஈரம். சிறிது நேர அமைதிக்குப் பின், எத்தனையோ சிகையலங்காரங்கள் மாற்றியதால் தன் உண்மைத் தோற்றம் தனக்கே மறந்து விட்டதாய்ப் பேச்சை மாற்றுகிறாள். சிரிப்பு முடிந்ததும் ஸூஸன் சொல்கிறாள்: ‘நீ அதிர்ஷ்டசாலி. என்னைப் போல் ஒட்டுமொத்தச் சவக்குழிகளிலும் சாம்பல் குவியல்களினடியிலும் விஷவாயுப் புகையினூடேயும் உன் வேரைத் தேட வேண்டிய அவசியம் உனக்கில்லை. பல வருடங்கள் விலகியிருந்தும், தாய்மொழியும் தலைமுறைகளும் இன்னும் உன்னுள் உயிருடன் நிற்கின்றன. உன் மகளிடம் அவள் வேர்களைப் பற்றி நீ பகிர்ந்து கொள்வது முக்கியம். பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்தோர் தத்தம் தனித்துவத்தைப் பேணிப் போற்றுமிடம் இந்தத் தேசம். நம்மைத் தாங்கிக் கொள்ள வேரோ விழுதோ, ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. உனக்கும்தான். உனக்கு அது புரிகிறதோ இல்லையோ, உன் க்ரிஸ் புரிந்து கொள்வான். ‘

அவர் அவளை நன்றாகப் புரிந்து கொண்டவர் என்பது உண்மைதான். அவளுக்கே புரியாமல் அவளுள் குறுகுறுக்கும் உணர்வுகள் கூட அவருக்குப் புரிந்து விடுகிறது. அவர் மார்பில் முகம் பதித்து, அவரது இதயத்துடிப்பு மெதுவே சீராகிச் சமன்படும் ஒலியில் அமைதியுறும் பின்னிரவுகளில், அவள் முகத்தை மென்மையாய் நிமிர்த்தி அவர் கேட்கும் வழக்கமான கேள்வி: ‘நீ இப்போது எந்த தளத்தில் இருக்கிறாய் ? ‘ நல்ல பொறுமையும் மனவலிமையும் அவருக்கு. அவள் கண்களில் கவிந்திருக்கும் அந்தச் சிறுமியின் தொலைவைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு. பதினாறு வருடங்களாய். இன்னும் வரும் பல வருடங்களுக்கும். ‘உன்னுள் உள்ள அந்தத் தொலைவில் கடல் அலைகள் மெளனமாய் உயர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கின்றன; உப்பு கனக்கும் காற்றைத் தென்னங்கீற்றுகள் மெல்ல அசைக்கின்றன; நீலப்பச்சை மலைமுகடுகள் மேகத்துள் தம்மைத் திணித்துத் தலைகுனிந்து நிற்கின்றன. இவற்றையெல்லாம் என்னால் என்றாவது தொட முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், என்றும் அவற்றினருகிலேயே இருக்க விரும்புகிறேன். ‘ அவள் விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்துக் கொண்டே அவள் கண்களிடம் அவர் பேசிய வார்த்தைகள். அவரும் திருமணமென்னும் நிறுவனமும் அவள் வாழ்வில் மிக அவசியமானதாய் இல்லாமல், மிக இயல்பானதாய் நிகழ்ந்தவை: மஞ்சள் பூவொன்று காற்றில் பறந்து வந்து குழம்பிய புள்ளிக்கோலத்தின் நடுவே அமர்வது போல். இன்று அவரில்லாமல் வாழ்வை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. எல்லாமே பழக்கம்தான் போல. அவள் தோள்சரிவில் மென்மையாய் இதழை இழைத்து, ‘இன்னும் எத்தனை வருடங்கள்தான் உன்னிடமிருந்தே இப்படி ஓடி ஒளியப் போகிறாய். உன் நாட்டுக்குப் போய் வாயேன் ? ‘ என்று இந்த முறை அவர் கேட்டபோது ஏனோ வழக்கம் போல் மறுப்புச் சொல்லவில்லை.

