சங்கராச்சாரியார் கைதும் முஸ்லிம்களும்:

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

பிறைநதிபுரத்தான்


இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துனை பிரதமர் அத்வானி மற்றும் சோனியா போன்றவர்களை ‘மரியாதையாக ‘ நிற்க வைத்து பிரசாதம் அளித்த, ஜெகத்குரு, நடமாடும் தெய்வம், பெரியவாள் என்று அழைக்கப்பட்ட காஞ்சி மடாதிபதியான சுப்ரமனி கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. கைது செய்தது யார் தெரியுமா ? ஜெகத்குருவுக்கு சரிசமமாக அமர்ந்து அவரிடமிருந்து பிரசாதமும், ஆசியும் பெற்ற செல்வி செயலலிதா தலைமையில் உள்ள தமிழக காவல் துறையால்.

பெரியவர் கைது செய்யப்பட்ட முறை, நடத்தப்பட்ட விதம், அடைக்கப்பட்ட சிறை மற்றும் கொடுக்கப்பட்ட உணவு பற்றி இந்துத்வ அமைப்புக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சுவாமி பிரேமானந்தா, சதுர்வேதி சாமியார் போன்ற இந்து சாமியார்களின் கைதைப்பற்றி கவலைப்படாத பா.ஜ.க மற்றும் சங் கும்பல், காஞ்சிப்பெரியவரின் கைதை மட்டும் இந்து மதத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக சித்தரித்து குற்றம் சாட்டி வருவதன் பின்னனி என்ன ? சங்கரர் மட்டும்தான் இந்துவா அப்படியென்றால் கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் அல்-உம்மா உறுப்பினரா அல்லது கொலை வெறித்தாக்குதலுக்குள்ளான ராதகிருஷ்னன் அல் காயிதாவை சார்ந்தவரா ?

சங்கரர் என்ற சுப்ரமனியை ‘பெயிலில் ‘ விடாமல் ஜெயிலில் வைப்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களையும், கொலை சம்பவம் பற்றிய அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தையும் தமிழக அரசு நீதி மன்றத்தில் சமர்பித்திருக்கும்போது, மாஜி பிரதமரும், துனை பிரதமரும் இவ்வழக்கு பற்றி சங்கரருக்கு ஆதரவாக அறிக்கை விடுவது இவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் மீது வைத்திருக்கும் ‘மரியாதையை ‘ காட்டுகிறது.

செயலலிதா அரசு கூறும் காரணங்கள், சமர்பிக்கும் ஆதாரங்களை பற்றி நீதிமன்றத்தில் வழக்காடி சங்கரர் அப்பாவி என்று நிரூபிப்பதுதான் பா.ஜ.க மற்றும் சங் பரிவாரின் தற்போதைய முக்கியப்பணி. அதோடு மட்டுமல்லாது, பிரபல தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் பெரியவாள் மீது சுமத்திய பாலியல் குற்றசாட்டையும் பொய்யென நிரூபிக்கவேண்டும்.

சங்கரருக்கு ஆதரவாக, தமிழக மக்களை திரட்டி உருப்படியாக ஒரு போராட்டத்தை கூட நடத்த வக்கு இல்லாத நிலையில் உள்ளது தமிழக இந்துத்வ கும்பல். இவர்களின் உண்மையான வலிமையை இப்பொழுதுதான் உணர்ந்துள்ளனர். அதனால்தான் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அத்வானி கூட, கட்சியின் பலவீனத்தை அறிந்து, பொதுக்கூட்டம் என்று மாற்றி இருக்கின்ற மாணத்தை திறமையாக காப்பாற்றிக் கொண்டார்.