தாய்நாடு உலகமயமாகிக் கொண்டிருந்தது. சி.என்.என்.னும், நியூயார்க் டைம்ஸும், இணையமும், தாயக மின்னஞ்சல் நண்பர்களும் இந்த அளவு மாறுதலை எதிர்கொள்ள அவளைத் தயார்ப்படுத்தியிருக்கவில்லை. பெருநகர்ப்புறங்கள் மேல் பல அமெரிக்கத்தனங்கள் அப்பியிருந்தன, சுவரொட்டி எச்சங்களாய். அடியிலுள்ள சுவரின் நிலை சரியாய்ப் பிடிபடவில்லை. கேட்கவும் பயமாயிருந்தது. இருபது வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு ஓடிப்போனவளுக்கு அங்கு நடப்பதைப் பற்றிக் குறுக்கு விசாரணை செய்ய உரிமை உண்டா என்ன. சொந்த ஊரும் மாறியிருந்தது. கடல்நடுவே உள்ள பாறை மேல் தியான மண்டபத்தின் அமைதி இன்னும் இருந்தது. இன்னொரு பாறை மேல் ஒரு புது நினைவுச்சின்னம் எழும்பியிருந்தது. வாசமில்லாத பெரிய ரோஜாக்களையே பார்த்துப் பழகி விட்டதால் தோட்டத்துச் சிறு ரோஜாக்களின் தீவிர மணம் முதலில் ஆச்சரியமாய்த் தெரிந்தது. கண்ணுக்குத் தெரியாமல் கூவிய அந்த அக்கக்கா குருவி. மறந்திருந்ததாய் நினைத்தவை மறக்கப்படவே இல்லை. தொட்டிச்செடியில் பறித்த அந்திமந்தாரைப்பூக்களோடு தம்பியும் அவளுமாய்க் கோவிலுக்குப் போன சாயங்காலங்களும், அட்டைப்பெட்டியில் குவியாடி பொருத்திச் சுவரில் ‘சினிமா ‘ காட்டிய ஞாயிற்றுக்கிழமை மத்தியானங்களும், எதிர்பாராமல் பரணில் கண்டெடுத்த பழைய புத்தக வாசம் வீசும் மழை நாட்களும்–இவை முற்றுமாய்க் கரைந்து போவதில்லை; மாறுதல் உருவாக்கும் சூனியத்துள் விழுந்து விடுவதில்லை.

நினைவில் இல்லாதவையும் இருப்பதாய்த் தோன்றி, ஞாபகங்களோடு சேர்ந்து கொண்டன. சூரியோதயம் தெளித்த முக்கடல் கரையை மெல்ல முத்திட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு போலவே. மணல் மேட்டில் உட்கார்ந்து நீரின் வண்ணச் சுருக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் முதலில் உணர்ந்த அந்நியம் மறைந்தது போலிருந்தது. மீண்டும் இவ்விடத்தில் பிறந்தது போன்ற ஒரு தற்காலிக நிரந்தரம் உருவானது. முடிக்காமல் பாதியில் விட்ட பலவற்றை முடிக்க வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை தோன்றிற்று. அவை என்ன என்று அடையாளம் தெரியாததால் ஆழ்ந்த சங்கட உணர்வு ஏற்பட்டது. இங்கு இருந்திருக்கக் கூடிய, ஆனால் அவள் வெட்டிக் கொண்டு போனதால் இல்லாமலே போய் விட்டவற்றின் நிழலுருவங்கள் புலப்பட்டன. இனம் தெரியாத அவற்றை இழந்ததன் அதீத சோகமும் ஊமைவலியும் கனத்து அழுத்தின. அவள் மறுதலித்துப் பிரிந்து மறந்த, இன்று மாறிப்போய் அவளை மறந்து போன, ஆனால் அவளே அறியாமல் அவளுள் தொடர்ந்து கொண்டிருக்கும் தேசம். இடமாய் அல்ல. உணர்வாய். மணமாய். ஒலியாய். மொழியாய். முக்கியமாக மொழியாய். காலத்தால் மாறாமல். அழிக்கப்படாமல்.

அவளளவில் காலம் இறக்கவேயில்லை. சிறு குமிழிகளுள் உயிருடன் உறைந்து நிற்கிறது. பின்னோக்கி ஓடுகிறது. நிகழ்கிறது. ஒரு புள்ளியை மையமாக்கிச் சுற்றிச் சுற்றி வருகிறது. மலைப்பாம்பு போல் வாலைக் கவ்வித் தன்னையே விழுங்கப் பார்க்கிறது. முன்னோக்கி ஒளி வேகத்தில் விரைகிறது. ஒற்றைக்கோடாய் இல்லாமல் கிளைத்த மரமாய் நிற்கிறது. சில தருணங்களில், அனைத்துத் திசையிலும் சிதறலாய் நிகழ்ந்து பின் ஒரு கணத்துளிக்குள் முழுதாய் அடங்கி விடுகிறது. காலமே நிரந்தரமும் சுதந்திரமும் நிறைந்த ஒரு மறைவிடம்தானோ.

இரண்டு வாரம் கழித்துப் புகுந்த நாட்டுக்குத் திரும்பியபோது இங்கும் ஏதோ மாறி விட்டிருந்தது. தெருவிலும் வீட்டினுள்ளும் அலுவலகத்திலும் காதைப் பிளக்கும் நிசப்தம், நடுவே (மனிதர் உட்பட) பல இயந்திரங்களின் முணுமுணுப்பு. வழக்கமானவைதான். வேலையிலிருந்து வீடு திரும்பும் நேரம். கடும் பனிமழையினால் பன்னிரண்டு பிரிவு நெடுஞ்சாலை முழுதும் போக்குவரத்து நிறுத்தம். கார்க் கண்ணாடி மேல் கோழிச்சிறகுப் பனிக்குவியல். கார் ஸி.டி.யின் பழைய தமிழ்த் திரைப் பாடல் அமைதியான நதியின் கரை மேட்டையும், அதில் வளையும் நாணலையும், தென்னையிளங்கீற்று தாலாட்டும் தென்றலையும் காருக்குள் நிறைத்தது. காருக்கு வெளியே கொட்டும் பனியின் வெண்மைப் பின்னணியில் கருங்கோட்டுச் சித்திரங்களான இலையற்ற மொட்டை மரங்கள். எவ்வளவு வேறுபட்ட காட்சிகள். இவற்றில் எது அந்நியம். இரண்டுமேதானோ. இரண்டுமே தனது என்று ஏன் நினைக்க முடியவில்லை. அவளுள் ஏதோ பொங்கிச் சிதறிற்று.

‘நான் ஒரு நாடோடி. பிறந்த நாடு என்பது நான் என்றோ இழந்து விட்ட, இன்று அந்நியப்பட்ட, என் கற்பனையில் மட்டுமே தொடரும் ஒரு லட்சியவாதம். புகுந்த நாட்டின் அந்நியம் என்றுமே மாறாதது. ஓர் அந்நியத்துள் குடியிருந்து, இன்று இல்லாத (என்றுமே இருந்திருக்காத ?) அந்நியமாகிப் போன மற்றொன்றைப் பற்றிக் கற்பனாவாதக் கனவுகள் காண்பதே மிச்சமிருக்கும் என் வாழ்வில் என்னால் ஆகக்கூடியது. ‘

‘இந்தத் திரிசங்கு அந்நியம் என் சுய தேர்ந்தெடுப்பு. அது தரும் தொலைவை நான் விரும்புகிறேன். என்னையும் என்னைச் சுற்றி உள்ளதையும் எனக்கு வெளியே இருந்து நான் பார்க்க இந்தத் தொலைவு அனுமதிக்கிறது. இத்தொலைவே என் சுதந்திரத்தின், தைரியத்தின், காயங்களைத் தாங்கும் அதீத மனவலிமையின் அடிப்படை. ‘