செல்வி ஜெயலலிதாவும் அவரது அரசும் சொலவதும் செய்வதும் நியாயம்தான் என்று சங்கரர் கைதுக்கு சில வினாடிகள் முன்புவரை வக்காலத்து வாங்கி காவி ஜால்ராக்கும்பலுக்கு இன்னும் புத்தி வரவில்லை. அதனால்தான், சில இந்து அமைப்புக்கள் செல்வி.செயலலிதாவை ‘புடவை கட்டிய ஒளரங்கசீப் ‘ என்று கோஷமிடுகிறது. ஒளரங்கசீப் தன்னுடைய வேலையை கவனிக்க உதவியாளரை அமர்த்தாமல் தானே பார்த்தார். மக்களுடைய வரிப்பணத்தை பினாமிகளின் பெயரில் சொத்துக்களாக வாங்கி குவிக்காமல் நேர்மையான முறையில் நிர்வகித்தார். இது போன்ற எந்த குனநலனும் செல்வி.செயலலிதாவிடம் கிடையாது என்பது வரலாற்று திரிபர்களுக்கு தெரியாது.

இன்னும் ஒரு அறிவு ஜீவி ‘முகலாயர் ஆட்சியில் கூட இந்து மததலைவர்கள் இவ்வாறு நடத்தப்பட்டதில்லை ‘ என்று கருத்து கூறி வழக்கம்போல தங்களது முஸ்லிம் எதிர்ப்பு அரிப்பை தீர்த்துகொண்டிருக்கிறார். இந்தக் கைதை முன் வைத்து எப்படியாவது இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்கவெண்டும் என்பதுதான் ‘சிண்டு ‘ முடியும் கூட்டத்தின் உள்நோக்கம்.

பா.ஜ.க, வி.எச்.பி, சிவசேனா மற்றும் இந்து முன்னனி அடங்கிய ‘அனைத்து இந்துக்கள் அமைப்பு ‘ நடத்திய கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிகை கலந்துக்கொண்ட அமைப்புக்களின் எண்ணிகையை கூட தாண்டவில்லை. அவர்கள் நடத்திய ‘பந்த் ‘ தினத்தன்று தமிழகம் வழக்கம் போல இயங்கியது. இத்தகைய மக்கள் ஆதரவை பார்த்த பிறகும், சில ஞானசூண்யங்கள், சங்கரர் கைதுக்கு இஸ்லாமியர்களை காரணமாக கூறி வருகிறது.

இஸ்லாமியர்கள் வாக்குகளை குறிவைத்துத்தான் செல்வி.செயலலிதா சங்கரரை கைது செய்தார் என்ற வாதம் உண்மையாக இருந்தால் கூட இந்துத்வ வீரர்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா ? தங்களுக்கேயுரிய பாணியில், செல்வி.செயலலிதாவை தாக்கி வீராவேச அறிக்கைகள் விடலாம், சுஷ்மா சுவராஜ் தலைமையில் சங் பரிவாரத்தினரும் பா.ஜ.க. வினரும் மொட்டையடித்துக்கொண்டு போயஸ் தோட்டத்து வாசலில் படுத்து உருளலாம் அல்லது உமா பாரதி தலைமையில் தேசியக்கொடியை ஏந்தி கண்டன யாத்திரை நடத்தலாம் அல்லது பஜ்ரங் தள், சிவசேனா தலைமையில் செல்வியின் மிது தற்கொலை தாக்குதல் நடத்தப்போவதாகவோ அல்லது அவரின் முகத்தில் ‘கரியை ‘ பூசப்போவதாகவோ ஒரு மிரட்டல் விடலாம் அல்லது குறைந்த பட்சம் செயலலிதாவின் அரசியல் வாழ்வு சூன்யமாக ஏதாவது ‘யாகமாவது ‘ நடத் தி தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்ளலாம்..

இதில் எதையும் செய்ய திராணியற்ற, முடமாகி, ஜடமாகிப் போன தமிழக இந்துத்வ அமைப்புக்கள் தனது இயலாமையை உணர்ந்து வாயையும் மற்றதையும் பொத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாமல், அனாவசியமாக அப்பாவி இஸ்லாமியர்களை சீண்டினால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்