‘இத்தொலைவு ஒரு வகையான மரணத்தின் ருசியும் கூட. இத்தகைய மரணத்தை விருப்பத்தோடு எதிர்கொள்ளும் அதே சமயத்தில், அதிலிருந்து மீள வேண்டுமென்ற எதிர்வினை ஆசையும் ஏற்படுகிறது. ஆசையா. இல்லை. ஓர் ஆவேசம், ஒரு வேகம். தொலைவைக் கடந்து, அதற்கு அப்பால் உள்ள ஏதோவொன்றுடன் இழைந்து ஒன்றி என்னை முழுமையாய் உணர வேண்டும் போல் ஒரு வேகம். ‘

‘இந்த அதருக்கமான ஆசை ஏன், எதற்கு, ஏன் இப்போது, இவ்வளவு காலம் எங்கிருந்தது என்பவையெல்லாம் பதில் தெரியாத கேள்விகள். ‘

‘ என் சுதந்திரமும், தைரியமும், மனவலிமையும் இந்த ஆசையால் காயப்படலாம். நான் யாராக என்னை இது வரை வரையறுத்திருக்கிறேனோ அந்த நான் கரைந்து, எனக்குத் தெரியாத இன்னொரு நான் வெளிப்படலாம். அத்தகைய வெளிப்பாட்டை என்னால் எதிர்கொள்ள முடியுமா என்பது ஒரு நிச்சயமின்மையே. ஆனால், என்னை நான் முழு உண்மையுடன் எப்போதாவது அங்கீகரிக்க வேண்டும் என்பது நிச்சயமானது. ‘

இதுவரை மிகக் கவனமாய்க் கட்டி வந்த மதிற்சுவர்கள் அவளுள் ஒவ்வொன்றாய்ச் சரிவதாய் உணர்ந்தாள். மறைவிடங்களும் அவற்றில் பொதிந்திருந்தவையும் மெதுவே வெளிவந்தன. ஆழ்மனதின் அவ்வளவு தளங்களையும் ஒவ்வொன்றாய்க் கடந்து அடித்தளத்துக்குப் பார்வையைத் திருப்ப வேண்டியிருந்தது. அடித்தளமே இடம் பெயர்ந்து கொண்டிருந்ததாய்த் தெரிந்தது. அங்கிருந்து எழும்பி வரும் உணர்வலைகளை வழக்கம் போல் மறுதலித்து நசுக்கவில்லை. அலையோடு போவதில் ஒரு சுகம் இருந்தது. அலைகள் அவளை வாரியள்ளி, உருட்டிப் புரட்டிச் சென்றன. இதுவரை உணர்ந்திராத உச்சநிலைகளும் கீழ்முனைகளும் தெரிந்தன. அலை எங்கு கொண்டு போய்ச் சேர்க்குமோ என்ற திகில். எங்குதான் போய்ச் சேர்வோம் என்ற எதிர்பார்ப்பு. எங்கு போனால் என்ன என்ற அலட்சியம். கட்டுக்கடங்காது விரியும் விளிம்பற்ற ஒரு சுதந்திரத் திளைப்பு. விளிம்பற்ற நிலையா விளிம்பு நிலையா. குழந்தை போல் யாரிடமாவது ஓடிப்போய் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றிருக்கிறது. மொழியே தாயாகிறது. அரிச்சுவடியின் நிழலில் உணர்வுகள் வழிந்து வரியோடுகின்றன. முதல் கதைகள் பல சொந்த வாழ்வைச் சுற்றிய சுயமைய வட்டத்துள் அமைகின்றன; வாழ்வைப் போலவே, அவளும் அவளது எழுத்தும் பரந்த வெளியில் நுணுக்கமாய் வளர்ந்து முதிர்ச்சியுறும் காலம் பின்பு வரும்.

இப்போது அவள் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்:

‘இங்குதான் நான் உயிர்ப்பேன். கிளைத்துப் பரந்து குவியும் பரவசத்தின்

மையத்தில். அலையடிக்கும் நீரின் அண்மையில். நீரின் மீதான ஆசையும்

ஏக்கமும் என்றும் என்னுள் நீங்காதிருக்க……. ‘

‘சொல் புதிது ‘

sollpudidu@yahoo.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்